அய்யாவின் அடிச்சுவட்டில் . . .

நவம்பர் 01-15

74-ஆம் ஆண்டு பிறந்தது _ பெரியார் என்ற மாபெரும் இமயம் திடீரென்று இல்லாமல் போய்விட்டால் ஏற்படும் வெற்றிடம் பயங்கர பள்ளத்தாக்கு போல் தெரிந்தது. புறத்தோற்றத்தில் தான் அப்படி;  உண்மையில் அப்படி அல்ல; அந்த இமயத்தின் உயரத்தில் பறந்த கொடி, கொள்கை, இயக்கம் காணாமற்போய்விடவில்லை; துயரம் தாங்கிய உள்ளத்தோடு அந்த கொடிபோன்ற உருவமாக அய்யாவைக் காப்பாற்றி உடல்பேணிய அன்னை மணியம்மையாரின் தலைமையாக, தந்தை தந்த தத்துவங்களைத் தலை தாழ விடாது காக்கும் கொற்றமாக அவரது தலைமை _ அய்யா தயாரித்த அற்புதத் தொண்டறத் தூயவர் அன்னையார் தலைமை ஏற்று, விட்ட பணிமுடிக்கப் புறப்பட்டார். வீழ்ந்த சூரியனின் ஒளி மீண்டும் விடியலாகக் கிளம்பி உச்சிவந்த பிறகே சிலர் அதைச் சூரியன் என்று ஒப்புக்கொள்ளுவது போல, அன்னையர் பிரகடனப்படுத்தினார்கள்.

4-_1_1974 அன்று விடுதலையில் ஓர் அருமையான அறிக்கை திரும்பி வருகிறேன் என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் அன்னையார் அவர்கள்,

அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவுக்கு உழைக்கவும் மக்களுக்கு அவர் செய்துவந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும் மனித தன்மையோடு, பண்போடு, உண்மையும் ஒழுக்கமும் உயர்வெனக் காட்டிய (அவர்தம்) வழியிலேயே நாமும் இனி வாழ்நாள் எல்லாம் என்ற உறுதியான எண்ணத்துடன் இன்று முதல் செயல்படத் துவங்கிவிட்டேன். இனி எனக்கு எந்தவிதமான சுயநலப்பற்றும் – பாசமும் – பந்தமும் இல்லாது மன நிறைவோடு, மனிதப் பற்றோடு வாழ்வை நடத்தவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு என்னை ஆளாக்கிக் கொண்டேன்.

எனது இளம்வயதிலிருந்தே _ அதாவது எனக்கு புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகி பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சில நாள்களுக்குள்ளாகவே அய்யாவிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாக்கி அவர் நலத்தை கண் எனப் பாதுகாக்கும் ஒரு தாயாக என்னைப் பாவித்துக்கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் ஒரு நாளும் என்னைப் பெயரிட்டு அழைக்காமல் அவர் உயிர் பிரியும் வரையிலும் அம்மா! அம்மா!! என்று ஆயிரம் அம்மாக்களை தினமும் அழைத்தவண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத் தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டுமே அதை மானசீகமாக கேட்டுக்கொண்டே இருக்கிறது. …… அவரோடு நான் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அவரை விட்டுப் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11ஆம் நாள் வந்தடைந்த நான் அன்று முதல் இன்றுவரை (4-_1-_1974) (எழுதிய நாள்) அய்யா மறைந்த நாள் டிசம்பர் 24_12_1973 ஆகும்.

ஒரு நாளும் விட்டுப் பிரியாமல் மகிழ்ந்த நான், இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடுநடுவே பிரிய நேர்ந்தது என்றும்,

இப்படி அந்த மிகமிக உருக்கமான அறிக்கையில் மேலும், அன்னையார் எழுதுகிறார்.

…… 1972 செப்டம்பர் 17ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடி அவரது திருவுருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு, நானும் அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன்முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நம் இயக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும் பின்னர் என் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும், அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன். எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய்விட்டது.

அவ்வளவுதான், வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கின்றது. இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக – என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் _- வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன் என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன்னேன். இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா? எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டிவண்டியாய்ச் சொல்வீர், கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன் கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலேயே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.

சில சமயங்களிலே எனக்கும், அய்யா அவர்களுக்கும் சிறுசிறு சம்பவங்களுக்கெல்லாம் கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக்கூட நடந்து கொள்வேன். அது தவிர, அவர் மனது நோகும்படியாகவோ, துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு. உடனே சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக்கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன்வந்து விடுவார். மற்றப்படி பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்துகொண்டு அவர்தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும், தொந்தரவும் இன்றி கவனித்துத்தான் வந்தேன். நான் வருத்தப்பட்டாலும், கோபித்துக் கொண்டாலும் அய்யா அவர்கள் மற்றவர்களிடம் கூறுவார்.

இந்தம்மாவுக்கு இப்பொழுதெல்லாம் பொறுமையே இருப்பதில்லை. பாவம் நோய் வந்த பிறகு என்னமோ மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறது. மிகவும் பலவீனமாகிவிட்டது. எல்லாத் தொல்லைகளையும் தன் தலை மேலேயே போட்டுக் கொண்டு துன்பப்படுகிறது. என்ன சொன்னாலும் கேட்பதில்லை. இந்தப் பள்ளிக்கூடம் (அனாதைக் குழந்தைகள் இல்லம்) வந்த பிறகு இந்தப் பசங்களோடு போராடுவதே அதற்குக் கஷ்டம். இதுதான் காரணம் என்று மற்ற நண்பர்கள் – தமக்கு மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் சொல்வார்கள். என் மனச்சுமையைத் தீர்க்கத் தம் அறிவுரையினால், அன்பு மொழியால், வேடிக்கைப் பேச்சினால் பக்குவமாகப் பேசி என் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பரிபக்குவமற்ற எண்ணத்தை மாற்றி அதை மறக்கும்படி செய்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி விடுவார்.

அப்படிப்பட்ட அருமை அய்யா அவர்கள் இன்று இல்லை என்ற ஒரு குறையே தவிர, அவர் நம்மைவிட்டு எங்கும் போகவில்லை. நம்மிடையே,  நம் செயலிலே, கருத்திலே என்றென்றும் இருக்கிறார்.  ஆகவே, அன்புள்ள தமிழ் மக்களே, தாய்மார்களே! உண்மையாகவே நாம் அய்யாவிடம் அன்பு செலுத்துபவர்களாய் இருந்தால் அவர் கொள்கையை – அவர் நினைவை கருத்தைத் தொடர்ந்து செய்துகொண்டே நம்மை நாமே பக்குவப்படுத்த நல்ல உறுதியான மனங்களைப் பெற்றுத் தொடருவோம் நம் பணியை. அய்யாவின் பணியைக் குறையில்லாமல் செய்து நிறைவு பெறுவோம்; அவர் சிந்தனைக்கு வழிவகுப்போம்.

சென்ற மாதம் (டிசம்பர்) 3-ஆம் தேதி இரவு திருச்சியிலிருந்து புறப்பட்டு அய்யா அவர்களுடனும், நண்பர்களுடனும் மாநாட்டு வேலைக்காகத் தட்டுமுட்டுச் சாமான்களுடன் 4-ஆம் தேதி காலை சென்னைக்கு வந்த நான் இன்று 4-ஆம் தேதி ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரைத் தினம் தினம்  அவர் தங்கி அவர் கருத்துகளை அள்ளி அள்ளி வீசிய அவரது இல்ல  த்தையே ஓய்வகமாக இனி அமைத்துக் கொள்ளுங்கள். என்னுடன் வரவேண்டாம். நான் தனித்தே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் நினைவிடத்தை நோக்கி விடைபெற்றுக் கொண்டு 6ஆம் தேதி உங்களைச் சந்திக்க இன்று 4ஆம் தேதி மாலை சென்னையை விட்டுப் புறப்பட்டு நண்பர்களுடன் திருச்சியை _ அவர் வாழ்வில் பெரும் பகுதியை செலவழித்த அவரது அருமை இல்லத்தை நோக்கி வருகிறேன்.

என்று திருச்சி நோக்கி 6_1_ 1974 காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த திராவிடர் கழக மாநில பொது நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள விரைந்தார்கள்.
அறிவித்தபடி 6_1_1974 ஞாயிறு அன்று காலை திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்கள் கழக வரலாற்றில் முதல்முறையாக கலந்துகொள்ளாத திராவிடர் கழக கலந்துரையாடல் கழக வரலாற்றில் முதல்முறையாக நடந்தது!

