நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த திராவிட -ஆரியக் குரல்கள் !- மஞ்சை வசந்தன்

2024 முகப்பு கட்டுரை ஜுலை 16-31

இந்தியாவின் வரலாறு என்பதே திராவிட – ஆரியப் போராட்டம்தான். திராவிடம் என்பது எதைக் குறிக்கிறது? ஆரியம் என்பது எதைக் குறிக்கிறது என்ற வினாக்களும் அதற்கான விளக்கங்களும், அவ்விளக்கங்களுக்கு இடையேயான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன.

திராவிடத்திற்கு எதிரான மோதல்கள், சுயநலத்தின் காரணமாக, உண்மைக்கு மாறாக எழுகின்றன. தமிழர்கள் திராவிடர்கள்தாம் – இம்மண்ணின் மக்கள்தாம் என்று நாம் கூறிவருவது மட்டுமல்லாது, உலக வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் ஆழமான, ஆதாரபூர்வமான ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி, மறுபுறம் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்த வந்தேறிகள் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். ஆனால், இந்த ஆணித்தரமான உண்மையை ஆரியர்கள் மறுக்கின்றனர். தாங்கள் இந்த மண்ணின் மக்கள், வந்தேறிகள் அல்ல என்று வாதிடுகின்றனர்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தைத் தங்கள் நாகரிகம் என்கின்றனர். கிடைக்கின்ற தொல் பொருட்களையெல்லாம் சிதைத்தும், ஒழித்தும், ஒளித்தும் உண்மைகளைத் திரித்துக் கூறுகின்றனர். திராவிடப் பெரும்பான்மையினரை ஆரியச் சிறுபான்மையினர் அடக்கி, ஆதிக்கம் செலுத்த பல்வேறு பொய்களை, புனைவுகளைச் செய்து தங்கள் வாதத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

திராவிடர்களின் மண்ணைக் கைப்பற்றியதோடு அல்லாமல், திராவிட மக்களின் கலை, அறிவியல், கட்டுமானம், பண்பாடு, மொழி என்று பலவற்றையும் களவாடி, திரித்து தமதாக்கிக் கொண்டனர்.

இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், சடங்குகள், ஜாதிகள் என்று பலவற்றை உண்டாக்கி, தங்களை உயர்ந்தவர்களாகவும், உரிமைகள் உள்ளவர்களாகவும், இந்த மண்ணின் மக்களைத் தாழ்ந்தவர்களாகவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கு அரசு, கடவுள், சாஸ்திரங்களைக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர்.

பிரம்மன் படைக்கும்போதே தங்களை உயர்ந்தவர்களாக, அறிவாளிகளாக, உரிமை உடையவர்களாகப் படைத்தான்; மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாக, உரிமையற்றவர்களாகப் படைத்தான் என்றும், தாங்கள் பிராமணர்கள்; மற்றவர்கள் சூத்திரர்கள் என்றும், தங்களுக்குச் சேவகம் செய்யவே சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி, அதற்குச் சாஸ்திரங்களை ஆதாரமாகக் காட்டி இன்றளவும் மேலாதிக்கம் செலுத்திவருகின்றனர்.

மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்திலும், அதன் பிறகு மன்னர்கள் காலத்திலும், அடுத்து வந்த அயல்நாட்டவர் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி, மற்றவர்களை அடிமை கொண்டது போலவே, நாடு விடுதலையடைந்து மக்களாட்சி ஏற்பட்ட பின்பும் அதே நிலையைத் தொடர பல்லாற்றானும் முயன்று வருகின்றனர்.

அரசமைப்புச் சாசனம் தொகுக்கப்பட்டபோதுகூட, தங்கள் ஆதிக்கம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு பாதுகாப்புகளைத் தேடிக் கொண்டனர். அதற்கு மதம், சாஸ்திரம் போன்றவற்றைத் துணையாக்கிக்கொண்டனர். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பையும் தொடங்கினர்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஊடுருவி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியவர்கள், பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் வடிவமாக பி.ஜே.பி.யை உருவாக்கித் தங்கள் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தியவர்கள் தற்போது வெளிப்படையாகவும், வெறித்தனமாகவும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர்.

இவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான அமைப்புகளும், எதிர்வினைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்தே வருகின்றன. வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருந்துவருகிறது.

இந்த எதிர்ப்பு முயற்சியின் பெருத்த அடையாளமாய் அக்காலத்தில் புத்தரும், பிற்காலத்தில் ஜோதிராவ்பூலே, ஷாகுமகாராஜ், அம்பேத்கர், பெரியார் போன்றோரும் ஆரிய ஆதிக்க எதிர்ப்பினையும் மற்ற மக்களின் உரிமை கேட்பையும் மேற்கொண்டனர்.
இந்தியா முழுமைக்குமான நாடாளுமன்ற ஜனநாயகம் உருவானபின், நாடாளுமன்றத்தில் திராவிடக் குரல், அம்பேத்கர், அண்ணா என்ற ஆளுமைகளாலும் எழுப்பப்பட்டது.

