‘டேய்! புல்லட் வாத்தியார் வந்துட்டு இருக்காரு. எல்லாரும் அமைதியா இருங்க; இல்லேன்னா வெளுத்துப்புடுவாரு” – வகுப்பறையில் தினேஷ் குரலில் அறையே அமைதி ஆனது.
ஏறக்குறைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அந்தப் பள்ளியில் கண்டு பயப்படும் ஒரே ஆசிரியர் புல்லட் வாத்தி என்று மாணவர்களால் பெயர் சூட்டப்பட்ட நடேசன் வாத்தியாராகத்தான் இருப்பார்.
முறுக்கு மீசையுடன் புல்லட்டில் அவர் மிடுக்காக, கம்பீரமாக வரும் தோரணையே மாணவர்களை மிரளச் செய்யும். பாடம் நடத்துவதோடு நின்று விடாமல் சமுதாயச் சீரழிவையும் சேர்த்தே புரிய வைப்பதால் நிறைய கோபங்களையும் பகையையும் சம்பாதித்து வைத்திருப்பவர். ஆனாலும் எதற்கும் அச்சப்படாதவர்.
புல்லட் வாத்தியார் பாடம் நடத்தும் விதமே வித்தியாசமானது. வகுப்பறையில் நுழைந்ததும் முதல் வேலையாக எல்லா மாணவர்களையும் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து கை தட்டச் சொல்லுவார். பின் ஏதாவது சமுதாய நிகழ்வுகளை நகைச்சுவையாகக் கூறி மாணவர்களின் மனதை முழுவதுமாக தம் பக்கம் ஈர்ப்பார்.
வகுப்பறையில் நடேசன் வாத்தியார் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்று ஒருமித்த குரலில் ‘வணக்கம் அய்யா’ என்றனர். பதிலுக்கு “வணக்கம்” செலுத்திவிட்டு அனைவரையும் அமரச் சொன்னார்.
“முதல்ல எல்லோரும் மூன்று நிமிடம் கை தட்டுங்க” என்று சொல்லி, கை தட்டி ஓய்ந்ததும் பேசத் தொடங்கினார்.
“இந்த ஆண்டு நீங்க எட்டாம் வகுப்பு முடிச்சுட்டு உயர்நிலைப் பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்பு பயிலப் போயிடுவீங்க. ஆனாலும், வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது. நீங்க தினமும் பார்க்குற, படிக்கிற அனைத்தையும் பற்றிச் சிந்திக்கணும். அதுக்காக என்னால முடிஞ்ச பயிற்சிய உங்களுக்கு நான் தந்துட்டு இருக்கேன். அது கண்டிப்பா இன்னிக்கி புரியலேனாலும் ஒரு நாள் பயன் தரும்.”
ஆசிரியர் நடேசன் பேசப் பேச மாணவர்களின் கவனம் அவரது பேச்சைக் கவனிப்பதில் இருந்ததை உணர முடிந்தது.
“நான் நேற்று எதைக் கவனிச்சு பார்த்துட்டு வர சொன்னேனு நினைவிருக்கா…?”
“இருக்கு சார்”
“எங்க ஒவ்வொருத்தரா சொல்லுங்க.”
“சார்! நீங்க கற்சிலை வடிக்கும் சிற்பி இருக்கும் இடத்துக்குப் போயிட்டு வரச் சொல்லியிருந்தீங்க. அதுபடி நான் அங்க போனேன் சார். அவரு கடவுள் சிலையும் செதுக்கி வச்சிருக்காரு. அரசியல் தலைவர்கள் சிலையும் செதுக்கி வச்சிருக்காரு. எல்லாத்துக்கும் பயிற்சிதான் முக்கியம்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன் சார்.” முருகேசன் என்ற மாணவன் பேசி அமர, அடுத்து குமரன் எழுந்தான்.
“சார், நான் போய்ப் பார்த்த இடத்தில் கடவுள் உருவம் செதுக்கினாங்க சார். குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத வறுமை அவங்ககிட்ட இருந்தது. பார்க்க பாவமா இருந்தது சார். இதுவரையிலும் எத்தனையோ சிலையைச் செதுக்கியும் ஒன்னு கூட அவங்களோட வறுமையைப் போக்க முடியலேனு புரிஞ்சது சார்’.
“அடுத்தது”
“சார், நான் முருகேசனோட சேர்ந்துதான் சார் போயிருந்தேன். அங்க நான் தெரிஞ்சுகிட்ட விசயம் என்னான்னா… செதுக்கின பிறகு அந்தச் சிலைக்கு புனிதத்தன்மை ஏத்துறாங்கனு புரிஞ்சது சார்.”
“அடுத்தது.”
“சார் ஒரே கல்லுதான் கடவுள் சிலை செய்யவும் கால் படிக்கட்டு செய்யவும் பயன்படுத்துறாங்க. அதுக்கு சிறப்பு சக்தியெல்லாம் ஏதும் இல்லைனு புரிஞ்சது சார்.”
ஒவ்வொரு மாணவனும் எழுந்து தன் அனுபவத்தைச் சொல்ல… “சரி மீதியை நாளைக்குச் சொல்லுங்க. இப்ப நாம பாடத்துக்குப் போகலாம்” …என்று நடேசன் ஆசிரியர் இடை மறித்தார்.
கணிதம் சம்பந்தமான பாடத்தில் இடைஇடையே மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டே பாடத்தை நடத்தத் தொடங்கினார்.
பின் கரும்பலகையில் எழுதிப் போட்டதை மாணவர்களிடம் எழுதச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.
“சார்”
“சொல்லு, ஏதும் சந்தேகமா…?’.
“சார். எல்லா பாடத்தையும் நீங்களே நடத்தினா நாங்க சுலபமா புரிஞ்சுக்குவோம் சார்.”
“ஏன் அப்படிச் சொல்ற”.
“அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் பள்ளிக் கூடத்திலே நடத்துறது புரியவே மாட்டேங்குது. அதே பாடம் டியூசன்ல நடத்துனா புரியுது.”
“நீங்க டியூசன்ல படிக்கனுங்கறதுக்காகத்தான் பள்ளிக் கூடத்தில நடத்துற பாடமே புரியாத மாதிரி நடத்துறாங்க. இதைக் கேள்வி கேட்கறனாலதான் என்னை மாதிரி சக ஆசிரியர்கள உங்ககிட்ட வில்லனா சித்தரிக்கிறாங்க.”
“உங்ககிட்ட சகஜமா சந்தேகம் கேட்டாலும், உள்ளுக்குள்ள எங்களுக்குப் பயம் இருக்குது சார்.”
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நாம் பேசுற கருத்துக்கு நம்ம தோற்றமும் ஒரு முக்கிய அம்சமா இருக்குது. நம்ம தோற்றந்தான் நம்ம ஆளுமைய வெளிப்படுத்த உதவுது. நோஞ்சானா இருந்துக்கிட்டே இப்படி நான் பேசினா அது சமுதாயத்தில கேலிக் கூத்தாப் போயிடும். அதனால இப்படி மெய்ன்டெய்ன் பண்றேன். வேற ஒன்னுமில்ல.”
நடேசன் ஆசிரியர் சொல்லி முடிக்கவும் அனைவரும் கரும்பலகையில் இருந்ததை எழுதி முடிக்கவும் சரியாக இருந்தது.
‘சரி, எல்லோரும் எழுதி முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கிளாஸ் முடியும் நேரம். அதனால ஒரு சின்னச் சிந்தனையை மட்டும் சொல்றேன் கேட்டுக்குங்க.”
“அதுக்கு முன்னாடி இன்னிக்கி கற்சிலையைப் பத்திச் சொன்னவங்க அடுத்த வாரம் ஜாதியைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதையும் அனுபவ ரீதியா மத்தவங்க அதுபத்திச் சொல்றதையும் கேட்டுச் சேகரிச்சுட்டு வாங்க.”
“சரிங்க சார்”
“ஒரு மத நூல்படி அதுவும் இறைவனால் சொல்லப்பட்டதாகக் கூறுகிற நூலுல விசித்திரமான செய்தி ஒன்னு இருக்கு. இப்ப அதைத்தான் உங்களுக்குச் சொல்லப் போறேன். இது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஒத்துவரும் என்பதைப் புரிந்துகொள்ள உங்க சிந்தனைக்கே விட்டுடறேன்.
“சரிங்க சார்”
“11 அக்குரோனி சைனியம் மற்றும் 7 அக்குரோனி சைனியமும் மொத்தம் 18 அக்குரோனி சைனியம் எதிர் எதிரே நின்னு போர் செஞ்சதா சொல்லப்படுது.
1 அக்குரோனி சைனியம் என்பது
21,870 ரதங்கள்
21,870 யானைகள்
65,610 குதிரைகள்
1,09,350 காலாட்படை
அப்படினா…
18 அக்குரோனி சைனியம் என்பது
21,870 தேர்ப்படை x 18 : 3,93,660 ரதங்கள்
21,870 யானைப்படை x 18 : 3,93,660 யானைகள்
65,610 குதிரைப்படை x 18 : 11,80,980 குதிரைகள்
1,09,350 காலாட்படை x 18: 19,68,300 வீரர்கள்னு குறிப்பிட்டு இருக்கு. அக்காலத்துல இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருந்ததா…? இப்பெரும்படையை எங்க நிறுத்தி சண்டை போட்டாங்க. இது எப்படி சாத்தியம்னு உங்க சிந்தனைக்கே விடுறேன்.” சொல்லி முடிக்கவும் வகுப்பறை முடிந்து மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
“குமார்!”
“சார்…”
“சாயந்திரம் உங்க அப்பாவ என்னோட வீட்டுக்கு வரச் சொல்லு.”
“சார்…”
“பயப்படாத, உன்னோட படிப்புப் பத்திப் பேசத்தான்”.
“சரிங்க சார்“
மாலையில் நடேசன் ஆசிரியர் வீட்டில்…
“சாமி!”
“யார் நீங்க…?”
“குமாரோட அப்பா முனுசாமிங்க”
“உள்ளே வாங்க”
“சாமி நாங்க உள்ளே வரக்கூடாதுங்க சாமி.”
“பரவாயில்லை வாங்க.”
முனுசாமி தயங்கித் தயங்கி வீட்டுக்குள் நுழைந்தார்.
“உட்காருங்க”- சேரைக் காட்டினார் நடேசன்.
“இல்லைங்க சாமி! நான் இப்படியே உட்கார்ந்துக்கிடறேன்.” சொல்லியபடியே தரையில் அமர்ந்தார்.
“நீங்க முதல்ல சாமின்னு கூப்பிடறத நிறுத்துங்க; அய்யான்னு கூப்பிட்டுப் பழகுங்க.”
“சரிங்க சா… இல்ல அய்யா.”
”நீங்க செய்யுற வேலையும், உங்க ஜாதியும் உங்க பையனோட படிப்ப ரொம்பப் பாதிக்குது. இப்படியே போனா மேல்படிப்பு படிக்கிறது சிரமம். மனசுல ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருக்கு.”
“அதுக்கு நா என்னங்கய்யா செய்யணும்.”
“உங்க பிள்ளை நல்லா
படிச்சு நல்லபடியா வரணுமுனு நீங்க உண்மையாலுமே நினைச்சீங்கன்னா… மொதல்ல மோளம் அடிக்கிற உங்க வேலையை விட்டுடணும்; அடுத்து ஏதாவது ஒரு ஊர்ல போயி தங்கி, உங்க பையன படிக்க வைக்கணும்.”
“பிறந்த ஊர விட்டு எப்படிங்கய்யா போறது? அதுவுமில்லாம எனக்கு வேற வேலையே தெரியாதுங்களே…”
“பிறந்த ஊருல வாழுறத விட சுதந்திரமா, சுய மரியாதையோட வாழுறதுதான் முக்கியம். அடுத்து, உங்க பையனோட எதிர்காலத்த நினைச்சாவது ஜாதி அடையாளம் இல்லாத ஏதாவது ஒரு வேலையைக் கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.”
“எப்படியாவது என் பையன் நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்ங்க. அதுக்காக நான் எவ்வளவு சிரமப்பட்டாலும் பரவாயில்லைங்க.”
“நல்லது. முதல்ல சேர்ல நிமிர்ந்து உட்காருங்க. உங்க பழக்க வழக்கத்த மாத்துங்க. நீங்க யாருக்கும் அடிமை இல்லை. உங்களுக்கு யாரும் அடிமை இல்லேங்கிறத நல்லா மனசுல பதிய வைங்க.”
“சரிங்கய்யா! கண்டிப்பா நான் மாறுவங்கய்யா” – சொல்லிக்கொண்டே சேரில் அமர்ந்த முனுசாமியின் முகத்தில் தயக்கம் மறைந்து நம்பிக்கை பிறந்தது.