துவக்கத்தில் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் அனைவரையும் வரவேற்று உரையாற்றியபின் கூட்டத்திற்கு அய்யா நம்முடன் இல்லாத நிலையில் அய்யாவால் அடையாளம் காட்டப்பெற்ற நம் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

அதனை கழகத்தின் மூத்த மாவட்டத் தலைவர்களில் ஒருவரான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தர்மபுரி மாவட்ட தி.க.  தலைவர் எம்.என்.நஞ்சய்யா, மதுரை மாநகரத் தலைவர் ஓ.வீ.கே. நீர்க்காத்தலிங்கம் ஆகியோர், அம்மா அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு மட்டுமல்ல, கழகத்திற்கே தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று வழிமொழிந்து உரையாற்றினார்கள்.

அவர்களைப் பின்பற்றி மாவட்டத் தலைவர்கள், கழக முக்கிய செயல்வீரர்கள் என்று 27 பேர்கள் உரையாற்றினர். பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கூட்டத்தில் பின்வரும் ஏழு (7) தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன:-_
இதில் இரண்டு இரங்கல் தீர்மானங்கள் போக மற்ற தீர்மானங்கள் அய்ந்து _ அய்யாவுக்குப் பின் அம்மாவின் தலைமை என்ற ஒரு புதிய அத்தியாயத்தைக் கழக வரலாற்றில் இணைத்தவை.

அவைகள்:

தீர்மானம் 1: தந்தை பெரியார் அவர்களின் நெடுநாளைய நண்பரும், நல்ல பகுத்தறிவுவாதியும் விஞ்ஞான அறிவாற்றல் மிக்கவருமான திரு.ஜி.டி.நாயுடு அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் வருந்துவதுடன், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2: தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது துக்கம் தாளாது துயரத்தால் உயிர்நீத்த திருச்சி பெரியார் நகர் வரகனேரி கழகத்தோழர் மருதமுத்துவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: வணக்கத்திற்குரிய தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப்பிறகு, திராவிடர் கழகத் தலைமைப் பொறுப்பிற்கு அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.

தீர்மானம் 4: தந்தை பெரியார் அவர்கள் மறைவிற்கு நேரில் வந்தும், கண்ணீர்க் கடிதங்கள் மூலமும் தங்கள் மரியாதையைத் தெரிவித்துக் கொண்ட பொதுமக்களுக்கும் பல்வேறு கட்சியைச் சாந்தவர்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 5: தந்தை பெரியார் அவர்களது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மிக்க சிறப்புடன் அய்யா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து தந்தை பெரியார் அவர்களுக்கும் அவர்களின் பெருந்தொண்டர்களுக்கும் பெருமை செய்த முதல் அமைச்சர் கலைஞர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6: தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்நாள் முழுதும் எந்த லட்சியத்துக்காகப் போராடி வந்தாரோ அந்த லட்சியத்தை அடைய அவர் வழியில் தொடர்ந்து செயல்படுவதற்கு இக்கூட்டம் தனது உறுதியினை உலகுக்கு அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 7: இந்தப் பணியைத் தொடர ஜனவரி 16 முதல் 25 முடிய உறுதி நாள் என்பதாக ஏற்பாடு செய்து தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகக் கூட்டங்கள் நடத்தி, அக்கூட்டங்களில் திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கி கீழ்கண்ட உறுதி மொழியினைக் கூறிபொதுமக்கள் முன்னிலையில் கழகத் தோழர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

திராவிடர் கழகத்தவராகிய நாங்கள் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற பணியை அவர் போட்டுத்தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்கிறோம் மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்த 7வது தீர்மானம் உறுதி ஏற்புத் தீர்மானமாகும். இனி வருங்காலத்திலும் வழிகாட்டும் கலங்கரை விளக்க வெளிச்சம் போன்ற கட்டுக்கோப்புடன் கழகம் கடமையாற்றிடும் என்பதை இந்தப் பரந்த பூமிப் பந்திற்குப் பிரகடனப்டுத்திய செயல்திட்ட விளக்கச் செப்பேடு ஆகும்!

தந்தை பெரியார் விட்டுச்சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்  இது கழகத் தலைவரின் சூளுரைப் பிரகடனமாகும்.

– நினைவுகள் நீளும்

– கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *