“அறிவியல் வளர்ச்சி : அயலவர் – தமிழர் பங்களிப்பு” (பகுதி 2)

செப்டம்பர் 16-30

வேதனை வினாக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு

தமிழர் வரலாற்றில், 2500 ஆண்டுகள் தொன்மைமிக்க தமிழ்ச் சமுதாயமாக தமிழகம் உள்ளது. கட்டுக்கதைகள், கற்பனைகள், மிகையான வழிபாட்டு வருணனைகள்

இவற்றை ஒதுக்கி விட்டுப்பார்த்தால் கூட, தொல்காப்பியர், திருவள்ளுவர், நக்கீரர், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன், புலவர் குழந்தை முதலிய பெரும்பாவலர்கள், பேரறிஞர்கள் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். ஆனால், ஆர்க்கிமிடிசுக்கோ, கலீலியோவுக்கோ நியூட்டனுக்கோ இணையானவர்கள் தமிழக வரலாற்றில் காணோமே? ஏன்? அவர்கள் தரத்தில் பத்தில், நூறில் ஒரு பங்குகூட யாருமில்லையே? ஏன்?

 

அய்ரோப்பிய ஆலமர விழுதுகள்

20ஆம் நூற்றாண்டில் இந்திய அறிவியலாளர்கள் பட்டியல் போட்டால், அதில் பெரும்பான்மைத் தமிழர்கள்(?) சர்.சி.விஇராமன்; கே.எஸ்.கிருஷ்ணன், சந்திரசேகர்; இராமகிருஷ்ணன் இவர்களைக் கூறலாம். இவர்களை ஒட்டி, அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை போன்றவர்களையும் கூறலாம். இவர்கள் அனைவரும் அய்ரோப்பிய அறிவியல் ஆலமர வித்துக்கள்! விழுதுகள்!!

வாழ்க்கை _ குறு வட்டம்

சங்ககாலம், வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற உலகியல் (Secular) காலம்! அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற காலம்! எனினும் அகம்(காதல்) புறம்(மோதல்) என்பதோடு வாழ்க்கை குறுவட்டத்தில் நின்றுவிட்டது. நூல்களும் அப்படியே! பதினெண் மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அவ்வளவே! புத்த, சமண மேலாண்மைக் காலங்களும் இருப்பதில் நிறைவு! எளிமையில் பெருமை!! இவையே வாழ்க்கையின் அடிநிலைக் கோட்பாடு! அடுத்து, பக்திக்காலம்! கி.பி.700 _1500 வரை பக்தி மயம் என்னும் வரையறைக்குள் வாழ்க்கை!

இந்தக் காலகட்டத்தில் பல அறிவியலாளர்கள் மேலைநாட்டில் தோன்றி அறிவியலை வளர்த்தனரே? முன்னர் பார்த்தோமே?

இல்லை _ இல்லை

வாழ்க்கை வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ளும் வேட்கை இல்லை. எனவே, அறிவியல் முனைப்பார்வமும் இல்லை; மனப்பான்மையும் இல்லை.

கைநுட்பம் கண்நுட்பம்

நம் பொருளியல், உழவுத் தொழில் அடிப்படையிலமைந்தது அந்த நாளில். இதைவிட்டால், நெசவு, மண்கலம், பொன், வெள்ளி, வெண்கலம், மர வேலைப்பாடுகள்! இவற்றிற்கு, கைநுட்பத்திறன், கண்நுட்பத்திறன் மட்டுமே தேவைப்பட்டது. கண்ணுள் வினைஞர் எனப் பண்டைய இலக்கியம் கூறும் கணிதம், கருவிகள் கையாளல் மிகுதியாகத் தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை.

ஆழ்சேற்றில் அழுந்திய அறிவியல்

தன் தொழிலறிவு நுட்பம் தன் மக்களைத் தவிர, வேறு எவருக்கும் போகக்கூடாது என தொழில் மறைபொருளாய் _ கமுக்கமாய் தொழில் அறிவுநுட்பம் காப்பாற்றப்பட்டது. அறிவியல் ஆழ்சேற்றில் அழுந்திவிட்டது. இதற்கு, வர்ணதர்ம வன்கொடுமை, ஜாதித் தீமை துணைபோயின.
ஆளவந்தார்களுக்கும் அறவே இல்லை!

பொதுமக்கள் மட்டுமல்லர்; நம்மை ஆளவந்தார்களாகிய பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலமன்னர்கள், வேளிர்கள், ஜமீன்தார்கள் எவருக்கும் அறிவியல் முனைப்பு, வேட்கை, ஆர்வம் இருந்ததாகவும் தெரியவில்லை. மகேந்திர பல்லவனுக்கும், நரசிம்ம பல்லவனுக்கும் ஓவிய, இசைக்கலை பற்றிய ஆர்வம இருந்துள்ளது.

