அனந்தராம அய்யர் சொந்த ஊர் கேரளா. திருச்சி இரயில்வே கோட்டத்தில் சீனியர் சிக்னல் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.பணியின் நிமித்தமாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தாம்பரம் புறநகர் கிராமப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார். அனந்தராம அய்யருக்கு ஏழு பிள்ளைகள்; அய்யரின் துணைவியார் ஏழு பிள்ளைகளைப் பெற்றதன் விளைவு எழுந்துகூட நடக்க முடியாத நிலை. அனந்தராம அய்யர் ஒரு தீவிர அய்யப்பன் பக்தர். ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதை அவ்வூரில் ஒரு திருவிழா போல் நடத்துவார். அதனால் ஊர் மக்களிடம் நல்ல மதிப்பினைப் பெற்று இருந்தார்.
அதே ஊரில் பால்காரர் கந்தனின் மகன் குப்பன் தினந்தோறும் அனந்தராம அய்யர் இல்லத்திற்குச் சென்று பால் வழங்கி வந்தான். அய்யரின் துணைவியார் ஈஸ்வரி மாமி சொல்லும் சின்னச் சின்ன வீட்டு வேலைகளை முதலில் செய்து வந்தான் குப்பன். புகுமுக வகுப்பு(பி.யு.சி)வரை படித்து விட்டு மேலே படிக்க முடியாமல் அப்பா கந்துனுடன் பால் வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான்.
குப்பனின் தந்தை கந்தன் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். அய்யரின் துணைவியார் ஈஸ்வரி மாமி குப்பனை வேலை வாங்கும் போதெல்லாம், “அடேய் குப்பா! எனது ஆத்து வேலைகள், எனது பிள்ளைகள் சொல்லும் வேலைகளைச் சரியாகச் செய்தால் மாமாவிடம் சிபாரிசு செய்து இரயில்வேயில் அடுத்த ஆண்டில் நல்ல வேலை வாங்கித் தரேன். மாமா சிபாரிசு செய்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். எல்லா அதிகாரிகளும் மாமா சொன்னா கேட்பாங்க” என்று அடிக்கடி ஈஸ்வரி மாமி சொன்னது குப்பனுக்கு தன்னுடைய எதிர்காலமே மிகவும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
அனந்தராம அய்யர் இரயில்வே துறையில் பெரிய அதிகாரி என்பதால் குப்பனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை- தனக்கு இரயில்வே துறையில் நிச்சயம் வேலை கிடைத்து விடும் என்று. அய்யரின் துணைவியார் சொல்லும் வேலைகளையும் அய்யர் பிள்ளைகளின் துணிகளை துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, டைக்குட்டிப் பெண் சரஸ்வதியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலை வீட்டுக்கு அழைத்து வருவது, கடைக்குச் சென்று காய்கறிகள் மளிகைச் சாமான்கள் வாங்கி வருவது, அனந்த ராம அய்யர் வேலைக்கு செல்லும் போது சைக்கிளில் அய்ந்து கி.மீ தொலைவில் உள்ள இரயில்வே ஸ்டேசன் வரை கொண்டு விடுவது என அனைத்து வேலைகளையும் சிறிதும் முகம் சுளிக்காமல் செய்து வந்தான். சொல்லப் போனால் சம்பளம் வாங்காத முழுநேர வேலைக்காரனாக இருந்தான். அய்யரின் ஏழு பிள்ளைகளும் அய்யரும்
குப்பனை வேலை வாங்குவதில் மாமிக்குச் சளைத்தவர்கள் அல்ல. ஊர் மக்கள் குப்பனை அய்யர் வீட்டு வேலைக்காரனாகவே பார்த்தனர்.
குப்பன் தந்தையாருக்குப் பால் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் சொந்தமாக விளைச்சல் நிலங்கள் இருந்தும் அய்யர் வீட்டுப் படி ஆள் போல் வேலை செய்து வந்தான். இவன் இப்படி வேலை செய்து குப்பன் உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு இரயில்வே துறையில் உத்தியோகம் கிடைக்கப்போகிறது என்பதால் கண்டும் காணாமல் இருந்தார்கள். அய்யரும், ஈஸ்வரி மாமியும் அவனுக்குச் சிபாரிசு செய்யும் வேலையின் அருமை பெருமைகளைப் பேசும் போது குப்பன் சிறகடித்து வானில் பறப்பது போல் உணர்ந்தான்
ஈஸ்வரி மாமி ஒரு நாள் திடீரென்று குப்பனை அழைத்து “டேய் குப்பா வேலைக்கு அடுத்த மாதம் ஆள் எடுக்கிறார்களாம், மாதச் சம்பளம் முந்நூறு ரூபாய் கிடைக்குமாம்! மாமா அய்ந்தாயிரம் ரூபாய் உன்னை ரெடிபண்ணச் சொன்னார். ஆள் எடுக்கும் அதிகாரிகளுக்குக் கொடுக்கணுமாம்”என்றார். குப்பனும் “சரி மாமி “என்று சொல்லிவிட்டு தன்னுடைய தந்தையிடம் செய்தியைச் சொல்ல விரைந்தான்.கந்தனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அடுத்த நாளே தன் துணைவியார் நகைகளை சேட்டு கடையில் அடகு வைத்து ஈஸ்வரி மாமி கேட்ட அய்ந்தாயிரம் பணம், அத்துடன் பத்து மரக்கால் பொன்னி பச்சரிச்சி, பழம், இனிப்பு, கார வகைகள், பசு மாட்டு நெய் ஒரு படி, மகனின் படிப்புச் சான்று நகலுடன் அய்யர் வீட்டுக்கு தந்தையும் மகனும் சென்றார்கள். அய்யர் “ஏன்டா உன் பையனுக்கு வேலை கிடைத்தவுடன் பால் வியாபாரத்தை விட்டு விடக் கூடாது. உன்னுடைய பாலில் காப்பி போட்டுக் குடிப்பது பேஷ் பேஷ்! என்றார்.”அதெல்லாம் பால் வியாபாரத்தை விடமாட்டேன் சாமி. என்னுடைய பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்திடுங்க சாமி. அது போதும்; வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்” என்றான் கந்தன்.
கந்தனிடம் அய்ந்தாயிரம் ரூபாய் மற்றும் பச்சரிசி மூட்டை, நெய்ப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு இனிப்பு, கார வகைகளை ஈஸ்வரி மாமி கந்தனிடமே திருப்பிக் கொடுத்தார். இது கந்தனுக்குப் புரிய வாய்ப்பு இல்லை. சூத்திரன் தொட்டுக் கொடுத்த இனிப்பைச் சாப்பிடக்கூடாது என்று மநுநீதி சொன்ன அதர்மம் கந்தனுக்குத் தெரியாது. நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்தன, மாதங்கள் கடந்தன. வழக்கமாக அய்யர் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வந்த குப்பனுக்கு அய்யரின் அக்கா அவர்கள் திருச்சிக்கு வந்திருப்பது தெரிந்தது. அனந்தராம அய்யருக்கும் அவருடைய அக்கா மைதிலிக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டு இருந்தது.
குப்பன் மறைந்து நின்று அவர்களின் விவாதத்தைக் கேட்டான். “இதோ பாரு அனந்தராமா! இந்த வருடம் நான் சொல்ற எனது கணவர் உறவினர் பிள்ளையாண்டனுக்குத் தான் சிபாரிசு செய்து நீ வேலை வாங்கித் தரணும். இல்லேன்னா உனது அத்திம்பேர் என்னை ஆத்தை விட்டுத் துரத்தி விடுவா. நான் இங்கு வந்து வாழா வெட்டியாகத் தான் வாழ வேண்டும். நீ சும்மா செய்ய வேண்டாம்; பணம் நாலாயிரம் கொடுத்துள்ளார்கள்” என்றாள். ஈஸ்வரி மாமி குறுக்கிட்டு, “அந்தப் பையனுக்கு (குப்பனுக்கு) வாக்குறுதி கொடுத்து விட்டோம்” என்று கூற “நீ யாரடி வாக்குறுதி கொடுக்க! அந்தச் சூத்திரப் பையனுக்கு எதற்கு வேலை வாங்கித் தரவேண்டும்? நான் என் தம்பியிடம் கேட்கின்றேன்; நீ கொஞ்சம் வாயை அடக்கு!” என மைதிலி கத்த, அனந்த ராம அய்யரும் “சரி, சரி புலம்பாதே; அத்திம்பேர் சொன்ன அந்தப் பையனுக்கே நான் வேலை வாங்கித் தருகிறேன்” என்று அக்காவைத் தேற்றினார் அனந்தராம அய்யர்.
