பெரியார் எனும் அறிவியல்!- குமரன் தாஸ்

2024 கட்டுரைகள் செப்டம்பர் 1-15

மண்ணில் விழுந்த விதைகள் தக்க சூழல் அமைந்தால் முளைத்து வளர்ந்து காய்த்து கனிந்து மீண்டும் மண்ணுக்கு இரையாகி மீண்டும் புதிதாக முளைத்து, கிளைத்து ….. எனத் தொடர்ந்து இயங்குகிறது. இடையிடையே பருவநிலை மாற்றங்கள், சுகபலவீனம், எதிரான சூழல்கள் மற்றும் பிற உயிர் இனங்களின் தலையீடு இவை போன்ற காரணங்களால் சில விதைகள் முளைக்காமல் அல்லது முளைத்தும் வளராமல் அழிந்து போகலாம்.

அதுபோலத்தான் மனித சமூகமும் தோன்றிய நாளில் இருந்து வளர்ந்தும் மாறிக்கொண்டும் முன்னேறியும் வருகிறது. இடையே எத்தனையோ இடையூறுகள். தடைகள்; அத்தனையையும் தகர்த்தெறிந்தே வளர்ந்து வந்துள்ளது. அத்தனைக்கும் அடிப்படை எந்தவொரு தனிமனிதருடைய விருப்பமோ அல்லது எல்லாம் வல்ல இறைவனின் கருணையோ அல்ல! மாறாக மனித சமூகத்தின் உள்ளேயே பொதிந்துள்ள அதன் (தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையிலான போராட்டம்) அக முரண்பாடுதான் அதனை முன்னோக்கி நகர்த்திச் செல்கிறது.

அந்த முன்னேற்றத்தை எத்தனை பெரிய சர்வாதிகாரியாலும் மாவீரராலும் தடுத்து நிறுத்தி விட முடியவில்லை. மாறாக, மனித குல வரலாற்றை இயக்கிச் செல்லும் இயற்கையின் இயங்கியல் விதிக்கு முரணாகச் செயல்பட்ட, குறுக்கே வந்து வழிமறித்து நின்ற வீராதி வீரர் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டதுதான் கடந்த கால மனிதகுல வரலாறு ஆகும்.

ஆனாலும் (பழமைவாத) மனிதர்கள் திருந்தினார்களில்லை! மீண்டும் மீண்டும் அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.

ஆளும் பேரும் மாறுகிறதே தவிர, அத்தகைய மனிதர்களின் முட்டாள்தனம் மட்டும் மாறவில்லை. வரலாற்றில் தனிநபர்களின் பங்கு பற்றிய மிகை மதிப்பீடே இத்தவறுக்குக் காரணமாக உள்ளது. வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள்- நிலைத்தவர்கள் எல்லாம் இயற்கையின் விதிகளோடு ஒத்துப்போய் சமூகத்தின் முன்னோக்கிய வரலாற்றுப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு பயணத்தை உந்தித் தள்ளியவர்களாகவோ அல்லது உதவியவர்ளாகவோ இருந்தார்களே அல்லது தலைமை ஏற்று விரைவுபடுத்தியவர்களாகவோ இருந்தார்களே தவிர, இயற்கையான சமூக விதிகளை மீறிய மாமனிதர்கள் (சூப்பர்மேன்கள்) அல்ல.
இத்தகையப் புரிதலோடு தமிழ்நாட்டு வரலாற்றையும் சமகாலச் சூழலையும் நாம் அணுகும் போதுதான், சமூக இயங்கு விதிகளைப் புரிந்து ஒத்து இயங்கும் அறிவியல் பார்வையைக் யார் கொண்டிருக்கின்றார் – எந்த இயக்கம் கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

அவ்வாறு பார்க்கும் போது திராவிட இயக்கம் மட்டுமே மிகச் சரியாகத் தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் கொள்கையை வகுத்துக்கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களைத் திரட்டி சமூகத்தை முன்னோக்கி வளர்த்துச் செல்ல ஒரு நூறு ஆண்டுகாலமாகப் பாடுபட்டு வருவதையும் அதில் ஓரளவு வெற்றி பெற்று வருவதையும் காண்கிறோம். அதே கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய சமூகத்தை மாற்றப் போவதாகச் சொன்ன பிற இயக்கங்களும் மற்றும் சமூக மாற்றத்தை எதிர்த்து சமூகத்தை நிலைநிறுத்தவும் அல்லது மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் போராடி வருகின்ற சனாதன இயக்கங்களும் தோற்று மக்களின் செல்வாக்கை இழந்து போனதே தமிழ்நாட்டின் கடந்தகால மற்றும் சமகால அரசியல் வரலாறாக உள்ளது.

இந்தத் தோல்விக்கான காரணத்தைச் சுயவிமர்சன நோக்கில் ஆய்வு செய்யும் பக்குவம் இன்றி திராவிட இயக்கம்தான் தங்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டதாகவும் பிறருடைய போராட்டங்களை மறைத்து விட்டதாகவும் சொல்லிச் சமூக வரலாறு சதிச்செயல்களால் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். ஆனால், எந்தவொரு சமூக அமைப்பும் அதன் உள்ளார்ந்த அடிப்படை மற்றும் முதன்மை முரண்பாடுகளில் தான் உயிர்வாழ்கிறது என்பதைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல அம்முரண்களில் எந்தப் பக்கம், யாருக்கு ஆதரவாக தாம் நிற்க வேண்டும் என்ற தெளிவும் மிகவும் அவசியமானதாகும். இந்த இடத்தில் தான் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவில் லெனின்; சீனாவில் மாவோ; தமிழ்நாட்டில் பெரியார் (அண்ணா, கலைஞர்) ஆகியோரது பெயர் வரலாற்றில் நின்று நிலைபெற்றிருப்பதற்கான காரணம் இதுதான்.

சமூகத்தின் (நாட்டின்) முதன்மை முரண்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் போராட்டத்திற்கு (புரட்சிக்கு) பெரும்பான்மை மக்களைத் திரட்டி அவர்களுக்குத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் என்பதனால் தான் ‘தந்தை’ என்று அழைக்கப்படுகின்றார்.

இதற்கு மாறாக, முதன்மை முரண்பாட்டைக் கண்டுபிடிக்கும் திறன் அற்றும் அல்லது கண்டு பிடித்தும் அதனைத் தீர்க்கும் உணர்வு இன்றியும் மக்களிடையே உள்ள பல்வேறு முரண்களில் தனது (சுயநலம், ஜாதிய, வர்க்க) வாழ்நிலை சார்ந்த ஒன்றை முதன்மைப்படுத்தி அதனைத் தீர்க்க முற்படுவதன் காரணமாக, பெரும்பான்மை மக்களைத் திரட்டும் (வாய்ப்பு அற்று) சக்தியற்றுப் போய் தனிமைப் படுகின்றனர். இது, சாராம்சத்தில் முதன்மையான எதிரிக்குச் சேவை செய்வதாக அமையும் போதே பெரும்பான்மை மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசியலாகவும் அமைந்து போகிறது.

ஆக, தலைவர் அல்லது தலைமைப் பண்பு என்பது தான்சார்ந்த வர்க்க (ஜாதி) உணர்விலிருந்து விடுபட்டு ஒட்டுமொத்த சமூக விடுதலையைப் பற்றிச் சிந்திப்பது என்பதில்தான் பொதிந்து உள்ளது. ஒரு வர்க்க சமூகத்தில் இதனைப் “பாட்டாளி வர்க்க சிந்தனை”என்று அழைப்பர். அதாவது தொழிலாளி வர்க்கச் சிந்தனையினின்றும் பாட்டாளி வர்க்கச் சிந்தனை மேம்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே நமது ஜாதிய வர்க்க சமூகத்தில் இதனை “திராவிட இயக்கச் சமத்துவச் சிந்தனை” என்று குறிப்பிடலாம். தமிழ்நாட்டில், ஏன், இந்தியாவிலேயே திராவிடம் என்பது பார்ப்பனிய எதிர்ப்பைக் குறிக்கும் சொல்லாக – பெரியாரியமாக விளங்குகிறது.

இப்போது பிரச்சனை தெளிவாகி விடுகிறது. நமது தமிழ்ச் சமூகத்தில் எந்தவொரு வர்க்கத்திற்கும் அல்லது ஜாதிக்கும் விடுதலை என்பது தனியானதாக இல்லை. ஒட்டுமொத்த சமூக விடுதலையில் தான் ஒவ்வொரு பிரிவின் (ஜாதி,வர்க்கம், ஆணாதிக்கம்) விடுதலையும் உள்ளடங்கியுள்ளது. அப்படியொரு தனியான விடுதலையை எந்தவொரு ஜாதிக்கும் வர்க்கத்திற்கும் பார்ப்பனியச் சமூகம் ஒருபோதும் எளிதில் வழங்கி விடாது!