ஊடகங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவது அறமும் அல்ல, அறிவியலும் அல்ல! – மஞ்சை வசந்தன்

2024 நவம்பர் 16-30 முகப்பு கட்டுரை

பல நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என நடைமுறைக்குவர, அவை அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பரப்பப் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். அறிவியல் வளர்ந்து உச்சம் பெற்றுள்ள இந்தக் காலத்தில், அதே அறிவியலைக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் உச்சம் பெறச் செய்துவருகின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அச்சு ஊடகங்கள்

கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரித்தாக்கிக்கொண்டு, பல நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அச்சு ஊடகங்களும் அவர்கள் ஆதிக்கத்திலே அகப்பட்டுக்கொண்டன.

ஓலைச்சுவடியில் இருந்தவற்றை தாள்களில் அச்சிடும் முறை வந்தவுடன், மூடநம்பிக்கைகளை நூல்கள் வழியில் பெருமளவில் பரப்பினர். குறிப்பாக புராணங்களையும், இதிகாசங்களையும் மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்த்தனர்.

ஏன் என்று கேட்காமல், சிந்திக்காமல் அப்படியே அக்கதைகளையும் கருத்துகளையும் ஏற்க வேண்டும், நம்பவேண்டும் என்று கூறி மக்களைச் சிந்திக்க விடாமல், கண்மூடித்தனமாக ஏற்கும்படி செய்தனர். கல்வியென்றாலே இந்தப் புராணங்களைப் படிப்பதுதான் என்றளவில் கல்வியை முடக்கினர்; சுருக்கினர். தங்கள் உயர்வுக்கும், மற்றவர்கள் இழிவுக்கும் காரணமாய் அமையும் வகையில் புராணங்களையும் இதிகாசங்களையும் உருவாக்கினர்.

அதன்பிறகு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் வந்தபின் அவற்றையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு மூட நம்பிக்கைகளைப் பரப்புவதை முதன்மையாகக் கொண்டனர். அச்சிட்டு வந்ததால் அவற்றில் உள்ளவற்றை உண்மையென்று மக்கள் நம்பினர். இது மூடநம்பிக்கைகளிலே முதல்தர மூடநம்பிக்கை
யாகும்.

நாளிதழ்களில், கடவுள், கோயில், சடங்குகள், கும்பாபிஷேகம், தேர் இழுப்பு, தீமிதித்தல், யாகங்கள் செய்தல் போன்றவற்றைப் பற்றி அன்றாடம் செய்திகள் வெளியிடுகின்றனர், அவற்றையும் முதன்மைச் செய்திகளாக வெளியிடுகின்றனர்.

கடவுள் மகிமை, கோயில்களின் மகிமை என்று பல கோணங்களில் கற்பனை, பொய் கலந்து கட்டுரைகளை எழுதிப் பரப்புகின்றனர்.

இராசி பலன்

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் இராசிபலன் இல்லாமல் வருவதில்லை. ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு வாரத்திற்கும் இராசிபலன்களைத் தனித்-தனியே வெளியிட்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பி, இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். இதில் வரும் அனைத்தும் பொய், மோசடிப் பித்தலாட்டங்களே!

ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஆசிரியரே இதுகுறித்து ஒரு சுவையான கருத்தைக் கூறியுள்ளார். அவருடைய ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து இராசிபலன் எழுதி வந்தவருக்கு உடல்நிலைப் பாதிப்பால், ஒருநாள் எழுத முடியாமல் போயிற்று. எப்படியாவது இராசிபலன் இதழில் வரவேண்டுமே என்ற முடிவில், கடந்த ஆண்டு ஒரு நாளில் வெளியிடப்பட்ட இராசிபலனை அப்படியே அன்றைய இராசிபலனாக எடுத்துப் போட்டார். விளைவு என்ன தெரியுமா? அடுத்த நாள் அந்த ராசிபலனைப் பற்றி அவ்வளவு பாராட்டுகள். பலரும், தங்களுக்கு அப்படியே நடந்தது; மிகச் சரியாக இருந்தது; இதைக் கணித்த சோதிடரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; அவரை சோதிட மாமேதை என்று பாராட்டினர்.

இராசிபலன் எவ்வளவு பொய் என்பதற்கும் மக்களின் நம்பிக்கை எப்படிப்பட்டது என்பதற்கும்இந்நிகழ்வே தக்க ஓர் எடுத்துக்காட்டு. எதை எழுதினாலும் லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் போது, அது பலருக்கும் பொருந்தவே செய்யும்! அதுதான் உண்மை. இதை வைத்தே இந்தப் பித்தலாட்டம் நடைபெறுகிறது.

ஆனால், மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கப்-பட்டுள்ளவர்களுக்கு அவையெல்லாம் தெரிவதும் இல்லை; புரிவதும் இல்லை.
இராசிபலன் இல்லாது எந்த ஓர் ஏடும் இந்தியாவில் வருவதில்லை. சோதிடத்திற் கென்றே தனி இதழ்களே வெளியிடப்படுவது வேதனைக்குரியதாகும்.
இப்படிப்பட்ட நிலையில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று கிரகப்பெயர்ச்சிகள் வந்துவிட்டால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதுபற்றிய செய்திகள்தான் இதழ்களில் இடம் பெறும்.

இதில் ஒரு தந்திரம் என்னவென்றால், பத்திரிகை விற்றுப் பணம் வருவதாலும் பார்ப்பனர்க்கு வருவாய்; பத்திரிகையை முட்டாள்கள் படித்துவிட்டு கோயிலுக்குப் படையெடுப்பதாலும் பார்ப்பனர்க்கு வருவாய்! இதில் படித்த முட்டாள்கள் முதலில் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

சங்கராச்சாரி அற்புதங்கள்

பத்திரிகைகள் பார்ப்பனர் பிடியில் இருப்பதால், தங்கள் இனத்தின் சங்கராச்சாரி, காஞ்சி பெரிய சங்கராச்சாரியை வாராவாரம் மகிமைப்படுத்தி எழுதுவதையே வாடிக்கை
யாகக் கொண்டுள்ளனர். நாம் வாழும் காலத்தில் கண் முன்னால் வாழ்ந்து இறந்தவர் அவர். அவரே இறுதிக் காலத்தில் கோமாவில் கிடந்து செத்துப்போனவர். சுயநினைவின்றி இருந்த அவரை நாற்காலியில் அமர்த்தி கனகாபிஷேகம் செய்தனர். அப்படி கோமாவில் செத்துப் போனவர்தான் ஏராளமான அற்புதங்களைச் செய்தார் என்று ஒவ்வொரு வாரமும் மோசடியாக, பொய்யாக எழுதி வருகின்றனர்.

சாயிபாபாவை அப்படித்தான் தூக்கிப்-பிடித்தார்கள். அவருக்கே குடல்வால் பிரச்சனை வந்தபோது மும்பை மருத்துவமனையில்தான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அவருடைய பித்தலாட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அப்படித்தான் இந்த சங்கராச்சாரியையும் அளவின்றி அற்புதங்கள் செய்தவர் என்று எழுதி வருகின்றனர்.

சங்கராச்சாரியைச் சந்தித்தோம்; எங்கள் வாழ்வே வளமானது. சங்கராச்சாரியிடம் வாழ்த்துப் பெற்றோம்; எங்கள் பிரச்சனைகள் எல்லாம் தகர்ந்து விட்டன. சங்கராச்சாரி பிரசாதம் கொடுத்தார்; என் நோய் குணமானது என்று எதையெதையோ எழுதி அவருக்கு மகத்துவம் சேர்க்கின்றனர். இந்த நிலை இப்படியே போனால் காலப்போக்கில் அவரைக் கடவுளாக்கிவிடுவார்கள்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு பெண், சங்கராச்சாரி சொன்னதாக ஒருசில வரிகளைச் சொல்லி இந்த வரிகளைத் தினம் காலையில் எழுந்தவுடன் சொன்னால் உங்கள் வாழ்வு உச்சிக்குப் போய்விடும்; செய்து பாருங்கள் என்கிறார். இப்படி ஏராளம் ஏராளம்.

மலர்கள்

அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும் மலர்கள் அனைத்தும் மேற்கண்ட மூடநம்பிக்கைகளைப் பரப்புகின்றனவாகவும், வளர்ப்பனவாகவுமே உள்ளன. கோயில்கள், கடவுள்கள், மகிமைகள், இராசிபலன், மந்திர பூஜைகள், மந்திரத் தகடுகள் எனப் பல வழிகளில் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கென்றே பல பண்டிதர்கள் நிறைய உருவாகி விட்டனர்.
ஒருவர், பெயர் இராசி என்று சொல்லிப் பிழைக்கிறார். இன்னொருவர், நட்சத்திர பலன் என்று சொல்லிப் பிழைக்கிறார். மற்றொருவர் கையெழுத்தை வைத்துப் பலன் சொல்கிறார். வாஸ்து, பரிகாரபூசை, நல்ல நாள், நல்ல நேரம் கணித்தல் என்று ஏராளமான வழிகளில் பிழைப்பு பிரமாதமாய் நடக்கிறது.

காட்சி ஊடகங்கள்

திரைப்படங்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன் புராணக் கதைகளாகவே இருந்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைப் பரப்பின.

அதன்பின் அண்ணா, கலைஞர் போன்றோரின் அரும்பெரும் முயற்சியால், அவை முறியடிக்கப்பட்டு, சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள், சமத்துவக் கருத்துகள் கொண்டு உருவாக்கப்பட்டன. என்றாலும் மூடக்கருத்துகளைப் பரப்பும் முயற்சியை அவர்கள் நிறுத்தவில்லை. புராணங்களை, காலத்திற்கேற்ப கற்பனை கலந்து கவர்ச்சியாகத் திரைப்படம் எடுத்து மக்களை பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கின்றனர். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கும் மூடநம்பிக்கைகளைக் கொண்டு செல்கின்றனர்.

தொலைக்காட்சிகள்

தொலைக்காட்சிகள் வந்தபின், மூடநம்பிக்கைகளைப் பரப்புவது அவர்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. திரையரங்குகளைத் தேடிச் சென்று பார்க்கும் நிலை மாறி, வீட்டிற்குள்ளேயே மூட நம்பிக்கைக் காட்சிகளைக் கொண்டு வந்துவிட்டனர். காலையில் நீங்கள் தொலைக்காட்சியைக் காணமுற்பட்டால் முதலில் உங்கள் மூளைக்குள் ஏற்றப்படுவது இராசிபலன்கள்தான். எந்தச் சேனலைப் பார்த்தாலும் அங்கு ஒருவர் உட்கார்ந்து இராசிபலன் சொல்லிக்கொண்டிருப்பார்.

அதை விட்டு விட்டு செய்திகளைப் பார்க்க முயன்றால், அந்தக் கோயில் கும்பாபிஷேகம், இந்தக் கோயிலில் தீமிதியென்று வரிசையாகச் செய்திகள். அடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்கதைகள் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளைப் பரப்பக்கூடியவையாகவே உள்ளன. தேவையில்லாமல், வலிய மூடநம்பிக்கைகளை அவற்றுள் நுழைத்து மூடக்கருத்துகளைப் பரப்புகின்றனர்.

பெண்ணடிமைத்தனம், தாலி மகத்துவம், தாலி பூசை, பரிகாரபூசை, வேண்டுதல், நேர்த்திக்கடன், மந்திரம், சோதிடம், தீமிதி, சாமியாடுதல், பேயாடுதல், பேய் ஓட்டுதல் என்று பலப்பல. விதிவிலக்காக ஒருசில தொடர்கள் தவிர, பெரும்பாலான தொடர்களின் நிலை இதுதான்.

பெண்கள் பெரும்பாலான நேரங்களில் இவை போன்ற தொடர்களைப் பார்ப்பதால் அவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் அவலம் நிகழ்கிறது. வீடுகளிலே இக்காட்சிகள் நடப்பதால் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எண்ணெய் விளம்பரம் செய்ய ஒரு நிறுவனம், சாமிக்கு விளக்கேற்ற இந்த எண்ணெய்தான் சிறந்தது என்று கூறும் சாக்கில் குழந்தைகள் மூளையில் மூடநம்பிக்கையை ஏற்றுகின்றனர். அதுவும் பாட்டி, பேத்திக்கு விளக்கம் கூறுவது போல் மூடநம்பிக்கையைக் குழந்தைகளின் மூளையில் ஏற்றுகின்றனர்.

ஊடகங்களாலேதான் மூடச்செயல்கள் அதிகமாகின்றன

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை தீபத்திற்கோ, திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கோ, சபரிமலை அய்யப்பனின் மகர ஜோதிக்கோ நூற்றுக்கணக்கானவர்களே கூடினர். ஆனால், இன்றைக்கு லட்சக்கணக்கானோர் கூடக் காரணம் ஊடகங்கள் – குறிப்பாக தொலைக்காட்சிகள் தருகின்ற விளம்பர வெளிச்சம்தான்.
திருவண்ணாமலை தீபம் எரிமலை வெடிப்பின் அடையாளம் என்ற அறிவியல் உண்மையை எந்த ஊடகங்களும் பரப்புவதில்லை. ஆய்வாளர்கள் ஆய்வு செய்து திருவண்ணாமலையில் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பை உறுதி செய்துள்ளனர். அக்காலத்தில் எரிமலை பற்றிய உண்மை அறியாத மக்களிடம் சிவன் நெருப்பு வடிவாய் விண்முட்ட எழுந்ததாய்க் கூறி வணங்கச் செய்தனர். இது சார்ந்து புராணங்கள் எழுதப்பட்டு, இயற்கை நிகழ்வு கடவுள் மயமாக்கப்பட்டு மூடநம்பிக்கை வளர்க்கப்பட்டது. சரியான உண்மைகளை மக்களுக்கு விளக்கிச் சொன்னால், மக்கள் மடமையில் மந்தையாய்த் திரள்வதைத் தடுக்கலாம். அவர்கள் அறிவோடு சிந்திக்க வழி செய்யலாம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பு, கால இழப்பு, உழைப்பு இழப்பு இவற்றைத் தடுக்கலாம். அரசுக்கும், காவல்துறைக்கும் ஏற்படும் இழப்பைக் குறைக்கலாம். ஆனால், அதை ஊடகங்கள் செய்வதில்லை.

அய்யப்பன் மகர ஜோதி

சபரிமலையில் ஜோதி, தானாகவே தோன்றுகிறது என்று பொய்யான கருத்தைப் பரப்பி மக்களை ஏமாற்றினர். மக்களும் அது கடவுள் அற்புதம் என்று நம்பி ஆயிரக்கணக்கில் அந்த ஜோதியைக் காணக் கூடினர். ஆனால், பகுத்தறிவாளர்கள் ஆய்வு செய்து, அங்கு மலை உச்சியில் தீப்பந்தம் கொளுத்திக் காட்டப்படுவதைக் கண்டுபிடித்துக் கூறினர்.
சபரிமலை தீபத்தை மணிக்கணக்கில் விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகள், அது இயற்கையாய்த் தோன்றும் தீபம் இல்லை; அங்கு மனிதர்களால் தீப்பந்தம் கொளுத்திக் காட்டப்படுவதால் தெரியும் ஜோதி என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்வதில்லை. ஊடகங்களுக்கு உண்மை தெரிந்தும் அதை உலகுக்குக் கூறுவதில்லை.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

ஒரு நாள் முழுக்க தொலைக்காட்சிகள் நேரலையாக வர்ணனையோடு இதை ஒளிபரப்புகின்றன. அதில் மக்களுக்குப் பயன்தரும், அறிவைத் தரும் ஏதாவது உள்ளதா? சூரனைக் கடவுள் அழித்தார். சூரன் மரமாக வந்தான், மயிலாக வந்தான், சேவலாக வந்தான் என்று அறிவுக்கு ஒவ்வாத மூடச் செய்திகளைக் கூறி, மனிதன் விண்வெளியில் சென்று கால்பதிக்கும் காலத்தில், மக்களை மடையராக்குவது சமூகத் துரோகம் அல்லவா?
மக்கள் நம்புகிறார்கள் என்றால், அவர்கள் வழக்கம் போல வழிபட்டுச் செல்வார்கள். அதைத் தங்கள் வருவாய் ஈட்டும் வழியாக மாற்றி, மூடநம்பிக்கையைப் பரப்புவது

ஊடகங்களுக்கு அறமாகுமா?

அரசியல் சாசனப்படி, அறிவியல் மனப்பான்மையை மக்களுக்கு உண்டாக்கும் தங்கள் தார்மீகக் கடமைக்கு முரணாக இக்காரியங்களைச் செய்வது மக்களுக்குச் செய்யும் தீங்கு என்பதை உணர வேண்டாமா?

தலையில் தேங்காய் உடைப்பதையும் தீ மிதிப்பதையும் காட்டும் ஊடகங்கள், அதனால் வரும் கேடுகளை, உடல் பாதிப்பை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டாமா? அது ஊடகங்களின் சமூகக் கடமை அல்லவா? தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இப்படிச் செய்ய அனுமதிப்பார்களா? ஊடகங்கள் உளச்சான்றோடு சிந்திக்க வேண்டாமா?

சமூகக் குற்றம்

இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்பி மூடநம்பிக்கைகளைப் ஒழிக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய – அறிவூட்ட வேண்டிய ஊடகங்களே சிறிதுகூட சமூகப் பொறுப்புணர்ச்சியின்றி, உளச்சான்று இன்றி, மக்களை முட்டாள்களாக்கி வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டே இக்காரியங்களைச் செய்வது சமூகக் குற்றமாகும்; சமூக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

சமூக ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன், நேர்மையாக, உளச்சான்றுடன் செயல்பட்டாலே 90 சதவிகிதம் கேடுகள் நீங்கிவிடும். மக்கள் மத்தியில் அதிக அளவில் சென்று சேரும் ஊடகங்கள்தான் இந்தச் சமூக விரோதச் செயல்கள், கேடுகளைச் செய்கின்றன.

எனவே, ஆதிக்க ஜாதிகளின் பிடியிலிருந்து ஊடகங்களை, மற்ற ஜாதியினரும் கைப்பற்ற வேண்டும். ஆரியப் பார்ப்பனர் அல்லாதார் நடத்தும் ஊடகங்கள் இத்துரோகத்தைச் செய்யாமல் நிறுத்திக்கொண்டு, மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். குறிப்பாக வடநாட்டிலிருந்து வந்து தமிழில் காட்சி ஊடகங்களை நடத்துவோர் திட்டமிட்டே தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.

தூய தமிழ்ப் பெயரைச் சூட்டும் வழக்கம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் உழைப்பால் நடைமுறைக்கு வந்து வளர்ந்தது. அதை இந்த ஊடகங்கள் மாற்றி சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டும் அளவிற்கு மக்களை மூளைச் சலவை செய்துவிட்டன. இன்று தமிழர் வீடுகளில் தமிழ்ப் பெயர்களே இல்லை என்பது மிக வேதனைக்குரியது; கவனத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டியது ஆகும்.

கலாச்சாரப் புரட்சி

ஆரியப் பார்ப்பனர்களும், அவர்கள் பிடியில் உள்ள ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் திட்டமிட்டு சனாதன நடைமுறைகளை நிலைநிறுத்த ஆட்சி அதிகாரத்தோடு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு, மூடநம்பிக்கைகளை அதிக அளவில் பரப்பினால்தான் சாத்தியப்படும் என்றும் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். 3 சதவிகிதம் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் 97 சதவிகிதம் உள்ள மக்களைத் தாழ்த்தி, வீழ்த்தி, அடக்கி, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்ய முற்படுகின்றனர். கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சியில்லாத காலத்திலேயே தந்தை பெரியார் தன்னால் இயன்ற அளவிற்கு ஆரிய ஆதிக்கச் சக்திகளை முறியடித்து, மூடநம்பிக்கைகளைத் தகர்க்கப் போராடி அதில் அதிக அளவு வெற்றியும் பெற்று, நம்மை மானமும், அறிவும், கல்வியும், பதவியும் உள்ள மக்களாய் முன்னேற்றிச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் அவரால் கிடைத்த இந்த உயர்வை இழக்காமல், மேலும் நாம் விழிப்புடன் எதிர்வினையாற்றி எதிர்த்தரப்பாரின் சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் பெரிய அளவில் கலாச்சாரப் புரட்சியைச் செய்தாக வேண்டும்.

தற்போது நம்மிடம் நம் கையில் செல்பேசியுள்ளது. அதன்வழி கலாச்சாரப் புரட்சி செய்வது மிகவும் எளிது. ஒவ்வொருவரும் அதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டாலே நாம் வெற்றி பெற முடியும். முதலில் நாம் ஒவ்வொருவரும், பகுத்தறிவுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து உண்மை எது, சரி எது என்று தெளிய வேண்டும். மூட
நம்பிக்கைகளை எந்த அச்சமும் இன்றி அகற்ற வேண்டும். அதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளை நம் செல்பேசி வழி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குப் பகிரவேண்டும்; பரப்ப வேண்டும். சனாதனிகளின் சூழ்ச்சிகளைச் சன்னமாய் விளக்கி மக்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யவேண்டும்.

மூடநம்பிக்கைகளை மக்கள் ஏற்கும்படிச் செய்ய, அதனால் அந்த நன்மை கிடைக்கும், இந்தப் பலன் கிடைக்கும் என்று ஆசை காட்டி ஈர்ப்பார்கள். எடுத்துக்காட்டாக கருங்காலி மாலை. அதில் ஏமாறாது நாம் எச்சரிக்கையுடன் அறிவார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மக்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு விழிப்பூட்ட வேண்டும் – வழிகாட்டவேண்டும்.

மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு வளர்க்கவும், கல்வி, வேலைவாய்ப்பு பெறவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், ஆதிக்கம் ஒழிக்கவும், நல்லிணக்கம் வளர்க்கவும் அறிவியல் கண்டுபிடிப்பான ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப ஊடகங்கள் செயல்பட வேண்டும்.இது இன்றைய கட்டாயத் தேவையும் கடமையும் ஆகும்.