வரலாற்றில் இவர்கள்

அக்டோபர் 16-31

அரச தர்மம்(?) உரைத்த அன்னிபெசன்ட்

பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ.ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங் காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் ‘டிக்டேட்டர்’ என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் ‘ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்’ என்று கூறிவிட்டார்.

“பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச தர்மம்” என்று அப்போது கூறியவர்தான் அன்னிபெசன்ட்!.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்திட்டத்தில் கண்டிருந்தபடி இரட்டை ஆட்சிமுறை செயல்படுவதை பரிசீலிக்கவும் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகளை வகுக்கவும் சர்.ஜான்சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியா வருவதாக 1927ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியாயிற்று.

அந்தக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை எனக் காரணம் காட்டி காங்கிரஸ் பார்ப்பன தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸி லிருந்து ஒதுங்கியிருந்த அன்னிபெசன்ட் சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு சைமன் குழுவை கடுமையாக எதிர்த்தார்.

சைமன் குழுவை வரவேற்ற தந்தை பெரியார் அவர்கள் “பெசன்ட் அம்மையின் புதிய உபத்திரம் என்னவெனில்,நம்நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்ட பிறகு அம்மையை (அன்னிபெசன்ட்) பற்றியிருக்கிறார்கள்.இது பார்ப்பனரல்லாதாருக்கு பேரபாயம். இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும் தோட்டி நிலையிலேயே இருக்கிறார்கள்.அத்தோட்டி நிலை மாற ஏதாவது மார்க்கமுண்டானால் எந்த துரையையும் கமிஷனையும் வரவேற்கவும் செய்யலாம். பகிஷ்கரிக்கவும் செய்யலாம்” என்றார்.

“கமிஷனில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர் களாகவே இருந்துவிடக் கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியமென்றே சொல்ல வேண்டும்” என்று குடியரசில் கட்டுரை எழுதினார்.

அன்னிபெசன்ட் அம்மையார் பார்ப்பனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததோடு இந்துமதத்தை பரப்புவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் இன்றுவரை அவரை பார்ப்பனர்கள் உயர்த்திப்பிடிக்கிறார்கள்!

 

வீரபாண்டியன் (?) ம.பொ.சி!

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார் அதில் “இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா! ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா! நீ மட்டும் போயிட்டியே” என்று புலம்புவார். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

விடுதலையில் 1953ல் குத்தூசி குருசாமி அவர்கள் ம.பொ.சி யை பற்றி எழுதியிருந்தார்.

உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப்பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது.அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. “சுதந்திரக்குடியரசு” தேவையென்று நான் கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார்.தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது.இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக்கழகம் துவக்கப்பட்டது.

இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகானத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத்தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகானம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புகொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன்.இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில்.

மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும்.கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.

தோழர்களே! இப்படி பல நிகழ்வுகளை எழுதலாம். மாவீரர் ம.பொ.சி யைப் பற்றி சொல்லி மாளாது.இவரது சில எச்சங்கள்தான் இன்று புதிய தமிழ் தேசியங்களாக வேஷங்கட்டி ஆடுகின்றன.

– கி.தளபதிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *