மூடச் செயல்களை முற்றாக ஒழிப்போம்!

2024 கவிதைகள் நவம்பர் 1-15

கண்ணிருந்தும் பார்வையிலார் போல வாழ்வார்
கற்கால மாந்தரென அலைவார்! பொய்யை
உண்மையென நம்பிடுவார்! தலையில் தேங்காய்
உடைத்திடுவார்! செய்நேர்த்திக் கடனே என்பார்!
எண்ணத்தில் பிறழ்ந்தாராய் இராகு காலம்,
எமகண்டம், விதியென்றே இயம்பிப் பாவ,
புண்ணியத்தை இனம்கண்டு தெளிந்தார் போலும்
பூசைகளால் பரிகாரப் புளுகை ஏற்பார்!

மந்திரத்தை, சோதிடத்தை முழுதும் நம்பி
மனம்போன போக்கினிலே உழல்வார்! ஏய்ப்போர்
தந்திரத்தை உணராமல் கழுத்தில், கையில்
தாயத்து, கயிறுபல கட்டிக் கொள்வார்!
சிந்திக்க மறுப்போராய்ப் பேய்கள் ஓட்டிச்
சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வார்!
கந்தலதைப் பட்டாடை என்றே கூறும்
கயவர்களை நம்பிடுவார்! மயங்கி நிற்பார்!

முற்பிறவி மறுபிறவி, மோட்சம் என்னும்
மூடர்சொல் ஏற்றிடுவார்! நரகம் நம்பும்
தற்குறிகள் ஒருநாளும் திருந்தார்! செப்புத்
தகடுகளைச் சுவரெங்கும் மாட்டி வைப்பார்!
குற்றங்கள் இழைப்பார்முன் குனிந்து நிற்பார்!
குறைநீங்க அட்டமிக்கு மாற்றுத் தேடி
நற்பண்பை இழந்திடுவார்! திவசம், தோசம்
நலிவகற்றக் கற்பனைத்தேர் நகர்த்தி நோவார்!

பஞ்சாங்கம் பார்த்திடுவார்! பல்லி சொல்லும்
பதற்றமிகு ஒலிக்கெல்லாம் பலன்கள் காண்பார்!
நெஞ்சத்தில் ஆரியத்தின் வன்மம் நோக்கார்;
நிலைபிறழ்ந்து தடுமாற்றம் யாவும் எய்தி
வஞ்சத்தை மடியினிலே சுமந்து கொண்டு
வாலறுந்த நரியான தெல்லாம் போதும்!
அஞ்சாமை பகுத்தறிவை நாளும் எய்தி
அய்யாநம் பெரியாரின் வழிச்செல் வோமே!