பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள்-ஒரு கண்ணோட்டம்…

2024 கட்டுரைகள் செப்டம்பர் 16-30-2024

சென்ற இதழ் தொடர்ச்சி…

மதம் என்னும் தீ நெறி

1. கடவுள் எனும் கற்பிதமான இல்பொருளைப் பரப்புவதற்காக நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே, மதம் என்கிற பெயரில் மடமையைப் பயன்படுத்தி, மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்டும் கயமையைக் காலம் காலமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

2. மதம் என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மதம் என்று குறிப்பிடுகிறது. ஒன்று, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் கட்டுப்படுத்துபவர் என்று சொல்லப்படும் ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆளும் சக்தியின் மீது நம்பிக்கை வைத்தல்; இரண்டு, அந்தச் சக்திக்குரியவர் மனிதனிடம் ஆத்மா எனும் தன்மையை அளித்துள்ளார் என்றும், அந்த ஆத்மா மனித உடல் மரணமடைந்த பின்பும் (சாகாமல்) தொடர்ந்து இருக்கக்கூடியது என்பதில் நம்பிக்கை வைத்தல். (Religion=Belief in the existence of a supernatural ruling power, the creator and controller of the universe who has given to man a spiritual nature which continues to exist after the death of the body. (oxford advanced learner’s dictionary of current English. Eighth impression 1985 page 712)

3. (அ) மதத்தைப் பற்றிய ரசலின் சிந்தனை வருமாறு:-

நான் (உலகில்) அறியப்பட்ட அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு மறுப்பாளன் ஆவேன். அனைத்து விதமான மத நம்பிக்கைகளும் (எதிர்காலத்தில்) அடியோடு அழிந்தொழியும் என்பது எனது நம்பிக்கை. (இறுதியாக) மத நம்பிக்கையானது நன்மைக்கான ஒரு சக்தியாக இருந்து வந்திருக்கிறது என்பதை நான் நம்பவில்லை. (I am myself a dissenter from all known Religions and I hope that every kind of Religious belief will die out. I do not believe that on the balance Religious belief has been a force for good) (Bertrand Russell birth centenary souvenir, published by Indian Rationalist Association 1972, Page 8)
ஆ) நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல? எனும் ரசல் அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ள மதம் பற்றிய கருத்துகளில் முதன்மையான சிலவற்றை இங்குக் காண்போம்:

1. எந்தக் காலத்திலும் எவ்வளவுக்கெவ்வளவு மத உணர்ச்சி அதிகத் தீவிரமாகவும், மதத்தில் மக்களின் பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு உலகில் கொடுமையும் அக்கிரமமும் நிறைந்து இருந்தது என்ற சிறந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.(26)

2. நீதியையும் ஒழுங்கையும் முன்னேற்றமடையச் செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் உலகத்தில்
உள்ள மதங்கள் என்று சொல்லப்படு
பவை எல்லாம் இடைவிடாது எதிர்த்துக் கொண்டே வந்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.(26)

தஞ்சை
பெ. மருதவாணன்

3. பயம் என்ற அஸ்திவாரத்தின் மீதே மதம் என்பது கட்டப்பட்டிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். தெரியாத ஒன்றை நினைத்து அதற்காகப் பயப்படுவது ஒரு காரணம்… பயம் என்பதிலிருந்து பிறந்ததுதான் கொடுமை என்பதாகும். ஆகையால் கொடுமையும் மதமும் ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இவ்விரண்டுக்கும் அடிப்படையாக இருப்பது பயம் என்பதாகும்.(28)

4. கிறிஸ்துவ மதம், அதற்குப் பின் தோன்றிய பல மதங்கள் (மற்றும்) பல பழைய தத்துவங்கள் ஆகியவை எல்லாம் சேர்ந்து எதிர்த்தும் படிப்படியாக முன்னேறிக்கொண்டு வந்து கடைசியாக வெற்றி பெற்று நின்றது விஞ்ஞானம் மட்டுமே… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மனித சமூகம் அழுந்திக் கிடந்த கேவலமான பயத்தினின்றும் நம்மைக் காப்பதற்கு ஆகவே விஞ்ஞானம் என்பது வந்துள்ளது. (28-29)

பெர்ட்ரண்டு ரசல்

4. மதம் மனித இனத்துக்கு இழைத்து வரும் கேடுகள் குறித்து தந்தை பெரியார் ரசலைப் போலவே தன் வாழ்நாள் முழுதும் பேசியும் எழுதியும் வந்துள்ளார். அவற்றுள் முதன்மையான ஒரு சிலவற்றை இங்குக் காண்போம்.
அ. பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி, அது கடவுளை நேரே கொண்டு வந்து காட்டி மோட்சத்துக்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டியதும், அழிக்க முடியாவிட்டாலும், அதை அழிக்கும் வேலையில் உயிர்விட வேண்டியதும் உண்மையான மனிதனின் கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(குடிஅரசு 19.5.1929)

ஆ) நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படி பிறவியின் காரணமாகவே ஜாதி கற்பிக்கப்பட்டு அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கப்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக்கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று ஒப்புக்கொள்கிறானோ அது போலவே மதமும் ஒரு மனிதனுக்குப் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக்கொண்டு தன்னை இன்ன மதத்தினன் என்றே எண்ணிக்கொண்டு வருகிறான்.

(குடிஅரசு 3.11.1929)

இ) மதத்திற்காகக் கொலைகளும் கொள்ளை களும் யுத்தங்களும் உயிர் விடத்தக்க வீரர்களும் நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென்றாலோ மதத்திற்காகச் செலவாகும். பணங்களும் நேரங்களும் அறிவுகளும் ஊக்கங்
களும் கணக்குக்கு அடங்காதவைகளாகவே இருக்கின்றன. இந்து மதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததாகயிருப்பதோடு அதனால் நாட்டுக்கு ஏற்படும் தொல்லைகள் அளவிட முடியாததாகவும் இருக்கின்றன.

(குடிஅரசு 3.11.1929)

ஈ) மதங்களுக்கு ஜீவநாடியாய் இருந்துவருவது பணமும் பிரச்சாரமுமேயல்லாமல் அவற்றின் தெய்வீகத்தன்மையோ உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்லிவிட முடியாது.

(குடிஅரசு 8.10.1933)

(உ) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி! மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி! மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி! மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி! மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை! மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்! மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு! மதம் உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி! ஆகவே மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும்.

(புரட்சி 26.11.1933)

(ஊ) மதம் என்றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டுவிடுகிறதாயிருக்கிறதே ஒழிய, மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதில்லை. கள்ளால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள் – குடித்தவனைக் கெடுக்கிறது; மதம் – மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது.

(குடிஅரசு 19.12.1937)

எ) மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் சயன்சுக்கும் (Science) மதத்திற்கும் சம்பந்தம் பார்க்கக்கூடாதென்றும், பகுத்தறிவு வேறு: மதக்கோட்பாடுகள் வேறு என்றும், இந்தக் காலம் வேறு: அந்தக் காலம் வேறு என்றும், பெரியவர்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள் தேடக்கூடாது என்றும், ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்றும், எல்லா மதக்காரர்களும் சொல்லிவிடுவதால் – உலகில் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற தைரியத்தின் மீதே மத ஆபாசமும் மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றன.

(குடிஅரசு 9.2.1948)

ஏ) இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப்போய்விட்டன. செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்குப் பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன் அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.

உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக்கட்டளைப்படி நடந்துகொள்ள முடிவதில்லை. உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கிறவனைக் காண முடிகிறதா? முதலாவதாக வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்துகொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகளிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.

இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தங்கள் மதங்களைக் காப்பாற்ற வேண்டும்; மதத்துக்கு ஆபத்து வந்துவிட்டது; தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டுக் குழிதோண்டிப் புதைக்காமல் நாற்றத்தில் அழுந்திக்கொண்டிருக்கிறார்கள். மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும் உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதேபோல் எல்லா மனிதர்களுமே மதப்பிண நாற்றத்தில் புரளுகிறார்கள்.

(விடுதலை 12.12.2013 பக்கம் 7)