நூல்: திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள்…
ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007. பக்கங்கள்: 112 ரூ.40/-
கடந்த ஆகஸ்டு மாதம் திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. ஏற்கனவே பெரியாரியல்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு இத்தொகுப்பு ஒரு பெரும் உதவியாக அமைந்திருந்தது. படித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் தமிழின மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தையும் உயர்சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட அடக்குமுறைகளையும் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே நிகழ்வது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது இந்நூல்.
நான் அண்ணாவைப் பார்த்தவன் அல்ல! பெரியாரைப் பார்த்தவன் அல்ல! இருந்த பொழுதிலும் அவர்களின் உணர்வினையும் அவர்களின் செயல்களையும் வாசகர்களுக்கு உணர்த்துகின்ற அளவில் இந்நூல் ஆசிரியர் கி.வீரமணி அப்படியே பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.
இன்று திராவிடம்பற்றியும் திராவிட உணர்வுபற்றியுமான சிந்தனைகள் மீண்டும் மீண்டும் முகிழ்த்தெழ வேண்டிய காலச் சூழல் எழுந்துள்ளது.
இக்கால மனிதர்களுக்குக் கடந்து வந்த பாதையினை மறந்து விடுவது என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. எனவே திராவிட இனத் தலைவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கப் போராடிய போராட்டங்களை நினைவுபடுத்துகின்ற வகையில் ஒவ்வொரு மேடையிலும் கி.வீரமணி அவர்கள் பேசும்போதும் – பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, திராவிடர் கட்சியை நினைவு கூர்கின்றவகையில் உரையாற்றுவார்கள். அந்த வகையில் 27.02.2012 அன்று திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பேசிய உரையை மனு தர்மத்திற்கும் மனித தர்மத்திற்குமிடையே மிகப்பெரும் போராட்டம் என்ற தலைப்பிட்டு பஞ்சமனுக்குப் பொது இடங்களில் அளிக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டுகின்றார்.
கீழ்நிலையில் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் உயர்பதவிக்குச் சென்றாலும் அவனை இழிவானவனாகப் பார்க்கும் ஆதிக்கப்பார்வை நிலைகளையும் சிறப்பாக உணர்வுபொங்கச் சுட்டிக்காட்டுகின்றார்.
மார்ச் 1 அன்று தி-.மு.க. இளைஞரணியினர் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாளில் பேசிய உரை 06.03.2012 அன்று சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறையில் பேசிய உரைகள் அனைத்தும் பழமையான சமூக இன்னல்களை சுட்டுவதாகவும் அவற்றை ஒழித்த திராவிட இனத் தலைவர்கள் பற்றி எடுத்தியம்புவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலைப் படித்தால் திராவிடர் இயக்கம் பற்றிய செய்திகளைத் தெளிவாக்கிக் கொள்ள _ திராவிட சமூகமே படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு நூலாக இந்நூல் அமைகின்றது.
– ம. புகழேந்திர சோழன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி