மத மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மீது திணிப்பது மாபெரும் குற்றம்!- மஞ்சை வசந்தன்

2024 செப்டம்பர் 16-30-2024 முகப்பு கட்டுரை

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது.
அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல.

‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’, ‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்” இக்கருத்துகள் வெறும் நம்பிக்கைகள். இவற்றை உறுதி செய்ய முடியாது. எனவே, இவை அறிவுக்கு உகந்தவையோ அறிவியல் சார்ந்தவையோ அல்ல.

“கையில் கயிறு கட்டினால் நன்மை உண்டாகும், தீங்கு நேராது” என்பது நம்பிக்கை. இதை நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத எந்த நம்பிக்கையும் மூட நம்பிக்கைதான்.

கடவுள், மதம், சாஸ்திரம், மந்திரம், ஜோதிடம் என்பனவெல்லாம் உறுதி செய்யப்படாத நம்பிக்கைகள். எனவே, அவை அறிவியல் சார்ந்தவையல்ல. ஆகவே, அவை மூடநம்பிக்கைகள். மூடநம்பிக்கைகள் மாணவர்கள் மத்தியில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படிக் கற்பிப்பது மாபெரும் குற்றம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மாணவர் நலனையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே! திராவிடர் கழகத்திலிருந்து உருவான அரசியல் கட்சிகளில் தி.மு.கழகம் பாராட்டத்தக்க அளவிற்கு இத்தடத்தில் சென்றாலும், அக்கட்சியில் உள்ள அமைச்சர்கள், தொண்டர்கள் பலர் இன்னும் பெரியார் கொள்கையில் தெளிவும் பயிற்சியும் பெற வேண்டியவர்களாகவே உள்ளனர். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை பெரும்பாலோர் பகுத்தறிவைப் பொருட்படுத்துவதே இல்லை. பெரியாரைப் பெயரளவில் கூறுவதற்குப் பதில் அவரால்தான் நாம் என்ற நன்றி உணர்வோடும், நாட்டு மக்களின் நலன் கருதியும் அவர் வழி வந்தவர்கள் செயல்பட வேண்டும்.

பி.ஜே.பி.யின் ஏவல் ஆள்களைப் போல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அதன் தலைவர்கள் செயல்பட்டதன் விளைவாய், அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். உணர்வுள்ளவர்கள் ஊடுருவி மறைமுகச் செயல் திட்டங்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தங்களையும், செயல் திட்டங்களையும் பரப்பி வருகின்றனர்.

இதற்குக் கல்வித்துறையும் விதிவிலக்கல்ல என்ற அவலநிலை காணப்படுவது வேதனைக்குரியதாகும். தி.மு.க. அரசு திராவிட மாடல் ஆட்சியை நடத்த எவ்வளவு முயன்றாலும், அதைத் தடுக்கவும், தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் இந்த ஊடுருவல் பேர்வழிகள் முயன்று வருகின்றனர்.

புதிய கல்வித் திட்டத்தில், “ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் தொண்டு அமைப்புகள், ஆர்வலர்கள், பேச்சாளர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் போதிப்பது” என்ற திட்டம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைப் பரப்புவதற்காகவே! அதன் விளைவுகள்தான் அண்மையில் இரு அரசுப் (பெண்கள்) பள்ளிகளில் நிகழ்ந்த மகாவிஷ்ணுவின் மடமைக் கருத்துப் பரப்பல் முயற்சி.
மதமூடநம்பிக்கைகளை மாணவர்களிடம் பரப்புவது மாபெரும் குற்றம். மாணவர்களை மடையர்களாக்கும் முயற்சி.
மாணவர்கள் என்போர் தெள்ளிய நீரோடையைப் போன்றவர்கள். அதில் சாக்கடையைக் கலக்கக்கூடாது. அப்படிக் கலப்பது மாபெரும் துரோகம்.

மாணவர்களிடம் அறிவுக்குகந்த அறிவியல் சார்ந்த உறுதி செய்யப்பட்ட, உண்மையான கருத்துகள் மட்டுமே பரப்பப்பட வேண்டும். அதுதான் அச்சமற்ற, குழப்பமற்ற, அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்கும்.

எதையும் அப்படியே ஏற்காமல் ஏன்? எப்படி? எதற்கு என்று கேள்வி கேட்டு, சரியென்றால் ஏற்கும் அணுகுமுறையை அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

போன பிறவியில் செய்த பாவம்தான் கூன், குரு, செவிடாகப் பிறக்கக் காரணம் என்று ஒருவன் மாணவர் மத்தியில் உண்மைக்கு மாறான கருத்தைப் பரப்பும் போது,

“அந்தப் போன பிறவியைப் படைத்தது யார்? கடவுள்தானே! அவர் போன பிறவியைப் படைக்கும் போதே எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்களாகப் படைக்காதது ஏன்? கடவுள் படைக்கும் விதிப்படிதானே ஒருவன் எல்லாவற்றையும் செய்து வருகிறான்? போன பிறவிலேயே அவன் நல்லது செய்யும்படி கடவுள் படைத்திருந்தால் அவன் எப்படிப் பாவம் செய்வான்?

கடவுளே ஒருவனைப் பாவம் செய்யும்படி படைத்துவிட்டு, பின் அக்கடவுளே அவனுக்கு அடுத்த பிறவியில் தண்டனை தருவதாகச் சொல்வது நியாயமா? அப்படிச் செய்தால் அது கடவுளா? கடவுள் அப்படிச் செய்யுமா?

அம்பானியும் அதானியும் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்களா? நல்லகண்ணு அவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவரா? ரமணரிஷிக்குப் புற்று நோய் வந்ததே, அவர் போன பிறவியில் பாவம் செய்த பாவியா? பாவி எப்படி பகவான் ஆனார்? என்று அங்கிருந்த மாணவர்கள் கேள்வி எழுப்பியிருந்தால், அங்கு மூடநம்பிக்கையைப் பரப்பியவன் ஓடியிருப்பான்.
எனவே, மாணவர்களுக்கு அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கும் பழக்கத்தை, திறத்தை வளர்ப்பது கல்விக் கூடங்களின் கட்டாயக் கடமையாகும்.

மறுபிறவி, போன பிறவி, பாவம், ஜாதி, உயர்வு தாழ்வு, பிறப்பால், ஜாதியால் அறிவு தீர்மானிக்கப்படுகிறது என்பதெல்லாம் உண்மையல்ல. இன்று எல்லோரும் சாதிக்கின்றனர்; உயர்ந்து காட்டுகின்றனர். எனவே, பிறப்பால் யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை மாணவர்களிடம் ஊட்டப்படவேண்டும். மாறாக, மூடநம்பிக்கைகளைப் பரப்பவது மாபெரும் குற்றம். அப்படிச் செய்பவர்கள் குற்றவாளிகள். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் – அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ற பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய ஜீவாதார உரிமைகள் மூன்றாம் பகுதியாக, அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h) இதைத் தெளிவாகக் கூறுகிறது.

1976 இல் தனி மனித அடிப்படை உரிமைகளை வற்புறுத்தினால் மட்டும் போதாது; அடிப்படைக் கடமைகளையும் குடிமக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையுடன் 4A என்ற பகுதி இணைக்கப்பட்டது.

அதில் குறிப்பாக 51-A என்ற கூறுப் பிரிவு (h) என்பது மிகவும் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும்.
51-A பகுதி (h) என்ற பிரிவு கூறுவதாவது:

‘‘It shall be the duty of every citizen of India –
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform‘‘ என்பதாகும்.

ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை, அறிவியல் மனப்பாங்கு (The Scientific Temper), மனித நேயம் (Humanism), எதையும் ஆராய்ந்து அறியும் ஊக்கம் (Spirit of Inquiry) அத்துடன் சீர்திருத்தம் (Reform) ஆகியவற்றை வளர்த்தல் முக்கிய கடமைகள் என்று கூறுகிறது!

அறிவியல் மனப்பாங்கும், கேள்வி கேட்டு ஆராயும் உணர்வும்தான், இன்றைக்கு நாம் அறிவியல் தொழில்நுட்ப விளைவால் அனுபவிக்கின்ற அத்தனை வசதிகளுக்கும் மூல காரணம் ஆகும்!

அந்த அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்று அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தினாலும், அது முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லை.

காரணம், ஆட்சியாளர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறையினர் என்று அனைத்துத் தரப்பினரும் மூடநம்பிக்கைகளை தங்கள் மூளையில் இன்னும் சுமந்து கொண்டிருப்பதும், அவற்றைப் பின்பற்றுவதும்தான்.

எனவேதான் பெரியார் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவை வளர்க்கவும் இயக்கம் கண்டார். குறிப்பாக கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இவற்றை வலியுறுத்தினார்.

