கேள்வி : அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் அப்பகுதி மக்களின் உறுதிப்பாடு பாராட்டுக் குரியதுதானே?
-கதிர்.ராஜ்குமார், கொட்டாம்பட்டி
பதில் : புறத்தோற்றத்தில்! ஆழமான தொலைநோக்கில் அது பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் ஏற்புடையதல்ல
. போதிய பாதுகாப்பு தேவை என்பது நியாயமானது. அணு உலையே கூடாது என்பது வளர்ச்சிக் கண்ணோட் டத்திலும் அறிவியல் கண்ணோட்டத்திலும் சரியல்ல. அணு உலையை வரவேற்கும் விஞ்ஞானி அப்துல்கலாம் போன்றவர்கள் மக்கள் விரோதிகள் அல்லவே.
கேள்வி : ஆண்டாண்டுகாலமாகத் தொடரும் காவிரிச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு? ஒரு தமிழன் என்பதை மறந்து மனிதன் என்ற நிலையில் தீர்வு சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? _ கரு.பொன்னப்பன்,திருச்சிராப்பள்ளி.
பதில் : 1. நதிகளை நாட்டுடமை ஆக்கி ஓர் அவசரச் சட்டம் போட்டு, ஒரு சுதந்திரமான நீரியியல், நிர்வாக ஆணையம் தேவைக்கேற்ப வழங்கும் புதிய தீர்வு.
2. நதிகளை இணைக்கும் திட்டம் மூலம் ஒரு பகுதியில் வறட்சி, மறுபகுதியில் வெள்ளச் சாவு என்பதை மாற்றலாம்!
கேள்வி : இயற்கை வளங்களை எவரும் தனித்துச் சொந்தம் கொண்டாடக் கூடாது! எல்லா பிரச்சினைகளையும் பக்தி அகற்றிவிடும் இறை உணர்வுதான் நமக்குள் ஒற்றுமை ஏற்படுத்துகிறது என்ற தமிழக தேர்வாணையத் தலைவரின் கூற்றுக் குறித்து? – ஜி.சுருதி, பெரம்பலூர்
பதில் : என்ன செய்வது ஆரிய மாயை காரணமாக பதவிபெற்ற அவர் சர்வீஸ் கமிஷன் கேள்வித்தாள் அவுட் ஆகிய நிலையில் ஏன் காவல்துறைக்குப் புகார் கொடுத்து கைதுகள் நடக்கின்றன!
நேரில் கடவுளிடம் முறையிட்டு தீர்வுகாண வேண்டியதுதானே! அறியாமையின் வெளிப்பாடு இப்படிப்பட்ட உளறல்!
கேள்வி : வருடாவருடம் வாணவேடிக்கை செய்வதற்காக மக்களை சாகடித்தும் ஊனப்படுத்தியும் இனியும் நம்மை குட்டி ஜப்பான் என்று வெட்கமின்றி அழைத்துக்கொள்ள வேண்டுமா? சிவகாசி இந்தியாவின் பெருமையல்ல, அவமானச் சின்னம். அது குற்றவாளிகள் கூடாரம் என நக்கீரன் இதழில் மனுஷ்யபுத்திரன் கருத்து தெரிவித்துள்ளாரே? – மன்னை சித்து, மன்னார்குடி-
பதில் : தீபாவளி கொண்டாடியும், வெற்றி விழாக்கள் துவங்கி, சாவு நிகழ்ச்சிகள் வரை பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் தடைப்பட்டால் ஒழிய அதை எப்படி தடுப்பது? தடுக்க முடியும்; உரிய கட்டுப்பாடுகள் தேவை. இன்றேல் சீனா சரக்கு இங்கே உள்ளே புகுந்து ஆட்சி புரியும். கொள்ளையோ!
கேள்வி : திராவிடர் கழகத்தில் ஒரு பதவி வகிப்பதற்கும் மற்ற அரசியல் கட்சிகளில் பதவி வகிப்பதற்கும் என்ன வேறுபாடு? _ அழகிரிதாசன், கல்மடுகு
பதில் : முதலில் கேள்வியே தவறு; திராவிடர் கழகத்தில் பதவிகள் வைகுண்ட பதவி, சிவலோக பதவி உட்பட எந்தப் பதவியும் கிடையாது.
பொறுப்புகள் மட்டுமே உண்டு. தலைமையும் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துரையாடி கருத்திணக்கம் மூலமே அவைகள்கூட நடைபெறுவது.
அரசியல் கட்சிகளில் முற்றிலும் மாறுபட்ட முறை. ஆள்தூக்கி, பணம் செலவழித்து நடத்தும் ஜனநாயகத் தேர்தல் முறை!
கேள்வி : பெண்களை அவமதிக்கும் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சிக்குத் துணை போக முடியாது. (கோவில் திருவிழாவில் நடைபெறும் நடனம்) தங்களது சொந்த இடத்தில் நடத்தலாம் என -உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இதேபோல் பெண்களை அவமதிக்கும் சித்திரங்கள், சிற்பங்கள் கோயில் தேர்களிலும் உள்ளனவே! இதனையும் தடைச் செய்ய நீதி மன்றங்கள் முன் வருமா? – எஸ். நல்லபெருமாள், வடசேரி
பதில் : ரொம்பவும் முற்போக்குச் சிந்தனையுள்ள நீதியரசர்கள் தீர்ப்பு எழுதினால் அப்படி ஒருவேளை நடக்கலாம்!
கேள்வி : மத்திய காங்கிரஸ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தம் இந்தியாவை உயர்த்துமா? தாழ்த்துமா? — எஸ்.விமலா, சீர்காழி.
பதில் : இந்தியாவை உயர்த்தாது; காங்கிரசை வீழ்த்தும்!
கேள்வி : அரசு மாணவர்கள் விடுதி விண்ணப்பங்களில் குற்றப் பரம்பரையினர் என்று உள்ளதே. இதை மாற்றிட அரசை வலியுறுத்துவீர்களா? – சிவ.வசந்தன், கீரமங்கலம்.
பதில் : கூடாது; ஏற்கனவே சீர்மரபினர் என்ற பெயர் தரப்பட்டுள்ள நிலையில் அது இருந்தால் மாற்றப்பட வேண்டும். பிறவியினால் எவரும் குற்றப் பரம்பரையினர் அல்ல. அப்படி முத்திரை குத்துவதை எதிர்த்துதானே பல தலைவர்கள் போராட்டம் நடத்தி மாற்றினார்கள்.
கேள்வி : தமிழக அமைச்சர்கள் மற்றும் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் நிர்வாகம் சீர்குலையாதா? – ஏ. கருணாசாகரன், கோவிலம்பாக்கம்.
பதில் : நிச்சயமாக. நடைமுறையில் நாடு அதைக் கண்டு வருகிறதே! அமைச்சர்கள் மாற்றம் பாதிக்காது; ஏனென்றால் எந்த முடிவும் அவர்கள் எடுக்கும் நிலை இல்லையே! நிர்வாகிகள் மாற்றம் நிச்சயம் பாதிக்கும்; பாதிக்கிறது!
கேள்வி : ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடரும் இலங்கை அரசுடனான ராஜீய உறவை துண்டித்துக் கொண்டால் இந்தியா எந்தவகை யில் பாதிப்புக்குள்ளாகும்? – கே.மணவாளன், குணசீலம்.
பதில் : நடக்க முடியாத ஒன்றை ஏன் அனுமானமாகக் கேட்கிறீர்கள்? முள்வேலியில் வாடும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பல கட்டமாக முன்னேற வேண்டிய நேரம் இது! அதுபற்றி யோசிக்கலாமே!