ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 01-15

கேள்வி : நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட வேண்டிய அவல நிலை குறித்து? – ஜி. சாந்தி, பெரம்பலூர்

பதில் : வெட்கப்பட வேண்டும் – வேதனைப்பட வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் _ அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை பாலில் கலப்படம் உட்பட. நீதிமன்றங்கள் _ உயர், உச்ச நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பது கருத்துக்கூறுவது எனும்போது நாட்டை நடத்துவது யார்? நீதிமன்றங்கள்தானா என்ற கேள்வி எழுகிறதே!

கேள்வி : ஏற்படும் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளே காரணம் என இலங்கை கடற்படை பிராந்திய தளபதிகள் கூற்றுபற்றி? – பி. செல்வம், பெரம்பலூர்

பதில் : புராண காலத்து சிவன் கழுத்துப் பாம்பு என்ற கற்பனைபோல் சிங்களவெறியன் ராஜேபக்ஷேவின் தளபதியின் ஆணவப் பேச்சு இது! கண்டனத்திற்குரியது.

கேள்வி : புதுச்சேரி நீதிமன்றத்திற்கு கிரிமினல் குற்றவாளியாக வரும் சங்கராச்சாரிகள் இன்னமும் கையில் நீண்ட மந்திரக்கோல்(!) வைத்திருப்பது சரியா? இதனை ஆகமங்கள் ஏற்றுக் கொள்கின்றனவா? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : தலைக்காவிரிக்கு முன்பு ஓடிப்போனபோது தண்டத்தை _ குச்சியை போட்டுவிட்டு ஓடியவர்தான் இவர். அப்போதே இவர் சங்கராச்சாரியார் என்ற தகுதியை சாஸ்திரப்படியும், மரபுப்படியும் இழந்தவர் _ கிரிமினல் குற்றவாளியாகி அதை மறைக்க குச்சியைப் பயன்படுத்துகிறார் போலும். அது மந்திரக்கோல் அல்ல.

கேள்வி : தனித் தெலுங்கானா போராட்டம் மிகவும் வலுவடைந்துள்ள நிலையில், தனித் தெலுங்கானா சாத்தியமென நினைக்கிறீர்களா? –  எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : காங்கிரஸ் தலைமை இதுபற்றி உண்டு, இல்லை என்று முன்பே முடிவு எடுத்திருந்தால் இந்தப்படி ஆந்திராவில் அலைக்கழிப்பு இருக்காது; ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் கிளர்ச்சிகள் இருந்து முடிந்திருக்குமே! எல்லாம் தாமதமான முடிவுதான்! காங்கிரஸ் கட்சி இதற்குப் பெயர் போனதே!

கேள்வி : ஆறு மாதமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, இதனால் குடும்பத்தினர் மன உளைச்சல், ஊழியர்கள் பணிநீக்கம், நட்டகணக்கு காட்டி தனது சொந்த விமான சேவை நிறுத்தம், எதிர்காலம் கேள்விக்குறியானதால் பணியாளர்கள் தற்கொலை என இவ்வளவும் நடக்கும் நிலையில் கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய கோவிலுக்கு ரூ. 80 லட்சத்தில் தங்க கதவு வழங்கியுள்ளாரே கிங் பிஷர் தொழிலதிபர் விஜய் மல்லையா? – மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : தாய் பாலுக்கு பிச்சை எடுக்குதாம்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறானாம் என்ற கிராமிய பழமொழியை நினைவூட்டுகிறது!

கேள்வி : ஈழப்பிரச்சினையிலும், மண்டல் குழு அறிக்கை அமலாக்கப் பிரச்சினையிலும் தாங்கள் அகில இந்திய அளவில் தலைவர்களை சந்தித்து கருத்தொற்றுமை ஏற்படுத்தி களம் அமைத்து வெற்றி கண்டதுபோல், தேசிய கட்சிகளை வீழ்த்தி மாநில கட்சிகள் மக்கள் ஆதரவோடு மகத்தான சாதனை புரிந்துகொண்டிருக்கும் இன்றைய வாய்ப்பான சூழ்நிலையை பயன்படுத்தி, மதவெறி பா.ஜ.க. போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு இவைகளுக்கு மாற்றாக மத்தியில் உண்மையான கூட்டாட்சி மிக்க கூட்டணி அரசு ஏற்பட தங்களின் அறிவார்ந்த சிந்தனைகள் பயன்படுத்தப்படுமா? – சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை

பதில் : யோசிக்க வேண்டிய கருத்துதான். தமிழ்நாட்டை நாம் நம் கொள்கை வயப்படுத்தும் பணி முன்னுரிமை பெற்றாக வேண்டுமே!

கேள்வி : சமூக, அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டால் என்ன?
–  வெற்றிவேல், உத்திரமேரூர்

பதில் : நல்ல கருத்து. இதற்கென ஒரு சிறந்த நீதிஅரசர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் போராளிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் மத்திய அரசு.

கேள்வி : போலீஸ் பட்டாளங்களின் பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாட்டம் எப்போது நடக்கும்? – ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி

பதில் : கடவுள்களுக்கே போலீஸ் தேவைப்படுகிறது. தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இக்காரணங்கள் நீங்கும்வரை உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்க வாய்ப்பில்லை.

கேள்வி : அமெரிக்காவில் அய்யாயிரம்பேர் சாவுக்கு காரணமான பின்லேடன் தஞ்சம் அடைந்த நாட்டில் கொலை செய்யப்பட்டார். இலங்கையில் இலட்சத்திற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு அய்.நா. என்ன தண்டனை வழங்கும், எப்போது வழங்கும்? – திங்கள்நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : காலம் கனியும்போது நிச்சயம் தண்டனை பெறுவார் அவர்.

கேள்வி : திராவிட கட்சிகளோடு இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறிவருகிறாரே. இதை கடைசிவரை மருத்துவரால் கடைப்பிடிக்க முடியுமா? – தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : அவசியம் அவர் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் திராவிடக் கட்சிகள்  நிம்மதி அடையும்! இதற்காக அவருக்கு திராவிடக் கட்சிகள் நன்றி சொல்ல வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *