டும் டும் டும்… என்ற பறைஓசை சத்தத்துடன்… இதனால் ஊர்ப் பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்னவென்றால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் மந்தைவெளி அம்மன் கோவில் தர்மகர்த்தா, கோவில் பூசாரி, சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தலைமையில், ஆடி மாதம் மூன்றாவது வாரம் அம்மனுக்குக் காப்பு கட்டுதல், கூழ் ஊற்றுதல், மற்றும் தீ மிதித்தல் விழா சம்பந்தமாக கோவில் அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதால் ஊர் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்… டும் டும்…” என்று டாம், டாம் போட்ட ஊர்த் தலையாரியின் சத்தம் பெரியார் தெருவில் வாழும் மாறன் காதிலும் விழுந்தது.
மாறன் முனுமுனுத்துக் கொண்டதற்குக் காரணம், போன ஆண்டு நடந்த கசப்பான கோவில் திருவிழாதான். கடந்த ஆண்டு இதுபோல் கோவில் திருவிழா எனக்கூறி ஒரு பத்து, பதினைந்து பேர் மாறன் வீட்டுக்குச் சென்று மாறனிடம் ஆயிரம் ரூபாய் நன்கொடைச் சீட்டைக் கிழித்துக் கொடுத்து கட்டாய வசூலில் ஈடுபட்டார்கள். மாறன் நன்கொடை தர மறுத்த போது பெரிய பிரச்சினை ஏற்பட்டது. மாறனைக் கேவலமாகப் பேசியும் அடிக்கவும் செய்தார்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் அறிவழகன் தடுத்து நிறுத்தி நன்கொடை வசூலித்தவர்களைப் பார்த்து” ஏம்பா, அவர்தான் பெரியார் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே! கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரிடம் வசூல் என்ற பெயரில் அடாவடி செய்வது நியாயமா? அவர் எந்தப் பிரச்சினைக்கும் போனதில்லை. நன்கு படித்தவர். நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருகிறார் என்றார்.
போன மாதம் நம்ம சாமிக்கண்ணுக்கு சாலை விபத்து ஏற்பட்டபோது தற்செயலாக அவ்வழியாக வந்த மாறன் சாமிக்கண்ணுவை மருத்துவமனையில் சேர்த்து விட்டு உடனடியாக அவருக்குத் தேவைப்பட்ட அவரது ரத்தப் பிரிவைச் சேர்ந்த தனது குருதியையும் அவரே வழங்கி இருக்கிறார். சாமிக்கண்ணு வீட்டுக்கும் தகவல் தெரிவித்து இருக்கிறார். இப்படி மனித நேயம் உள்ள அவரிடம் தகராறு, வீண்சண்டை செய்வது நியாயமா? என்று கேட்க அங்கிருந்தவர்கள் நழுவ ஆரம்பித்தார்கள்.
அப்போது “சற்று இருங்க” என்ற கோபக் குரல் வீட்டில் உள்ளே இருந்து வந்தது. மாறனின் மனைவி செல்வி அய்ந்நூறு ரூபாய் நோட்டை நன்கொடை வசூலித்தவர்களிடம் நீட்டினார். வசூல் மன்னர்கள் சிறிதும் மானம், வெட்கம் இல்லாமல் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டிற்கு வசூலுக்குச் சென்றார்கள். அறிவழகன் மாறனைச் சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமா! அடுத்த நாள் அவர் வீட்டு அருகில் கூம்பு ஒலிபெருக்கியைக் கட்டி இரவு பகல் பாராமல் பக்திப் பாடல்களையும் ஒலி பரப்பி, வயதானவர்களின் தூக்கத்தையும் பிள்ளைகளின் படிப்பையும் பாழ்படுத்தியது மட்டும் அல்லாமல் கோவில் திருவிழா என்ற போர்வையில் திருட்டு மின்சாரம் எடுத்து ஊர் முழுக்க அலங்கார விளக்குகளைப் பொருத்தி இரவு பகலாக எரியவிட்டனர். காவல் துறை மற்றும் மின்சாரத் துறையினர் கண்டும் காணாமல் இருந்தனர்.
ஆனால், ஊரில் மாறன், பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்த போது ஒலிபெருக்கி அமைத்திட காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒலிபெருக்கி சம்பந்தமாக ஆயிரம் கேள்விகள் மாறனைக் கேட்டார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக்கூடாது; இரவு பத்து மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; கடவுளைப் பற்றிப் பேசக்கூடாது போன்ற பல நிபந்தனைகள் போட்டனர். இருப்பினும் பெரியாரின் தொண்டனாகிய மாறன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி ஊர் மக்களுக்குத் தன்னால் முடிந்த தொண்டினைச் செய்து வந்தார். “பொதுத் தொண்டு செய்பவர்கள் மானம் அவமானம் பார்க்கக்கூடாது” என்ற பெரியார் சொன்ன வாசகம் அடிக்கடி மாறன் நினைவுக்கு வரும்.
கடந்த ஆண்டு திருவிழாவின் இறுதி நாளுக்கு முந்தின நாள் மாறனின் எதிர்வீட்டு அன்புவின் அன்னையார் மரகதம் அம்மாள் (வயது தொண்ணூறு) தொடர்ந்து ஒரு வாரமாக இரவு பகலாக கோவிலில் ஒலிபரப்பிய பக்திப் பாடல்களின் சத்தத்தாலும் வயது முதிர்ச்சி காரணமாகவும் சரிவர தூங்க முடியாமல் இறந்துவிட்டார். கோவில் திருவிழா ஏற்பாடு செய்த குழுவினருக்கு அதிர்ச்சி. மறுநாள் அம்மனுக்குக் கூழ் ஊற்றி, தீ மிதிக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊரில் சாவு விழுந்துவிட்டது. பிணம் இருக்கும்போது திருவிழா நடத்தக்கூடாது என்று அர்ச்சகர் மணி அய்யர் சொல்லிவிட்டார். பிணத்தை எடுத்த பின்புதான் திருவிழா நடத்த வேண்டுமாம்! ஊரில் பிணம் இருக்கும்போது திருவிழா நடத்தினால் தெய்வக் குத்தம் வருமாம். கோவில் விழாக் குழுவினர் அன்பு வீட்டிற்குச் சென்று உடனடியாகப் பிணத்தை எடுக்கச் சொன்னார்கள். உறவினர்கள் வெளியூரிலிருந்து வரவேண்டும்; உடனடியாக எடுக்க முடியாது என்று அன்பு மறுத்தும் ஊர்க் கட்டுப்பாடு அது இது என்று கூறி பிணத்தை எடுத்துவிட்டார்கள். மரகதம் அம்மாவின் நெருங்கிய உறவினர்கள் பல பேர் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. இந்த நினைவுகள் எல்லாம் மாறனை வேதனை கொள்ளச் செய்தன. கோவில் திருவிழா என்கிற பெயரில் ஊரில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க முடியவில்லையே என்று அவருக்கு வருத்தம்.
இந்த ஆண்டும் ஊர் எங்கும் ஒலிபெருக்கி வைத்து கடந்த பத்து நாட்களாக இரவு பகல் பாராமல் அதிகச் சத்தத்துடன் பக்திப் பாடல்கள் ஒலிபரப்பு செய்தார்கள். அதிலும் குஷ்பு ஒரு திரைப்படத்தில் பாடும் ‘‘ஒரு தாலி வரம் கேட்கின்றேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா” என்ற பாடல், ஊர் எங்கும் இரவு பகலாக எரியும் மின்சார அலங்கார விளக்குகள்; அம்மனுக்குத் திருவிழா காலத்தில் செய்யப்படும் சிறப்பான அர்ச்சனைகள், தொடர்ந்து மேளச் சத்தம் போன்றவற்றால் ஊர் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
அதிலும் நான் தான் முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என வாதம் செய்யும் மணி அர்ச்சகர் சண்டையும், இல்லை இல்லை! இது சூத்திரச் சாமி, எனக்குத்தான் முதலிடம் எனக் கூறும் சிவன் கோவில் அர்ச்சகர் வாதமும் “உனக்கு அம்மன் கோவிலில் என்ன வேலை” என்று கேட்கும் அம்மன் கோவில் பூசாரி முனுசாமி வாதமும் இளசுகளுக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது.
தீ மிதிப்பதற்காக விரதமிருந்து காப்புக் கட்டியவர்கள் இரவில் அம்மன் கோவிலில் தான் படுக்க வேண்டும்; தவறு எதுவும் செய்யக்கூடாது; ஆச்சாரமாக இருக்க வேண்டும் – இது பூசாரி கட்டளை. திருவிழாவுக்கு முதல் நாள் அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் விசயத்தில் அர்ச்சகருக்கும் கோவில் பூசாரிக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டனர். கோவில் தர்மகர்த்தா மற்றும் ஊர் பக்தக் கோடிகள் அவர்களைச் சமாதானம் செய்தனர்.
இந்த ஆண்டில் திருவிழா வசூல் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இளசுகள், பெரிசுகள் விருப்பத்திற்கு ஏற்ப கவர்ச்சி அழகி காஞ்சனாவின் கரகாட்ட
மும் நையாண்டி நாகப்பன் மற்றும் சின்னத் திரையழகி கீதாமணி அவர்களின் ரிக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டன. திருவிழா முடிந்தவுடன் ஊர் முக்கியப் புள்ளிகளுக்கு பார்ட்டி வைக்க மது பாட்டில்கள் அம்மனுக்கு பலியிட ஆடுகள், கோழிகள் வாங்கப்பட்டன. மறுநாள் திருவிழா. ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அம்மனைத் தரிசிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் விருந்தினர்கள் குவிந்தனர். தீ மிதிப்பவர்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்தது கோவில் நிருவாகம்.
திருவிழாவிற்கு முதல் நாள் இரவு பத்து மணியளவில் தலையாரி குப்பன் ஓட்டமும் நடையுமாக கோவில் தர்மகர்த்தாவைப் பார்க்க வந்தார். “என்ன செய்தி” என்று கேட்க, “அய்யா! நம்ம அர்ச்சகர் மனைவி சுப்புலட்சுமி அம்மா ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டாங்க; அது மட்டுமல்ல, அர்ச்சகர், நாளை நடைபெற இருக்கும் திருவிழாவை தங்கு தடையின்றி நடத்தனும், மேலும், பிராமணர் சாவு ஊர் தீட்டு ஆகாதுன்னும்; சாமிக்கு எந்தக் குத்தமும் வராதுன்னும் சொல்றார்” என்றார். இதைக் கேட்டதும் தர்மகர்த்தா மற்றும் ஊர் பெரிய புள்ளிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சூத்திரனுக்கு ஒரு நியாயம் – பார்ப்பானுக்கு ஒரு நியாயமா? கடந்த ஆண்டு அன்பு அம்மா இறந்தவுடன் உடனே பிணத்தை எடுக்க வேண்டும் என்று குதித்த அர்ச்சகர் இப்போது தன்னுடைய மனைவி இறந்தவுடன் வேறு வியாக்கியானம் பேசுகிறார். “இல்லை அய்யா! அர்ச்சகரின் மகன் சிங்கப்பூரில் இருக்கிறார்; அவர் வந்த பின்பு தான் பிணத்தை எடுக்க வேண்டுமாம்” என்று தலையாரி கூறவே, கோவில் தர்மகர்த்தா, பூசாரி மற்றும் சிலர் அர்ச்சகர் வீட்டிற்குச் சென்றனர். “நாளை திருவிழாவை வைத்துக்கொண்டு பிரேதத்தை எடுக்காமல் இருந்தால் எப்படி சாமி?” என்று தர்மகர்த்தா கேட்டபோது குருக்கள், “இது பிராமணச் சாவு, திருவிழா நடத்தினால் ஊர்க் குத்தமோ சாமிக் குத்தமோ ஆகாது” என்று குருக்கள் கூற “அதெப்பெடி சாமி! உங்களுக்கு ஒரு நியாயம்? அன்புக்கு ஒரு நியாயமா? நீங்கள் உடனடியாக பிரேதத்தை எடுக்க வேண்டும்; இல்லையெனில் உங்களின் அர்ச்சகர் வேலையைப் பறித்துவிடுவோம்” என்று கூற “பையன் சிங்கப்பூரிலிருந்து வரும்போது வரட்டும், நான் என்னுடைய மனைவியின் பிரேதத்தை எடுத்து விடுகிறேன்” என்றார் குருக்கள்.
திருவிழா நாளன்று காலை எட்டு மணியளவில் பிரேதம் எடுக்கப்பட்டது. அதன்பின் திருவிழா தொடங்கியது. சண்டை சச்சரவுக்குப் பஞ்சம் இல்லை. தீ மிதியின்போது பல பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. ஊர் மக்களுக்குக் கறிச் சோறும் மது பானமும் வழங்கப்பட்டன. பல இளைஞர்கள், பெரியவர்கள் மது போதையில் தெருவில் விழுந்து கிடந்தார்கள். கோவில் தர்மகர்த்தா திருவிழாக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தார். வசூல் ரூ.6 லட்சத்து அய்ம்பதாயிரம்; செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஏழு லட்சம்; பற்றாக்குறை அய்ம்பதாயிரம் என்றார்.
“இந்தத் திருவிழாவினால் யாருக்கு என்ன நன்மை? இந்தப் பணத்தைக் கொண்டு இந்தக் கிராமத்தில் ஒரு நல்ல நூல் நிலையம் அமைத்திருந்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் அல்லவா?” என்ற கேள்வி பலர் மூளைகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.