Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

அரசுக்கு…

அமைதியான வழியில்
போராட
வருபவர்களிடம்
ஆயுதப் பிரயோகம்
நடத்துகிறது அரசு.

ஆயுத வழியில்
போராடிக் கொண்டு இருப்பவர்களிடம்
அமைதிப்
பேச்சு வார்த்தை
நடத்துகிறது அரசு!

அரசுக்கு தேவை?
ஆயுதமா? அமைதியா?

– கற்பனைப் பித்தன், பெரம்பலூர்

இடம்பிடிக்க…

பள்ளிசெல்ல வேண்டிய
குழந்தைகளை
பத்திரமாக அனுப்பிவைத்தது
பட்டாசு
சுடுகாட்டில்
முன்னதாக இடம்பிடித்துக்
கொள்ளுங்கள் என்று…

தட்சணை…

எவ்வளவு கத்தியும்
காதில் விழவேயில்லையாம் கடவுளுக்கு!
ஒருவேளை
தட்சணை கொடுக்காததால்
கரிக்கட்டையாகியிருப்பார்களோ

மழை

காடுகளை அழித்து
கோவில் கட்டினார்கள்
நின்று போனது
மழை!

– குருஷ்ராஜா. அ, இனாம்ரெட்டியபட்டி

குரங்கு

குரங்கிலிருந்து
மனிதன் பிறந்தான் என
பாடம் நடத்தினார் ஆசிரியர்
சந்தேகமுண்டு அய்யா?
எனக் கேட்டான் மாணவன்.
ஆவலோடு அவன் முகம்
நோக்கினார் ஆசிரியர்.
எந்தக் குரங்கு
நெற்றியில் பிறந்தது?
எந்தக் குரங்கு
தோளில் பிறந்தது?
எந்தக் குரங்கு
இடுப்பில் பிறந்தது?
எந்தக் குரங்கு
காலில் பிறந்தது?
எனக் கேட்டான் மாணவன்.
சுருங்கியது ஆசிரியர் முகம்.

பயன்பாடு

கொட்டியது மழை.
கூலி கிடைக்க
ஒரு வாரமாகுமாம்.
உலைநீருக்கு அரிசியின்றி
ஓரத்தில் முடங்கினாள் அம்மா.
கூரையின் ஓட்டைகள் வழியே
சொட்டுச் சொட்டாக
வடிந்த மழைநீரை
அலுமினியத் தட்டுக்களில் பிடித்து
விளையாடி மகிழ்ந்தனர்
கூலித் தொழிலாளியின் குழந்தைகள்.

– வி. சகாயராஜா, திண்டுக்கல்