பெரியாரின் தேவை – இன்று : ஜாதி ஒழிப்பில்

செப்டம்பர் 16-30

ஒருபோதும் அஞ்சாதவர்

“இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஷாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும். (25.-03.-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு) இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். ஜாதி ஒழிப்பில் பெரியாரின் இலக்கும் மிகத் தெளிவானது.

ஜாதி அடுக்கின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பார்ப்பனர்களைத் தாங்குபவர்களாகவும், தங்களுக்குக் கீழ் அடுக்கில் இருக்கும் தலித் மக்களை ஒடுக்குபவர்களாகவும் இருந்த இடைநிலை ஜாதியினரை நோக்கியே பேசினார். இந்து மதத்தில் பறையர், பள்ளர்களை விட மோசமாக ‘தாசி மக்கள்’ என்று சூத்திரர்கள் அழைக்கப்படுவதை முகத்தில் அறைந்ததுபோல் பிற்படுத்தப்பட்டோரிடம் கூறினார். இடைநிலை ஜாதிச் சங்க மாநாடுகளில் கலந்துகொண்டு, அவர்களிடம் இருக்கும் சுயஜாதிப் பற்றை சாடினார்.  வன்னியகுல சத்திரியர்கள், ஆரியகுல வைசியர்கள் என்று போலிப் பட்டங்களை வைத்துக்கொள்வதைக் கடுமையாகக் கண்டித்த பெரியார், ஜாதி வேறுபாடுகள் நீங்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

ஆதிதிராவிடர்களின் நலனுக்காக தனிக் கிணறு, தனிப் பள்ளி தொடங்குவதற்கு காங்கிரஸ் செயல்திட்டம் வகுத்தபோது, ‘இது ஜாதி வேறுபாடுகளை நிரந்தரப்படுத்தி விடும். பொதுக்கிணற்றில் ஆதிதிராவிடர்களை தண்ணீர் எடுக்கச் செய்வதே சரியான வழிமுறையாகும்’ என்று காந்திக்குக் கடிதம் எழுதினார்.

தனிக் கிணறு ஒன்றை திறந்து வைக்க பெரியாரை ஆதிதிராவிடர்கள் அழைத்தபோது, அக்கூட்டத்திலேயே அதற்கு எதிராகப் பேசினார். ஆதிதிராவிடர்கள் குளிக்கத் தண்ணீரற்று அசுத்தமாக இருப்பதற்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும், இழிவாக நடத்தப்படுவதற்கும் இந்துமதத்தின் ஜாதி வேறுபாடுகள்தான் காரணமே அன்றி, அவர்கள் தினமும் குளித்து சுத்தமாக இருப்பதாலேயோ, மாட்டுக்கறி சாப்பிடுவதைக் கைவிடுவதாலேயோ உயர்வை அடைய முடியாது என்று எடுத்துக் கூறினார். இழிவு நீங்க இந்து மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தைத் தழுவச் சொன்னார். இராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தபோது, தமிழகம் முழுவதையும் திரட்டிப் போராடினார்.

இராஜாஜியை பதவியை விட்டே துரத்தினார். ஜாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினார். முதுகுளத்தூர் கலவரத்தின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்)க்கு ஆதரவாக நின்றபோது, தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக பெரியார் நின்றார். முத்துராமலிங்கத் (தேவரைக்) கைது செய்ய காமராஜரை வலியுறுத்தினார்.

ஜாதி  ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பெரியார், ஒருநாளும் தன்னை ஆதிதிராவிடர்களின் தலைவராக அறிவித்துக் கொண்டதில்லை.  அவர்களுக்கான தலைவராக அம்பேத்கரை அடையாளப்படுத்தியதோடு, தனது தலைவரும் அவரே என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்த பெரியார், தனிநாடு கோரியது அதற்காகவே. இந்தியாவோடு இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க விடமாட்டார்கள்; தனிநாடு அமைந்தால் நமது இழிவை உடனடியாக போக்கிக் கொள்ளலாம் என்பதில் பெரியார் கடைசிவரை உறுதியாக இருந்தார்.

“எங்கள் நாடு எங்களுக்கு வந்துவிடுமேயானால் கட்டாயம் இன்றைய தினம் நாங்கள் சொல்லுகின்ற இந்த உத்தரவைப் போடுவோம். இந்த நாட்டிலே எவனாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருந்தால் ஒருவருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்” (செங்கற்பட்டில் 5.11.1950ல் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு)

பெரியார் யாருக்கும், எந்த அடக்குமுறை சட்டத்துக்கும் ஒருபோதும் அஞ்சியதில்லை.  பதவி சுகத்துக்காக தனது கொள்கைகளை ஒருநாளும் கைவிட்டதில்லை. மான, அவமானத்துக்குப் பயந்து தான் சொல்ல வந்ததை மறைத்தவரில்லை. இந்த தமிழ்ச் சமுதாயம் உலகின் மற்ற சமுதாயத்தவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் அவரிடம் இல்லை. அதனால்தான் பதவி, சுயநலன் சார்ந்த அரசியல் மேலோங்கியிருக்கும் இச்சூழலில் பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.

– கீற்று நந்தன் ஊடகவியலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *