இரவல் இதயம் -இரா. அழகர்

2024 சிறுகதை செப்டம்பர் 1-15

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இன்றுதான் கண் விழித்தார். வீட்டின் குளியலறையில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலும் மயக்கமும் என்ன ஏதோ என்று சுதாரிப்பதற்குள் ஆளை கீழே கிடத்திவிட்டது.

அன்று கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தது இன்றுதான் கண் விழித்தார். தலைமாட்டில் அமர்ந்திருந்த மனைவி சுப்புலட்சுமி கணவன் கண் விழிப்பதைக் கண்டு…

”ஏதும் வேண்டுமா…? நர்ஸை வரச் சொல்லட்டுமா” எனக் கேட்க, வேண்டாம் என்று தலையசைத்து பார்வையை நாலாபக்கமும் சுழலவிடத் தொடங்கினார்.

அந்த அறையின் மூலையில் மகள் சுசீலா சோகமாய் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரே செல்ல மகள். அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. என்ன வேண்டும் வேண்டாம் எனப் பார்த்து பார்த்து செய்த மனம் இன்று அவள் செய்கையில் மருத்துவமனையில் படுக்கையில் தள்ளிவிட்டது கந்தசாமியை. காரணம் கவுரவம்.

உயிரை விடச் சொன்னாலும் விட்டுவிடுவார். மனைவியையும் மகளையும் ஒதுக்கி வைக்கவும் தயங்கமாட்டார். கவுரவத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர். ஆதலால்தான் இவரை ஊரில் கந்தசாமி என்று தெரிந்து வைத்திருப்பவரை விட கவுரவம் என்றால் அனைவருமே தெரிந்து வைத்திருப்பர்.

காலையில் எழுந்து குளித்த உடன் சந்தனம் இட்டுக் கொள்வார். எதை மறந்தாலும் இதை கடைபிடிப்பதில் மறந்ததே இல்லை. தம் கவுரவத்திற்கு எடுப்பாக உருவாக்கி வைத்திருக்கும் தோற்றம்.

அந்த கவுரவத்தைத்தான் தன் ஒரு சொல்லின் மூலம் ஒரே நாளில் குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டாள் மகள் சுசீலா.
காதலிக்கிறாளாம் அதுவும் கீழ் ஜாதிப் பையனை. தன்னோட இரத்தமாக இருந்துகொண்டு எப்படி இப்படியொரு அருவறுப்பான எண்ணம் வந்தது என்று கூட புரியவில்லை.

பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு, தன் மகளுக்குரிய ஒரு வரனைத் தேர்ந்தெடுத்து முடித்து வைக்கும் தகுதி இல்லாமலா போய்விட்டது. கம்பீரமாக வலம் வந்து ஊருக்கே புத்திமதி சொன்ன தன்னை அசிங்கப்படுத்தி விட்டாளே!
தன் பெயரைக் கெடுக்கவே பிள்ளையாய் பிறந்து மானத்தை வாங்குகிறாளே. சுசீலாவைப் பற்றி எண்ண எண்ண நெஞ்சில் திரவம் ஊற்றியது போல் கொதிக்கத் தொடங்கியது. பின், கைகால்கள் வெட்டி வெட்டி இழுக்க மனைவி சுப்புலட்சுமி பதறினாள்.
“என்னங்க ஆச்சு”… கத்திக் கொண்டே அறையில் இருந்து வெளிவந்து நர்ஸைத் தேடினாள். வராண்டா ஓரத்தில் ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்த நர்ஸை அணுகி விவரத்தைச் சொல்லி உடனே அழைத்துச் சென்றாள்.

நர்ஸ் கந்தசாமியைச் சோதித்து விட்டு “சார் மனச போட்டு ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. ரிலாக்ஸா இருங்க”… என்று சொல்லி மீண்டும் ஒரு இஞ்சக்ஸனை செலுத்திவிட்டுப் போனாள்.
இப்போது சுப்புலட்சுமியின் கோபம் சுசீலா மீது திரும்பியது.

“எப்படி வாழ்ந்தவரு உங்கப்பா…? இப்படி நொறுங்கிப் போக வச்சுட்டியேடி…? ஒரே மகள்னு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு நல்லா பார்த்துக்கிட்டே போ…?”

“நான் என்னம்மா பண்ணுனேன்.”

“என்ன பண்ணுனேனா கேட்கற…? ஆசையா வளர்த்த மாட்ட கீழ்ஜாதிக்காரன் தொட்டதுக்கே கசாப்பு கடைக்கு அனுப்புனவர்டி. இன்னிக்கி என்னடான்னா பெத்த ஒரே மகள் நீ வேற ஒருத்தன அதுவும் கீழ்ஜாதி பையன காதலிக்கிறேனு வந்து நிக்கிற.”
“மனுசனத்தாம்மா காதலிச்சேன். இதுக்கு இந்தக் குதி குதிக்கிறீங்க. நீங்களாம் எந்தக் காலத்திலதான் இருக்கீங்க.”

“ஏன்டி பேசமாட்ட. வாய் கொழுப்பு – உடம்பரிப்பு பேசச் சொல்லுது.”

“அம்மா”.

“எதுக்குடி கத்துற. உனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செஞ்ச நாங்க, திருமணம் செஞ்சு வைக்க மாட்டோமா என்ன….? காதல்னு வந்து நின்னு என் தாலிய அறுக்க துடிக்கிறியேடி.”

“நான்தான் அன்னைக்கே சொல்லிட்டேன் அப்பாகிட்ட. அவரோட சம்மதம் இல்லாம என்னோட திருமணம் நடக்காதுன்னு. அப்புறம் எதுக்கு பழசயே பேசிக்கிட்டிருக்க.”

”ஆமாண்டி நான் பழச பேசறேன். நீ புதுசு புதுசா செய்யற, இந்த ஊர்ல உன்னைப் போல வேற எந்தப் பொண்ணுடி படிச்சிருக்கா. அப்படி உன்ன படிக்க வச்சு கவுரவமா வாழ்ந்த மனுசனுக்கு நீ குடுத்திட்டியே ஒரு பேரு.”

“நீ பேசறத பார்த்தா, பெத்தது படிக்க வச்சது எல்லாமே கவுரவத்துக்குனு சொல்லுவ போலிருக்கு. பாசத்துக்குனு எதுவுமே பண்ணலையேம்மா…!”

“வாய் கொழுப்புடி, பெத்த அப்பன் ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையா இருக்காருன்னு கொஞ்சமாவது மனசுல எண்ணம் இருந்தா இப்படி பேசுவியா.”

“ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்ங்கற எண்ணம் உன் மனசில இருந்தா இப்படி என்ன திட்டிக்கிட்டு இருப்பியா?”

“படிச்சிட்டோம் வேலைக்கு போறோம்ங்கிற திமிருதானே உன்ன இப்படி பேசச் சொல்லுது. இதுக்குத்தான்டி தலையில அடிச்சுக்கிட்டேன். பொட்ட புள்ளைய படிக்க வைக்க வேணாமுனு, கேட்டாரா என் பேச்சு. பொண்ண படிக்க வைக்கிறது கவுரவமுனாரே. இப்ப இப்படிக் கொண்டு வந்து படுக்க போட்டிருச்சே.”

சுப்புலட்சுமி புலம்பிக் கொண்டிருந்த போதே வராண்டாவில் கேட்ட காலடி ஓசை அறையினுள் நுழைந்தது. டாக்டரைக் கண்டதும் சுப்புலட்சுமியும் சுசீலாவும் எழுந்து நின்றனர்.

கந்தசாமியின் உடல்நிலையை சோதித்துப் பார்த்த டாக்டர், சுப்புலட்சுமியிடம் திரும்பினார்.

‘முதல் ஹார்ட் அட்டாக்கானாலும் கொஞ்சம் ஹெவியா ஹார்ட் பாதிக்கப்பட்டிருச்சு. இதயம் மாற்று ஆப்ரேசன் பண்ணி இருக்கோம். இனிஒன்னும் பிரச்சனை இல்லை. சுயநினைவு திரும்பியதும் கூட்டிட்டு போலாம்.”

டாக்டர் அறையில் இருந்து வெளியேறும் வரை மவுனம் நிலவியது. பின் கந்தசாமிக்கு மெல்ல நினைவு திரும்பி ஏதோ பேச நினைத்தார்.

‘சுப்பு… டாக்டர் என்ன சொல்றாங்க. நம்ம வீட்டுக்கு எப்ப போகலாம்.”
“இன்னிக்கி போகலாம்னு சொல்லி இருக்காங்க.”
“சுசி என்ன பண்றா.”

“இந்தா செவுத்தோரமா நிக்கறா.”

கந்தசாமி கை அசைக்க சுசிலா அருகில் வந்தாள்.

“இந்த ஒரு வாரமா நா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனாம்மா.”
“இல்லேப்பா, அம்மாதான் பாவம் ரொம்ப அழுதுட்டாங்க.”
“சரி டாக்டர பார்த்துட்டு கிளம்புவோமா.’’
“சரிப்பா”

இனி அதிகம் கோபப்பட்டாலோ, தேவையில்லாத சங்கடங்களை நினைத்திருந்தாலோ தன் உடல் மேலும் மிகவும் பலவீனம் அடையும் என்பதை உணர்ந்து பழைய சம்பவங்களை மெல்ல மறக்க நினைத்தார் கந்தசாமி.
“டாக்டர் குடுத்த அட்ரஸ் பத்திரமா வச்சிருக்கியாமா…?’

“வச்சிருக்கேம்பா.”

“இன்னும் இரண்டாரு நாள் போகட்டும். அந்த அட்ரஸ்ல உள்ளவங்களைச் சந்திச்சு நன்றி சொல்லிட்டு வந்திடுவோம்.”

“சரிப்பா, இப்ப நீங்க அமைதியா இருங்க.”

“இல்லம்மா இப்பதான் மனசு லேசா இருக்கு. இனி எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு வேள வந்த ஹார்ட் அட்டாக்குல நான் போயிருந்தன்னா நீயும் அம்மாவும் எவ்வளவு சிரமப்படுவீங்கன்னு நினைச்சா பயமா இருக்கு.”
அதுக்கென்னப்பா இப்ப. அதான் நல்லாயாச்சு இல்ல… விடுங்க.”

“இல்லம்மா. பேசறத நான் பேசிடறேன். கவுரவங்கறது மாணிக்கமா நான் நினைச்சிருந்தேன். ஆனா அது கோலத்துக்கு நடுவில இருக்குற சாணி உருண்டேனு புரிஞ்சுக்கிட்டேன். இந்த வெத்து கவுரவத்துக்குத்தானே பெத்த புள்ளைய கூட வெட்டி எறியற மிருகமா மாறத் தோனுது.”

“மனச ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்கப்பா.”

“இல்லம்மா சுசி. இன்னைக்கும் நான் பேசலேனா நான் மனுசனா இருக்கவே தகுதி இல்லாதவன் ஆகிடுவேன்மா.”

“அப்பா”

“ஆமாம்மா. என்னோட கவுரவம் மிருகமா மாறி பாசமா வளர்த்த மகளையே கொல்லப் பாக்குது. உன்னோட காதலைக் கொல்ல நினைச்ச அப்பனுக்கு இதயம் தந்து வாழ வைக்குது.”

“அப்பா.”

“இன்னும் எதுக்கும்மா மறைச்சு வைச்சுக்கிட்டு. வாய்விட்டு அழுதுடும்மா.”

“அப்பா…” அழுதுகொண்டே தந்தை கந்தசாமியின் மடியில் சாயும் சுசிலாவைப் பார்த்ததும் சுப்புலட்சுமிக்கு எதுவும் புரியல.

“என்ன சுப்புலட்சுமி. சுசிலா எதுக்கு அழுவறானு புரியலையா. இந்த ஒரு வாரமா நீ பட்ட வேதனைய விட நம்ம மக பட்ட வேதனை அதிகம்.”

“என்னங்க சொல்றீங்க.”

“ஆமாம் சுப்பு, ஒரு தகப்பனா பிள்ளைக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சுட்டேன். ஆனா கடைசியா அவ ஆசப்பட்ட வாழ்க்கைய என்னால அமைச்சு கொடுக்க முடியல.”

”எது, அந்த கீழ்ஜாதி பயலுக்கு கட்டி வைக்க முடியலேங்கறீங்களா…?”

“வேண்டாம் சுப்பு. இனி அப்படிச் சொல்லாதே. அந்தப் பிள்ளையோட இதயம்தான் இன்னிக்கி உன் புருஷன் உசிரோட இருக்கக் காரணம்.”

“என்னங்க சொல்றீங்க.”

”ஆமாம்மா. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அதே அன்னிக்கித்தான் சதீஸ்ங்குற அந்தத் தம்பிக்கு ஆக்ஸிடண்ட் ஆகி இருக்கு. அதுல மூளைச் சாவு அடைஞ்ச அந்தப் பையனோட இதயந்தான் – நம்ம பொண்ண காதலிச்ச அந்த இதயம்தான் இப்ப எனக்குள்ள துடிச்சிட்டிருக்கு. இதுக்கு மேலேயும் நான் ஜாதி, கவுரவமுனு பேசிட்டு திரிஞ்சா நான் மிருகமா இருக்கக் கூட தகுதி இல்லாதவன் ஆயிடுவேன்.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும்.”

“இந்தப் பேப்பர பாரு. டாக்டர் ரூம்ல இருந்துச்சு. அந்தப் பையனோட இதயத்த எனக்கு மாத்தி வச்சு பொருத்தினதுக்கான நியூஸ் அதுல இருக்கு. பிறப்பால கீழ்ஜாதின்னு அவங்கள சொல்லிட்டிருக்கோம். ஆனா, அவங்க பண்பால மேன்மக்கள்னு நிரூபிச்சிட்டாங்க. இதுக்கு மேலேயும் நான் ஜாதி வெறியோட இருந்தா இந்த இரவல் இதயமும் நின்னுடும்.”

“இவ்வளவு விசயம் நடந்திருக்கு.எதுவும்
தெரிஞ்சுக்காம என் மகள ரொம்ப காயப்படுத்
திட்டேனே. நீங்க கொஞ்சம் நார்மல் ஆன உடனே அந்தப் பையனோட வீட்டுக்குப் போறோம். பெத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லவும் நன்றி சொல்லவும் மன்னிப்புக் கேக்கவும்.”

சொல்லிக் கொண்டே கந்தசாமியின் மடியில் துவண்டிருந்த சுசிலாவை மெல்ல தூக்கி தலையைக் கைகளால் கோதிவிடத் தொடங்கினாள் சுப்புலட்சுமி. அந்த அன்பில் சுயஜாதி கவுரவம் புதைக்கப்பட்டு தாய்மை மட்டுமே எஞ்சி இருந்தது.