பேய்க் கோயில்

அக்டோபர் 16-31

நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற நினைவுதாரர்களின் பெயர்களைத் தாங்கி வந்த, அந்தக் கிராமத்தின் தெருக்கள்தான் காலப்போக்கில் இப்போது,

பெருமாள் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு என் மாறிவிட்டது.

தேபக்தியை சொட்டு நீராகவும், தெய்வ பக்தியைக் குடிநீராகவும் கொண்டது அக்கிராமம்.

ஊரணிகள் ஆக்கிரமிப்பு, ஆறுகள் ஆக்கிரமிப்பு, பேருந்து வசதியின்மை இதைப்பற்றியெல்லாம் எவருக்கும் கவலையில்லை. கார்த்திகையைக் கொண்டாட முருகனுக்கொரு கோவிலையும், பௌர்ணமியைக் கொண்டாட அம்பாளுக்கொரு ஆலயத்தையும், அமாவாசையைக் கொண்டாட சிவனுக்கொரு கோவிலையும், கட்டி வழிபாடு செய்யத் தெரிந்த மக்களுக்கு.

ஏன், எதற்கு, எப்படி என்று சிந்திப்பதற்கு, நூலகம் செய்ய மட்டும் தவறிவிட்டார்கள்.

ஓம்சக்தி சிவகாசிப் பட்டாசுக்கடை வெடித்து பல பேர் உயிரைப் பலிவாங்கிய செய்தியைவிட அன்று மிகவும் பரபரப்பாய்க் காணப்பட்டது அந்தக் கிராமம்.
ஆற்றங்கரையோரம் அமர்ந்திருக்கும் அந்த வெட்ட வெளிப்பிள்ளையார் கோவில்.

கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நன்கொடையாளர்களை விளம்பரப்படுத்தும் வேளையில் சாதிகளைக் காட்டவும் தவறியதில்லை.

கோவிலுக்கு முன்புறம் உள்ள இரும்புக் குழாயில் பெரிய மணி ஒன்று ஏதாவது போடுங்கப்பா என்று வாயைப் பிளந்தவாறு நிற்கும் உண்டியல் ஒன்று.

நாட்டாமை, ஊர்த்தலைவர், கோவில் குருக்கள் இவர்களைச் சுற்றி அதிக அளவில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும்.

அருகில் இருந்த வட்டக் கிணற்றைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவாறு சிலரும் வெஞ்சினத்தோடு பலரும் நின்று பேசிக் கொண்டார்கள்.

எவ்வளவு திமிரு இருந்தா இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பான் என்றார் கூட்டத்தில் ஒருவர்.

யாரு நம்ம ஆவுடைக்கண்ணு மகன் முத்தையாவா, நான் நம்ப மாட்டேன். யாருமே கவனிக்காத இந்தக் கோவிலை, பத்து வருசமா அவன்தானயா நடத்திக்கிட்டு வாரான்.

அய்யர் சொல்ல முடியாத மந்திரத்தைக் கூட அவ்வளவு அருமையா சொன்னவனாயா என்று ஒருவர்.

பொண்டாட்டிக்கு புடவை எடுத்துக் குடுக்க மறந்தாலும், புள்ளையாரப்பனுக்கு பூசையும், பொங்கலும் வைக்கத் தவறாத அந்தப் பையனாயா இப்படி என்று ஒரு பெரியவர்.

யோ அந்த மயிராண்டிதான்யா தூக்கி கிணத்துக்குள்ள போட்டுருக்கான் என்றார் ஊர்த்தலைவர் கோபமாக.

கொட்டையும் பட்டையுமா திரிஞ்சவன். எப்ப இந்தக் கருப்பு சட்டைக்காரன்கூட சேந்தானே தெரியல.

இலக்கிய கூட்டத்துக்குப் போறேன், இலக்கியக் கூட்டத்துக்குப் போறேனு சொல்லும்போதே நெனைச்சேன். இப்படி ஏதாவது ஏடாகூடமா பண்ணுவானு என்றான் ஒரு குடிகாரன்.

எப்பா வேலு நீ போய் அந்த ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா. ஊர்ப் பஞ்சாயத்து கூடியிருக்குனு. இந்தாப்பா முதல்ல அப்பன்காரனிடம் சொல்லி மகனைக் கூட்டிவரச் சொல்லு.

ஊர்க்குடிமகன் வேலு. தனது தள்ளாத வயதில் தடி ஊன்றியபடியே ஆவுடைக்கண்ணு மகன் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்க.

ஏன்டா முத்து, ஊருக்குள்ள நல்ல புள்ளைனு பேர் எடுத்திருக்க. உன்னாலதான் அந்தக் கோயிலே இப்ப நல்லபடியா வந்திருக்கு. நீயே போய் சாமி சிலையை தூக்கி கிணத்துல போட்டுருக்க என்னடா ஆச்சு உனக்கு? இத பாரும்மா சாமிங்ற பேரால கோயில்ல நடக்குற சில செயல்களை என்னால பாத்துக்கிட்டு நிக்க முடியல. கண்மூடித்தனங்கள் மண்மூடிப் போகனும்னா மனுசனுக்கு முதலில் கல்வி அறிவு வேணும். ஆளும் வளரனும் அறிவும் வளரனும்னு  சொன்னதைக் கேக்காம நாம வயித்தை மட்டும் வளத்துக்கிட்டு வார்த்தையையும் வாழ்க்கையையும் தொலைச்சுக்கிட்டு நிக்கிறோம்.

பதினாலு வருசமா அந்தக் கோயிலுக்கு சேவை செய்து வந்த மூக்கம்மா தனக்கு நல்ல வாழ்வு அமைஞ்சிருச்சுனு அந்தப் புள்ளையாருக்கு, வெள்ளியில கண்மலர், வெள்ளிக்கிரீடம்னு எவ்வளவோ செய்தா. என்ன ஆச்சு? கல்யாணம் முடிச்ச மறுவாரமே அவபுருசன் விபத்துல இறந்திட்டான். அவ நீங்க கும்புடுற சாமிக்கு முன்னாடி உள்ள கம்பியிலேயே தூக்குப் போட்டு செத்திருக்கா. காப்பாத்தியிருக்கலாம்ல சாமி.

இவ்வளவு ஏன் கோவில்ல விபூதி வாங்குற பக்தர்கள் கைவலிக்குதுனு,கால் வலிக்குதுனு, வயிறு வலிக்குதுனு வாங்கி அங்கங்க தேய்க்கிறாங்களே. கண்ணு வலிக்குனு யாராவது கண்ணுல போடுறாங்களா?

டேய் வாழ்வும், சாவும் அவங்கவுங்க விதிப்படிதாண்டா அமையும்.

அம்மா விதிப்படிதான் வாழ்வுனா சாமி எதுக்கு? கோவில் எதுக்கு? தரகர் எதுக்கு?

பார்வதி, நான் உனக்கு முன்னாடியே அவன சத்தம் போட்டேன். சாமியத் தூக்கி கிணத்துக்குள்ள போட்டியேடா, அதக் கும்பிடுறவனத் தூக்கி உங்க அப்பனாடா போடுவானு கேட்டேன்.

வா வேலு. நான் சொன்னது சரிதான. என்ன ஊர்க்காரங்க கூட்டிட்டு வரச் சொன்னாங்களா?

ஆமாங்கய்யா என்றார் ஊர்க்குடிமகன் வேலு அமைதியாக.
பையன் வரமாட்டான்னு சொல்லிரு.

வேலு சொன்னதைக் கேட்ட நிர்வாகிகள் ஆத்திரத்தோடு. சரி இனிமே ஆவுடைக்கண் குடும்பம் ஊரு விலக்கம். அவங்கள புள்ளையார் பாத்துக்குவார். டேய் ரெண்டு பேரு கிணத்துக்குள்ள இறங்குங்கடா என்று நாட்டாமை சொன்னதும் கிணத்துக்குள்ள எவனாவது இறங்கனா காலை வெட்டிப்புடுவேன் வெட்டி.

ஏலே அது எவன்டா புதுசா முளைச்ச ரௌடி. ஏல அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வருது தெரியும்ல. சுண்டலையும் கொழக்கட்டையும் உன்னையும் என்னையும் வச்சு அவிக்க முடியாது. படைக்க முடியாது. போன வாரம் கும்பாபிசேகம் செய்த சக்தி உள்ள சாமிலே அது.

சக்தி உள்ள சாமின்னா அதா எந்திரிச்சு வந்து உக்காரட்டும்.

ஏல கருவாயா நீயும் அவனும் சேந்துதானடா இந்தக் கோயில பராமரிச்சீங்க.

யோ கண்ணுக்கு முன்னாடி ஒரு பொம்பள செத்திருக்கா. அதக் காப்பாத்த முடியலேனா சாமி என்ன சாமி. கோவில் என்னயா கோவில். இந்தக் கோவில் போனா நல்லா இல்ல, அந்தக் கோவில் போனா நல்லா இருக்குதுனு சொல்ற பக்தர் என்னயா பக்தர்.

இப்ப என்னதான் சொல்ல வாரேங்க.

தலைவரே நம்ம ஊருக்குள்ள ரெண்டு வீடு பூட்டியே கெடக்குதே ஏன்?

அது தூக்குப் போட்டு தொங்குனதால அதப் பேய் வீடுனு சொல்லிப் பூட்டிப் போட்டாங்க.

வீட்டுல தூக்குப் போட்டு செத்தா அது பேய்வீடு.

குருக்கள் உடனே குறுக்கிட்டு,
அப்போ கோவில்ல தூக்குப் போட்டு செத்தா அத பேய்க்கோவில்னு சொல்றேளா, அபச்சாரம் அபச்சாரம்.

குருக்களே தன் வாயால ஒரு முடிவுக்கு வந்த பிறகு இனி சொல்ல என்ன இருக்கு என்று கிளம்பிய இளைஞர் படையின் பின் பலர் செல்லத்தான் செய்தார்கள்.

நாட்டாமையும் குருக்களும் ஊர்த்தலைவரும் கிணற்றையும் கோவிலையும் மாறிமாறிப் பார்த்தபோது நண்பகல் பனிரெண்டு. மின்சாரம் போய்வந்த நேரம்.

சூழலுக்கேற்றவாறு ஒரு பாடல் எங்கிருந்தோ ஒலித்தது.

கொலைகள் செய்தவனும் கொள்ளை அடித்தவனும் கோவிலைக் கட்டுவது என்ன-? என்ன? என்ன?

பாவத்தின் சம்பளத்த சாமிக்கு தந்துவிட்டு காசு பணத்த மீண்டும் எண்ண! எண்ண! எண்ண!

– ஆல.தமிழ்ப்பித்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *