ஆரிய மதப் பண்டிகைகளை அறவே ஒதுக்குவோம்!

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

இந்து மதம் என்ற ஆரிய மதம் நமது திராவிட மக்களின் வாழ்வில் ஊடுருவி நிலைபெற்று இருப்பதற்கு சில பல காரணங்களில் ஒன்று மதப் பண்டிகைகள் கொண்டாட்டம் ஆகும். நமது பிறவி இழிவினைப் பாதுகாக்கும் தன்மையில்தான் இந்துமதப் பண்டிகைகள் என்பவைகள் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ஆபாசமும், அருவருப்பும் கொள்ளும் தன்மையில் அதற்கான கதைகள் ஆதாரங்களின்படி இருக்கின்றன.
வெளிநாட்டவர் எவராவது, “நமது பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகின்றன? அவைகளின் தத்துவம், அவற்றிற்கான மூலாதாரம் என்ன?” என்று கேட்பார்களானால், அவற்றை அவர்களுக்கு விளக்குவது மகா வெட்கக் கேடாகவே முடியும்!

தமிழர்களைக் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சீரிய மனிதர்களாக்கும் பணியே நமது வாழ்வின் முழுமுதற்பணி என்று கொண்டு, அதற்காகவே அறிவியக்கத்தை – தன்மான இயக்கத்தைக் கண்டு, அறுபதாண்டுக்காலம் இடையறாது உழைத்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள், “நமது இனமக்களின் “சூத்திரப் பட்டம், கீழ்ஜாதித் தன்மை நீங்க வேண்டுமானால், அதற்குரிய குறைந்தபட்சத் தேவைகளில் ஒன்று இந்துமதமென்னும் ஆரியமதப் பண்டிகைகளைக் கொண்டாடாது வெறுத்து ஒதுக்கி வாழ்வது” என்று தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

பாமரர்களானாலும், படித்தவர்களானாலும் பழமை என்று குப்பைமேட்டில் புரளுவதில்தான் தனிச் சுகம் காண்பவர்களாக இருக்கிறார்களே தவிர, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் காலகட்டத்தில் வாழும் நாம் இவற்றை நம்புவது மிக மிக அபத்தம் அல்லவா என்று சிந்திக்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள்.
(‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலின் பதிப்புரை)