மகளிர் கூந்தலுக்கு மணம்

பெரும்பாலோர்க்கு, போர்புரிய, வாகைசூட, பாடாண்டிணையில் மயங்கவுமே நேரம் சரியாகிவிட்டது. அவர்களின் அதிகபட்ச அறிவுநுட்பத்துடிப்பு மகளிர் கூந்தலைப் போல மலர்களுக்கு மணம் உண்டா? என்ற வினாவிலேயே அடங்கிவிட்டது.
எவரும் இல்லை!

அதிலும் கூட, நக்கீரத்தனம் இறைமை மிரட்டலில் அடங்கி, ஒடுங்கி அகன்றுவிட்டது. சங்ககாலங்களுக்கு முன்போ _ பின்போ தமிழில் அறிவியல் நூல்களும் எழவில்லை! அறிவியலாளர் என்று சொல்லக் கூடியவர் பெயரளவில் கூட எவரும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

நொண்டிச் சாக்குப் போக்கு

நிறைய நூல்கள் இருந்தன. காலவெள்ளத்தால் காணாமற் போய்விட்டன. கறையானுக்கும் கடற்கோள்களுக்கும் இரையாகிவிட்டன. வெளியார் படையெடுப்புகளால் சூறையாடப் பட்டன என்பர், நம் புலவர் பெருமக்களுள் புகழ் பெற்ற சிலர்.

அடித்துச் செல்லுமா? அரித்துத் தின்னுமா?

காலவெள்ளமும் கடற்கோள்களும் அரிய இலக்கண -_ இலக்கியங்களை மட்டும் விட்டுவிட்டு அறிவியல் நூல்களை மட்டும் தேடிப்பிடித்து அடித்துச செல்லுமா? செல்லா! பாகுபடுத்தியறிந்து, தேர்வு செய்து அறிவியல் நூல்களை மட்டுமா கறையான்கள், சுவைத்துப்பார்த்து, நுகர்ந்தறிந்து அரித்துத் தின்றுவிட்டிருக்குமா? அப்படி இரா!

வெளியார் தாக்குதலும் இல்லை

தமிழர்களுக்கு உள்நாட்டுச் சிக்கல்களே தவிர, வெளிநாட்டவரின் சூறையாடல், அழிப்பு வேலைகள் இல்லை.

அறிவுக் கருவூலத்தின் அழிவு

ஆர்க்கிமிடீசும், யூக்ளிடும் பயின்ற ஒரு பல்கலைக்கழகம் அலெக்சாண்ரியா (எகிப்தில் இப்போது உள்ளது) உலகின் அரிய அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்தது. அலெக்சாண்ரியா நூலகம்! ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டிரியாவைச் சூறையாடியபோது, தெரிந்தோ, தெரியாமலோ பாதி நூலகம் தீக்கிரையாகி விட்டது. தப்பித்தவறி, எஞ்சியிருந்த பகுதி, பின்னர் வந்த முஸ்லீம்கள் படையெடுப்பில் அவர்களின் தலைவன் அமீர் என்னும் கலீபா அலெக்சாண்டிரியா நகரின் உட்புகுந்து, எஞ்சிய நூல்கள் அனைத்தையும் தேடிப்பிடித்து தீக்கிரையாக்க ஆணையிட்டார்.

வெந்நீர் வைக்கும் விறகுகளா?

வெற்றிவெறி கொண்ட அமீரின் வீரர்கள், தங்கள் அடுப்புக்கு உதவும் விறகுகளாக, கைப்பற்றிய நூல்களைப் பயன்படுத்தினர். ஆறுமாத காலம், 4000 வெந்நீர்த் தொட்டிகளுக்குத் தேவையான வெந்நீர் சுடவைக்க அவை உதவின.

தப்பித்துச் சென்றாரம்மா!

நல்வாய்ப்பாக, சுதந்திர சிந்தனையாளர் சிலர், நல்ல பல அறிவியல் நூல்களுடன் துருக்கி, சிரியா, பாக்தாத் நகருக்குத் தப்பி ஓடிச் சென்றுவிட்டனர். இத்தகைய நிலை, தமிழகத்துக்கு _ தமிழர்களுக்கு இல்லை.

விதிவிலக்கு

மாலிக்காபூர் சூறாவளி போல இங்கு வந்தான். அவனுடைய குறி கோயில் சிலைகள், தங்கங்கள் இவற்றை அடைவதே! நூல்களைப் படிக்கவோ, சுவைக்கவோ, வெறுக்கவோ அவனுக்கு அறிவுத்திறன் அறவே இல்லை. அவற்றிற்கான நேரமும் அவனுக்கு இல்லை! இந்த வகையில் பார்த்தால் தமிழகம் பேறுபெற்ற பகுதி.

இயற்கைச் சீற்றங்கள் இல்லை

இராஜஸ்தான், சிந்து, பஞ்சாப் முதலான பகுதிகள்போல், கண்டவன் _ வந்தவன் எல்லாம் உரசிப் பார்க்கும், தட்டிப் பார்க்கும் இடமாக தமிழகம் இல்லை. இந்தியா முழுமையும் ஆண்ட அசோகன், அவுரங்கசீபு ஆட்சிகூட தமிழகத்தில் பெயரளவுதான்! ஜப்பான்போல, நிலம் பெருமூச்சு விடுவதில்லை! மெய்சிலிர்ப்பதில்லை; உளம் குமுறுவதில்லை!

வங்க தேசம் போல, வெள்ளத்தில், அரேபியா போல மணல்வெளியில், கானலில் கண்ணீர் விடுவதில்லை!

கலை _ இலக்கிய வளர்ச்சி

அறிவார்ந்த வாழ்க்கை முறைக்கு வசதிவாய்புகள் தமிழகத்தில் இருந்தன. எனவேதான், இசை, நடனம், நாடகம், இலக்கியம், இறை யுணர்ச்சி(பக்தி) முதலியவற்றிற்கு நிரம்ப முதன்மை கொடுக்கப் பட்டது.

வேதனையின் வெளிப்பாடு

ஒரே ஒரு செய்தி. அறிவியல் மட்டும் புறக்கணிக்கப்பட்டது உண்மை. உளம் வெடிக்கும் வேதனையான செய்தியன்றோ இது?

இப்படியும் ஒரு கேள்வி:

கடல் வாணிபத்தில் தமிழர்கள் சிறந்திருந்தார்களே! கடாரம் கொண்டவர், சாவகம், மாநக்கவாரம் வென்றவர் ஆன சோழர் காலத்தில் கப்பல் கட்டும் அற்புதத் திறன் இருந்ததே! தஞ்சைப் பெரியகோவில் முதலானவை, கல்லணை முதலியவை யாவையும் பொறியியலின் வெளிப்பாடல்லவா? கேட்கலாம்! உண்மை!!
தனி நூல்கள் இல்லையே

தொழில்நுட்பம் இருந்திருக்கலாம்! ஏன் ஒரு நூல் கூட வரவில்லை? அறிவியலாளர் பெயர் ஒன்று கூடத் தெரியவில்லையே, ஏன்?

செஞ்ஞாயிற்றுச் செலவும்,அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்,

என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற புறநானூறு, வானூர்தி பற்றிய தகவல் கொண்ட சீவகசிந்தாமணி, அண்டப் பகுதியின் உண்மை விளக்கம் என்று தொடங்கும் பாடல்கொண்ட திருவாசகம் முதலான நூல்களில் சில குறிப்புகள் மட்டுமே உள!

கணக்கியலும், வானியலும், ஜோதிடவலையில் சிக்கித் திணறுவதையும் நாம் பார்க்கிறோமே? இல்லை, தனி அறிவியல் நூல்கள் அல்லவே? அறிவியல் சாயல் நிறைந்த தகவல்கள் மட்டும் கொண்ட இலக்கியத் தொன்மை நூல்கள் தாமே, அவை?

அறிவியலின் நோக்கம்

ஏன்? எப்படி? எதற்காக? என்கிற அறிவு முனைப்பான வினாக்கள் அறிவியலின் அடிப்படை. இயற்கையின் அமைப்பு, இயக்கம் இவற்றைப் புரிந்து கொண்டு அதைத் தனக்குத் தெரிந்த மொழியில் வெளிப்படுத்தும் அரிய வெளிப்பாடுதான் அறிவியலின் முதன்மை நோக்கம்.
ஏக்கப்படுவது இழுக்காகுமா?

இந்த நோக்குகள் _ போக்குகள் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எனப் புகழப்படும் தமிழர்களிடம் இல்லையே, ஏன்? என்கிற ஏக்கம் ஏற்படுவது, அதனை எடுத்துரைப்பது தவறில்லவே? இழுக்கல்லவே? குற்றமல்லவே? தமிழரைக் குறைத்துப் பேசுவதான உள்நோக்கம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

விருப்பம் – வேண்டுகோள்

தமிழர்கள், தலைசிறந்த உலகுவியக்கும் உயரிய அறிவியலாளர்களாக வருதல் வேண்டும் என்பதான எதிர்பார்ப்பு, ஆவல் மட்டுமே எம் நோக்கம்! எமது விருப்பம்! என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான அறவாணர்களாக, பாராட்டத்தக்க பண்பாளர்களாக, உயர்ந்த ஒழுக்கமுடையவர்களாக, போற்றற்குரிய புலவர் பெருமக்களாக, சீர்மிகு செந்தமிழ் பாவலர்களாக, களங்கமற்ற கலைஞர் மாமணிகளாக, வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களிடையே, தமிழினத்தவரிடையே, ஆற்றல் மிக்க அறிவியலாளர்கள் தோன்றவில்லையே, ஏன்? குறிப்பிடத்தக்க அறிவியல் கோட்பாடுகள்  (Scientific Theories)  உருவாகவில்லையே, ஏன்? என, விழைவது, தமிழர்களைத் தாழ்த்தியும், குறைத்தும் பேசுவதாக நம்மவர் எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது! என்பதே எமது வேண்டுகோள்!

– பேரா.ந.வெற்றியழகன்

அறிவியல் வளர்ச்சி :அயலார் – தமிழர் பங்களிப்பு – ஓர் ஒப்பிட்டு ஆய்வு – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *