வான்மழைபோல் பொழிந்திட்ட கருத்துக் கொண்டல்!
வற்றாத தமிழருவி! கொள்கைக் கோட்டம்!
தேன்போல நாவினிக்கப் பேச வல்லார்
திராவிடநா டிதழ்காஞ்சி ஏடு தந்தார்
கான்மலராய் மணக்கின்ற சொற்க ளாலே
கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைப்
பான்மையுற வலியுறுத்தி உலகில் வாழும்
பைந்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்தார் அண்ணா!
ஆங்கிலத்தில் அருந்தமிழில் உரைகள் ஆற்றும்
அருந்திறலைக் கொண்டிருந்த அறிவுச் சொற்கோ!
தீங்கெவர்க்கும் எண்ணாத காஞ்சித் தென்றல்!
திராவிடத்துப் புகழ் நிலவாய்த் திகழ்ந்த செம்மல்!
பாங்குறவே இரண்டுமொழிக் கொள்கை ஏற்போம்!
பகைப்புலத்தோர் இந்தியினை ஏலோம் என்றார்!
ஓங்குபுகழ்த் “தமிழ்நாடு” பெயரைச் சூட்டி
ஒப்பரிய வரலாற்றுப் பெருமை கொண்டார்!
“ஏழைகளின் புன்சிரிப்பில் இறைவன் உள்ளான்”
“எதையும்நாம் தாங்குகிற இதயம்” பெற்றே
கோழையென இல்லாமல் நிமிர்ந்து நின்று
குள்ளமன ஆரியத்தின் கொடுமை வீழ்த்தி
யாழிசையாய் நலம் சேர்த்தார்! எழுத்தால் பேச்சால்
யாவர்க்கும் விழிப்புணர்ச்சி ஊட்டி வந்தார்!
வாழையடி வாழையெனத் தொடர்ந்து வந்த
வண்டமிழர் மரபுக்கே மாண்பைச் சேர்த்தார்!
மாற்றானின் தோட்டத்து மலர்க்கும் நல்ல
மணமுண்டாம் என்றுரைத்தார்! அறிவு மானம்
போற்றுமுயர் மாந்தர்க்கே அழகாம் என்ற
புவிபோற்றும் பெரியாரின் தொண்டர் ஆனார்!
ஆற்றல்மிகு கலைஞர்க்குத் தலைவர் ஆனார்
அறிவுலகம் வியந்திடவே பணிகள் ஆற்றி
ஏற்றத்தைக் கொடையளித்த முதல்வர் ஆனார்!
எந்நாளும் அவர்புகழைப் பாடு வோமே!