இவர்களின் விவாதம் குப்பன் வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது. குப்பன் வீட்டு வேலைக்கு வந்திருப்பதை அறிந்த இருவரும் பேச்சினை நிறுத்திக்கொண்டார்கள். வழக்கமான வேலைகளைச் செய்து விட்டு இறுகிய முகத்துடன் வீட்டுக்குத் திரும்பினான் குப்பன். அன்று நடந்த விவாதத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க, “அய்யர் மேல் சந்தேகம் வேண்டாம்; அய்யர் மிகவும் நல்லவர்” என்று ஆறுதல் கூறினார்.அய்யருக்குச் சந்தேகம் ஏற்பட்டது – அக்காவும் நானும் பேசியதைக் குப்பன் கேட்டிருப்பானோ!
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அய்யர் தன்னுடைய அக்கா மைதிலி கூறிய தன்னுடைய ஜாதிக்கார நபருக்கு சிபாரிசு செய்து இரயில்வே துறையில் கிளார்க் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார். குப்பனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டால் வீட்டு வேலை பார்ப்பது யாரு? நமக்கு காப்பிக்கு பால், மற்றும் தயிர், நெய் கொடுக்க இவனை விட சிறந்த ஆள் கிடைக்காது. ஒவ்வொரு வருடமும் இப்படியே வேலை வாங்கித் தருவதாகப் பொய் கூறி வீட்டு வேலை வாங்கலாம் என்று முடிவெடுத்த அய்யர் கந்தனையும் அவருடைய மகனையும் கூப்பிட்டு “கந்தா இந்த வருடம் உன் பிள்ளைக்கு வேலை கிடைக்கவில்லை. என்னுடைய மேல் அதிகாரிகளை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த வருடம் நிச்சயமாக வாங்கி விடலாம். பணம் வேண்டுமானால் வாங்கிக் கொள்; செலவு போக மீதி இரண்டாயிரம் ரூபாய் மாமியிடம் உள்ளது. எனக்கு மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. அடுத்த முறை ஆள் எடுக்கும் போது நிச்சயமாக வேலை வாங்கித் தருகிறேன்” என்றார்.
கந்தனுக்கும், குப்பனுக்கும் அப்போதுதான் புரிந்தது – அய்யரின் ஜாதிப் பற்று – அய்யரின் தில்லு முல்லு வேலை. ஊர் மக்களுக்கு குப்பனுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற செய்தி பரவியது. பலரும் பாவம் அந்தப் புள்ளையை வருடம் முழுவதும் கடுமையாக வீட்டு வேலையை வாங்கிக்கொண்டு அய்யர் இப்படி ஏமாற்றி விட்டாரே என்று வியப்பும் ஆத்திரமும் கொண்டனர். கந்தன் உறவினர்கள் அய்யருக்குப் பால் கொடுப்பதையும், குப்பன் வேலை செய்வதையும் உடனடியாக நிறுத்தும்படி கூறினார்கள். அவர்கள் சொன்னதை ஒட்டி அய்யருக்கு அன்றிலிருந்து பால் தருவதையும் குப்பன் வீட்டு வேலை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.
அய்யப்பன் பக்தன் என்ற போர்வையில் மோசடி ஆளான அனந்தராம அய்யரை ஊர்மக்கள் நன்கு புரிந்துகொண்டு அவர்களின் வீட்டு வேலை மற்றும் அந்தக் குடும்பத்திற்காக எந்தச் செயலும் செய்யாமல் ஒதுக்கி வைத்தனர். சில மாதங்கள் கடந்து அய்யர் இனிமேல் இவ்வூரில் இருந்தால் நம்முடைய ஜம்பம் பலிக்காது என்று தீர்மானித்து வீட்டை விற்று விட்டு அந்த ஊரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.
“பார்ப்பான்பால் படியாதீர்
சொற்குக் கீழ்ப் படியாதீர்…
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன் போல்!
நம்ப வேண்டாம்…’’
என்ற பாரதிதாசன் பாடல் தூரத்தில் ஒலித்தது.