கடவுளை வேண்டித் தவம் இருந்ததால் வரம் பெற்றான்; கடவுள் நேரே வந்து காட்சி தந்தது; நோய் தீர்த்தது; மழை பொழியச் செய்தது; விபத்தைத் தடுத்தது; இறந்தவர்களைப் பிழைக்கச் செய்தது என்பன போன்ற செய்திகள் எல்லாம் புராணங்களில்தான் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் நம் கண்முன் அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை.
அப்படியென்றால் அதன் உண்மையென்ன? இக்கதைகளில் எந்தவுண்மையும் இல்லை. இவையெல்லாம் மக்களைப் பக்தி மயக்கத்திலே இருக்கச் செய்ய, அவர்களைச் சிந்திக்க
விடாமல், மூடநம்பிக்கைகளிலே மூழ்கிக்
கிடக்கச் செய்யப்பட்ட சதிகள் என்பதுதானே?
அன்றைக்கு மக்கள் கல்வி அறிவு இல்லாமல், கடவுள் பெயரால் எது கூறப்பட்டாலும், அதைக் கண்மூடித்தனமாக நம்பினர்; பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால், இன்றைக்கு படித்து, அறிவு பெற்று, அறிவியல் உலகில் வாழும் நிலையிலும் அன்றைய மூடநம்பிக்கைகளை இன்றைக்கும் பின்பற்றிச் செயல்படுவது என்பது சரியா? சிந்திக்க வேண்டும்.
அலகு குத்திக்கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறதா?
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பக்தியின் பேரால் அலகுக் குத்திக் கொள்கின்றனர். இப்படி தன் பக்தன் தன்னை வருத்திக்கொள்ள வேண்டும் என்று எந்த கடவுளாவது விரும்புமா? அப்படி விரும்பினால் அது கடவுளாக இருக்க முடியுமா? எந்தக் கடவுள் யாரிடம் வந்து அப்படியெல்லாம் செய்யும்படி கூறியது?
நாம் சிந்திக்க வேண்டிய செய்தி என்னவென்றால், எந்தப் பார்ப்பனரும் தீ மிதிப்பதில்லை; ஆணிச்செருப்பில் நடப்பது இல்லை; அலகு குத்திக் கொள்வதில்லை; தீச்சட்டி ஏந்துவதில்லை! கடவுளுக்குப் பக்கத்திலே இருப்பவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் செய்யாதபோது நாம் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்று நம் மக்கள் சிந்திக்க வேண்டாமா? உண்மையிலே இதையெல்லாம் கடவுள் விரும்புகிறது என்றால் பார்ப்பனர்களும் இவற்றையெல்லாம் செய்வார்கள் அல்லவா? அவர்கள் செய்வதில்லை; நாம் மட்டுமே செய்கிறோம் என்றால் அது நம் மூடநம்பிக்கை, அறியாமை என்பதைத்தானே காட்டுகிறது? சிந்திக்க வேண்டாமா?
அலகு குத்துவது எந்த அடிப்படையில்?
தோலைத் தட்டி இழுத்துப் பிடித்து அழுத்திக் கொண்டு அதில் ஊசியைச் செருகும்போது அதிகம் வலிக்காது. அதில் மஞ்சள் குங்குமம் போன்றவை வைக்கும்போது அது அந்தப் பாதிப்பைத் தடுக்கிறது. அலகு குத்தும் போது சிறிது வலிக்குமே தவிர, அதன்பின் வலிக்காது. இந்த அடிப்படையில்தான் அலகு குத்தப்படுகிறது.
பகுத்தறிவாளர்கள் இவற்றைச் செய்து காட்டுகிறார்கள்
தீ மிதித்தல், அலகு குத்துதல், ஆணிச் செருப்பில் நடத்தல் போன்றவற்றை “கடவுள் இல்லை” என்று சொல்லிக்கொண்டே பகுத்தறிவாளர்கள் செய்துகாட்டுவதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். திராவிடர் கழகத் தோழர்கள் அம்பாசிடர் காரையே முதுகில் கொக்கி மாட்டி, கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே பொதுமக்கள் மத்தியில் இழுத்துக் காட்டுகிறார்கள். இதிலிருந்து தெரிவது என்ன? கடவுளுக்கும் இப்படிச் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவையெல்லாம் சில அறிவியல் நுட்பங்களுக்கு உட்பட்டே செய்யப்படுகின்றன. இவற்றைச் செய்வதற்கு கடவுள் அருளோ, பக்தியோ காரணம் அல்ல என்பதுதானே?
கடவுள் சக்தியால் தீ சுடுவதில்லையென்றால், சாம்பல் நீக்கப்படாத நெருப்பில், சிறிது நேரம் நிலையாக நின்று தீமிதிக்க எந்தப் பக்தனாவது தயாரா? முடியவே முடியாது. அப்படியென்றால், தீமிதிப்பது எப்படி? அதில் உள்ள அறிவியல் அடிப்படையென்ன?
தீ மிதி தத்துவம்:
ஒரு தனி நெருப்புத் துண்டு தரையில் கிடக்கும்போது அதை மிதித்தால் காலைச் சுட்டுவிடும்; புண்ணாகி விடும். ஆனால், அதிகப் பரப்பில் நெருப்புத் துண்டுகள் பரப்பப்படும்போது கால் எந்த ஒரு நெருப்புத் துண்டிலும் ஆழப் பதிவதில்லை. அதனால் சுடுவதில்லை. ஒரே இடத்தில் கால் நிலைத்து நின்றால் அதிக நெருப்புப் பரப்பப்பட்டிருந்தாலும் சுட்டுவிடும். எனவே,
விரைந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
அடுப்படியில் பெண்கள் நெருப்புத் துண்டை
விரலால் எடுத்துப் போடும்போது தணலாக
இருக்கும் நெருப்பைத்தான் எடுத்துப் போடுவார்களே தவிர, நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்புத் துண்டை) விரலால் எடுக்க மாட்டார்கள். காரணம் என்ன?
நீறு பூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதைத் தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும். இது விரலைச் சுட்டு கொப்பளிக்கச் செய்துவிடும். நீறுபூத்த நெருப்பை விரைவாக விரலால் எடுத்துப் போட்டாலும் சுட்டுவிடும். எனவே, நீறுபூத்த நெருப்புத் துண்டை விரலால் எடுக்க முடியாது. நீறுபடியாத தணலான நெருப்புத்துண்டை விரலால் எடுக்க முடியும்.
தீ மிதிப்பது இந்த அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. தீ மிதிப்பதற்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம், குறைவாகக் கூட இருக்கலாம்) விறகுக் கட்டைகளைப் போட்டு எரிப்பர். கட்டைகள் நன்றாக எரிந்து தணலாக மாறிய பிறகு, அவற்றைக் கட்டையால் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும் பிறகு முறத்தால் விசிறியோ தென்னை மட்டையால் அடித்தோ நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.
சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமபரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து செல்வார்கள். இதனால் காலில் அதிகச் சூடு ஏறுவதில்லை.
ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து நடக்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு நெருப்புத் துண்டை உள்ளங்கையில் போட்டு, இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் விரைவாய் மாற்றினால் நெருப்புச் சுடாது. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டுவிடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும். விரைவாய் நடந்தால் சுடாது.
மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பைச் சமமாகப் பரப்பாமலும் மெதுவாக நெருப்பில் நடந்தும் யாரும் தீ மிதிக்க முடியாது.
உளவியல் அடிப்படையில் நோக்கின், ஒரு காரணத்தை மட்டும் கூறலாம். அதாவது ஆழ்ந்த நம்பிக்கையுடன் அல்லது மனஉறுதியுடன் நெருப்பின்மீது செல்லும்போது நெருப்பின் சூடு அவர்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அதுவும், மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தீயில் நடக்கும்போது மட்டுந்தான்.
புலி துரத்தும்போது ஓடுகிறவன் காலில் முள் குத்தினாலும், கல் கிழித்தாலும் வலி தெரிவதில்லை. காரணம் அவன் கவனம் முழுக்கப் புலியிடமிருந்து தப்பிப்பதில் இருப்பதால்தான். அதேபோல் பக்தியில் தன்னை மறந்து நிற்கின்ற பக்தர்களுக்குச் சூடும் வலியும் தெரிவதில்லை. அதனால்தான் அலகு குத்தும்போது வலி தெரிவதில்லை. ஆனால் காயமும், வடுவும் இருந்தே தீரும்.
ஆக, மேடுபள்ளமுள்ள நீறு பூத்த நெருப்பில் நிலையாக ஒரே இடத்தில் நின்று மன திடத்துடனோ ஆழ்ந்த தன்னம்பிக்கையுடனோ, பக்தியின் உச்சத்திலோ யாராலும் தீ மிதிக்கவே முடியாது.
அதேபோல் உள்ளங்கையில் ஒரு கரண்டி நெருப்பை அள்ளி வைத்தால் எந்தப் பக்தனாலும் வைத்திருக்க முடியாது.
நெருப்பைச் சட்டியில் வைத்து, அடியில் சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகைச் சாற்றைத் தடவி, கையில் வேப்பிலைக் கொத்தை வைத்துக்கொண்டு தீச்சட்டி எடுக்கிறார்கள்.
பக்தியால் நெருப்புச் சுடுவதில்லையென்றால் வெறுங்கையில் நெருப்பு ஏந்தி, பழுக்கக் காய்ச்சிய தகட்டில் நடக்க எந்தப் பக்தனாவது தயாரா? முடியுமா? நிச்சயமாக முடியாது!
வாயில் சூடம் போட்டு விழுங்குவதைக்கூடச் சிலர் பக்தியால், அருளால் என்று எண்ணுகின்றனர். எரிகின்ற சூடத்தை நாக்கில் போட்டு உடனே வாயை மூடிக்கொள்வார்கள். பார்க்கின்றவர்கள் நெருப்பை விழுங்கிவிட்டதாக எண்ணுவார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; வாயை மூடியவுடன் சூடம் அணைந்துவிடும். காற்று இருந்தால்தான் நெருப்பு எரியும். எனவே, வாயை மூடியதும் சூடம் அணைந்துவிடுவதால் வாயைச் சுடுவதில்லை.
எனவே, தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் மேற்கண்ட அறிவியல் காரணங்களினாலே தானே தவிர, மற்றபடி கடவுள் அருளாலோ அல்லது மருளாலோ அல்ல. நான் கூறியுள்ளபடி அறிவியல் காரணங்களால் இது செய்யப்படுவதால்தான். திராவிடர் கழகத்தார் கடவுள் இல்லை என்று சொல்லி தீ மிதிக்கிறார்கள்.
ஆணிச் செருப்பு:
காவடி எடுக்கும்போது சிலர் ஆணிச் செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகள் மேல் முனை கூராக இருக்கும். அதாவது கால் வைக்கும் பரப்பு, கூரிய ஆணிகளை நெருக்கமாகக் கொண்டதாக இருக்கும்.
மேலும், கூர்முனைகள் அனைத்தும் ஒரே மட்டமாக உயரம் குட்டை என்று இல்லாமல் சமதளமாக இருக்கும். நெருக்கமாகவும் இருக்கும். அந்த ஆணிச் செருப்பைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும்போது காலில் ஆணி குத்துவதில்லை. காரணம், ஆணிகள் கூர்மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமபரப்பிலும் நெருக்கமாகவும் அதிக அளவிலும் இருப்பதுதான். தனியாக ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் அது காலில் ஏறிவிடும்.
காரணம், ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டு இருந்தால் நமது எடை முழுக்க ஒரே ஆணியில் அமுக்கக் காலினுள் ஆணி ஏறிவிடும். சம உயரத்தில் நிறைய ஆணிகள் இருக்கும்போது நமது எடை எல்லா ஆணிகளிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஓர் ஆணியிலும் கால் ஆழப் பதிவதில்லை. ஏதாவது ஓர் ஆணி மட்டும் நீட்டி நின்றாலும் காலில் ஏறிவிடும். ஆணிகள் சமபரப்பில் இருப்பதால் காலில் ஏறுவதில்லை. மற்றபடி ஆணி குத்தாததற்குக் கடவுள் அருள் ஏதும் காரணம் இல்லை.
தலையில் தேங்காய் உடைத்தல்:
திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டம், மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் ஓர் அதிர்ச்சியூட்டும் அடிமுட்டாள்-தனமான செயல், வேண்டுதல் என்னும் பெயரால் நிறைவேற்றப்படுகிறது.
திருவிழாவின் இரண்டாம் நாள் ஆண்களும் பெண்களும் வயதானவர், வாலிபர்கள் என்ற வித்தியாசமின்றி அதிகாலையிலேயே காவிரியில் குளித்துவிட்டு வந்து கோயிலுக்கு முன்னால் அமர்ந்து கொள்கிறார்கள்.
அம்மன் முன்பாகத் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதே இந்த வேண்டுதல். பூசாரியின் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும் என்பது அய்தீகம்.
“பூசாரிகளே! சீக்கிரம் குளிச்சிட்டு வாருங்கள், இங்கு தாசில்தார் மற்றும் பெரிய போலீஸ் ஆபீசருங்க எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்காங்க’’ என்று அறிவிப்பு விடுகிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.
வாட்டசாட்டமான நான்கு இளைஞர்கள் புடைசூழ சாமியாடியபடியே வருகிறார் பெரியசாமி என்னும் பூசாரி.
வரிசையாக அமர்ந்திருக்கும் பக்தர்களின் ஒரு பகுதியிலிருந்து தலையில் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கிறார் பூசாரி. முன்னால் செல்லும் இரு இளைஞர்கள் தேங்காய் உடைக்கப்படப் போகும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
அந்த பக்தர்கள் கண்களை மூடிப்
பல்லைக் கடித்தபடி இருக்கும் நிலையில்,
பூசாரி சாமியாடியபடியே கையிலிருக்கும் தேங்காயை எடுத்து ‘மடேர்’ என்று தலையில் அடிக்கிறார். சிதறிப்போய் விழும் தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கியபடியே எழுந்து கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்தப் பக்தர் போக, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்கிறார் இன்னொருவர்.
இப்படியே சளைக்காமல் சுமார் ஆயிரத்
திற்கும் மேற்பட்ட பக்தர்களின்
தலையில் தேங்காயை உடைக்கிறார் பூசாரி. தேங்காய் உடையாமல் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தாலும் இரண்டாவது முறையாக தேங்காய் உடைக்கப்படுகிறது.
ரத்தம் வருவது கண்டு பதறியபோது, ‘அது ஒண்ணுமில்லை; தெய்வ குத்தம்தான் காரணம்; இல்லைன்னா அவுங்க சுத்தமா வந்திருக்க மாட்டாங்க’ என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.
என்ன தெய்வ குத்தம்? யாராவது விளக்கம் தரமுடியுமா? இரத்தம் வராதவர்களெல்லாம் குற்றமற்றவர்களா? அப்படியே குத்தம்
இருந்தாலும் தன்னை நம்பிவரும் பக்தனைத் தண்டிக்கலாமா? அப்படித் தண்டித்தால் அது கடவுளா?
வாரியார் கருத்துகள்
“அலகு குத்திக் கொள்வதற்கும் காவடிக்கும் சம்பந்தமே இல்லை. மலர், இளநீர், சர்க்கரைக் காவடிகள் எடுத்து, தூய்மையான ஆண்டவனை வழிபட வேண்டும். ஆடம்பரமாக, வேடிக்கையாகச் செய்யக்கூடாது.
அன்பினாலே நிகழுகின்ற அந்நிகழ்ச்சிக்குப் பயங்கரமாகவும், நாவில் வேல் குத்திக் கொள்வது, தேர் உருட்டுவது இவையெல்லாம் வேண்டத்தகாதது. எப்படியோ நம் நாட்டில் புல்லுருவி மாதிரித் தோன்றிவிட்டது.
மருளாடி எடுப்பது, வேல்குத்தி எடுப்பது, சின்னச் சின்ன ஊசி குத்தி எடுப்பது, நீண்ட அலகுகளைக் குத்துவது என்பதெல்லாம் நமது அன்பு நெறிக்குப் புறம்பானது.
(1982ஆம் ஆண்டு திரு.வாரியார் அவர்கள், மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் டாக்டர்
சி.மு. பொன்னையாவின் கேள்விக்கு மலாக்காவில் நடந்த ஒரு கலந்துரையாடலில் மேற்கண்டவாறு பதில் கூறினார்கள்.)
ஆக, வாரியார் போன்ற ஆன்மிகவாதிகள் கூட இச்செயல்களை ஏற்பதில்லை. அப்படியிருக்க இச்செயல்களை பக்தியின் பேரால் செய்வது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சகல நோயையும் தீர்க்குமா
சாம்பார் சாதம்?
செவ்வாய்க்கிழமை தோறும் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு அங்கே கூடியிருக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் பூசாரி தீர்த்தத்தைத் தெளிப்பார், அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, பனை ஓலையில் வைத்துப் படைப்பார்கள். இந்தச் சாம்பார் சாதத்தை உடல்நலம் சரியில்லாதவர்கள் உட்கொண்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக அய்தீகம். கோயிலில் செய்து கொடுக்கப்படுவதால் அந்தச் சாம்பார் நோய் தீர்க்கும் என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை.
கோயிலில் தரப்படும் பிரசாதம், விபூதி, குங்குமம் இவை நோய் தீர்க்கும் என்றால் மருத்துவமனைகள் எதற்கு? இவற்றைக்
கொடுத்தே நோய்களைத் தீர்த்துவிடலாமே? கடவுளின் அவதாரங்களாகக் கருதப்படு கின்றவர்களுக்கே நோய் வந்தால் மருத்துவமனைக்குத்தானே செல்கின்றார்கள். அப்படியிருக்க இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்கள் அல்லவா?
மக்களுக்கு அறிவையும், விழிப்பையும், நல்ல வழியையும் காட்ட வேண்டிய பத்திரிகைகள், போட்டி போட்டுக்கொண்டு மூடநம்பிக்கைகளை வளர்த்து தங்கள் வணிகத்தைப் பெருக்கி பணம் சம்பாதிப்பது எவ்வகையில் சரியாகும்?
நெற்கதிரால் நல்லது நடக்குமா?
“நெல்மணிகள் மகாலட்சுமியின் அம்சம். இத்தகைய நெல்மணிகளைக் கொண்டுதான் நாங்கள் தோரணம். கதிர்குல்லா, சுவரில் தொங்கவிடப்படும் கைவினைப் பொருட்கள், ஃபேன்சி விளக்குகள், நெல்மணி விநாயகர் போன்ற பல கைவினைப் பொருட்களை தயாரித்து வருகிறோம்.
அதற்காகவே அனைத்து வீடுகளிலும் நெற்கதிர் தோரணங்களைக் காணமுடியும். கதிர்க்குல்லா என்பதும் ஒரு வகையான தோரணம்தான். இதுவும் நெற்கதிர்கள் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதனை வீடுகளில் வாசற்படிக்கு உட்புறமாகத் தொங்கவிடுவார்கள்.
மகாலட்சுமியின் அம்சமான நெற்கதிரில் தயாரிக்கப்பட்ட கதிர்க் குல்லாவை வீட்டிற்கு உள்ளே தொங்கவிடுவது வீட்டிற்கு ஒரு நல்ல பாசிடிவ் வைப்ரேஷனைத் தரும் என்றும், வீட்டிற்கு சுபிட்சத்தையும் சகல அய்ஸ்வர்யங்களையும் கொண்டு வரும் என்றும் காலையில் கண் விழித்ததும் நெற்கதிரைப் பார்க்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை என்றும் ஒரு பத்திரிகை எழுதுகிறது.
நெற்கதிர் உணவுக்குப் பயன்படக் கூடியது. அதை அலங்காரப் பொருளாக்கி, அதில் பல நன்மை கிடைப்பதாய்க் கூறி
மக்களை மடையராக்குவது சரியா? என்பதை உரியவர்கள் சிந்திக்க வேண்டும். மக்களும் தங்கள் மடமைச் செயல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கருங்காலி மாலை
கருங்காலி என்பது மிக வலுவான வயிரம் பாய்ந்த மரம். அதை இன்றைக்கு மூடநம்பிக்கையை வளர்க்கப் பயன்படுத்துகின்றனர்.
கருங்காலி மாலையைக் கையிலும் கழுத்திலும் போட்டுக் கொண்டால், தொல்லைகள் நீங்கி, நல்லது நடக்கும், வளம் சேரும் என்று கூறுகின்றனர். படித்தவர்கள் கூட இதை நம்பி மாட்டிக்கொண்டு திரிகிறார்கள். கருங்காலி மாலையால் எல்லாம் வரும் என்றால் எல்லோரும் தங்கள் வேதனைகளைத் தீர்த்துக்கொள்ளலாமே! முடியுமா? சிந்திக்க வேண்டும்.
கடவுளுக்கு வேண்டுதல், படையல் என்பதெல்லாம், வடலூர் வள்ளலார் கருத்துப்படி பிள்ளை விளையாட்டுகள்.
கடவுள் நம்மைப் படைத்து நம்மை வாழ்விக்கிறது என்றால் அதற்குப் படையல் போட மனிதன் யார்? சிந்திக்க வேண்டாமா? எந்தக்
கடவுளாவது படையலை சாப்பிட்டது உண்டா?
கடவுள் அனைத்தும் அறிந்தவர். அவர் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால், கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டுவது முட்டாள்தனமல்லவா?
வேண்டுதலும், நேர்த்திக்கடனும் செய்
பவர்களுக்கு பலன் கிடைத்திருக்கிறதா? இல்லையே! கொரானா காலத்தில் கடவுளுக்கே ’மாஸ்க்’ போடப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளா நம்மைக் காப்பாற்றப் போகிறது. சிந்தியுங்கள். மூடத்தனங்களைக் கைவிட்டு அறிவுடன் வாழுங்கள்!