சென்ற இதழ் தொடர்ச்சி…
“காதல்” என்பது பற்றிய சிந்தனைகள்
1. ரசல் அவர்களின் ‘Marriage and Morals’ எனும் நூலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் ‘The place of love in human life’ எனும் தலைப்பில் (தமிழாக்கம் கோ.மாதவன், “திருமண முறைகள்” எனும் நூல். பழநியப்பா பிரதர்ஸ் வெளியீடு. முதல் பதிப்பு 1965) கூறப்பட்டுள்ளவற்றுள் முதன்மையான சில கருத்துகள் வருமாறு:-
1. காதல் என்ற சொல்லை முறையாக உபயோகித்தால், அது ஆண்- பெண் இருவரி டையே காணும் ஏதாவது உறவையோ அல்லது ஒவ்வோர் உறவினையுமோ குறிக்காது. மிக்க மனவெழுச்சியூட்டுவதுடன் மன உறவும் உடல் உறவும் கொள்ளும் ஒன்றையே அது குறிக்கிறது. அவ்வுறவு எவ்வளவு வலிமை அல்லது செறிவு பொருந்தியதாகவும் இருக்கலாம்.(130)
2. சீனாவில் காதல் காணப்படுவது அரிது. தீய காமக்கிழத்திகளால் வழி தவறும் கெட்ட சக்கரவர்த்திகளிடம் அது காணப்பட்டதாக சீன வரலாறு கூறுகிறது. எல்லா விதமான ஆழ்ந்த, உணர்ச்சிகளுமே கூடாதென்று சீன மரபு ஒழுங்கினை ஒட்டிய கலாச்சாரம் வலியுறுத்தியிருக்கின்றது. பகுத்தறிவை எந்த நிலையிலும் காக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியிருக்கிறது. (131)
3. பகுத்தறிவையொட்டிய செயல்களைக் கடந்து மூன்று வகைச் செயல்கள் இருப்பதை இன்றைய நவீன உலகில் காணலாம். அவை மதம், போர், காதல் ஆகியவையாகும். இவை மூன்றும் பகுத்தறிவைக் கடந்தவையே ஆயினும், காதல் பகுத்தறிவுக்கு எதிரிடையானதன்று. அதாவது பகுத்தறிவாளன் கூட ஓரளவுக்குக் காதல் நிலவுவதை விரும்புவான். (131)
4. நவீன உலகில் மதம், காதல் ஆகியவற்றிடையே ஒருவிதப் பகைமை உள்ளது. இப்பகை தவிர்க்கக் கூடியதே. மற்ற சில மதங்களைப் போலல்லாமல் கிறிஸ்துவம் துறவறத்தில் வேரூன்றியிருப்பதால் அவ்விதப் பகைமையைக் காண்கிறோம். (132)
5. காதலுக்கு மதத்தைவிட ஆபத்தான வேறு ஓர் எதிரியும் உண்டு. தொழில் செய்தலும் பொருள் ஈட்டுவதில் வெற்றி காணும் முயற்சியுமே அவ்வாறு பகைச் சக்திகளாக உள்ளன. சிறப்பாக அமெரிக்காவில் தொழிலில் காதல் குறுக்கிடவிடக் கூடாதென்றும் அப்படி ஒருவன் தொழிலைப் பாதிக்குமாறு காதலைப் பேணினால் அவன் நடத்தை மடமையானதென்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.(132)
6. காதலால் விளையக்கூடிய எல்லா நன்மைகளும் கிட்ட
வேண்டுமாயின் அதைச் சுதந்திரமாகவும், தாராளமாகவும் (தேவையற்ற) கட்டுத் திட்டங்களுக்கு அடங்காததாகவும் மனப்பூர்வமாகவும் அடையவேண்டும் என்பது தெளிவு. (137)
7. மனித வாழ்க்கையில் காதல் இடம் பெற நல்ல பல காரணங்கள் உள்ளன என்பது தெளிவு. ஆனால் அது கட்டுக்கடங்காத சக்தியாகும். அதை (எல்லைமீறி) அப்படியே விட்டுவிட்டால் அது சட்டத்திற்கோ வழக்காற்றுக்கோ அடங்கியிருக்காது. குழந்தை உண்டாகாத வரையில் காதலின் இத்தன்மையினால் கேடு ஒன்றும் நேராது. குழந்தைகள் தோன்றியதும் நிலைமையில் மாறுதல் காண்கிறது. அதன்பின்னர் காதலுக்குச் சுதந்திரம் கிடையாது. ஆனால், மனித இனத்தின் உயிர் நூல் ரீதியான நோக்கம் நிறைவேற காதல் பயன்படுகிறது. (142)
தஞ்சை
பெ. மருதவாணன்
8. ஆழ்ந்த காதலுக்கும் குழந்தைகளின் நலனுக்கும் முரண்பாடு தோன்றும்போது, ஆழ்ந்த காதலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் நலனைப் பேணுமாறு செய்யும் சமூக நெறிமுறை உருவாக வேண்டுவது அவசியம். காதல் நல்லதென்பது மட்டுமன்று; பெற்றோர்கள் ஒருவரையொருவர் காதலித்தால் அத்தகைய காதல் உறவு குழந்தைகளுக்கு ஜீவாதாரமாகவும் இருக்கும். (142)
9. ஆகவே, ஆண் பெண் உறவுமுறை பற்றிய ஒழுக்க விதி குழந்தைகளின் நலன்களை அதிகமாய்ப் பாதிக்காத அளவில் காதல் வளர்வதற்கு ஏற்ற முறையில் இருக்க வேண்டும். குடும்பம் பற்றி நாம் கவனித்த பிறகே இவ்விஷயத்தை ஆராய முடியும். (142).
2. அ) தந்தை பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் நூலின் மூன்றாவது அத்தியாயத்தில் காதல் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதன்மையான சில கருத்துகளை இனி காண்போம்:-
1. அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத் தவிர வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் எனும் ஒரு தனித்தன்மை ஆண் – பெண் சம்பந்தத்தில் இல்லை.
2. காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகிறது? அது எதுவரையில் இருக்கிறது? அது எந்தெந்தச் சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணம் என்ன? என்பதைப் போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும் அதைப் (காதலை) பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆ) “காதல்” என்பதற்கு நமது சமூகத்தில் பலரும் எப்படியெல்லாம் செயற்கையான தன்மைகளைப் புகுத்தி கற்பித்ததில் உழலுகிறார்கள் என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.
1. காதல் என்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல என்றும்,
2. அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு என்றும்,
3. அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும் என்றும் அதுவும்,
4. இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும் என்றும்,
5. அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும், அதுவும்,
6. ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணிடம் மாத்திரம்தான் இருக்க முடியும் என்றும்,
7. அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு
விட்டால் பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும்,
8. பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டு
விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபசாரம் என்றுதான் சொல்ல வேண்டுமே
யொழிய, அது ஒருக்காலும் காதலாகாது என்றும்,
9. மற்றும் ஓர் இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும், காமமோ, விரகமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.
இ) காதல் என்ற வார்த்தை (தமிழ் மொழியில்) ஆண் – பெண் கூட்டுத் துறையில், அன்பு, ஆசை ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர, வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை.
ஈ) ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்
கிருக்கலாம். தனக்கு வேண்டும் என்பதாக
ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்
கின்றானோ அதுபோலவே தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகிறதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
உ) காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு அறிவீனம் அனுபவமின்மை ஏமாற்றம் என்பவைகளைவிடச் சிறந்தது அல்ல.
ஊ) ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்களிடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானேயொழிய வேறில்லை என்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும், அவ்வறிவும்
நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும், தேவையும் ஆசையும் மாறக்கூடியதென்றும் ,அப்படி மாறும்போது அன்பும் நட்பும் மாற வேண்டியதுதான் என்றும் – மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.
எ) இதிலிருந்து, நாம் யாரிடமும், அன்பும் ஆசையும் நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டது இல்லை என்றோ கூற வரவில்லை.