பெண்கள் என்ன நுகர்வுப் பண்டமா ? – மஞ்சை வசந்தன்

2024 செப்டம்பர் 1-15 முகப்பு கட்டுரை

நாளேடுகளைப் புரட்டினால், தொலைக்காட்சிகளை நோக்கினால், சமூக ஊடகங்களைப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் அணிவகுத்து வருகின்றன. அவை யாவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வல்லுறவுகளாகவே உள்ளன.

2 வயதுச் சிறுமி முதல் இந்த வல்லுறவு நிகழ்த்தப்படுகிறது. 15 வயது பையன் முதல் 80 வயது முதியவர் வரை இந்தக் கொடிய குற்றத்தைச் செய்கின்றனர்.

குடும்பத்து உறுப்பினர்கள்கூட இக்கொடிய செயலைச் செய்கிறார்கள் என்பது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை உருவாக்குகிறது.
பள்ளி ஆசிரியர், வாகன ஓட்டி, உடன்பயிலும் மாணவன், கடைக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், பழகும் நண்பன் என்று எல்லா தரப்பிலிருந்தும் இந்தத் தாக்குதல் பெண்கள்மீது தொடுக்கப்படுகிறது.

யாரிடம் பழகுவது? யாரை நம்புவது? யாரிடம் பாதுகாப்புத் தேடுவது? என்று உறுதி செய்ய முடியாத அச்ச நிலையில் வாழ்க்கையை இன்றைக்குப் பெண்கள் வாழ வேண்டிய அவலம் வளர்ந்துவருகிறது.

வீட்டில் அடைத்து வைத்த பெண்களை வெளியில் கொண்டுவர சாவித்திரிபாய் பூலே, தந்தை பெரியார் போன்றோர் உழைத்த உழைப்பால் பெண்கள் கல்வி கற்று உயர்வதும், ஆட்சி அதிகாரங்களை அடைவதும் கண்டு பெருமையும், மகிழ்வும் கொள்ளும் நிலையில், பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்கும் தாக்குதலாக இக்கொடுமைகள் இன்று வளர்ந்து கொண்டே வருகின்றன. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை, பள்ளியிலும், கல்லூரியிலும்கூட பாதுகாப்பில்லை, பச்சிளம் பிள்ளைக்கும் பாதுகாப்பில்லை, பருவப்பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை, பணிபுரியும் இடத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், இது எளிதாகக் கடந்துபோகும் செயல் அல்ல. இது மிக…மிக…மிக… கவனமாக, ஆழமாக, தீவிரமாகக் கருத்தில்கொண்டு தீர்வு காணப்பட வேண்டிய – உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய கொடிய குற்றமாகும்.

நெஞ்சை நொறுக்கும் நிகழ்வுகள்

வீட்டிலே தனியே படித்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை ஆசை வார்த்தை பேசி அழைத்துச் சென்று, வல்லுறவு கொள்ளும் வேளையில் அந்தப் பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் கேட்காமலிருக்க முகத்தைப் பொத்தியபடி தன் வெறியைத் தீர்க்க முயன்றதால் அச்சிறுமி வலியால் துடித்து, மூச்சுத் திணறி இறக்க, கோணிப்பையில் அச்சிறுமியைக் கட்டி, ஒதுக்குப்புறத்தில் வீசினான் ஓர் இளைஞன்.

டில்லியிலும், கொல்கத்தாவிலும் இளம் பெண்களுக்கு எதிராய் நடத்தப்பட்ட கூட்டு வல்லுறவு உலகின் கவனம் ஈர்த்துக் கலங்கச் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் 15 வயதுச் சிறுமி, பாண்டிச்சேரியில் பள்ளிச் சிறுமி, கிருஷ்ணகிரியில் 12 வயதுச் சிறுமி என்று இப்படிப் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் பல்லாயிரம் பெண் பிள்ளைகள்.
ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொதித்தாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை தரப்பட்டாலும் கொடுமைகள் மட்டும் குறைந்த பாடில்லை!

ஒரு பெண் எப்படி உருவாகிறாள்?

ஒரு பெண் கருவில் உருவாவது முதல் கல்லூரியில் படிக்கும் வரை அவள் எத்தனை பேரின் உழைப்பில், அன்பில், சிரமத்தில் உருவாக்கப்படுகிறாள்? அப்பெண் ஒவ்வொரு நாளும் ஏற்கும் சிரமங்கள் எவ்வளவு? உடல் வலியும், மனவலியும் எவ்வளவு?
அதிக மதிப்பெண் பெறவும், சாதனைகள் பல புரியவும் அவள் ஒவ்வொரு நாளும் தன்னை எவ்வளவு வருத்திக்கொண்டு எதிர்காலக் கனவுகளோடு, எண்ணற்ற திட்டங்களோடு வளர்கிறாள் என்பதும், அவளது பெற்றோர் ஏற்கின்ற சிரமங்களும் கணக்கில் அடங்குமா?
அவள் மனதில் எத்தனை எத்தனை ஆசைகள், விருப்பங்கள், எப்படி எப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற கனவுகள்!
உயிருள்ள, உணர்வுள்ள, ஆசைகள் உள்ள, ஆற்றல் உள்ள, எத்தனையோ சாதனைகளை எதிர்காலத்தில் படைக்கக் காத்துள்ள ஒரு பெண் பிள்ளையை ஓரிரு நிமிடத் தினவு தீர்க்க ஒழித்துக்கட்டுகிறான் என்றால் அதற்குரிய கடுந் தண்டனை வழங்கப்பட வேண்டாமா?

வினா எழுப்ப வேண்டும்!

யாரோ பெற்ற பிள்ளை, யாரோ வளர்த்த பிள்ளை என்று அவளைத் தொட இவனுக்கு ஏது உரிமை? அப்படித் தொட அவனுக்குத் துணிவு எப்படி வருகிறது? அதற்கு என்ன காரணம்?

அரசு காரணமா? சட்டம் காரணமா? காவல் துறை காரணமா? நீதிமன்றம் காரணமா? ஒவ்வொரு தரப்பும் உடனடியாக – தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

கடுமையான தண்டனை கட்டாயம் தேவை
கடுந்தண்டனைகள் விதிக்கப்படும் நாடுகளில் இக்குற்றச் செயல்கள் மிகக்குறைவாக இருப்பதை மேற்கண்ட அமைப்புகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

குற்றத்தின் பலனைவிட, பலமடங்கு அதிகத் தண்டனை ஒன்றே குற்றச் செயல்களைத் தடுக்கும்.
மறுகன்னத்தைக் காட்டு, மன்னித்துவிடு, கடவுள் தண்டிக்கும் என்ற தத்துவங்கள் உலக நடப்புக்கு ஒத்துவராது. கடுந்தண்டனை; விரைவான தண்டனை; யார் செய்தாலும் தண்டனை என்பதில் எந்தத் தளர்வும் இருக்கக்கூடாது.

அரசே துணை நிற்கும் அவலம்

பல பெண்களைச் சீரழிக்கும் சாமியார்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினர் விடுதலை பெற்று வீதியில் உலவுகிறார்கள் என்றால் – அதற்கு ஆட்சியாளர்களும் துணைநிற்கிறார்கள் என்றால் – முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் ஆட்சியாளர்கள் அல்லவா? அரசியல் செல்வாக்கிருந்தால் எவ்வளவு பெரிய கொடிய குற்றத்தையும் செய்யலாம் என்ற துணிவு எப்படி வருகிறது? அப்படிப்பட்ட குற்றவாளிகள் எளிதில் விடுதலையாகி மகிழ்ச்சியாய் வாழ்வதைப் பார்க்கிறவர்களுக்குக் குற்றம் செய்ய அச்சம் வருமா?

கொடிய குற்றவாளிகள், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், மோசடிப் பேர்வழிகள் அத்தனை பேரும் அரசியல் கட்சியில் சேர்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கின்றவர்களுக்கு அச்சம் வருமா?
மக்கள் பாடம் புகட்ட வேண்டும்:

எனவே, கொடியவர்களுக்குப் புகலிடம் அளித்துப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளை அறவே அழித்தொழிக்க மக்கள் முன்வர வேண்டும்.

கொடுமைகள் நடந்தால் மக்கள் கூட்டமாகக் கொதித்தெழ வேண்டும். நியாயம் கிடைக்கும்வரை போராட வேண்டும்.
இப்படிப்பட்ட கொடியவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகும் போதே அடக்கி ஒடுக்க வேண்டும். காவல்துறை விருப்பு வெறுப்பின்றிக் குற்றங்களை, குற்றவாளிகளைக் கையாள வேண்டும். எந்தவொரு கொடிய குற்றவாளியும் தப்பிவிடாமல் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும்

மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பெண்ணுக்கு, பணியாற்றிய இடத்திலேயே பாதுகாப்பு இல்லையென்றால், பிரச்சினை எங்கே? என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும். அதுவும் திட்டமிட்டு, கூட்டாகச் சேர்ந்து குற்றம் செய்கிறார்கள் என்றால் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படி நடந்தபின், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? ஆட்சியாளர்கள் மக்களுக்குச் சொல்ல வேண்டாமா?
ஏட்டளவில் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள், தண்டனைகள், ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டும் இருப்பதால் எந்தப் பயனும் வராது. அதை உறுதியுடன் செயல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்; நியாயம் நிலைக்கும்; பெண்கள் பாதுகாக்கப்படுவர்.
அரசியல் எதிரிகளைப் பழிவாங்கத் தீவிரங்காட்டுகின்ற ஆட்சியாளர்கள், இப்படிப்பட்ட கொடியவர்களை அடக்குவதில், ஒடுக்குவதில் முனைப்புக் காட்டாதது ஏன் என்ற மக்களின் கேள்விக்கு உரியவர்கள் விடையளிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால் வெகுண்டு எழும் மக்களால் அவர்கள் விரட்டப்படுவர்.

குற்றச் செயல்களும் சிறார்களும்

சமுதாயம் மாறும்போது, அறிவியல், கல்வி, பொதுஅறிவு, புரிதல் என்று எல்லாம் வளர்ச்சி பெறும்போது, அதற்கேற்பச் சட்டங்களும் மாறவேண்டும். 75 ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரை உடற்கூறு, உடலுறவு பற்றி அதிகம் அறியாதவர்களாய் மக்கள் இருந்தனர். ஆனால், இன்றைக்கு பத்து வயதிலே அனைத்தும் அத்துபடி என்கிற நிலை. வன்புணர்ச்சி செய்கின்றவன் 17 வயது என்றால் அவன் சிறுவனாகக் கருதப்பட்டு சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்; மன்னிப்பும் பெறுகிறான்.

நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கினால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தீவிர குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறார்கள். காரணம், சட்டப் பாதுகாப்பு அவர்களுக்கு இருப்பதை சாதகமாகப் பயன்படுத்தும் சூழ்ச்சி இதில் இருப்பதால் வயது வரம்பு பற்றி சட்டம் இயற்றுவோரும், சமூக ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.

வள்ளுவர் வாக்கினைக்
கருத்தில் கொள்ளவேண்டும்

மனிதநேயம் என்ற பார்வையில் கொடிய குற்றவாளிகளுக்கெல்லாம் கருணை காட்டுவது ஏற்புடையதா? சரியா? நியாயமா? சிந்திக்க வேண்டிய கட்டாயம்.

தன்னைக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, இரயில் வரும்போது அப்பெண்ணைத் தண்டவாளத்தில் தள்ளி, தலைத் துண்டித்துச் சிதற அவள் துடிதுடித்து இறந்தாளே, அக்குற்றம் புரிந்தவனுக்கு உரிய தண்டனை தேவையா? இல்லையா? முடிவு எடுக்க வேண்டியது கட்டாயம்.

தண்டனை தருவதைப் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும்; நமது கருணைக் கண் கொண்டு நோக்கக்கூடாது. தண்டனைகள் கடுமையாகவும், விரைவாகவும் தரப்படுவது குற்றங்களைப் பெருமளவு குறைக்கும்.
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டத னோடு நேர்” (குறள் 550)
என்ற வள்ளுவர் வழங்கிய தீர்ப்பை இன்று மனிதநேயர்களும், சட்டம் இயற்றுவோரும் நுட்பமாகக் கருத்தில் கொண்டு, தண்டனைகளை வழங்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அண்மைக்கால அறிக்கை, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. 2012 டில்லி நிகழ்வைச் சுற்றியுள்ள ஆண்டுகளில் என்.சி.ஆர்.பி. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 25,000 பாலியல் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்தது. அதன்பிறகு, இந்த எண்ணிக்கை தொடர்ந்து 30,000அய் தாண்டியுள்ளது, 2016இல் கிட்டத்தட்ட 39,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018இல் சராசரியாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022இல் தரவுகள் கிடைத்த மிக அண்மைய ஆண்டில், 31,000க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. சட்டச் சீர்திருத்தங்கள் பாலியல் வன்கொடுமைக்கான வரையறையை விரிவுபடுத்தியதால் இதுபோன்ற குற்றங்களுக்காக தனி நபர்களைப் பெரியவர்களாக விசாரிக்கும் வயதைக் குறைத்தது. பெங்களூருவில் 21 வயதுப் பெண் அவர் பயணம் செய்த இரு சக்கர
வாகன ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மூத்த குற்றவியல் வழக்குரைஞர் ரெபேக்கா எம். ஜான், “நிலையான சட்ட அமலாக்கமின்மை மற்றும் மோசமான காவல்துறை ஆகியவை பிரச்சினைக்குப் பங்களிக்கின்றன“ எனக் கூறுகிறார்.

பெண்களின் உயர்வும்
பெண்களின் பாதுகாப்பும்

பெண்களின் உயர்வு பெண்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. பெண்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய வேண்டியது அரசின் கட்டாயக் கடமையாகும். காவல்துறையும் குறிப்பாகப் புலனாய்வுத்துறை மிகவும் விழிப்போடும், பொறுப்போடும், முனைப்போடும் செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும். பெண்களின் இன்றைய வளர்ச்சியும், எழுச்சியும், முன்னேற்றங்களும் எளிதில் பெறப்பட்டவையல்ல. தந்தை பெரியார் போன்றவர்களின் எண்ணற்ற போராட்டங்கள், பிரச்சாரங்கள், வழிகாட்டல் மூலம் வந்தவை. அடக்கி வீட்டில் ஒடுக்கப்பட்ட பெண்கள், உரிமையும், வாய்ப்பும் உதவியும் கிடைத்ததும் ஆண்களைவிட அனைத்துத் துறையிலும் சாதித்து வருகின்றனர்.

இந்த வளர்ச்சிக்கு, இன்றைக்குப் பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகள், வக்கிரங்கள் சவாலாக வளர்ந்து வருவது எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே, பெண்ணை ஒரு நுகர்வுப் பண்டமாகக் கருதும் பண்டைய பரம்பரை மனநிலையை அறவே அடித்து நொறுக்கி, அவள் ஆற்றலின் வடிவம், சாதனையின் சிகரம், ஆளுமையின் அடையாளம் என்பதைப் புரிந்து, அவளைப் பாதுகாத்து அச்சமின்றிச் சுதந்திரமாய்ச் செயல்படவிட வேண்டியது அனைவரின் கூட்டுப்பொறுப்பு என்றாலும், இது அரசுக்குக் கூடுதல் பொறுப்பாகும்.

பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய நூலைப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். உடல் வலிமை பெறப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். தற்காப்பு ஆயுதங்களும் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் வன்கொடுமை செய்ய முயற்சித்த ஆண்கள் பெண்களால் தாக்கப்பட்டனர் என்ற தகவல் வந்தால் மற்ற பெண்களுக்கும் துணிவு வரும் – திமிர் பிடித்த ஆண்களும் அடங்குவார்கள்.

பெண்களுக்குத் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்படும் இந்தச் சூழலில், ஆண் பிள்ளைகளின் வளர்ப்பிலும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்ற சிந்தனையும் அதிகம் வளர்ந்து வருவது வரவேற்கத்தக்கதாகும். சமூகத்திலும், எதிர் பாலினத்தவரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தரவேண்டியதும் அவசியமாகும். விழிப்புணர்வு எப்பாலினத்தவருக்கும் அவசியமாகும். திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில், ’பெண் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்’, என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, மாநில, ஒன்றிய அரசுகள், காவல்துறை, நீதித்துறை போன்றவை உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்கள், சட்டங்கள் தீட்டி, தீவிரமாய்ச் செயல்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும்.