பயணமே வாழ்க்கை !- முனைவர் வா.நேரு

2024 கட்டுரைகள் செப்டம்பர் 16-30-2024

வாழ்க்கைப்பயணம் என்பர். ஆனால் பயணத்தையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும். தன் வாழ்க்கை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, ‘‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்“ என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.

தந்தை பெரியார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அவரது சுற்றுப்பயணம்தான். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒப்புக்கொண்ட தேதிக் கூட்டத்திற்கு, எத்தனை துன்பங்கள் உடல் ரீதியாக இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் பட்டி தொட்டியெல்லாம் சென்று பேசியிருக்கின்றார். இன்றைக்கு இருப்பதுபோலச் சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத காலத்தில் தந்தை பெரியார் இலட்சியப்பயணம் என்பது மிகப்பெரும் வியப்புக்குரியது.

உலகச் சுற்றுலா நாள் செப்டம்பர் 27. அதாவது பயணத்தை ஊக்குவிக்கும் நாள். உலகச் சுற்றுலா நாள் என்பது அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மூலமாக 1980ஆம் ஆண்டிலிருந்து உலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.1979இல் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சுற்றுலா ஏன் தேவை என்பதை மக்களுக்கு விளக்கவும், சுற்றுலா என்பது எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுற்றுலா என்பது பயணிப்பது. நாம் மதுரையில் வசித்துக்கொண்டு, மதுரையில் இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை சுற்றுலா என்று சொல்லமாட்டோம். மதுரையில் இருந்து சென்னைக்கோ, வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டிற்கோ செல்லும்போது அது சுற்றுலா என்னும் தலைப்பில் வரும்.

ஒவ்வோர் ஆண்டும் சுற்றுலா சம்பந்தப்பட்ட ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு, அதனை விளக்கும் வண்ணமாகச் சில நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உலகச் சுற்றுலா நாளின் கருப்பொருள் ‘தொடர்ச்சியான பயணங்கள், நிலையான நினைவுகள்’ அதாவது ‘கவனத்துடனும் பொறுப்புடனும் பயணங்கள்’ அதன்மூலம் நிரந்தரமான நினைவுகளை விட்டுச்செல்லுதல் என்பது ஆகும்.( Sustainable Journeys, Timeless Memories,” focusing on the importance of responsible and mindful travel.)

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கொள்கையைப் பரப்புவதற்காக அயராது பயணம் செய்துகொண்டே இருந்தவர். அவரது ரஷ்யாப் பயணமாக இருந்தாலும், மலேசியா, சிங்கப்பூர் பயணமாக இருந்தாலும், இலங்கைப் பயணமாக இருந்தாலும் அவரது பயணம் என்பது கொள்கைப் பயணமாக,எப்போதும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் பயணமாக அமைந்திருப்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

தந்தை பெரியார் 1940இல் பம்பாய் செல்கின்றார். அங்குச் சென்று திரும்பிவந்த பின்பு பம்பாய் பயணம் பற்றி ஈரோட்டிலே 12.01.1940இல் பேசுகின்றார் .அப்படிப் பேசுகின்றபொழுது, “நமது நாட்டிலிருந்து பிழைப்புக்காகப் பம்பாய் சென்றுள்ள தமிழர்கள் நமது இயக்க விசயங்களில் மிக அக்கறை எடுத்து வேலை செய்து வருகிறவர்கள். அன்புடன் அழைக்கிறார்களே என்று அங்குச் சென்றேனே ஒழிய, வேறில்லை.அவர்கள் என்னை அங்கு வரவேண்டுமென்று அழைத்தது தங்களுக்குத் தொண்டாற்றும் ஒருவரைக் காணவும் களப்படுத்தவுமேயாகும் என்று கருதினேன்…” என்று குறிப்பிடுகிறார்.அது மட்டுமல்லாது முதலில் பம்பாய் செல்லவேண்டாம் என்று கருதியது பற்றியும்,தோழர்கள் சில காரணங்களுக்காக அழைக்கிறார்கள் என்று தெரிந்தபோது அங்கு சென்றதாகவும் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்.அந்தப் பயணத்தை எவ்வளவு கவனத்துடன் தந்தை பெரியார் அவர்கள் வடிவமைத்துப் பயணம் செய்திருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, பம்பாய் சென்றோமா, கூட்டத்தில் தனது கருத்துகளை எடுத்து வைத்தோமா என்றில்லாமல், அந்தப் பயணத்தில் தமிழ்மக்களை எவ்வளவு பொறுப்புணர்வோடு கவனித்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் தனது பம்பாய்ப் பயணத்தைப் பற்றி மேலும் குறிப்பிடுகிறபோது, “6ஆம் தேதி காலை தாதர் போய்ச் சேர்ந்தோம்.இந்தத் தாதர் என்ற இடத்தில்தான் நமது தமிழர்கள் 2000 பேர்களுக்கு மேலாக வசிக்கிறார்கள். அவர்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை ஜில்லாக்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கூலிவேலைகள் செய்து வருபவர்கள். அதாவது, தொழிற்சாலைகளிலும், தோல் ஷாப்புகளிலும் வேலை செய்து வருபவர்கள். இவர்களைப் பார்த்தவுடன் என் மனம் மிகவும் கலங்கி விட்டது. ஏனெனில், நமது நாட்டிலிருந்து பம்பாய்க்குப் பிழைக்க வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலி வேலைகள் செய்து கஷ்டப்படுவதும், பம்பாயிலிருந்து நமது நாட்டிற்குப் பிழைக்கவரும் பனியாக்களும்,குஜராத்திகளும்,மார்வாடிகளும் நம் நாட்டின் செல்வங்களைச் சுரண்டிக்கொண்டு முதலாளிகளாய் வாழ்வதும் ஞாபகத்திற்கு வந்து என் மனதை மிகவும் வாட்டிற்று. (‘வட நாட்டில் பெரியார்’ -தொகுதி1, தொகுப்பாசிரியர் கி.வீரமணி, பக்கம் 34).

அய்யாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயணத்தை எவ்வளவு விரும்புகிறவர் என்பதை நாம் அறிவோம். ஓராயிரம் உடல் உபாதைகள் இருந்தாலும் அதனை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டுக் கொள்கை முழக்கம் செய்திட ஒவ்வொரு ஊராக, இந்தியாவின், உலகின் பல பாகங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அவரது பயணமும் நமக்கு உற்சாகம் ஊட்டுவதும் வழிகாட்டுவதும் ஆகும். மறைந்த மதுரை வழக்குரைஞர் அண்ணன் கி.மகேந்திரன் அவர்கள் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது “1970களில் மேலூருக்கு வந்து அய்யா ஆசிரியர் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது பேருந்து கிடைக்காததால் சென்னைக்கு ஒரு லாரியில் ஏற்றி உட்காரவைத்து அனுப்பினோம் என்றார். நான் வியப்பாக ‘என்னது, அய்யா ஆசிரியர் அவர்கள் லாரியில் சென்னைக்குச் சென்றாரா!’ என்றபோது ‘ஆமாம் அண்ணே, அய்யா ஆசிரியர் அவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்தபின்புதான், முறையாக பயண வாகனங்களை உபயோகிக்கிறார். அதற்கு முன்பு இப்படியெல்லாம் இல்லை’’ என்றார். அப்போது எனக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் தன்னுடைய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்னும் நூலில் தானும் டாக்டர் கலைஞர் அவர்களும் மாட்டுவண்டியில் முளைக் கம்பைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது.

பகுத்தறிவாளர்களுக்கு இயல்பாகவே பயணம் செய்வதில் பெரும் விருப்பம் உண்டு. அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களும்,அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும் பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்றதும்,அந்தப் பயணங்களை எல்லாம் ஒளிப்படங்களோடு பதிவு செய்து நூலாக்கியதும் நினைவுக்கு வருகிறது.

எனவே, உலகச் சுற்றுலா நாள் என்று சொல்லப்பட்டாலும் செப்டம்பர் 27 என்பது நம்மைப் பொறுத்த அளவில் அது பயணம் செய்வதை ஊக்குவிக்கும் நாள். சுற்றுலா செல்வது பலவகையில் நன்மை பயக்கும் என்றாலும், அதைவிட கொள்கைக்கான பயணம் என்பது நமக்கு உற்சாகமும் உணர்ச்சியும் அளிப்பது ஆகும். அந்த வகையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா நாள் என்பது தந்தை பெரியாரின் பயணத்தைத் தொடர்ந்து அவர்தம் அடிச்சுவட்டில் அய்யா ஆசிரியர் அவர்கள் பயணம் செய்வதை நம் மனதில் இருத்திக்கொண்டு கொள்கைக்கான பயணத்தை ஊக்குவிக்கும் நாளாக நாம் எடுத்துக்கொள்வோம்.பயணம் தொடர்வோம்! தந்தை பெரியாரின் கொள்கையைப் பரப்புவோம்!