துவேஷத்தை உண்டாக்கியது யார்?-வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது நரித்தனத்தால் நம்மை அடிமைப்படுத்திய கூட்டம், தற்போது அதன் தந்திரத்தை வேறு பல வகைகளில் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. ‘எங்களையும் வாழ விடு; ஒழிப்போம் ஒழிப்போம்! பார்ப்பன துவேஷத்தை ஒழிப்போம்; காப்போம்! காப்போம்! சனாதன தர்மத்தைக் காப்போம்’ என்ற பார்ப்பன முழக்கத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அந்தக் கூட்டத்தில் எத்தனை மடிசார் மாமியும், பூணூல் பார்ப்பனர்களும் பங்கேற்றார்கள் என்பதை அவர்களின் கணக்குக்கே விட்டுவிடுவோம். ஆனால், நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அந்த முழக்கங்களின் பின்னால் பதுங்கியுள்ள பொய்ப் புரட்டுகளையும், பார்ப்பன வர்ணத் திமிரையும் தான்.
‘எங்களையும் வாழ விடு’ என்ற பரிதாபத்துக்குரிய சொற்களைப் பயன்படுத்த அவாளுக்கு உரிமை உண்டா? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்! அவர்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக வாழ்வது மட்டுமல்ல; ஒன்றிய அரசுப் பணியிடங்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை ஏகபோக உரிமைகளுடன் வாழ்ந்து வரும் கூட்டம் இவர்கள்தானே! தங்களின் மக்கள் தொகையைவிட பன்மடங்கு அதிக விழுக்காடு அதிகார உரிமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இது போதாது என்று 10% அரிய வகை ஏழை இடஒதுக்கீடு வேறு! பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இன்னும் 50 விழுக்காடுகூட அடையவில்லை என்ற உண்மை வெளிவந்துவிடும்; தங்களின் மேலாதிக்கம் அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சத்தால்தானே “ஜாதிவாரி கணக்கெடுப்பு” என்றால் இந்தக் கூட்டத்திற்கு எரிச்சல் வருகிறது!

அடடா! அடுத்த முழக்கம் ‘பார்ப்பன துவேஷத்தை ஒழிப்போம்!’ என்பது. நாம் பார்ப்பனத் துவேஷிகளாம்! இன்று வரை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் ‘பூணூல்’ மாற்றி தாங்கள் தான் மேலானவர்கள்; மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்பதை மணிக்கொரு முறை வெளிப்படுத்தும் கூட்டத்திற்கு ‘துவேஷம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அருகதை உண்டா? ‘‘கோவில் கருவறை எங்கள் பரம்பரைச் சொத்து என்றும், நீங்கள் உள்ளே வந்தால் கடவுளே தீட்டாகிவிடும் என்றும் ஆணவ ஆதிக்கக் குரலை 2024ஆம் ஆண்டும் வெளிப்படுத்தும் இவர்களுக்கு ‘துவேஷம்’ பற்றிப் பேச உரிமை உண்டா? ‘பால்காரன், வண்ணான் எல்லாம் இப்போ எங்க இருக்கானே தெரியல’ என்று, அவர்கள் சமூகம் படித்து முன்னுக்கு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டம் ‘துவேஷம்’ பற்றிப் பேசலாமா? இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக துவேஷத்தின் முழு உருவமாக இருப்பது இந்தப் பார்ப்பனக் கூட்டம் தான் என்பதைத் தோலுரித்துக் காட்டியவர், தந்தை பெரியார்!

பார்ப்பனர்களின் நடை, உடை, உணவு முறை, பேச்சு, தொழில், பழக்க வழக்கங்கள் என்று அனைத்திலுமே தாங்கள் மேலானவர்கள் என்பதைக் காட்டும் நோக்கில் மட்டுமல்ல; மற்றவர்கள் கீழானவர்கள் என்பதை வெளிக்கொணரும் வகையில் தான் இருந்தது; இருந்து வருகின்றது. இதனை உயிருள்ள வரைக்கும் தமிழ்நாடு வீதிகள்தோறும் சென்று புரிய வைத்த தலைவர் தந்தை பெரியார்! அப்போதே ‘துவேஷம்’ என்று கொடி தூக்கத் தொடங்கினர். எது துவேஷம் என்று பெரியார் விளக்குகிறார்.

“தற்காலம் இந்நாட்டிலுள்ள ராஜீய வேஷங்கொண்ட பல பார்ப்பனர்கள் என்னை வகுப்புத் துவேஷக்காரனென்றும், வகுப்புக் கலவரங்களை மூட்டிவிடுகிறவனென்றும் சொல்லியும் எழுதியும் ஆள்களை விட்டுப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். வகுப்புத் துவேஷமும் வகுப்பு வேற்றுமைகளும் என்னால் ஏற்பட்டதா? அல்லது நம் நாட்டுப் பார்ப்பனர்களால் ஏற்பட்டதா? என்பதை நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.

தயவு செய்து நீங்கள் என்னோடு எழுந்து வருவீர்களானால் இவ்வூருக்குள் சுற்றிப் பார்த்தால், பார்ப்பனர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு காப்பிக் கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும், ரயில்களில் உள்ள காப்பி சாப்பாட்டுக் கடைகளிலும், சத்திரம் சாவடிகளிலும், கோயில் குளங்களிலும் இது பிராமணர்களுக்கு, இது சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கும் முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இங்கு சாப்பாடு, பலகாரம், தண்ணீர் வகையறா முதலியன கொடுக்கப்பட மாட்டாது. இந்த இடத்தில் சூத்திரர்கள் தண்ணீர் மொள்ளக்கூடாது. இந்த இடத்தில் சூத்திரர்கள் குளிக்கக்கூடாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் சூத்திரர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது. இன்னின்ன விஷயங்களைச் சூத்திரர்கள் படிக்கக்கூடாது; பிராமணர்கள் மாத்திரம் இதுவரையில் செல்லலாம்; சூத்திரர்கள் இந்த இடத்திற்கப்புறம் போகக்கூடாது; இந்த வீதியில் சூத்திரர் குடியிருக்கக் கூடாது; இன்ன தெருவில் பஞ்சமர் நடக்கக்கூடாது என்று இன்னும் பலவாறாக போர்டுகள் போட்டும் நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தியும், பிரித்து வைத்துத் துவேஷத்தையும் வெறுப்பையும், இழிவையும் உண்டாக்கி வருவது நானா? அல்லது பார்ப்பனர்களா? என்பதைக் கவனியுங்கள்”. (தந்தை பெரியார், 15.08.1926 ‘குடிஅரசு’)

மேற்சொன்ன கேள்விகளை எல்லாம் முன்வைத்து, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி திராவிடர் கழகமாக வளர்ந்து பார்ப்பனரல்லாத மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பார்ப்பனர்கள் ஏற்படுத்திய சமூக அநீதியும், வர்ண பேதங்களும், பிறவி பேதக் கொடுமைகளையும் மக்கள் புரிந்து கொண்டனர். அந்த மாற்றத்தின் விளைவு தான், இன்று மீண்டும் “அய்யோ, ஈலோகத்தில் எங்கள் மீது இரக்கமில்லையா?” என்று புதிதாக கூக்குரலிட்டு PCR சட்டப் பாதுகாப்பு வரை கேட்கின்றனர். இவற்றைக் கேட்கும் வேளையிலும், ஸனாதனம் என்னும் மக்கள் விரோதக் கோட்பாட்டைக் கைவிட அவர்கள் தயாராக இல்லை. காரணம், ஸனாதனத்தின் பெயரில் தான் இன்றும் அவர்கள் பிரம்மாவின் தலையில் பிறந்தவர்களாக வலம் வர முடிகிறது. ஸனாதனத்தை வலியுறுத்தும் ‘மநுதர்மத்தின்’ ஸ்லோகங்களைப் பொது வெளியில் இவர்களால் பிரச்சாரம் செய்ய முடியுமா? முழுவதுமாகக் கூட வேண்டாம், ஏதேனும் ஒன்று இரண்டையாவது மக்களிடம் கூற முடியுமா? அவர்களால் முடியவே முடியாது. காரணம், அவை அனைத்தும் நம்மை இழிவுபடுத்த, கீழ் நிலையில் வைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை என்பதைப் பெரியார் வெளிப்படுத்தினார்.

“பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான்” (மநு, அத்.8, சுலோ. 413)

“பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்” (மநு, அத். 9, சுலோ. 317)

“பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்” (மநு அத். 9, சுலோ. 319).

நாம் மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு துளி தான். இவற்றை எல்லாம் ஸனாதனம் என்னும் பேரில் நாம் ஏன் தலையில் தூக்கிச் சுமக்க வேண்டும்? இவற்றைக் காப்பற்றுவதன் மூலம் நம்மை நாமே இழி மக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? ஸனாதனத்தைக் காப்பதன் மூலம், அவர்கள் பிராமணாள் – நாம் சூத்திரர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? பெண்கள் (பார்ப்பனப் பெண்களையும் சேர்த்துத்தான்) கீழானவர்கள், பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லும் ஸனாதனம் நமக்கானதா? நமது கல்விக்குக் கேடு விளைவிக்க உருவாக்கப்பட்ட ஆரியத் தத்துவங்கள் நமக்குத் தேவையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நாம் முன் வைத்தால், அவர்கள் கூறும் ஒரே பதில் ‘இப்பெல்லாம் ஏன் சார் மநுதர்மத்தைப் பற்றி பேசிக்கிட்டு’ என்பார்கள். இப்போது மநுதர்மத்திற்கு வேலை இல்லை

என்றால், திராவிடர் கழகம் அதைக் கொளுத்துகின்ற போது பார்ப்பனர்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மநுவைப் பற்றி பேசினால், அய்யோ எங்கள் உரிமை போய்விட்டது, வாருங்கள் ஸனாதனத்தைக் காப்போம் என்று ஏன் அழைக்க வேண்டும்?

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, உரிமைக் குரல் எழுப்ப பார்ப்பனர்களுக்கு ஏதேனும் முகாந்திரம் உண்டா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!