பெரியார் 134வது பிறந்த நாள் உண்மை இதழ் கண்டதும் மகிழ்ச்சியா, பெருமிதமா எனப் புரியாத உணர்வில் திளைத்தேன். அறிவொளி வீசும் கண்களும், எனக்கேதடா தனிக்கவலை? எது வந்தாலும் சரி போனாலும் சரி என்ற அலட்சியமும் அமர்த்தலுமுமான தோற்றத்துடனான அட்டைப்படம் சோபாவில் கைவைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போலான படம் பார்த்ததில்லையே என்ற சிந்தனையுடன் இதழைப்புரட்டினால் படத்தின் உண்மை தெரிந்தது.
அவ்வரிய படம்தான் எத்தனை எத்தனை வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
1) ஆரஞ்சுத்தோட்டமானாலும், ஆலை இயந்திரமானாலும் அவற்றில் புதுமையைப் புகுத்தியதுடன் மலிவுவிலை வானொலிப் பெட்டியும், கார்களையும் உற்பத்தி செய்து கூட்டம் போட்டு அவற்றை உடைத்தெறிந்து அதிசய விஞ்ஞானியென்றும், மோட்டார் மன்னர் என்றும் புகழப்பட்ட ஜி.டி.நாயுடு பெரியாரின் பின்னால் நிற்பதே வரலாற்று நிகழ்வல்லவா? அவர் இல்லத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட 13 பேரில் தந்தை பெரியாரும் ஒருவர்.
2) பெரியாரோடு அமர்ந்திருப்பவர் அந்தக் கால சிறந்த நாவலாசிரியராகத் திகழ்ந்து பெரியாரின் கொள்கைகளில் சிறார் மணம் எதிர்ப்பு, விதவைத் திருமண ஆதரிப்பு என்ற இரு கொள்கைகளையும் தன் நாவல்களில் இடம்பெறச் செய்து அக்ரகாரத்து அதிசயப் பிறவி என அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட வ.ராமசுவாமி அய்யங்காரும் அவர் துணைவியாரும் அமர்ந்திருப்பது பெரியாரின் மனித நேயத்திற்கான வெளிப்பாடு.
3) பெரியாரின் மறுபுறம் அமர்ந்திருப்பவர், அய்யா காங்கிரசின் தலைவராய் இருந்தபோது அவருக்குச் செயலாளராய்த் தொண்டாற்றி அய்யாவின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு கடைசிவரை காங்கிரசிலே இருந்தாலும் பெரியாரின் உண்மைத் தொண்டராய்த் திகழ்ந்த கோவை அய்யாமுத்து.
நிற்கும் சக்தி கிருஷ்ணசாமி பின்னாளில் திரைத்துறைக்கு வந்தவராயிருக்கலாம்; அமர்ந்திருக்கும் ஸ்டாலின் சீனிவாசன் இந்தத் தலைமுறையில் அறியப்படாதவராய் இருந்தாலும் வரலாறு சொல்லும் அவ்வரிய புகைப்படும் சிறந்த ஆவணம்.
இந்த சிந்தனையுடன் இதழை மேலும் புரட்டி னால், பெரியாராலேயே சாமி என அழைக்கப்பட்ட தமிழ்க்கடல் மறைமலையடிகளைப் பற்றியும், பெரியார் கூட்டிய திருக்குறள் மாநாட்டுக்கு தலைமையேற்ற திரு.வி.க.பற்றியும் அதற்காகவே அவரைச் சாடிய மறைமலை அடிகளாருக்கு திரு.வி.க. உரைத்த மறுமொழியும் இன்றைய தமிழறிஞர்களாகவும் தமிழுணர்வாளர் களாகவும் பீற்றிக்கொள்ளும் அரைவேக்காடுகளுக்கு அரிய பாடமாகும்
தந்தை பெரியாரின் பிறந்த நாள் சூழலில் வெளியாகும் இதழ் என்ற சிறப்பை வெளிப்படுத்துவது இதழாளர் உமாவின் கட்டுரையும், கோ.வி.லெனின் கவிதையும்; படித்த மூடர்களான விஞ்ஞானி ராதாகிருஷ்ணனையும் வானிலை அறிவிப்பாளர் ரமணனையும் படம்போட்டு படத்திற்கு லாயக்கில்லாத பாமரர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதும் பெரியார் பயிற்சிப் பட்டறையில் வளர்ந்தவர்களால் மட்டுமே முடியக்கூடியது.
ஆக இந்த உண்மை இதழ் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக ஆவணமாகத் திகழ்கிறது; மகிழ்ச்சி. நன்றி.
நாகூர் தி.சோமசுந்தரம்,
கூட்டுறவுத் துணைப்பதிவாளர் (ஓய்வு)
பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்.