பெற்றோர் – மாணவர் சிந்தனைக்கு…

நவம்பர் 01-15

மூன்று முக்கோணம்

– மஞ்சை வசந்தன்

மாணவர்கள்தான் எதிர்கால உலகம், தூண்கள், வருங்கால ஆட்சியாளர்கள், சிற்பிகள் என்று பலவாறு அவர்களிடம் எதிர்பார்ப்புகள் அவர்கள்மீது சுமத்தப்பட்டாலும், அல்லது அவை அவர்களின் பொறுப்புகள், கடமைகள் என்று கொண்டாலும் அதற்கான முயற்சிகள், திட்டங்கள், பயிற்சிகள், அறிவுரைகள், நெறிகாட்டல்கள் அவர்களுக் காக மேற்கொள்ளப்படுகின்றனவா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

 

எதிர்காலமே அவர்கள்தான் என்னும்போது அதற்கேற்ற அக்கறையோடு, கட்டாயத்தோடு எந்த முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. வணிக உலகில் அவர்கள் தள்ளிவிடப்பட்டு, சூழலின் கைப்பாவையாக வளர்கிறார்கள்; வார்த்தெடுக்கப்படுகிறார்கள்.

மூன்று வயதில் சீருடைச் சுமையும், புத்தகச் சுமையும் சுமத்தப்பட்டு பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு உரிய இயல் பூக்க உணர்வுகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு ஏன் பொசுக்கவும்பட்டு அவர்கள் இயந்திரங்களாக்கப் படுகிறார்கள்.

அதிக மதிப்பெண், முதல்தகுதி, சரளமான ஆங்கிலப் பேச்சு இவை மட்டுமே மாணவர்களுக்கு இலக்காகக் கொள்ளப்படுகின்றன. இவற்றை அடைய அவர்களுக்கான உணவு, உடற்பயிற்சி, மனவெழுச்சிக்கு ஏற்ப ஆடி, ஓடி, துள்ளல் என்று எவைபற்றியும் பெற்றோரும் மற்றோரும் கவலை கொள்வதில்லை; கருத்தில் கொள்வதும் இல்லை.

எனவே, மாணவர்கள் வளமான, வலுவான நலமான உளம் மற்றும் உடலோடு, மகிழ்வோடும் மனம் இறுக்கம் இன்றியும் ஆற்றலாளர்களாய் சாதனை யாளர்களாய்த் திகழ வேண்டுமாயின் மூன்று முக்கோணங்களை அவர்கள் பின்பற்ற வேண்டும்; மாணவர்களுக்குப் பொறுப்பேற்கும் பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் அவைகளைப் பின்பற்றச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

முதல் முக்கோணம் (உணவு முக்கோணம்)

உணவு உண்ணும்போது சிறுவர்களாயினும், பெரியவர்களாயினும் இந்த நேர் முக்கோணத்தைப் பின்பற்ற வேண்டும்.

காலையில் அதிக உணவு _ பழம் + வேகவைத்த காய் + இட்டலி அல்லது சப்பாத்தி.

பகலில் அதைவிட குறைவான உணவு. சாம்பார் + இரசம் + மோர் + கீரை.

இரவு அதைவிட குறைவாக உண்ணவேண்டும். இடியாப்பம் அல்லது புட்டு அல்லது கேழ்வரகு அடை + பழம் + பால். ஆனால், நாம் வழக்கத்தில் காலையில் குறைவான உணவு. மதியம் அதிக உணவு. இரவும் அதிக உணவு எடுத்துக் கொள்கிறோம். இது சரியான உணவு முறையல்ல.

இரவு முழுக்க உண்ணாமல் இருக்கும் வயிற்றுக்கு காலையில்தான் அதிக உணவு கொடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் உணவு உடலால் நன்கு செரித்து ஏற்கப்படும். மதிய உணவு அதிகம் எடுப்பது சரியன்று. அது மிதமாக மேற்கண்டவாறு இருக்க வேண்டும். இரவு தூங்குவதால் எளிதில் செரிக்கும் மென்மையான குறைவான உணவே உகந்தது.

இரண்டாவது முக்கோணம்
(உடல் முக்கோணம்):

 

உடல் தலைகீழ் முக்கோணமாக இருக்கும்படி பயிற்சி செய்யவேண்டும். அதாவது உடலின் மேல்பகுதி (தோள்பகுதி) அகலமாக பரந்து இருக்கவேண்டும். வயிற்றுப்பகுதியும் இடுப்புப் பகுதியும் குறைவாக இருக்க வேண்டும். கால் பகுதியும் மெலிந்து அளவோடு இருக்க வேண்டும். இதற்கு கொழுப்பு குறைந்த உணவு; செயற்கை உணவுகளைத் தவிர்த்தல்; சாக்லட், துரித உணவு (பாஸ்ட் புட்), வறுத்த உணவு, அய்ஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட்டு, பழம், கீரை, காய்கறிகள் இவற்றால் சுவையோடு செய்யப்பட்ட உணவுகளை அளவோடு உண்டு, உடற்பயிற்சி செய்தால் மேற்கண்ட உடல் அமைப்பு கிடைக்கும். நோயற்ற உடல் நலம் வாய்க்கும்.

மூன்றாவது முக்கோணம்
(கல்வி முக்கோணம்):

அருகிலுள்ள முக்கோணத்தை பின்பற்றாத எந்தக் கல்வி முறையும் மாணவர்களுக்கு எதிரான கல்வி முறை என்று உறுதியுடன் சொல்லலாம். உடல்நலம், மனநலம், அறிவுநலம் இம்மூன்றும் சமச்சீராக பேணப்படும் கல்விமுறையே சிறந்த கல்விமுறை. உடல்நலம் உள்ள இடத்தில்தான் மனநலமும் அறிவு வளமும் இருக்கும். உடல்நலம் பேண மேற்கண்ட வகையில் உணவுகள் உண்ணப்பட வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

படிப்பு படிப்பு என்று மன அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுக்காமல், கற்றலோடு, களிப்போடு இருக்கும் வாய்ப்புகளை இடையிடையே மனமகிழ்வு, சிரிப்பு, ஓய்வு (ரிலாக்சேஷன்) கட்டாயம் தேவை. அதற்கேற்ப கற்றல் கற்பித்தல் பாட வேளைமுறைகள் அமைக்கப்பட வேண்டும்.

உடல்நலமும், மனநலமும் உறுதி செய்யப்பட்டால் அறிவு வளம் தானே வரும். அறிவு வளம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி என்பதோடு, வாழ்வியல் சிந்தனைகள் வழங்கப்பட வேண்டும். நன்னெறிகள் புகட்டப்பட வேண்டும். ஒழுக்கமான, கட்டுப்பாடான (அடக்குமுறையல்ல) வாழ்வுக்கு பயிற்சிதர வேண்டும்.

நெறியும், கட்டுப்பாடும், ஒழுக்கமும், பண்பாடும், மனிதநேயமும், தொண்டு எண்ணமும் கற்பிக்கப்படாது அறிவு மட்டும் கூர்மையாகத் தீட்டப்படுமாயின் அது ஆபத்தானது. தறிகெட்டு தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற, இலக்கற்ற வாழ்விற்கு அது வழிவகுத்துவிடும். எனவே, மழலையர் பள்ளிமுதல் கல்லூரிக் கல்விவரை இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டு உருவாக்கப்படும் மாணவர்கள் உண்மையில் எதிர்கால மனிதவள ஆற்றலாக மாறுவார்கள். இல்லையேல் அவர்கள் சமூகச் சுமையாக மாறுவார்கள்.

எனவே, பெற்றோரும், அரசும், கல்வி நிறுவனங்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு, மாணவர்களை உருவாக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். இல்லையேல் மாணவர்கள் வருங்கால தூண் என்பதற்கு மாறாய் வீண் என்று மாறுவர். வீண் எப்போதும் விபரீதங்களையே உருவாக்கும் என்பதைப் புரிந்து இவர்கள் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *