இப்படியும் எழுதி இருக்கின்றனரே?
அண்மையில் நான் படித்த நூல்கள் சில. அவற்றுள் ஒன்று, கல்வியில் புதுமைகள் என்னும் நூல். ஆசிரியர்: நல்லாசிரியர் டாக்டர் இ.பா.வேணுகோபால். அந்நூலில் வரும் ஒரு தொடர் பின்வருமாறு: இந்தியப் பண்பாடு அலெக்சாண்டர் படையெடுப்பால் கிரேக்க நாட்டிற்குப் பரவியது.
(பக்கம்: 142)
மற்றொன்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை வெளியிட்டுள்ள வாழ்வியல் பயணம் என்னும் நூல்.
அந்நூலில் இடம்பெற்றுள்ள தொடர்கள் இவை:
பாரதப் பண்பாட்டைப் பார்போற்றும் வண்ணம் ஒவ்வொரு இந்தியனும் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
உலகெங்கும் பாரதப் பண்பாட்டு-_கலாசார மய்யங்களை உருவாக்கி, பண்பாடு தொடர்பான தகவல்களைப் பரப்ப வேண்டும்.
இவை மட்டுமன்றி, ஆகஸ்டு 16-_31, 2012 உண்மை இதழில் தோழர் சமா.இளவரசன் எழுதியுள்ள, பெண்ணைத் தாயாக மதிக்கும் நாடு? என்னும் தலைப்பில் எழுதியுள்ள மேற்கோள் தகவல் பின்வருமாறு:
இந்திய கலாசாரத்தின்படி பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது. நெறிதவறிய நடத்தை, அருவருப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நாகரீக மற்ற வாழ்க்கை முறை, பழக்கங்கள் ஆகியன சமுதாயத்தில் குழப்பங்களை அதிகரித்து விடும் மேலே வந்த கருத்து முத்தை உதிர்த்திருப்பவர், மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அமைச்சர் கைலாஷ் பிஜய் வர்கியா.
இப்படியும் பண்பாடு இருக்கிறதா?
மேலே எடுத்துக்காட்டப்பட்டவற்றுள் எல்லாம் இடம்பெறும் ஒரு கருத்து,
இந்தியக் கலாச்சாரம்; இந்தியப் பண்பாடு பாரதக் கலாச்சாரம்; பாரதப்பண்பாடு என்பது.
இந்தியா என்பதும் பாரதம் என்பதும் ஒரே பொருள்தரும் சொற்கள். கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் ஒரே பொருள் தரும் வடமொழி -_ தமிழ்ச்சொற்கள்.
தெளிவு – விளக்கம் கருதி சுருக்கமாக இனி நாம் இந்தியப் பண்பாடு என்றே குறிப்பிடுவோம்.
இந்தியாவும் இந்தியப் பண்பாடும்
இந்தியப் பண்பாடு என்ற ஒன்று, எப்போதேனும் இருந்ததா? இன்று, இருக்கிறதா? இப்படி ஒரு வினா!
இதற்குமுன், இப்படியும் ஒரு வினா. இந்தியா அல்லது பாரதம் என்றொரு நாடு இருந்ததா? இருக்கிறதா? வினாக்கள் வினாக்களாகவே இருக்கின்றன; இருக்கும்.
இந்தியா (பாரதம்) என்ற கருத்துரு இட்டுக் கட்டப்பட்டது; இறுக்கிக் கட்டப்பட்டது.
பண்பாடு என்பதன் பரந்த பொருள்
மக்கள் வரலாற்றில், அவர்கள் படைத்துக் கொண்ட சமுதாயப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், ஒழுகலாறுகள் முதலியனவற்றின் சாறு (Quintessenee ஆக இருப்பதே பண்பாடு என்று பொதுவாகக் கூறலாம்.
சமூக இயலாளர்கள் (Sociologists) பண்பாடு குறித்து அளிக்கப்பெறும் விளக்கங்கள் வாயிலாக, பண்பாட்டில் அடங்கியுள்ள கூறுகளை நாம் இனம் கண்டு கொள்ள முடிகிறது.
பண்பாட்டுக் கூறுகளின் பட்டியல்
ஒரு சமுதாயத்தின், பழக்க வழக்கங்கள்; கருத்துகள்; சமயம்; ஒழுக்கம்; கொள்கை; அரசமைப்பு; அறநெறி; வழிபாட்டுமுறை; மொழிவளம்; கலைவளம்; நடை, உடை, பாவனைகள்; உணவு முறைகள்; உறவுமுறைகள்; போன்ற அனைத்தையும் பண்பாட்டுக் கூறுகள் எனலாம்.
மேலே கூறப்பெற்ற பண்பாட்டுக் கூறுகளுள் சிலவற்றை மட்டும் கருத்து விளக்கத்திற்காக எடுத்துக் கூறி, இதன் வழி, இந்திய (பாரத)ப் பண்பாடு எது? என்று அடையாளம் காண விழைவோம்; முனைவோம்; முயல்வோம்.
அறநெறி ஒன்றாக அமைந்துள்ளதா?
வாழ்வியலில், மக்கள் செம்மையாக, சமனியமாக இருத்தல் வேண்டும் என்பதுதான் ஆன்றோர் வகுத்த அறம்.
அறத்தின் வழி ஒழுகுதலே அறநெறி. இந்த அறநெறி வடபுலத்தில் வேத, புராண, சுமிருதிகள் அடிப்படையில், பிறவித் தன்மையால் உயர்வு _தாழ்வு ஏற்படுத்தி வர்ண _ ஜாதி முறை வகுத்து, ஜாதிக்கொரு நீதியை வலியுறுத்தும்.
ஆனால், தென்னகத்தில் தோன்றிய உலக மக்கள் பின்பற்றத்தக்க வாழ்வியல் வழிகாட்டியாக, விளங்கும், திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பிரகடனப்படுத்துகிறது.
இதே கருத்தைத்தான், சங்க நூலில் கணியன் பூங்குன்றனார்,
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்று வழிமொழிந்துள்ளார். இதே கண்ணோட்டத்தில் தான், ஒன்றே குலம் (ஒருவனே தேவன்) என்று தம் திருமந்திரம் நூலில் திருமூலர் பறைசாற்றி யுள்ளார். இந்த அறநெறிக் கோட்பாட்டில் எது இந்திய அறநெறி?
கோயில்களின் அமைப்பு ஒன்றாயிருக் கின்றதா?
வடபுலத்தில், கோயில்கள் பிரமிடு போன்ற மேல்தளங்கள் சுற்றிலுமுள்ள வளைவுகள் கொண்டவை. இவை காஷ்மீர் வகையைச் சேர்ந்தவை; தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்தில், கோயில் அமைப்பு, வே(மா)றுபாடு கொண்டது. கோபுரம், சுற்று வளாகம் (பிரகாரம்) மண்டபங்கள், கருவறை, மேல் விமானம் இவை கொண்ட திராவிடம் எனப்படும் ஆகமச் சிற்ப அமைப்பு அடிப்படையில் அமைந்தது. இவற்றுள் எது இந்தியக் கோயில் வகை?
வழிபாட்டு முறை ஒன்றாயிருக்கிறதா?
வடபுலத்தில், காசியில் உள்ள கோவில் சிவலிங்கத்தை வழிபடுவோர் கட்டித் தழுவி வணங்கலாம்.
ஆனால், தமிழகக் கோயில் கருவறையில் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆகப் பணிபுரியலாம்; கருவறையில் நுழையலாம்; அர்ச்சனை செய்யலாம். இவற்றுள், எது இந்திய வழிபாட்டு முறை?
மொழிவகை ஒன்றாக உள்ளதா?
இந்திய (பாரத) நிலப்பரப்பில் ஆரியக் குடும்ப மொழிகள் என ஒருவகை; தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான திராவிடக் குடும்பமொழிகள் என ஒருவகை; அரபி மொழியையும் துருக்கி மொழியையும் ஒன்றிணைத்து உருவான உருதுமொழி வேறொரு வகை; இவற்றுள் இந்திய மொழி வகை என்பது எது?
மருத்துவ வகை ஒன்றாக இருக்கிறதா?
வடபுலத்தில் ஆரிய வேத அடிப்படையில் வழக்கில் உள்ள ஆயுர்வேதம் என்பது ஒருவகை மருத்துவம்; தென்னகத்தில், குறிப்பாக, தமிழகத்தில் உருவாகி நடைமுறையில் உள்ள சித்த மருத்துவம் என்பது இன்னொரு வகை மருத்துவ வகை;
அரபி முறையில் உருவான யுனானி மருத்துவ வகை வேறொன்று; மேலை (ஆங்கில) நாட்டு அறிவியலடிப்படையில் நடைமுறையில் உள்ளது அலோபதி (Allopathy) என்னும் ஆங்கில மருத்துவ வகை ஒன்று;
ஓமியோபதி (Homeopathy) எனப்படும் ஜெர்மானிய மருத்துவ வகை மற்றொன்று. இப்படி, இன்னும் பலவகை உள. இவற்றுள் இந்திய மருத்துவ வகை என்பது எது?
உணவு வகை ஒன்றாக இருக்கிறதா?
வடநாட்டவர், சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமை உணவு செய்வர்; தமிழர்கள், இட்டலி, தோசை, அரிசிச் சோறு, இடியாப்பம், குழம்பு (சாம்பார்), மிளகுச்சாறு (இரசம்), சட்டினி உண்பர். பொங்கல் சமைத்துண்பர்.
இராஜஸ்தானியர், குஜராத்தியர் இனிப்புப் பண்டங்களை மிகுதியாக உண்பர்; ஆந்திரர்கள், கார (உறைப்பு)ச் சுவை மிகுதியாக உள்ள உணவுவகைகளை விரும்பியுண்பர்.
இந்த உணவு வகையுள் எது இந்திய உணவு என்பது?
உடைவகை ஒன்றாக இருக்கிறதா?
வடபுலத்தில், இராஜஸ்தானியர், பஞ்சாபியர் உடை ஒருவகை; வங்காளியரின் உடை வேறொரு பாணி. மலையாளிகள் உடை இன்னொரு வகை; குறிப்பாக மலையாள மங்கையர் முண்டு எனும் உடைவகை அணிவர்.
தமிழர்கள், வேட்டி, துண்டு, சட்டை, சேலை, தாவணி முதலான உடைகளை அணிவர்.
(அயலவர் வருகையால் உணவு, உடை வகைகள் மாறுபட்டதாக இருப்பது வேறு சங்கதி.) இந்த உடை வகையில் எது இந்திய உடை?
இசைக்கலை எப்படி?
வடநாட்டில், பெரிதும் இசைக்கப்படுவது இந்துஸ்தானி இசை; ஆனால், தென்னகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் கருநாடக இசை என மாறுபாடாக அழைக்கப்பெறும் தமிழிசை. இவற்றுள் எது இந்திய இசை?
நடனக்கலை எப்படி?
வடபுலத்தில், அஸ்ஸாமில், மணிப்புரி நடனம்; குஜராத்தில், மாண்டியா நடனம்; ஆந்திராவில், குச்சுப்புடி நடனம்; கேரளாவில் கதகளி நடனம்; தமிழ்நாட்டில் பரதநாட்டியம் என பின்னாளில் வழங்கப்படும் கூத்து வகை. இவற்றுள் எது இந்திய நடனக் கலை?
ஓவியக் கலை எப்படி?
இராஜஸ்தானி வகை ஓவிய வகையுள் ஒன்று; 1. பூண்டி, 2. மால்வா என இருவகை. ஜம்மு ஓவியமுறை என்பது மற்றொன்று; இதில், ஜஸ்ரோட்ஸ் (Jusrotes), குலர் (Guler), பஹாரி (Pahari) எனப் பாகுபாடு உண்டு. ஒவ்வொரு மாநிலப் பகுதியிலும் வெவ்வேறான ஓவியக்கலை வகை உள்ளன. இவற்றுள் எது இந்திய ஓவியக் கலை?
விழாக்கள்_பண்டிகைகள் எப்படி? எப்படி?
வடபுலத்தில், முகம், தலை இவற்றில் வண்ணப்பொடி, வண்ணச் சாய நீர்மம் தூவுதல், கொட்டுதல், ஊற்றுதல் முதலியவற்றை வைத்துக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை வழக்கத்தில் உள்ளது.
உடன்பிறப்பைக் காட்டும் வண்ணம் மகளிர் ஆடவர் கையில் கட்டும் ரட்சா பந்தன் எனப்படும் காப்புக் கயிறு பண்டிகையும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இவ்வகைப் பண்டிகை அறவே இல்லை! ஆனால், பொங்கல் பண்டிகைதான் சிறப்பிடம் பெறுகிறது. பின்னாட்களில், இதற்கு இந்துமதச் சாயம் பூசப்பட்டு மகர சங்கராந்தி எனப்பட்டது. ஆந்திராவில் இது, யுகாதிப் பண்டிகை எனக் கொண்டாடப்பட்டு வருகிறது; கேரளாவில், சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.
இவற்றுள், எது இந்திய பண்டிகை? இந்திய விழா? எடுத்துக்காட்டுகளுக்காக இதுவரை பண்பாட்டுக் கூறுகள் வேறுபட்ட நிலையில் இந்திய நிலப்பரப்பில் இருப்பதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டோம்.
இந்தியப் பண்பாடு இதுவா?
அழகிப் போட்டிகள் நடக்கும்போதும், கற்பு பற்றி ஊடகங்கள் (Medias) எதையாவது கிளப்பி விட்டு, பரபரப்பூட்டும்போதும், ஆபாசமான திரைப்படங்கள் ஓட்டப்படும்போதும், காதலர் தினம் என்பதாகக் கொண்டாடப்படும்போதும், நம்முடைய இந்தியப் பண்பாட்டை அவை சீரழிப்பதாக நம்மில் பலர் வெகுண்டெழுவர். நெருப்பை மிதித்துவிட்டவர் போல தாண்டிக் குதிப்பர்; கொதிப்பர் சீறிப்பேசுவர்; சினத்துடன் எழுதுவர். அவ்வண்ணம், வெகுண்டெழும் பேர்வழிகள் உள்ளத்தில் இந்தியப் பண்பாடு ஒன்று இருப்பதான போலியான எண்ணம் தங்கியிருப்பதே இதற்குக் காரணம்.
இவ்வாறு பேசுவதும், எழுதுவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது; நாகரிகம் (Fashion) ஆகிவிட்டது. அவர்களிடம், இந்தியப் பண்பாடு என்பது என்ன? எனக் கேட்டுப் பார்த்தால், அதற்கு ஒழுங்கான, முறையான விடை கூறாமல் விழிப்பர்; மழுப்புவர்.
தெய்வப் பெண்ணா?
பெண்ணைத் தெய்வமாக மதிப்பதுதான் இந்தியப் பண்பாடு என்று தட்டுத்தடுமாறி விடைபகர்வர். இப்படிக் கூறுபவர்கள் இந்துமதக்காரர்கள்! ஆனால், இந்த இந்து _ இந்தியப் பெருமகன்கள் பெண்களை அப்படி மதித்ததற்கான எந்தச் சான்றும் இந்திய வரலாற்றில் கிடையாது.
இந்த இந்து ஆடவர் சிரோன்மணிகள் பெண்ணை அடிமையாக, உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு அவலமான பாலினமாகத்தான் கருதி நடத்தி வந்துள்ளனர், வருகின்றனர்.
கணவன் செத்துப் போனால், அவனுடைய பிணத்தோடு சேர்த்து மனைவியையும் உயிரோடு தீயில் தள்ளிப் போட்டுக் கொளுத்திக் கொன்று போடும் பண்பாடு இந்திய நிலப்பரப்பில் இருந்ததற்கான ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
ஏழு அகவை (வயது), எட்டு அகவை பச்சைப் பசுங்குழந்தைகளுக்கு திருமணம் பண்ணிவைத்த கொடுமைக்குச் சான்றுகள் உள்ளன.
உடன்கட்டை ஏற்றப்படுவதைத் தவிர்த்த பெண்டிர், தலைமுடி மழிக்கப்பட்டு கைம்பெண் (விதவை) என்ற பெயரோடு உலவி வந்த வரும் இந்துப் பெண்களின் அவலநிலை உலகறியும்.
பெண்ணைத் தெய்வம் ஆக மதிக்கும் இந்திய இந்துப் பண்பாட்டின் இலக்கணம் இதுதானா?
என்னென்பதோ? ஏதென்பதோ?
உண்மைகள் இவ்வாறிருப்ப, இவற்றையெல்லாம் அறியாத அல்லது அறிந்தும் அறியாத அறிஞர் பெருமகன்களாகவும், கல்வியாளராயும், நூலாசிரியப் பேராசிரியர்களும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரிய மாமேதைகளும், இந்துத்துவா கட்சி அமைச்சர் பெருமான்களும் இவர் அனைய பிறரும் இருக்கின்றனரே? என்னென்பதோ? ஏதென்பதோ? இப்பொழுது சொல்லுங்கள்: எது இந்தியப் பண்பாடு? அப்படி ஒன்று இருக்கிறதா?
– பேரா.ந.வெற்றியழகன்