உனக்கொரு தெய்வம்;
எனக்கொரு தெய்வம்;
ஊரார்க் கெத்தனை தெய்வமடா;
உலகோர்க் கெத்தனை கதைகளடா!
கோயில் வாயிலில் காவல்தெய்வம்!
கோபுரம் எங்ஙனும் காமதெய்வம்
காவல் அறையினில் மூலதெய்வம்
மூலத்தில் உறைவதோ காதல் தெய்வம்!
குளியாத் தெய்வம் குளிப்பதற்கே
பழத்தொடும் சந்தன பால்குடமோ?
நிருவாண தெய்வம் அணிவதற்கே
நல்லாடை அளிப்பதும் மேலிடமோ?
ஊரினைக் காக்கும் தெய்வத்திற்கும்
உதவுவார் காவல் துறையினரோ?
தேரினை இழுக்குங் கைகளுக்கும்
தெம்பினைத் தருவார் உறவினரோ?
கருவறை தன்னினும், பிழுக்கைநாறும்
அருமறை இடங்கள் யாவற்றினும்
திருமுறை கொள்ளா ஆரியத்தின்
திருவிளை யாடலை உணர்கிலரோ?
சிந்தையே குழம்பி வாக்கிழந்தும்
செய்வ தறியாது போக்கிழந்தும்
சிதைவோர் குழுமும் கோயிலெலாம்
சிவப்பு விளக்குகள் ஆயினவோ?
கவிஞர் கோ.கலைவேந்தர்,
நாகப்பட்டினம்