காலம் தோறும் விபீடணர்கள்!- குமரன்தாஸ்

2024 கட்டுரைகள் நவம்பர் 16-30

நமது தமிழ்ச் சினிமாவில் பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்ப்பனரல்லாத கதாநாயகர்கள் உடனே ஓடோடி வந்து பார்ப்பனரல்லாத வில்லன்களுடன் சண்டையிட்டு அடித்தும் அடிபட்டும் பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதை நாம் பல திரைப்படங்களில் (திருப்பாச்சி, சாமி, சேது…..) பார்த்திருக்கிறோம். ஏனென்றால் பார்ப்பனர்கள் நல்லவர்கள், அப்பாவிகள், எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள் என்றும் காட்டுவார்கள்.ஆனால், இந்த பார்ப்பனரல்லாத ரவுடிகளோ அயோக்கியர்கள், பார்ப்பனர்களையும் அவா ஆத்து பொம்மனாட்டிகளையும் சீண்டுபவர்களாகச் சித்திரித்திருப்பார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து பார்ப்பனர்களைப் பாதுகாக்க வேண்டியது பார்ப்பனரல்லாத ஹீரோக்களின் கடமையாகும் என்பது இன்றைய தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பலருடைய கருத்தாக உள்ளது.

இந்நிலை திரைப்படங்களில் மட்டுமல்ல; இங்கு தமிழ்நாட்டில் உண்மையிலேயே பலரது நினைப்பும் அப்படித்தான் உள்ளது. இவ்வாறாக தமிழ்த் திரைப்பட ஹீரோக்களில் ஒருவராகத் தன்னைக் கருதிக் கொண்டுதான் அர்ஜுன் சம்பத், பார்ப்பனர்களைப் பாதுகாத்தே தீருவேன் என்று கிளம்பியுள்ளார். அவரோடு சில பார்ப்பனரல்லாத (சூத்திர) ஜாதித் தலைவர்களும் சேர்ந்து கொண்டு நாங்கள் இருக்கப் பார்ப்பனர்களுக்குப் பயமேன் என்று மார்தட்டியுள்ளனர்.

ஆனால் பாருங்கள்! இன்றளவும் பார்ப்பனர்களின் ஜாதியாதிக்கத் தீண்டாமைச் சிந்தனையினால் பாதிக்கப்படும் நிலையிலே தான் இந்தப் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். பார்ப்பனரல்லாத மக்கள் கோயில் கருவறைக்குள் நுழையக் கூடாது. நுழைந்தால் தீட்டாகிவிடும்; சாமி செத்துப்போகும் என்று சொல்லித் தடுப்பவர்களும், அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பவர்களாகவும்,
தங்களது பார்ப்பனப் பெண் பிள்ளைகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை பிளேடு பக்ரியாகத்தான் வளரும். ஆகவே பிற ஜாதி ஆண்களைப் பார்ப்பனப் பெண்கள் காதலித்து விடக் கூடாது என மிக வெளிப்படையாக மேடையில் பார்ப்பன சங்கத் தலைவரே பேசுகின்ற சூழலில்தான் பார்ப்பனர்களைப் பார்ப்பனர், பாப்பாத்தி என்று சொல்பவர்களைத் தண்டிக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCR ACT) ஒன்று கொண்டு வரவேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கேட்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளாகத் தீண்டப்படாத மக்களாக இருந்து வருவதுடன் இன்றளவும் கொடிய ஒடுக்கு முறையையும் துன்பத்தினையும் அனுபவித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களைச் ஜாதி இந்துக்களிடமிருந்தும் அவர்களது தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு (PCR ACT) சட்டத்தினைக் கேலிக்குரியதாகவும், அர்த்தமற்றதாகவும் ஆக்குகின்ற விதத்திலேயே பார்ப்பனர்களுக்கும் இச்சட்டம் வேண்டும் என்ற இக் கோரிக்கை அமைந்துள்ளது.

ஆம், இன்றளவும் பிரம்மாவின் முகத்தில் பிறந்த தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும், பூலோகக் கடவுள்கள் என்றும் மற்ற அனைவரையும் – ஏன் நாட்டின் முதல்
குடிமகனாகக் கருதப்படுகின்ற குடியரசுத் தலைவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும் கூட தங்களை விடக் கீழானவர்கள் என்றும் (சங்கர மடத்தில் பார்ப்பனரல்லாத குடியரசுத் தலைவர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை தரையில் உட்கார வைக்கப்படுவதை நினைத்துப் பாருங்கள்) இந்நாட்டு மக்கள் அனைவரது உழைப்பையும் சுரண்டி அனுபவிப்பதற்கான உரிமை பிறப்பிலேயே தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கருதிக் கொண்டும், அதன்படி நடந்து கொண்டும் வருகின்ற பார்ப்பனர்களைப் பாதிக்கப் பட்டவர்களாகவும் (Victims) தீண்டப் படாத மக்களுக்குச் சமமான நிலையில் வாழ்பவர்களாகவும் முன்னிறுத்தி இப்படியொரு கோரிக்கையை வைப்பதற்கு எவ்வளவு கல்நெஞ்சு வேண்டும். அவ்வாறு கோரிக்கை வைப்பவர்களை என்னவென்று சொல்வது? பைத்தியக்காரர்கள் என்று சொல்வதா? அல்லது நயவஞ்சகர்கள் என்று சொல்வதா?

அதுமட்டுமா? ஆயிரம் ஆண்டுகளாகத் தம்மை சூத்திரர்கள் (வேசி மக்கள்) என்று சொல்லி தம்மீது இன்றுவரை தீண்டாமையைக் கடைப்பிடித்து வரும் பார்ப்பனர்களுக்காக பார்ப்பனரல்லாத ஜாதியில் பிறந்த பலர் தமது பார்ப்பனரல்லாத சொந்தச் சகோதரர்களுடன் அன்றாடம் மோதுவதையும் அவர்கள் மீது வன்தாக்குதல் தொடுப்பதையும் நாம் பார்க்கிறோம். இது எவ்வாறு சாத்தியமாகிறது? என்ற கேள்விக்கு முன்பாக, இவர்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, அவர்களது விடுதலைக்காக அவர்களை அடிமைப்படுத்தி வருகின்ற தமது பார்ப்பனச் சொந்தங்களை எதிர்த்துச் சண்டையிட்ட, ரத்தம் சிந்திய பார்ப்பன ஜாதித் தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்நாட்டு வரலாற்றில் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் சந்தேகமும் நமக்கு எழுகிறது.

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியும், பொதுவுடைமைக் கொள்கைக்காக முதலாளிகளை எதிர்த்துப் போராடியும் சிறை சென்ற ஒரு சில பார்ப்பனர்கள் உண்டு. ஆனால், வர்ண ஜாதி ஆதிக்கத்தைக் கட்டிக் காக்கும் பார்ப்பனர்களையும், பார்ப்பன மடாதிபதிகளையும் எதிர்த்துப் போராடி, அல்லது அம்பேத்கர், பெரியார் போல மநுதர்மத்தை எரித்து அதற்காகத் தண்டனை பெற்றுச் சிறை சென்ற பார்ப்பனத் தலைவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இதுதான் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்குமுள்ள வேறுபாடாகும். பார்ப்பனர்கள் எப்போதும், எங்கிருந்த போதும் பார்ப்பனர்களாகவே உள்ளனர். எந்த வடிவக் குடுவையில் ஊற்றப்பட்டாலும் அந்த வடிவத்தை எடுத்துக்கொள்ளும் தண்ணீரைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால், உள்ளிருப்பதோ அதே தண்ணீர்தான். ஆம், ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தாலும் அல்லது காங்கிரசில் இருந்த போதும் பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாகவே இருந்தனர் (பாலகங்காதர திலகர், மாளவியா, சாவர்கர் போன்றவர்கள்) என்பதே கடந்தகால வரலாறாகும்.

ஆனால், பார்ப்பனரல்லாதவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்களோ அதாகவே மாறி அக்கொள்கைக்காக தம் சக உறவினர்களையே பகைத்துக்கொள்வது மட்டுமல்ல; அவர்களது உயிரையும் எடுக்கத் தயங்காதவர்கள். இவ்வாறு தாம் ஏற்றுக் கொண்ட அரசியல் கொள்கைக்காக பார்ப்பனரின் உயிரைப் பறித்த இன்னொரு பார்ப்பனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அல்லது இந்திய வரலாற்றில் படித்ததுதான் உண்டா?

பார்ப்பனரல்லாதாரின் இந்த மூடத்தனத்தைத் தான் பார்ப்பனர்கள் பயன்படுத்தி, தங்களுக்கான அடிமைகளையும் விசுவாசிகளையும் உருவாக்கி பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்துப் போராடி வரும் திராவிட இயக்கத்தவர்களையும் அதன் தலைவர்களையும் தீவிரமாக எதிர்க்கவும், வசைபாடவும், தனி நபர் குறித்து விமர்சனம் செய்யச் சொல்லுவதும், சில நேரங்களில் வன்முறையில் ஈடுபடவும் தூண்டி விடுகின்றனர். அவர்களால் தூண்டி விடப்பட்ட சுய சிந்தனையற்ற பார்ப்பனரல்
லாத ஜாதிகளைச் சேர்ந்த அடிமைகளும் எஜமானால் ஏவிவிடப்பட்ட வெறிநாய்களைப் போல மாறி கடிக்க முற்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் துணிச்சலில் தான் இப்போது பார்ப்பனர்கள், நாங்கள்தான் தமிழ்நாட்டில் 6வது பெரிய ஜாதி, எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது! எங்களது உதவியின்றி எந்த ஆட்சியும் இங்கு நடத்த முடியாது என்று ‘உதார்’ விடுகின்றனர். ஆம், விபீடணர்கள் இருக்கும் வரை இராவண வதம் தொடரத் தானே செய்யும் என்பது தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சொல்லப்பட்டு வரும் கதையாக உள்ளது. இந்தக் கதை தலைகீழாய் முற்றிலுமாக மாறும் நாளில் தான் பார்ப்பனர்களின் அதிகாரம் வீழும்.