படிப்பறிவு என்பது வேறு; பகுத்தறிவு என்பது வேறு என்றார் பெரியார்.அறிவுக் கண்ணைத் திறக்க கல்வி அடிப்படையாக இருந்தாலும், பகுத்தறிவுப் பார்வை இல்லாவிட்டால் மனிதசமூகம் மீண்டும் மீண்டும் பிற்போக்குப் படுகுழியிலேயே வீழவேண்டியநிலை ஏற்படும்.
விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் மூடநம்பிக்கை யாளர்களாக இருப்பதும் இதனால்தான். அறிவு சொல்லும் உண்மையைத் தன் பிழைப்புக்குப் பயன்படுத்தும் இவர்கள் அதனைத் தம் வாழ்வில் கடைப் பிடிப்பது இல்லை. இதற்கு அண்மைய சில உதாரணங்களையே எடுத்துக் காட்டலாம். இந்தியா தனது 100 ஆவது செயற்கைக் கோளை செப் 9 அன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இதனைச் செலுத்திய இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார். இவருக்கு முந்தைய தலைவர் கஸ்தூரி ரங்கனும் அப்படித்தான். மனிதன் ஆண்டாண்டு காலமாக கண்டுபிடித்த விண்வெளி அறிவியல் தொழில் நுட்பத்தினால் விண்ணில் இந்தியப் பெருமை வலம் வருகிறது.இந்த விண்வெளி ஆய்வுக்கு ஒரு இம்மி அளவாவது இவர்களின் கடவுள், புராண, இதிகாசங்கள் துணையிருந் திருக்குமா?
சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் ரமணன், பல்வேறு வானிலை ஆய்வுத் தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு எப்போ தெல்லாம் மழை வரும் என்று அறிவிப்பவர். இவர் என்ன சொல்லியி ருக்கிறார் தெரியுமா? `மழை பொழிவதற்காக கடவுளையும், ரமண மகரிஷியையும் வேண்டிக் கொண்டுள்ளேன்! – என்று குறிப்பிட்டுள்ளார். மழை வருவது எதனால்? மேகங்களில் எந்த சூழல் ஏற்பட்டால் மழை வரும்? செயற்கை மழை பொழியவைப்பது எப்படி_ என்பதெல்லாம் ரமணனுக்குத் தெரியாதா? அவர் படித்த வானிலை அறிவியல் சொல்லித் தந்திருக்குமே! இதுவரை எத்துணை முறைத் தன் பணிக்காலத்தில் மழை தொடர்பாக வானிலை ஆய்வு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பார், அப்போதெல்லாம் இப்படிச் சொல்லியதுண்டா?
கடவுளை வேண்டினால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மய்யம் தேவையில்லையே? மூடிவிடலாமா? இவை படித்த பாமரர்களின் மத பக்தி மூடநம்பிக்கை என்றால், படிக்காத பாமரர்கள் செய்த சில அண்மையில் நிகழ்ந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றாங்கரைபகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு வதந்தி. பிறந்த குழந்தை பேசியதாம்;` நான் அதிகாலை வரைதான் உயிரோடு இருப்பேன்; அதற்கு 4 ஆயிரம் குழந்தைகளைப் பலி வாங்குவேன் என்று கூறியதாக வதந்தீ பரவி, இதற்குப் பரிகாரமாக ஆண்கள், குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து முச்சந்தியில் தேங்காய் உடைக்கவேண்டும் என்று எவனோ பரப்பிவிட பாமரர்கள் தேங்காய் கடைகளில் குவிந்துவிட்டனர். (தேங்காய் வியாபாரிகள் செய்த வேலையாக இருக்குமோ?) இதேபோல பண்ருட்டியில் ஒரு மூடச் செயல். பண்டரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் நகை திருடு போய்விட்டது. இதனைத் திருடியவனைக் கண்டுபிடிக்க ஒரு மந்திரவாதியை அழைத்து வந்துள்ளனர். அவன் விநாயகன் கோவிலில் தேங்காய் உடைத்து பூஜை செய்து தேங்காயை உருட்டிக் கொண்டே போய் ஒரு வீட்டின் முன் நின்று இந்த வீட்டார்தான் திருடினார்கள் என்று கூறினானாம்.இதனை அறிந்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்தனராம். அப்பகுதியில் ரூ.15 கோடி கொள்ளை போனதைக் கண்டுபிடிக்க இந்த தேங்காய் மந்திரவாதியைப் பயன்படுத்தலாமா என போலீசாரும் யோசிக்கின்றனராம்.
மந்திரவாதியின் தேங்காய் திருடனைக் காட்டிக் கொடுக்கும் என்றால் காவல்துறையில் புலனாய்வுத் துறை ஏன்? அதனைக் கலைத்துவிட்டு ஊருக்கு ஒரு மந்திரவாதியை நியமித்து விடலாமே? திருடுபோன பொருள்களையெல்லாம் எளிதில் மீட்டு விடலாம் அல்லவா?
அறிவியல் வளர்ந்த இந்த நூற்றாண்டிலும் மூடநம்பிக்கை மூளைகளில் தேங்கிக்கிடப்பது ஏன்? பகுத்தறிவுச் சிந்தனை ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டால் இந்த இழி நிலை நீடிக்குமா? அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறும் அரசியல் சட்டம் உள்ள நாட்டில், மதச் சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்ட நாட்டில் அரசுத் துறைகளில் பொறுப்பில் உள்ளவர்களே மூடநம்பிக்கையாளர்களாக இருந்தால் இந்த நாடு எப்படி உருப்படும்? இந்தச் சம்பவங்கள் தொடரும் வரை பெரியார் இங்கே தேவைதானே…!
– மணிமகன்