தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? – தந்தை பெரியார்

செப்டம்பர் 16-30

முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும்

விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக,நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போக வில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.

 

 

ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.

அதுபோல, இங்கு தலைவரவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன் எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக் கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.

மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடி யனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.

வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் – சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.
நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க் காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவ தற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.

தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப் பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!

தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு…………….

என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.

குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.
குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.

அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.

திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லா விட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.

பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 – 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்,

தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.

தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.

பட்டினத்தார் – தாயுமானவர் – இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.

(29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை – விடுதலை 3.10.1967)


நம் கடவுள் மதம் எதற்கு? – தந்தை பெரியார்

உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?

தோழர் வீரமணியின் சேவை!

பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *