உலகெங்கும் ஒலிக்கிறது மலாலாவின் குரல்! உலகின் பல பகுதிகளிலும் மறுக்கப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான பெண் குழந்தைகளின் கல்விக்காக ஒலிக்கிறது மலாலாவின் குரல்! துப்பாக்கியால் துளைக்கப்பட்ட போதும் உறுதி குலையாமல்…
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கி லிருந்து கிளம்பிய ஒலி இன்று உலகெங்கும் கேட்கிறது! மதத்தின் பெயரால் மகளிர் கல்வியைப் பறிக்காதீர்! என்ற குரல் இன்று உலகத்தாரால் வேகத்துடன் முன்னெடுக்கப் படுகிறது! மீண்டு வருவாள் மலாலா என நம்பிக்கையுடன் காத்திருக்கிறது உலகம்! சுடப்பட்ட சிறுமி என்ற இரக்கத்தின் காரணமாக அல்லாமல், அவள் முன்னெடுத்த பிரச்சினைக்காகவே உரக்க எழுகிறது அக்குரல்! ஒன்றாய்த் தொடங்கி நூறாய், ஆயிரமாய், லட்சமாய், கோடியாய்ப் பெருகியிருக் கிறார்கள் மலாலாக்கள். நான் மலாலா என்ற குரல் மதவெறிக்கதிராகவும், மகளிர் உரிமைக்கான தாகவும் அமைந்திருக்கிறது!
மலாலா யூசுப்சாய் என்ற 14 வயது பாகிஸ்தான் சிறுமி மதவெறியர்களால் சுடப்பட்டார் என்ற செய்தி அக்டோபர் 9-ஆம் தேதி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அப்போதுதான் ஏன் சுடப்பட்டாள் என்ற கேள்வியோடு உலகம் மலாலாவைக் கூர்ந்து கண்டுகொண்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே சமூக ஆர்வலர்கள் மத்தியில் மலாலா, ஒரு வளரும் நம்பிக்கையாக துளிர்த் திருந்தாள்.
அப்படி துளிர்த்த நம்பிக்கை தான் மதவெறியர்கள் ஒரு கொழுந்தைக் கொய்ய நினைத்ததற்கும் காரணமும் கூட. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையாக இருப்பது ஸ்வாட் பள்ளத்தாக்கு! இன்னும் கொஞ்சம் எளிதாக நமக்குப் புரியவேண்டுமென்றால் கைபர் கணவாய் அமைந்துள்ள பகுதி! பாஸ்துன் இனத்தில் 1861 முதல் 1880 வரை வாழ்ந்து, அப்பகுதியின் விடுதலை வேட்கை கொண்ட வீரப்பெண்மணியாகவும், கவிஞராகவும் திகழ்ந்த மலாலாய் என்பவரின் நினைவாகத்தான் 1997-இல் பிறந்த தன் குழந்தைக்கு மலாலா என்று பெயர் வைத்தார் ஜியாவுதீன். யூசுப்சாய் என்பது அப்பகுதி பெரும்பான்மை பழங்குடி இன மக்களின் கூட்டுப் பெயர். ஜியாவுதீன் — கவிஞர், கல்விநிறுவனங்களை நடத்துபவர்; மதவெறியாளர்களுக்கெதிரான எண்ணம் கொண்டவர். மலாலாவின் சிந்தனைப் போக்கிலும், கருத்திலும் ஜியாவுதீனுக்குப் பெரும் பங்கு உண்டு. சிறுவயது முதலே மலாலாவின் கருத் தோட்டத்தைக் கூர்மைப்படுத்தியவர் ஜியாவுதீன்.
ஆப்கானிஸ்தானில் தங்களது முழுமையான ஆதிக்கத்தை அமெரிக்காவின் படையெடுப்பால் இழந்துவிட்டாலும், ஆப்கானிலும், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் தங்களது பயங்கரவாதச் செயல்கள் மூலமும், மதவெறி கொண்ட அறிவிப்புகள் மூலமும் ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக்கிறது தாலி பான் படைகள். ஸ்வாட் பள்ளத்தாக்கின் பெரும் பகுதிகள் வெளிப்படையாகவே அவர்களது கட்டுப் பாட்டில் இருப்பதுபோலத்தான்.
