சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நவம்பர் 01-15

நூல்: நீண்ட ஆயுளுக்கான உணவு முறை
ஆசிரியர்: அ. பாலகிருஷ்ணன்
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்,
10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5.
பக்கங்கள்: 80, விலை ரூ. 40.

நூலிலிருந்து…

நீண்ட ஆயுளுக்கான உணவு முறை

நாம் உண்ணும் உணவில் உள்ள அறுசுவைகளை நாம் அறிவோம்.

1. கசப்பு, 2. புளிப்பு, 3. துவர்ப்பு, 4. இனிப்பு, 5. உவர்ப்பு, 6. கார்ப்பு.

அறிவியல் அடிப்படையில் அறுவகை உணவுகளை அறிவோமா? அறிந்துகொள்வோம்.

1. கார்போஹைட்ரேட்(மாவுச்சத்து), 2. புரோட்டீன்(புரதம்), 3. கொழுப்பு,   4. வைட்டமின்கள், 5. தாது உப்புகள், 6. நீர்.

உடல் வளர்ச்சிக்குத் தேவை:

புரோட்டீன்

உழைப்பாற்றலுக்குத் தேவை:

கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும்

உடல் நலனுக்குத் தேவை:
வைட்டமின்களும், தாது உப்புகளும்

உண்ட உணவு செரித்தலுக்குத் தேவை:

நீர்

மேற்கண்ட ஆறுவகை உணவுகளும் கலந்த உணவு கலப்புணவு. ஒவ்வோர் உணவும் சரியான விகிதத்திலும் உடலின் தேவைக்கான அளவும் கலந்திருந்தால் அது சரிவிகித உணவு.

நாம் உண்ணும் உணவு கலப்பட உணவாகவும், சரிவிகித உணவாகவும் இருத்தல் வேண்டும்.

தாவர உணவே சிறந்தது

எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்த உணவு வகைகள் கிடைக்குமோ அந்தந்த உணவு வகைகளையே உண்ண வேண்டும். அதனால் விலையும் மலிவு. சத்தும் அதிகம்.

இயற்கைச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட உணவே சிறந்தது. விலங்குகள் தங்களுக்குப் பிடித்த உணவையே உட்கொள்கின்றன. அதைப் போலவே நாமும் நமக்குப் பிடித்த அதாவது சுவைக்குப் பிடித்த _ உடலுக்குப் பிடித்த உணவுகளையே அளவோடு உட்கொள்ள வேண்டும். இதய நோய், புற்றுநோய் வராமல் தடுத்திட சைவ உணவே சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அசைவ உணவு மீது விருப்பங் கொண்டோர், அதைத் தனியே எடுத்துக்கொள்ளாமல், காய்கள், கனிகள், தானிய வகைகள் இவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதுதான் நல்லது. வயது அதிகரித்துக்கொண்டே செல்லும்போது, நமக்குக் குறைவான ஆற்றலே போதும் என்பதால், நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். உணவின் அளவைக் குறைப்பது எளிதாகும். நாம் உண்ண வேண்டிய உணவின் அளவு பற்றியும், செரித்தலை பற்றியும், அய்யன் வள்ளுவர் மிக அழகாக மருந்து என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.

மலச்சிக்கல் பல சிக்கல் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் உண்ட உணவு செரிக்காமற் போனால் எவ்வகை மருந்து உட்கொண்டாலும் பயனற்றதே என்கிறார், வள்ளுவர். நாம் உண்ட உணவு நன்கு செரித்தல் ஆகிவிட்டது என்பதறிந்து அடுத்த வேளைக்கான உணவை உட்கொண்டால் மருந்தே தேவை இல்லை என்கிறார், வள்ளுவர்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (942)

நாம் உண்ட உணவு நமது இரைப்பையில் தங்கி நன்கு அரைக்கப்பட்டு,. அரைக்கப்பட்ட உணவுடன் செரித்தலுக்கான என்சைம்கள் கலக்கப்பட்டு, சிறுகுடலுக்குச் சென்று குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கப்பட்டு விட்டால், உண்ட உணவு செரிமானம் ஆகிவிட்டது என்கிறோம். செரிமானம் ஆகிவிட்டால் பசி எடுக்கத் தொடங்கிவிடுகிறது.

பசி நம்மை வாட்டி எடுக்கும்போது, நம்முடைய ஆசை தீரும்படியாக அளவின்றி உணவை உண்ணலாமா? கூடாது என்கிறார், வள்ளுவர்.

நெடிது வாழ வழி, அதாவது நீண்ட ஆயுளுக்கான வழி எதுவென்றால் பசி எடுத்தாலும் அளவோடு உண்பதே.

அற்றால் அளவறிந்து உண்க. அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)

மிகவும் சரி… உண்ட உணவு செரித்தது அறிந்தோம். அதன் பின்பு அளவறிந்து உண்ணாமல் இருக்கலாமா? அல்ல இருக்கலாகாது. நம் உடலுக்கு மாறுபாடில்லாத, சத்துள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. (944)

நல்லதும் மாறுபாடு இல்லாததும், சத்துள்ளதும், சுவை மிக்கதாகவும் உள்ள உணவு கிடைத்துவிட்டது… எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாமா? கூடாது. என்னதான் சுவைமிக்க உணவானாலும், அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டால், அதை மறுத்துவிட வேண்டும். அப்படி மறுத்து, உண்டால், நமக்கு எந்தவித ஊறுபாடும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

இந்த அத்தியாயத்தில், இதுவரை எடுத்தாளப்பட்டுள்ள நான்கு குறட்பாக்களில், நல்ல உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை வள்ளுவர் கூறினார். இன்றளவும் அது உண்மையாக இருக்கிறது. தற்கால மருத்துவரும் வள்ளுவர் கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளார்  என்பதை நாம் அறியும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறது.

உலகத்தில் வேறு எந்த அறிஞரேனும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற கருத்தை எடுத்துக் கூறியது உண்டா? இல்லை, இல்லவே இல்லை.

உண்ட உடன் சிறிதும் ஓய்வு எடுக்காமல், உடனடியாக வேலையில் ஈடுபட்டால், உணவு செரித்தலுக்கு வேண்டிய இரத்தம் செரிமான உறுப்புகளுக்குப் போவது தடைப்பட்டு, நமக்குத் தீங்கு விளையும், வயிற்றுக்கு உணவிட வேண்டுமே ஒழிய, செவிக்கு உணவிடக்கூடாது.
வள்ளுவர் இதை மிக அழகாகக் கூறுகிறார்.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் (412)

இந்தக் கருத்து வள்ளுவருக்கே உரியது. இக்கருத்து ஒன்றே திருக்குறள் உலக நூல் என்று பறைசாற்றும்.

உடல் பருமன்

உடல் பருமன் என்பது உடனிருந்து கொல்லும் உயிர் கொல்லி ஆகும்.

உடல் பருமனால் விளையும் தீங்குகளில் சில:

1. நீரிழிவு நோய்

2. உயர் இரத்த அழுத்தம்

3. இதய வலியும் இதயத் தாக்கமும்

4. மூளைத் தாக்கம்

5. மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி.

ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா இல்லையா என்பதனைக் கண்டறியும் ஓர் எளிய வழியைப் பார்ப்போம்.

ஒருவரின் உயரம் அய்ந்து அடி எனில், அவர் ஆணாக இருந்தால் 55 கிலோவும், பெண்ணாக இருந்தால் 52 கிலோவும் இருக்கலாம்.
கூடுதலாக உள்ள ஒவ்வோர் அங்குல உயரத்துக்கும் இரண்டு கிலோ கூட்டிக் கொள்ளுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவரின் உயரம் ஆறு அடி இருப்பதாகக் கொள்வோம். ஆணாக இருந்தால் அவரின் எடை 79 கிலோ (55+24) இருக்கலாம். பெண்ணாக இருந்தால் 76 கிலோ (52+24) இருக்கலாம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏன் தீய விளைவுகள் தோன்றுகின்றன?

உடல் பருமன் உள்ள ஒருவர் அளவுக்கு அதிகமான, தன்னுடைய கூடுதல் எடையைச் சுமக்க வேண்டியவராகிறார். அவர் நின்று கொண்டிருக்கும்போதோ, அல்லது நடந்து செல்லும்போதோ அவரின் அதிகப்படியான எடை அவரின் முதுகுத்தண்டு, இடுப்பு, மற்றும் முழங்கால் மூட்டுகளில் அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் அவரின் மூட்டு எலும்புகளும், முதுகு எலும்புகளும், இடுப்பு எலும்புகளும் விரைவாகத் தேய்மானத்திற்கு உட்படுகின்றன. எனவே அவருக்கு மூட்டு வலியும், இடுப்பு வலியும், முதுகு வலியும் தோன்றுகின்றன.

கூடுதலான எடை என்றால் உடலில் கூடுதலான திசுக்களும், செல்களும் கண்டிப்பாக இருக்கும். உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனைச் சுமக்கும் இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டுமானால், இதயமும் நுரையீரலும் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே இதயமும் நுரையீரலும் விரைந்து களைப்படைந்துவிடுகின்றன. அதனால் உடல் பருமன் உள்ளவர் சோம்பேறி ஆகிறார். எனவே கொலஸ்ட்ராலின் அளவு கூடுகிறது. இதயம், மூளை, சிறுநீரகங்கள் மேலும் மேலும் பாதிப்படைகின்றன. விளைவு: இதய வலி, இதயதாக்கம், மூளைத்தாக்கம் இன்னும் பல.

இவ்வளவு சிக்கல்கள் இருப்பதனை அறியாமல், உடல் பருமன் இருந்தால், என்ன குறை வந்துவிடும் என்று சிலர் கேட்கின்றனர். கொழு கொ-ழு என்று இருப்பது அழகுதானே எனவும் வினவுகின்றனர். உடல் பருமனால் இதயமும், மூளையும் பாதிக்காது தெளிவாக உள்ளதாகக் கூறுகின்றனர். உடல் பருமனால் தீங்குகள் ஏற்படும் என்று சொன்னால் அவர்களின் அய்யம் தீர்வது கிடையாது.

அவர்களுக்கான குறள்:

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். (510)

நம் உடல் பருமன் அடையக் காரணம் என்ன?

நாம் எவ்வளவு உணவை உட்கொள்கின்றோம் என்பதனை, எவ்வளவு வேலை செய்கின்றோம் என்பதனை எவ்வளவு உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றோம் என்பதனை பொறுத்தே நம் உடல் பருமன் அமையும்.

உணவைக் குறைவாக உண்டு, மிகையாக வேலை செய்தால் நாம் எடையை இழக்கிறோம். அதற்கு மாறாக உணவை அதிகமாக உண்டு. குறைவாக உழைத்திட்டால் நம் உடலின் எடை கூடுகிறது.

இதனைத்தான் வள்ளுவரும், அளவறிந்து உண்டால், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்கிறார்.

அற்றால் அளவறிந்து உண்க, அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு (943)

அளவறியாமல் அதிக அளவு உணவை உட்கொள்வதனால் கிடைக்கும் கூடுதலான கலோரிகள், நம் உடலில் கொழுப்பாக மாற்றப்படுகின்றது. ஆண்டுக்காண்டு கொழுப்பு கூடிக்கொண்டே வந்து, உடல் பருமனில் முடிவடைகிறது.

கொழுப்பு அடங்கிய உணவுப் பொருள்களைத் தவிர்த்துவிட்டால் உடல் பருமன் இல்லாமல் போகுமா? போகாது. ஏனெனில்,

இனிப்புகள், சர்க்கரை, அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துகளை உண்டாலும் அவை நம் உடலில் கொழுப்பாக மாற்றப்படுகின்றன.

குறிப்பாகப் பரோட்டா, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் மாவுச்சத்தும், கொழுப்பும் அடங்கி உள்ளன. மேலும் அவை சுவை உடையனவாய் இருப்பதனால், நம்முடைய பசியை அதிகரித்து மேலும் மேலும் உட்கொள்ளத் தூண்டுகின்றன.

சுவையுள்ள உணவு நமக்கு மாறுபாடு இல்லாத உணவு. எனவே மேலும் மேலும் உட்கொள்ளத் தூண்டுகின்றது.

எனவே மேன்மேலும் உண்டிட ஆசைப்படுவோம். நம் விருப்பத்துக்கு ஏற்ற உணவானாலும் அதிகமாக உண்ணக்கூடாது. அதிகமாகக் கிடைத்தாலும், அதனை மறுத்து, அளவோடுதான் உண்ணுதல் வேண்டும். அதனால் நம் உயிர்க்-கு ஊறுபாடு இல்லை. நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திடலாம்.

இந்தக் கருத்தை வள்ளுவர் மிக அழகாகக் கூறுகிறார்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

உண்ட உணவு செரிக்கப்பட்டதனை அறிந்து, நன்கு பசித்த பின் தீங்கு இல்லாத உணவை உட்கொள்ளுதல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து (944)

எடையைக் குறைக்க மருந்துகள் உள்ளனவா?
இல்லை, இல்லவே இல்லை!

கொஞ்சமாக உணவை உண்டு, அதிகமாக உழைத்தால் மட்டுமே நம் எடையைக் குறைக்க முடியும். உழைத்தால் மட்டுமே உண்ட உணவு நம் உடலை விட்டு அறும். மருந்தால் அல்ல. வள்ளுவரும்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (942)
எனப் பகர்கின்றார்.

பருமனைக் குறைக்கும் உணவுமுறை

உடலைக் கட்டுவிக்கப் பயன்படும் புரோட்டீன் (புரதம்) நம் உணவில் சேர்க்கப்படுதல் வேண்டும். கார்போஹைட்ரேட்டையும், கொழுப்பையும் குறைத்தல் வேண்டும். பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவை அறவே தவிர்த்தல் வேண்டும்.

பருப்பு, தானியம், பால் இவற்றில் புரோட்டீன் உள்ளது. புத்தம் புதிய காய்கறிகளிலும், கனிகளிலும் அதிக அளவில் உள்ளது. ஆனால், இனிப்புமிக்க, திராட்சை, மா, பலா போன்ற பழவகைகளைத் தவிர்த்திடுக.

உடலின் எடையை மிக விரைவாகக் குறைக்கக் கூடாது. மாதத்துக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை எடையைக் குறைத்தால் தீமை ஏதும் விளையாது. மிக அதிகப் பருமன் என்றால் இரண்டு கிலோ எடை வரை குறைக்கலாம். ஆண்டுக்குப் பத்து முதல் இருபது கிலோ எடை வரை குறைக்கலாம்.

வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் உண்ணாநிலை இருப்பது எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால், அதற்கு அடுத்தநாள் மிகையாக உண்ணக்கூடாது. தொடர் உண்ணாநிலை ஏற்புடைத்தது அல்ல.

மற்றவர் தூற்றும் பழிச் சொற்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அடுத்தபடியாக உண்ணாநிலை மேற்கொள்பவர்களைப் பெரியவர்கள் என வள்ளுவர் அழைக்கிறார்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (160).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *