அந்துமணி பார்த்தது, கேட்டது, படித்தது எனும் தலைப்பில்வரும் கட்டுரைத் தொடரின் (தினமலர்-_வாரமலர் செப். 30) ஒரு பகுதி இங்கே…
எழுத்தாள நண்பர் ஒருவர் தன் பையிலிருந்து தடிமனான எடுத்து விளக்கருகே புத்தகத்தைக் கொண்டு சென்று எல்லோரும் இந்தப் புத்தகத்தைப் பாருங்கள் என்றார். உப பாண்டவம் என பெரிய எழுத்திலும் அதன் கீழ் எழுதியவரின் பெயரும், ஊகித்து அறிய முடியாத முகப்புப் படமும் அச்சாகி இருந்தது.
இந்த நூல் மிடியோகிரிட்டியின் (இரண்டாந் தரமான) மொத்த எடுத்துக்காட்டா இருக்குப்பா… சிறு பத்திரிகையாளர்களுக்குத் தமிழே எழுதத் தெரியாது என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று! ஒரு கிரிக்கெட் வீரரிடம் உள்ள புரோபஷனலிசம் சிறு பத்திரிகைக்கு எழுதுபவர்களிடம் இல்லை… என எடுத்த எடுப்பில் பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்!
அப்படி என்னதான் இருக்கு என்றேன். நீயே படிச்சுப் பாரு.. குறிப்பா 300வது பக்கத்தில் அஸ்வமேத யாகம் பத்தி எழுதியிருக்கான். அதைப்படி என்றார்….
புத்தகத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள எழுத்தாள நண்பரை ஓரம் கட்டினேன்.
இந்த நூலோட மூலப் பிரதி 1923ல் வெளியானதுப்பா. மொத்தம் 18 நூல்கள். 14 ஆயிரம் பக்கங்கள். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் உ.வே.சீனிவாசாச்சாரியார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சமஸ்கிருத பண்டிதராக இருந்தவர். நூலைப் பதிப்பித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த ராமானுசசாரியார். இந்த 18 வால்யூம்களையும் பிரசுரிக்க, தன் சொத்து முழுவதையும் இவர் விற்க நேர்ந்ததாம். இதன் பிரதி இப்போது சிறிரங்கத்தில் உள்ள உ.வே.திருமலாச் சாரியிடம் மட்டுமே உள்ளது. அவர் ஒரு உபந்யாசகர். இந்த மூலப் பிரதியிலிருந்தே, இப்போது நீ கையில் வைத்திருக்கும் உப பாண்டவம் எழுதப்பட்டுள்ளது. போதுமா தகவல் என்றார் நண்பர்…
அடுத்தநாள், உப பாண்டவம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தில் 300 பக்கத்தில் அஸ்வமேத யாகம்பற்றி குறிப்பிடப்பட் டுள்ளது. அது, குற்றுயிராக குதிரை வீழ்ந்து கிடக்கும் இரவில் குதிரையின் அருகே அரசனும் அவன் பட்டத்து அரசியும் உடலில் ஒரு வஸ்திரமும் இன்றி நிர்வாணிகளாக ஒருவரை ஒருவர் நெருங்காமல் ஒரு இரவும், நெருங்கிப் புணரா நிலையில் ஒரு இரவும் படுத்து எழவேண்டும். பின்பு, பட்டத்து அரசியானவள் குதிரையோடு உடல் உறவு கொள்ளவேண்டும். குதிரையை… (அச்சிட முடியாத வார்த்தை) அவளோடு சம்போகம் செய்ய உதவி செய்யும் பணியாளர்கள் இருந்தனர். பின், குதிரையின் குருதியை தன் கேசத்தில், உடலில் அவள் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
யுதிர்ஷ்ட்ரன் தன் மனைவி பாஞ்சாலியோடு இந்த பலி சடங்கை செய்வதற்காக நிர்வாணம் கொண்டு குதிரையருகே படுத்துக்கொண்டான். குதிரையோடு உறவுகொள்ள திரவுபதியை அழைத்தவர்கள் தனியே கூட்டிப்போனார்கள். இந்த அஸ்வபலி சடங்கின் சாந்தி காரியங்களை சகோதரர்களும் (பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்) செய்தனர். பட்டத்து அரசிக்குப் பின்பு அவளுக்கு அடுத்த நிலைப் பெண்களும், அரசனின் உதிர வழிகளும் இதே குருதிச் சடங்கைச் செய்தனர். குதிரையின் குருதியானது உலகில் வெல்லமுடியாத சக்திகள் யாவையும் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்.
இப்படி எழுதப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞான உலகத்தில் இதெல்லாம் நம்பக்கூடியவைகளாக இல்லையென்றாலும், சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்கள் உண்மை நிலையை விளக்குவரா? என்ற கேள்வியோடு கட்டுரை முடிகிறது.
புராணங்களும் இதிகாசங்களும் அண்டப் புளுகும் ஆபாசமும் நிறைந்தது. அவற்றை தீயிட்டு பொசுக்குங்கள் என்று நாம் சொன்னால் பொங்கி குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
விரைவில் உப பாண்டவம் முழுதும் உள்ளது உள்ளபடியே உண்மையில் வெளிக்கொணர்வோம். காத்திருங்கள்.
– சிவகாசி மணியம், சிவகாசி