இந்தியாவின் ஜாதிமுறை – வருணாசிரம தர்ம முறைதான் மிகப் பெரும்பாலான மக்களை கல்வி வாய்ப்புகளைப் பெற இயலாதவர்களாக – பெறக் கூடாதவர்களாக – ஆக்கியதற்கு அடிப்படைக் காரணம்.
சூத்திரர்கள் – 4 ஆம் பிரிவினர் – 5 ஆம் பிரிவின ரான பஞ்சமர்கள் ஆறாம் (கீழ்) பிரிவினரான எல்லா வர்ணப் பெண்கள் ஆகியவர்களுக்குக் கல்வி உரிமை அடியோடு மறுக்கப்பட்ட மனுதர்ம சமுதாய அமைப்பின் விளைவே இது!
இதனை மாற்றிடவே, திராவிடர் இயக்கம் சமூகநீதிக் கிளர்ச்சியை செய்து, ஓரளவு வெற்றி பெற்று, இன்று ஒடுக்கப்பட்டோர்களாகிய மேற்கூறிய பிரிவினர் கல்வி வாய்ப்புக்களை குறிப்பிட்ட அளவில் பெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வியறிவு இல்லாததால், அவர்கள் இதுநாள் வரை, வெறும் உடலுழைப்புப் பணியாளர்களாய் இருந்துவர வேண்டியதாயிற்று.
இப்போது அது மாறி வருகின்றது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளினால் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களும் இப்போது கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டது.
இதற்குமுன் கல்வியை ஏகபோகமாக்கிய பார்ப்பனர்கள், அவர்தம் சுற்றுக்கோள்களான சில முன்னேறிய ஜாதியினரும் இதற்காக கூச்சல் போட்டு, பொய் அழுகை, போலிக் கூப்பாடு, – தகுதி போச்சு, திறமை அழிந்தது என்று முதலைக் கண்ணீர் வடித்து, இன்னமும் தம் வசம் உள்ள ஊடகங்கள், அதிகாரவர்க்கத்தினர் மூலம் (நீதித்துறையும் அடக்கம்) தடுத்து இந்த மக்கள் – பசியேப்பக்காரர்கள் பந்தியில் உட்கார வைப்பதை காண சகிக்காமல் – புளியேப்பக்காரர்கள் பேனாமூலம் – பிரச்சாரம் மூலம் காகிதப் போராட்டம் நடத்துகின்றனர்!
மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பதவிகளில் இட ஒதுக்கீடு செய்வதைத் தடுக்க முடியவில்லை; அப்படி இருந்தும் அவர்களுக்குரிய விகிதாசாரங்களில் – பிரதிநிதித்துவம் இன்னமும் சுதந்திரம் வந்து 65 ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லையே!
பதவி உயர்வில் (புரோமோஷன்) அவர்களுக்கு முன்னுரிமை தருவதால் என்ன குடிமூழ்கிப் போய்விடும்?
இந்திய அரசியல் சட்டத்தில் 16(4) பிரிவு Adequately என்ற சொல்லுக்கு – மற்றவர்களோடு சமமாக வருகின்ற அளவில் போதிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதே – அதனைச் சரியாக செயல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?
உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்கம் அதனைத் தடுத்தது. (ஏற்கெனவே அரசியல் சட்டத் திருத்தம் 77 ஆவது 2001 இல் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருந்தும்) – உ.பி. சட்டத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மட்டும்) பதவி உயர்வு தரும் சட்டத்தை செல்லாது எனக் கூறியது, அரசியல் சட்ட விரோத தீர்ப்பாகும்!
இதற்காக மீண்டும் இப்போது ஒரு திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றவிருப்பதை நாம் வரவேற்கிறோம் – ஆனால், அதே நேரத்தில் ஏற்கெனவே சீதாராம் கேசரி அவர்கள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து (நரசிம்மராவ் பிரதமர் அப்போது) நாடாளுமன்றத்தின் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அதைக் கொணரவில்லையே என்றபோது அடுத்துச் செய்வோம் என்றனர்! செய்யவில்லையே 11 ஆண்டுகள் ஓடிவிட்டனவே.
இப்போதும் மத்திய அரசு – அதுபற்றி கவலைப் படாமல், பிற்படுத்தப்பட்ட மக்களை அதில் சேர்க்காமல் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தி.முக.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியுள்ளார்!
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் இதனை எதிர்த்ததற்குக் காரணம், பிற்படுத்தப்பட்டவருக்கு மற்றொரு அளவுகோல் ஏன்? அவர்களுக்கும் பதவி உயர்வு தரவேண்டிய வகையில் சட்டத் திருத்தம் அமைவதில் என்ன சிக்கல், என்ன தயக்கம்? என்றுதான் கேட்டுள்ளார்!
இவ்வளவு காலம் சென்ற நிலையில், இப்போதுதான் நாடாளுமன்ற எம்.பி.,க்களை கொண்ட தனியே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி பார்லிமெண்ட்ரி கமிட்டியே அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் 60 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் அவர்களது நலன் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது உரிமை – பிச்சை அல்ல!
உடனே பார்ப்பன ஊடகங்கள் ஒப்பாரி வைக்கக் கிளம்பிவிட்டன! ஆகா, தகுதி என்னாவது, திறமை போய்விடுமே என்கின்றனர்?
60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இருந்ததே என்று மாய்மாலக் கூச்சல் போடுகின்றன!
6000 ஆண்டு அநீதிக்கு முன்னால் 60 ஆண்டு சமூகநீதிச் சட்டங்கள் எம்மாத்திரம்?
அதுவும் இந்தியா முழுவதும் இல்லையே! மேற்கு வங்கத்தில் என்ன நிலை? குஜராத்தில் என்ன நிலை?
போதிய அளவு வாய்ப்பு இல்லாததினால் தானே இந்தக் கோரிக்கை; அவர்களுக்குரிய விகிதாச்சாரம் தரப்பட்டிருந்தால், இந்தக் கோரிக்கைக்கு அவசியமே வந்திராதே! Adequately என்ற சொல்லுக்கு Till it is equalised – மற்றவர்களோடு சமமாக வரும்வரை என்று தானே பொருள்.
அரசியல் சட்டம் 16(4) பிரிவு — — Backward Class of Citizens என்ற சொற்றொடர் பொதுவில் (S.C., S.T., OBC, MBC எல்லோரையும் இணைத்தே) நுழைக்கப்பட்டது என்பதை மறந்து ஏன் குறுக்கவேண்டும்?
பிற்படுத்தப்பட்டோருக்கும் தேவையே!
எனவே, மத்திய அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தருவதுபோலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பதவி உயர்விலும் வாய்ப்புத் தரவேண்டும்.
Appointment என்ற சொல்பற்றி சென்னை உயர் நீதிமன்றம், ரங்காச்சாரி வழக்கில் தீர்ப்புச் சொன்னபோது, ‘‘Appointment includes Promotion also’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதே – பின் ஏன் இந்த பாரபட்சம்?
அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட எம்.பி.,க்களும் ஒட்டுமொத்த குரல் கொடுக்க முன்வரவேண்டும்!
S.C., S.T., OBC எல்லாம் இணைந்து அனைவருக்கும் அனைத்தும் என்று போராடவேண்டும்.
பார்ப்பனரின் பிரித்தாளும் தந்திரத்திற்கு எஸ்.சி., எஸ்.டி., மக்கள் பலியாகிவிடாமல், நாம் அனைவரும் கைகோர்த்து உரிமைக்குரல் எழுப்ப முன்வரவேண்டும்!
கி.வீரமணி
– ஆசிரியர்