தாலிபான்கள் தங்கள் கடும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்திக் கொண்டிருந்த நேரம். தொலைக்காட்சி, இசை நிகழ்ச்சிகள், கல்வி, ஏன் கடைக்குப் போவதில் கூட பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது பற்றிய செய்திகளை வெளிக் கொண்டுவர விரும்பிய பிபிசி செய்தி நிறுவனம் தன் உள்ளூ செய்தியாளர் மூலம் ஜியாவுதீனை அணுகியது. இத்தடைகளால் பாதிக் கப்படும் பெண் ஒருவரே தன் அனுபவத்தை எழுதி னால் நலம் என்று கருதிய பெண்கள் பள்ளி நடத் திய ஜியாவுதீனின் உதவியை நாடியதில் ஆச்சரியம் இல்லை.
முதலில் ஆயிஷா என்ற பெண் பிபிசிக்காக எழுதுவதாக இருந்தது. முதலில் ஒப்புக் கொண் டாலும், தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதிய ஆயிஷாவின் பெற்றோர் அவரை எழுத விடவில்லை. வேறுவழியில்லாததால், ஒரே மாற்று ஆளாக மலாலா தென்பட்டாள். பள்ளி செல்ல முடியாத தனது அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது மலாலாவுக்கு வயது 11. ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த பெண்ணை விட 4 வயது குறைவான மலாலா அப்போது ஏழாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாள். எனினும் பிபிசி ஒப்புக் கொண்டது.
தாலிபான்களால் பிரச்சினை எழும் என்பதால், 2009 ஜனவரி 3-ஆம் தேதி முதல் புனைப்பெயருடன் பிபிசி இணையத்தில், உருது மொழியில் எழுதத் தொடங்கினாள் மலாலா. நேற்றிரவு இராணுவ ஹெலிகாடர்களும், தாலிபான்களும் நிறைந்த ஒரு கொடுமையான கனவு கண்டேன். ஸ்வாட் பள்ளத்தாக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய காலத்தி லிருந்து இப்படி கனவுகள் எனக்கு வருகின்றன. அம்மா செய்துவைத்த காலை உணவை முடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினேன். பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு தாலிபான்கள் தடைவிதித்திருப்பதால் எனக்கு பள்ளிக்குச் செல்ல பயம் இருந்தது.
27 பேரில் 13 பேர் தான் பள்ளிக்கு வந்திருந்தனர். தாலிபான்களின் தடையால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தடைக்குப் பின்னர் எனது மூன்று தோழிகள் தங்கள் குடும்பத்துடன் பெஷாவருக்கும், லாகூருக்கும் ராவல்பிண்டிக்கும் குடிபெயர்ந்து விட்டார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவர் கத்தும் குரல் கேட்டது. நான் எனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு, பின்னால் அவர் என்னைத் தொடர்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியளிக்கும் விதமாக, அவர் யாருடனோ செல்பேசியில் பேசி, அவரை மிரட்டிக் கொண்டிருந்தார். இப்படித் தொடங்குகிறது மலாலாவின் டைரிக்குறிப்பு. அந்த ஆண்டு மார்ச் வரை தொடர்ந்து எழுதியிருக்கிறாள் மலாலா.
முதலாம் ஸ்வாட் போர் என்று மலாலா குறிப்பிடும் இந்தக் காலத்தில் தொடர்ந்து பல பள்ளிகள் மூடப்பட்டன. மூடப்படாத பள்ளிகள் தாலிபான்களால் வெடி வைத்துத் தரைமட்டமாக்கப்பட்டன. 2009 ஜனவரி 15-க்குப் பிறகு தடை முழுமையாக அமலுக்கு வந்தது. மலாலா தனது இரண்டு தம்பிகளுடனும் குடும்பத் துடனும் சொந்த ஊரான மிங்கோரா விலிருந்து முதல்முறையாக இஸ்லாமாபாத் பயணம் மேற் கொண்டாள்.
ஸ்வாட் பள்ளத்தாக்கைப் போல இஸ்லாமாபாத் மலாலாவுக்குப் பிடிக்கவில்லை. பிப்ரவரியில் மீண்டும் ஊர் திரும்பினாள் மலாலா. மயான அமைதியோடு பாலைவனம் போல் காட்சி யளித்தது மிங்கோரா. ஆண்கள் பள்ளி கூடத் திறக்கப் படவில்லை. சூப்பர் மார்க்கெட்டுகளும் மூடியே கிடந்தன.
