திருமண வீடு, வீதி முதல் நீதிமன்றக் கூண்டுகள் வரை…..வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

2024 கட்டுரைகள் நவம்பர் 1-15

சமூகத்தில் நிலவும் அநீதிகளைக் கண்டு அமைதியாக இருப்பது சுலபமான காரியம்; அநீதிகளுக்கு துணை போவது என்பதும் எளிமையான காரியம். அநீதிகளை எதிர்த்து நிற்பதுதான் கடினம். அதிலும், அநீதிகளின் தன்மையை உரக்கப் பேசி, எழுதி, பிரச்சாரம் செய்து, இவை அனைத்தும் மாற்றப்பட்டால் ஒழிய நீதி கிடைக்காது என்று வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது என்பது மிகக் கடினமான காரியம். பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொண்ட கருத்துகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து நிற்பது மட்டுமின்றி, அவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை முன் வைப்பது என்பது பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் எதிர்நீச்சல் அடித்துக் கரை சேருவதற்குச் சமம். சமூக ஏற்றத்தாழ்வுகள், ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம், கடவுள், அறிவுக்கு ஒவ்வாக் கருத்துகள் அனைத்தும் நிரம்பி ஓடிக் கொண்டிருந்த சனாதன ஆற்றின் பாதையில் சலனமின்றி ஓடிக் கரை சேருவதா? அல்லது இவற்றை எதிர்த்து, எதிர்நீச்சலடித்து சமத்துவப் பாதைக்குள் திராவிட மக்களை இழுத்து வருவதா? என்று சிந்தித்து, உயிர் போகும் நிலை வந்தாலும் எதிர் நீச்சல்தான் அடிப்பேன்; மக்களைக் கரை சேர்ப்பேன் என்று உறுதியோடு நின்றார் தந்தை பெரியார்!

அத்தகைய உறுதியோடும் துணிவோடும் தந்தை பெரியார் கண்ட களங்கள் பற்றி வாசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு, அவை நிச்சயம் பிரமிப்பூட்டுவதாய் அமையும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாற்றி சீர்திருத்தம் செய்வது என்பது அல்ல அவரது நோக்கம். ஒட்டுமொத்தமாய்த் தலைகீழ் மாற்றம் என்று கூறப்படும் புரட்சியை ஏற்படுத்துவதுதான் அவர்தம் லட்சியமாக அமைந்தது. ஏதேனும் ஒன்றை மாற்றிவிட்டு, மற்ற அனைத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு இருக்கலாமே என்று இன்றும் பலர் புலம்புகின்றனர்.

சான்றாக, ஜாதிகள்தாம் பிரச்சனை எனில் அவற்றை ஒழிக்க மட்டும் பாடுபட்டு, கடவுளை விட்டு வைத்திருக்கலாமே என்பவர்கள் ஒரு புறம்; மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் எனில் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு, மதங்களைச் சாடாமல் இருந்திருக்கலாமே என்று மறு புறம்; பெண் விடுதலையை மட்டும் பேசி இருக்கலாம், ஏன் புராண இதிகாசங்களை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று இன்னொரு சாரார் என்றிப்படிக் கேட்பதை எல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவை அனைத்துமே சரியான கேள்விகள்தானே என்று தான் எண்ணத் தோன்றும்.

ஆனால், தந்தை பெரியாருக்கு முன் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் எனப் பலர் முன் வந்தனர்; மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பலர் முயற்சி செய்தனர்; பெண் விடுதலையை முழக்கமாக முன்னிறுத்தி பலர் பேசினர். ஆனால் இவை அனைத்தும் மேடைகளிலும் ஏடுகளிலுமே முடிந்துவிட்ட வரலாறாய் ஆகிவிட்டன. காரணம், பிரச்சனைகளின் மீது அவர்கள் காட்டிய வேகத்தை – ஆர்வத்தை – சிந்தனையை பிரச்சனைகளுக்கான வேரினை ஆய்வு செய்வதில் காட்டவில்லை. பெரியார் ஒருவர் தான் கிளையையும் இலையையும் வெட்டுவது என் வேலையல்ல; அனைத்து சமூக அநீதிகளுக்கும் அடிப்படைக் காரணமாக, ஆணிவேராக எது இருக்கிறதோ, எதுவாக இருந்தாலும், அதற்கு எத்தனை புனிதக் கட்டுகள் கட்டப்பட்டிருந்தாலும், அதன் மீது எத்தனை பாதுகாப்புக் கவசங்கள் இடப்பட்டு இருந்தாலும், அதனை எத்தனை கோடி மக்கள் நம்பினாலும், வேரோடு வெட்டிச் சாய்ப்பேன் என்று உறுதிபூண்டு, ‘கடவுள்’ என்ற அடிக்கட்டுமானத்தை அசைத்துப் பார்க்க முடிவு செய்தார். ஒவ்வொரு அசைவும் பெரியார் மீதும், அவர் கண்ட இயக்கத்தின் மீதும் ஆரியத்திற்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியது. அத்தகைய அச்ச உணர்வினை அதிகப்படுத்த, அவர் நினைத்திருந்தால் வன்முறைக் களமாக மாற்றி இருக்க முடியும். ஆனால், பெரியார் உறுதிபடக் கூறினார் – ஒருபோதும் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று. பிரச்சாரம் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்
களது உரிமைக்காக அவர்களையே பேச வைத்து, அவர்கள் நினைப்பதை சமூகத்தின் தேவையாக மாற்றி, அந்தத் தேவைகளை அடைவதற்கு அவர்தம் கொள்கை – இலட்சியப் பாதையில் நடைபோடும் ஆட்சிகள் தமிழ்நாட்டில் உருவாக வழிவகை செய்து, தான் வாழ்ந்த காலகட்டத்திலேயே தனது கொள்கைகள் அனைத்தும் சட்டமாக இயற்றப்படுவதைப் பார்த்து மகிழ்ந்தார். மேற்சொன்ன பெரும் வாய்ப்பையும், அவரிடம் நின்ற தொண்டர்படையையும் ஒருபோதும் பலாத்காரங்களில் ஈடுபடக்கூடாது என்ற உயரிய கட்டுப்பாட்டு நெறிமுறைக்குள்ளேயே வைத்திருந்தார்.

இத்தகைய அரும்பெரும் காரியங்களைச் செய்கின்ற போது, எந்த முறையில் தனது பிரச்சாரங்கள் அமைய வேண்டும் என்பதை மிகவும் தீர்க்கமாக முடிவு செய்து, அதன்படி களம் அமைத்தார். அப்படி அவர் அமைத்த எந்தக் களங்களிலும் வன்முறைக்கோ, பலாத்காரத்திற்கோ, துவேஷ உணர்வுக்கோ இடமில்லை என்பதை உரக்கச் சொன்னார். அதே நேரத்தில், சமூகத்தில் நடக்கும் அவலங்களை, அநீதிகளை, ஆண்டாண்டு காலமாய்த் தொடர்ந்த கொடுமைகளை எதிர்த்துப் பேசுவதோ, கேள்வி கேட்பதோ, பிரச்சாரம் செய்வதோ ஒரு போதும் குற்றம் ஆகாது என்று தனக்குத்தானே சட்டம் வகுத்து, திட்டமிட்டுச் சரியான பாதையில் சென்றார், தந்தை பெரியார்.

“பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய, மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அநேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது” என்றார் தந்தை பெரியார்.

மேற்கண்ட பெரியாரின் வார்த்தைகள் நமக்கு உணர்த்தும் செய்தி யாதெனில், அவர் வகுத்த கொள்கைகளில் வெற்றி அடைய தமக்குத் தாமே சீரிய நெறியுடன் வரையறை வகுத்து, அதற்கான அவசியத்தை விளக்கி, இப்படித்தான் நான் இயங்குவேன் என்பதை எடுத்துரைத்து, இன எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று சமர் புரிந்திருக்கிறார். பெரியார் அதனை வீதிமன்றங்களில் மட்டுமல்ல, நீதிமன்றங்களிலும் நடத்திக் காட்டியிருக்கிறார். பார்ப்பனர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் ஒற்றைக் குறிக்கோள் நம் திராவிட இன மக்களை அடிமைப்படுத்தி, அவர்களின் மீது மேலாதிக்கம் செலுத்துவதுதான் என்பதைக் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிப்படுத்திய பெரியார், நீதிமன்றக் கூண்டுகளில் ஏறி நின்றும் அவற்றையே முழங்கி இருக்கிறார்.

“மனுதர்ம சாஸ்திரத்தின்படி ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிருவாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்க விடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மனுதர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்ட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

ஓர் உதாரணம் காட்ட வேண்டுமானால், சென்னை அய்க்கோர்ட் ஏற்பட்டு சுமார் 100 ஆண்டுகள் ஆகியும் சமீபத்தில் 10-15 ஆண்டுகளில்தான் அதாவது, பார்ப்பன துவேஷம் என்று சொல்லப்படக்கூடிய ஜாதிப் புரட்சியும், பார்ப்பனர்கள் நடத்தையை வெளிப்படையாகக் கண்டித்தல் என்ற தன்மையும் சர்வ சாதாரணமாக நாட்டில் ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனரல்லாதவர்களில் ஒருவர் இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகத் தோன்ற முடிந்தது.

ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்
லாம், பார்ப்பனரல்லாத

வர்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்க விடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்துகொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாகச் செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்” என்றார் தந்தை பெரியார். இவை எல்லாம் பெரியாரால் முழங்கப்பட்ட இடம் எது தெரியுமா?  நீதிமன்றம்! மலையய்யன்  வழக்கில் நீதிமன்றத்தில் நின்று பெரியார் கொடுத்த வாக்குமூலம்.

ஆம், திருமண வீடு, பொதுக்கூட்ட மேடை, படத்திறப்பு, தெரு வீதிகள் என்று தொடங்கி, நீதிமன்றக் கூண்டுகள் வரை தந்தை பெரியாருக்குப் பிரச்சாரக் களங்கள் தாம்! அனைத்துக் களங்களையும் அவர் நம் உரிமைக்காக உரக்கப் பேசும் பிரச்சார மேடைகளாய் மாற்றியதன் விளைவுதான், இன்று நாம் காணும் “தமிழ்நாடு!”