கல்வி பற்றி பெரியார் கூறியவை

“கல்வி என்பதற்கு கருத்து ஒன்று, சொல்லு மற்றொன்று என்று சொல்லக் கூடியதாய் இருப்பதோடு கல்வியின் பயனாய் நடந்துகொள்ளும் நடத்தை மற்றொன்றாக இருக்கிறது. அதாவது கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும்தான் பயன்படுத்தப்படுகின்றது.

நம் மக்களுக்கு, கல்வி கற்பிப்பதில் லட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும்? படித்த படிப்பு எதற்குப் பயன்படும்? என்கின்ற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பது என்பது எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாய் இருந்தால் படித்துக்கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்திவிடுவதும், படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக்கொண்டு, அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு எவ்வளவு படிப்பு வேண்டும் என்பதில் மனிதனுக்குச் சிறிதும் ஞானமே கிடையாது – தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக ஆகிவிட்டதால், நாணயம் ஒழுக்கம் மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி, தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும், பலமடங்கு மோசமாய் நடக்கவும் பயன்படுகிறது.

இன்றைய கல்வி, மற்ற மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக்கூடியதாக ஏற்பட்டுவிட்டதால் கல்வி கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள் நலத்தைப் பற்றிக் கவலையே இல்லை. அதிலும் ராஜதந்திரம், அரசியல் என்கின்ற இரண்டு தலைப்பின்கீழ் எவ்வளவு அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் குறை கூறப்படுவதில்லை. ஆதலால் மற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற தன்மையை நடத்திப் பயன் பெற அரசியலையும், ராஜ தந்திரத்தையும் கையாள மோகம் ஏற்பட்டுவிடுகின்றது. ஆகவே, இன்றைய கல்வி அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை என்பது மாத்திரமல்லாமல் பல கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.

கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறிவையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலைமையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்.

வெறும் புராணப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும், கருமாதிக்கும், கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும், யாத்திரைக்கும், உற்சவத்துக்கும், சமாராதனைக்கும் செலவு செய்து, அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும், மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்யப் பழகிவிடுகிறார்கள்.

நமது மக்கள் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதேயாகும். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், அநேக ஆச்சரியங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் செய்து கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கையின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் ஆர்வம் எடுத்துக் கொண்டதே காரணமாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும், மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமானது.
நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, “எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம்மதமில்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லாப் பொறுப்பையும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல்நாட்டாரோ அப்படி இல்லாமல், “மனிதனால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை . என்று சொல்லிக் கொடுக்கின்றனர்.
மேல் நாட்டார் மழை பெய்யாததற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத்தைக் கலக்கிவிட்டு, மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக்கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத்தக்க அறிவுப் பெட்டகத்திற்கு நாம் குழந்தைகளைப் பழக்குவதில்லை.

குழந்தைகள் இயற்கை விசாரணையில் இறங்கினால், நம்மவர்கள் மிரட்டி, நாஸ்திகம் என்றும். அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி (அச்சமூட்டி) அடக்கி விடுகின்றோம்,

இவ்விதம் அடக்கும் தன்மையைப் பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், சொல்லிப் பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடுமையேதான் முக்கியக் காரணமாகும்.

மதத்தையும், கடவுளையும் நினைத்ததற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம், சம்பந்தப்படுத்தி ‘ எல்லாம் கடவுள் செயல், எல்லாம் கடவுள் செயல்’ என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பெரியாரின் அறிவுரை

“தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியத் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி, பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலை தங்கள் வயிற்றுப் பாட்டுக்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூட்டிப் பேசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல், தங்களால் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் (முயற்சியும்) செய்ததாக நான் அறியவேயில்லை.

ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சர்வகலா சாலைக் கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கி, கொடுமையான ஆட்சி முறை கொண்ட ஓர் அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத்துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே இருக்கிறதேயல்லாமல்

வேறென்ன இருக்கிறது?

ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும், தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல் நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவை தான் காணப்படுகின்றன.

எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள், நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ, அப்படியே அவர்கள் தேசத்திற்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே, தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர்களாகிய பெண்களோ, நமது நாட்டில் பிள்ளை பெறும் இயந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா

பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பாய் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது ஒன்று உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதாவென்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள்.

பரிட்சையில் பிள்ளைகள் தேறும் கணக்கைப் பாருங்கள். பிறகு அந்தப் படிப்பு எதற்குப் பயன்படுகிறது என்கின்ற அனுபவத்தைப் பாருங்கள். அதற்கு ஏதாவது கேள்விமுறை (தொடர்பு) இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

ஆதலால், ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாக இருக்கவேண்டுமானால் அவர்கள் ஓர் அளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரிட்சை பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம்.

திராவிடர் கழகத் தீர்மானங்கள்

நம் நாட்டில், குழந்தைகளுக்கு சட்டப்படி தெளிவான பக்குவம் 18 வயதில்தான் வருகிறது என்று அரசுகளும், சட்டங்களும் கூறுகின்றன. அதனால்தான், பெற்றோர்களையோ, உற்றார் உறவினர்களையோ, குழந்தைகளின் காப்பாளர்களாகப் போடுகிறார்கள். 18 வயதிற்குப் பிறகுதானே அவர்களுக்கு வாக்குரிமை தரப்படுகிறது – நமது ஜனநாயகத்தில்! அப்பொழுதுதான் அவர்களுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற பக்குவம் வருகிறது என்பதை வைத்துத் தானே வாக்கு அளிப்பதற்குத் தகுதியான

வயது 18 என்று அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்?

அப்படியிருக்கும்பொழுது, இந்த மதத்தவர், இந்த ஜாதியினர் என்று எப்படி குழந்தை பிறந்தவுடனேயே முத்திரை குத்துகிறார்கள்? இது எப்படி நியாயம்? இது அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிக்கின்ற மிகப்பெரிய கொடுமையல்லவா? சட்டப்படி எப்படி அப்படிக் குறிப்பிடுகின்றீர்கள்? இதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
18 வயதிற்குப் பின், ‘எந்த மதம்?’ என்று தேர்வு செய்யவோ அல்லது ‘எந்த மதமும்’, ஜாதியும் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் – நாங்கள் மனிதர்கள் என்று அறிவித்துவிடவோ அவர்களை அனுமதிக்கவேண்டும் என்பதுதானே நியாயம்! அதுதானே மனித உரிமை! ஆகவே, அதைப் பிரகடனப்படுத்துகின்றோம்.

18 வயதுக்கு முன்பாக, ஜாதி, மத முத்திரைகளைக் குத்தாதீர்கள் என்கிறோம். மதச் சுதந்திரம் என்பதில், இதுவும் சேர்க்கப்படவேண்டும். மாறாக எதை எதையோ மதச் சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எது மதச் சுதந்திரம்?

உண்மையான மதச் சுதந்திரம் என்பது – இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில், மதத்தைத் திணிக்கக் கூடாது; எந்த

மதத்திற்குள்ளும் நுழைக்கக்கூடாது என்பதுதான்!

குழந்தை மணம் எப்படி தவறானதோ, அதுபோன்றதே குழந்தைகள் மீதான மதத் திணிப்பும்! அந்த அடிப்படையில், குழந்தைகள் மீது மதத்தைத் திணிப்பதைத் தடுக்கப் புதுச் சட்டம் தேவை.

கல்வியில் விருப்பம் உண்டாக்க வேண்டும்!

பிள்ளைகள் வெறுப்போடு பள்ளிக்கூடத்திற்குப் போகக்கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டாவது இன்றைக்கு நீ பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டாம் என்று தாய் தடுத்தாலும், விரும்பினாலும், பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் நான் இருக்கமாட்டேன் என்று கண்ணீர் விடுகின்ற குழந்தைகள் இன்றும் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நாம் சமுதாயத்தில் உருவாக்கி, பெருக்கிக் காட்டவேண்டும்.

பள்ளிக்கூடம் ஈர்ப்பு மய்யமாக ஆகவேண்டும்!

எனவேதான், பள்ளிக்கூடம் என்று சொன்னால், நூலகம் என்று சொன்னால், எப்படி நாம் இன்றைக்குத் திரைப்படங்களைப் பார்க்க ஓடுகின்றோமோ அல்லது மற்றவற்றைப் பார்க்க ஓடுகின்றோமோ, அதுபோல கல்வி மீதும் பற்று, ஈர்ப்பு – இவை அத்தனையும் உருவாகக் கூடிய அளவிற்கு வரவேண்டுமானால், பள்ளிக்கூடம் ஈர்ப்பு மய்யமாக ஆகவேண்டும். வெறுப்பின் மய்யமாக இருக்கக்கூடாது என்பதுதான் மிக முக்கியம்.

தாழ்வு மனப்பான்மையை மாணவர்களிடம் உருவாக்கக்கூடாது
படிக்கும் அறிவில், ஒருவன் கெட்டிக்காரன்; இன்னொருவன் முட்டாள் என்ற பேதத்தை ஊட்டக்கூடாது.

ஆசிரிய நண்பர்களுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள்!

பெரியார் சொல்வார் – ‘யாரையும் பார்த்து முட்டாள் என்று சொல்லக்கூடாது, நீ உருப்படவே மாட்டாய் என்று சொல்லக்கூடாது’ என்று.
எல்லாப் பிள்ளைகளும் அறிவாளிகள். எல்லாப் பிள்ளைகளுக்கும் தெரிந்ததும் உண்டு; தெரியாததும் உண்டு. ஆகவேதான், ஆசிரியப் பெருமக்களே, பெற்றோர்களே, எந்தப் பிள்ளையையும் உருப்படமாட்டீர்கள் என்று நீங்கள் சொல்லாதீர்கள்; அவர்களை ‘முட்டாள்கள்’ என்று சொல்லாதீர்கள்.

முட்டாள்தனம் யாருக்கும் நிலையாக இருக்கக்கூடியது அல்ல! அறியாமை இருட்டு எங்கும் இருக்கும்; வெளிச்சம்
வந்தால், எப்படி இருட்டுப் போய்விடுகிறதோ, அதுபோல, அறியாமை இருட்டு என்பது பகுத்தறிவுச் சிந்தனை வந்தால் விலகிவிடும். ஆகவே, முட்டாள் – அறிவாளி என்கிற பேதத்தை ஊட்டாதீர்கள்.

மாணவர்களை அடித்தல்
– திட்டுதல் கூடாது

கண்டிப்பாக பெற்றோர்களோ, ஆசிரியர்களோ யாருமே பிள்ளைகளை அடிக்கக்கூடாது.

நமக்குக் கல்வியைக் கொடுத்தவர்களில், காமராசருக்குத் தளபதியாக இருந்து செய்த பெருமை கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கு உண்டு.

அவர் ‘அடித்தா? அணைத்தா?’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி, அதை அனைவருக்கும் கொடுத்தார்கள். அந்த வகையில், யாரும் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். பிள்ளைகளுக்கு அன்போடு அறிவுறுத்த வேண்டும்.

ஓடி ஆட நேரம் தரவேண்டும்!

குழந்தைகளை எப்பொழுது பார்த்தாலும் படி, படி என்று சொல்வது கூடாது. விளையாட்டு என்பது என்ன சாதாரணமா? படிப்பில், கல்வியில் அதுவும் இன்னொரு அம்சம்தான். பிள்ளைகள் விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடவேண்டும்; படிக்கவேண்டிய நேரத்தில் படிக்கவேண்டும்; தூங்கவேண்டிய நேரத்தில் தூங்கவேண்டும். ஆடல், பாடல், கலை அம்சத்தோடு பிள்ளைகளைக் கல்வியின்பால் ஈர்க்கவேண்டும்.

கல்வி என்றால், உள்ளே இருக்கிற திறமையை வெளியே கொண்டுவருவது! அது ஆசிரியருடைய கடமை என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

குழந்தைகளுக்கான நூல் நிலையங்கள் அமைக்கப்படவேண்டும்.

என்பன போன்ற முதன்மைக் கருத்துகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

எனவே, ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், காவல்துறையினர், மாணவர்களை நெறிப்படுத்துவோர் போன்ற அனைத்து தரப்பினரும், இக்கருத்துகளை ஆழமாக உள்வாங்கி மாணவர்களுக்குக் கல்வி, அறிவுரை, நெறிகாட்டல் எல்லாம் செய்யவேண்டும்.
கல்வியில் அரசியல் நுழையக்கூடாது. அரசியல்வாதிகளின் சுயநல நோக்கத்திற்கு மாணவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மாணவர்கள் அறிவியல் பார்வையும், சிந்தனையும் உடையவர்களாக வளரத் துணை நிற்கவேண்டும். இதற்கு மாறாக யார் செயல்பட்டாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதால், கல்வி அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பள்ளிகளில் மூடக்கருத்துகளை மாணவர்களிடம் பரப்பிய மகாவிஷ்ணுவை கைது செய்து, அவரின் முறைகேடுகளை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அனுமதியளித்த கல்வியதிகாரி, அவர்களின் பின்னணிகள் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
சமூக ஊடகங்களில் மக்கள் மகாவிஷ்ணுவிற்கு எதிராய் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருப்பது மனநிறைவு அளிக்கிறது. மக்கள் மடமைக் கருத்துகள் பரப்பப்படுவதை எதிர்க்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு நீதிமன்றங்களும் சரியான தண்டனையை வழங்கும் என்று நம்புகிறோம். அரசு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை விழிப்போடு மேற்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.