அடுத்தடுத்த வாரங்களில் கொஞ்சம் போல் ஆண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருபால் மாணவர்கள் படிக்கும் தொடக்கக் கல்வி நிறுவனங்களைக் கூட அனுமதித்த தாலிபான், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு அனுமதி தரவில்லை.
மெல்ல நிலைமை பழையபடி மாறத் தொடங்கியது போல் தோன்றினாலும், முழுமையாக அது நடக்கவில்லை. எனினும் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாலிபான்களின் தலைவன் ஃபஸ்லுல்லா, பெண்கள் படிக்க இருந்த தடையை மார்ச் 17 அன்று தேர்வுகள் முடியும் வரை தளர்த்துவதாகவும், பெண்கள் புர்கா அணிந்து பள்ளிக்குச் செல்லலாம் என்றும் அறிவித்தான்.
தேர்வுகளில் தான் நன்றாக எழுதியிருப்பதையும், பள்ளி நாள் மகிழ்ச்சியையும் பதிவு செய்தாள் மலாலா. பிபிசி டைரிக் குறிப்பு முடிந்த பிறகு நியுயார்க் டைம்ஸ் நிறுவனம், மலாலாவை வைத்து ஆவணப்படம் எடுக்க முன்வந்தது.
அந்த மே மாதத்தில் இரண்டாம் ஸ்வாட் போரை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியிருந்தது. அதனால் மிங்கோரா நகரம் காலி செய்யப்பட்டு, ஜியாவுதீன் பெஷாவர் சென்றார். மலாலா உறவினர்களின் ஊருக்குச் சென்றாள். ஜியாவுதீன் தன் மகளுடன் அரசியல் நிலவரம் குறித்து விளக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
தன் சகோதரர்கள் உறங்கப் போய்விட்டாலும், இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து அப்பாவுடன் விவாதிப்பாள் மலாலா.
இந்த ஆர்வம், தனது மருத்துவர் கனவிலிருந்து, மாறி அவளைஅரசியலில் ஈடுபடும் எண்ணத்துக்கு வரவைத்தது. நியூயார்க் டைம்ஸ் ஆவணப்படத்துக்குப் பிறகு, பல செய்தி நிறுவனங்களிலும் மலாலாவின் பேட்டிகள் இடம்பெற்றன. அவ்வாண்டு டிசம்பர் வாக்கில் பிபிசியில் கட்டுரைகள் எழுதியது மலாலா தான் என்பது வெளியானது. மெல்ல மெல்ல ஊடகங்களின் கவனிப்பிற்கும், மதவெறியர்களின் கண்டனத்திற்கும் ஆளாகத் தொடங்கினார்கள் மலாலாவும், அவரது தந்தையும்.
பெண் கல்விக்கும், மனித உரிமைக்கும் ஆதர வாகத் தனது குரலை தொடர்ந்து எழுப்பத் தொடங் கினாள் மலாலா. குழந்தைகள் பாராளுமன்றத்தின் தலைவராக அவள் பங்கேற்ற வீடியோ காட்சி வெளியானது. 2011-ல் உலகப் புகழ் பெற்ற டெஸ் மாண்ட் டூட்டு உலக அமைதிக்கான குழந்தை கள் பரிசுக்கு மலாலாவின் பெயரைப் பரிந்துரைத்தார். அதே ஆண்டு டிசபரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது.
பாராட்டு, பரிசுகளோடு கொலை மிரட்டல் களும் மலாலாவைப் பின் தொடர்ந்தன. தினசரி செய்தித் தாள்களுக்கு அடியில் கொலை மிரட்டல் செய்தி மலாலாவின் வீடு தேடி வந்தது. அவளது முகநூல் பக்கங்கள் போலிகளால் நிரம்பின. பெண் கல்விக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்தால், மதத்திற்கெதிராக செயல்படுவதாகக் கூறி கொலை செய்யலாம் என முடிவெடுத்தனர் தாலிபான் பயங்கரவாதிகள்.
2012 அக்டோபர் 9…
பள்ளியில் தேர்வு ஒன்றினை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா, அவளது தோழி கள் முன் துப்பாக்கி ஏந்திய ஒருவன் வந்து நின்றான். உங்களில் யார் மலாலா என்று சொல்லிவிடுங்கள். இல்லையெனில் எல்லோரும் என் துப்பாக்கிக்கு இரையாக நேரிடும் என்று எச்சரித்தான். மலாலா யாரென்று அடையாளம் தெரிந்ததும் சுடத் தொடங்கினான். இரண்டு குண்டுகள் மலாலாவைத் துளைத்தன. உடன் இருந்த இரண்டு மாணவிகளும் தாக்கப்பட்டிருந்தனர்.
எனினும் என்ன நடந்தது என்று அவர்களால் சொல்ல முடிந்தது. தகவல் கிடைத்தவுடன் பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்ட மலாலா, தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப் பட்டார். தலையைத் துளைத்துச் சென்ற துப்பாக்கி ரவையால், மூளைப் பகுதிக்கு அருகில் வீக்கம் வெளிப்படத் தொடங்கியது. அவளது தோளில் பதிந்திருந்த குண்டை 3 மணிநேரம் போராடி எடுத்தனர் மருத்துவர்கள்.
மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டாள் மலாலா. நாங்கள் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம், அவள் மேலும் தொடர்ந்தால், நாங்களும் தொடர்வோம் என்று கொக்கரித்தது தாலிபான். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடம் இருந்தும் கூட கிளம்பிய எதிர்ப்பு, கல்விக்குக் குரல் கொடுத்த தற்காக அவளை நாங்கள் கொல்ல முயலவில்லை. முஜாகிதீனுக்கு எதிராகவுன், எங்களுக்கு எதிராகவும் அவள் பேசியதாலேயே இதனைச் செய்தோம் என்று தாலிபான்களை சொல்ல வைத்தது. பாகிஸ்தானி லேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இந்த மதவெறியர்களுக்கு!
மலாலாவின் உடல் நிலை மெல்ல மெல்ல தேறிவருகிறது. அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட எண்ணற்ற உலகத் தலைவர்களும், மடோனா, ஏஞ்சலின ஜோலி, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர் களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
உலகெங்கும் உள்ள மாணவிகள் நான் மலாலா என்ற பதாகையினைத்தாங்கி மலாலாவின் பணிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். கார்டன் பிரவுன் பன்னாட்டு மக்களின் வேண்டுகோளை எடுத்துக் கொண்டு பாக் அதிபரைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இணையதளங்களில் கோடிக் கணக்கானவர்கள் மலாலாவினைப் புகழ்ந்தும், அவரது பணியை ஆதரித்தும் பதிவிட்டுள்ளனர். மலாலாவும், அவளது தந்தையும் அமெரிக்க உளவாளி என்று சிலர் சொல்லத் தொடங்கியுள்ள னர். மலாலா யாரென்பதை காலம் அடையாளம் காட்டும்.
மலாலாவைத் திட்டமிட்டு அவளது தந்தை உருவாக்குகிறாரா? இவையெல்லாம் நாடகமா என்ற கேள்விகளுக்கெல்லாம் புதிய புதிய விளக்கங்கள் கிடைக்கக்கூடும். அவரு ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவள் எழுப்பியிருக்கும் குரல் உலகெல்லாம் ஒலிக்க வேண்டிய ஒன்று. இந்தியாவில் தந்தை பெரியார் ஒலித்த குரல் இன்று உலகெங்கும் கேட்கிறது. மனித சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் என்ற சூழல் உலகிற்கு பெருமை தரக்கூடியதல்ல. மலாலா சுடப்பட்ட ஒரு மாதத்தினைக் குறிக்கும் விதமாக நவம்பர் 10-ஆம் தேதி உலகளாவிய அளவில் நாங்கள் மலாலாவுடன் நிற்கிறோம் என்ற இயக்கத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் கார்டன் பிரவுன்.
அதற்குப் பின்னும் பெண் கல்விக்குக் குரல் எழுப்ப வேண்டிய சூழலில் உலகம் இல்லாமல் இருக்க வேண்டும். மனிதம் வளர்க்க எந்த மதமும் பயன்படவில்லை என்பதை மலாலாவின் மீதான தாக்குதல் உறுதிப்படுத்துகிறது. மதத்தைவிட்டு மனிதத்தை நோக்கி நடக்கட்டும் இவ்வையம்!
– சமா.இளவரசன்