அம்பேத்கரும், அண்ணாவும் ஏராளமான நூல்களைக் கற்றுத் தேர்ந்த அறிவார்ந்த அறிஞர்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், மற்ற மக்களின் உயர்வுக்கும் உரிமைக்காகவும் குரல் உயர்த்தினர். அதனால் நேரு போன்றோர் பார்வையும், சிந்தனைகளும் பெரிதும் மாற்றப்பட்டன. இதனால் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலான சூத்திர மக்களும், ஒடுக்கப்பட்டோரும் மெல்ல மெல்ல அடிமை நிலை மாறி, உரிமையும் உயர்வும் பெற்றனர்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆரிய ஆதிக்கவாதிகளும், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்பினரும் காங்கிரஸை வீழ்த்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல் கட்சியை உருவாக்கினர். அதன் வடிவந்தான் பி.ஜே.பி. என்ற அரசியல் கட்சி.
பி.ஜே.பி.யின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஆரியத்தின் ஆதிக்கம் அளவற்று மேலெழுந்ததால், மற்ற மக்களின் உரிமைகளும் உயர்வும் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவர்களின் வளர்ச்சி ஒடுக்கப்பட்டது.

இதனால் மூன்றாம் முறையாக பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றாமல் தடுக்க இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. என்றாலும்,
பி.ஜே.பி சில சூத்திரத் தலைவர்களின் தோளில் ஏறி ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது.

கொதித்தெழுந்த காங்கிரஸ் தலைவர் கார்கே தமக்கே உரிய திராவிட உணர்வோடு கர்ஜித்தார். வர்ணபேதத்தை இன்னமும் உயிர்ப்பிக்க முயற்சிக்கப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் பிராமணர்; கார்கே பஞ்சமன். பிராமணன் அறிவாளி, பஞ்சமன் அந்த அளவு அறிவாளியோ திறமைசாலியோ அல்ல என்ற கருத்தை குடியரசுத் துணைத் தலைவர் நிலை நாட்டுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. நாங்களும் அறிவாளிகள், திறமைசாலிகள். இதை நாங்கள் எல்லா வகையிலும் நிரூபித்து வருகிறோம். பிராமண, சூத்திரக் கோட்பாட்டை இன்றைக்கும் பேசுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று கனல் கக்கினார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சிவாஜி உள்ளிட்டோரின் சிலைகளை இடம் மாற்றி, தலைவர்களை அவமதித்துள்ளது

ஒன்றிய பா.ஜ.க அரசு.

‘நீட்’ மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் பேசினால், பிரதமர் மாங்கல்யத்தை பற்றி பேசுகிறார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக பிரச்சினை நீடிக்கும் நிலையிலும், பல நாடுகளுக்குச் செல்லும் பிரதமர், மணிப்பூர் செல்ல மறுக்கிறார். மக்கள் பிரச்சினைகளை பிரதமரும் பேசுவதில்லை. பா.ஜ.க.வும் பேசுவதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசினார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, கல்வி அமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இராணுவப் பள்ளிகளின் நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது எனக் கூறினார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தம் நாட்டுக்குப் பெரும் ஆபத்தானது என மாநிலங்களவைவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார். இதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை நேரில் சென்று சந்திக்காதது, நீட் தேர்வு மோசடிகள் ஆகியவற்றையும் மல்லி கார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்தார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 2.7.2024 அன்று விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி பேசிக் கொண்டிருந்தபோது, ‘உறுதிப்படுத்தப்படாத விவரங்களைக் கூற வேண்டாம்’ என்று அவரிடம் அவைத் தலைவர் தன்கர் அறிவுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘பிரமோத் திவாரி கூறிய விவரங்களுக்கு உரிய ஆதாரங்கள் காட்டப்படும்’ என்றார்.

இதையடுத்து,ஜெய்ராம் ரமேஷை நோக்கி பேசிய தன்கர், ‘அவையில் எதிர்க்கட்சித் தலைவர் (கார்கே) இருக்கிறார். ஆனால், அவரது பணியை பெரும்பாலும் நீங்கள் தான் (ஜெய்ராம் ரமேஷ்) செய்கிறீர்கள். நீங்கள் மிகவும் புத்திசாலி, மிகவும் திறமையானவர்; எனவே, கார்கேவுக்கு பதில் அவரது இருக்கைக்கு உடனடியாக நீங்கள் வந்துவிடுங்கள்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

தன்கரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த கார்கே, ‘ஜெய்ராம் ரமேஷை மிகவும் புத்திசாலி என்றும், என்னை மந்தமானவர் என்றும் அழைப்பதன் மூலம் அவையில் ‘வர்ணாசிரம’ முறையைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் நாட்டு மக்களால் ‘நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்’ என்றார்.

தலைமை, முதன்மையென்றால் அது பிராமணனுக்கு உரியது; பஞ்சமனுக்கும் சூத்திரனுக்கும் அது உரியதல்ல என்பதே குடியரசுத் துணைத்தலைவரின் கருத்து. கார்கேவுக்குப் பதில் ஜெய்ராம் ரமேஷ் இருக்க வேண்டும் என்ற பேச்சில் உள்ள நச்சுத்தன்மை மிகக் கொடியது என்று கொஞ்சங்கூட தாமதிக்காது, தயங்காது, சுயமரியாதை உணர்வை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி, திராவிடக் கோட்பாட்டை உரிமைக் குரலாக எழுப்பினார்.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரின் 125 ஆம் பிறந்த நாள் போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக மழைக்கால கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாள்களும் விவாதத்தின் போது மக்களவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்குப் பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது; அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில் சமதர்மம் மதச்சார்பின்மை என்ற வாரத்தைகளே கிடையாது. ஆனால், 42 ஆவது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப்பட்டன. மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான் கூட்டாட்சித் தத்துவம். அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களைச் சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறியதில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதற்குப் பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால் அதை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்தார்கள். காரணம் நீங்கள் ஆரியர்கள், வெளியிலிருந்து இங்கே வந்தவர்கள் – நாங்கள் திராவிடர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். உங்களால் (ஆரியர்களால்) இம்மண்ணின் மைந்தர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள்இந்த மண்ணை விடவில்லை. காரணம் இந்தத் திராவிட பூமி எங்கள் மண் ஆகும். தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம். இனியும் இங்கு தான் வசிப்போம்‘ என்றார் (27.11.2015).

ஒன்பதாண்டுகளுக்குப்பிறகு இதே கருத்தை இப்பொழுதும் (1.7.2024) பேசி இருக்கிறார்.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை தி.மு.க. கொறடாவுமான மானமிகு ஆ.இராசா அவர்களும் இந்தக் கருத்தை முரசொலியாக அதிர வைத்தார்.

தொடங்கும்போது தந்தை பெரியார் மண்ணி லிருந்து வந்தவன் நான் என்றாரே! அதுபோதும் பிற்போக்குவாதிகளுக்கும் இன எதிரிகளுக்கும், வீடணர்களுக்குமான மூச்சை அடைக்கும் வீச்சு!

600 ஆண்டுகளுக்குமுன்பு முகலாயர்கள் அந்நியர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்றால், அதற்கு முன்பாக, கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களும் அந்நியர்கள்தானே!’’ என்ற வரலாற்று ரீதியான ‘வெடி குண்டு’வீச்சுதானே இது!

தந்தை பெரியார் இந்தியாவுக்கே தேவைப்ப டும் நிலை உருவாகி விட்டது.மதவாதம் பேசப் பேச, இந்து ராஜ்யம் பேசப் பேச, பெரியார் தானாகவே அங்கு தலை தூக்குகிறார் வெடித்துக் கிளம்புகிறார். அது தான் இப்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலிக்கிறது.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்
ஆ. இராசா பேசியதாவது:

“ஒன்றிய அரசு பாசிசக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை ஒன்றியஅரசு குறிவைக்கிறது. இது தான் பாசிசம்; இது தான் இனவாதம். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது. பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாக உள்ளன. பா.ஜ.க. அரசு நினைப்பதை அவர்களாகச் சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், மக்களவைத் தலைவர் மூலமாகச் சொல்கின்றனர். பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிடக் கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும். பாசிசக் கொள்கையை க்கடைப்பிடிக்கும் பாஜகவுக்கு அவசரநிலை குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர். 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்?

நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன்பிறகு மக்கள் அவரை மீண்டும் பிரதமராக்கினார்கள்.

மோடியைக்கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால், அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சினை. அதனால்தான், அவரை அப்படி நம்ப முடியவில்லை” என்று ஆ. ராசா கூறினார்.

ஆனால் இவர்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு சென்று முகலாயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்கிறார்கள் “முகலாயர்கள் துருக்கியில் இருந்து ஆட்சி செய்யவில்லை. இங்கே வந்தார்கள் ஆட்சி செய்தார்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து ஆட்சி செய்த முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், அதற்கு முன்பாக கைபர், போலன் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்களும் அந்நியர்கள் தான். இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் என்ற உரிமையைக் கொண்டாடத் தகுதிவாய்ந்தவர்கள் திராவிடர்கள் மட்டுமே” இதை அம்பேத்கர் கூறினார்.

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளேன். ‘‘சட்டத்தின் படி இன்றும் தாழ்த்தப்பட்டவன் என்றே அழைக்கப்படுகிறேன், எனது முன்னோர்கள் வறுமையின் காரணமாக இலங்கை சென்று பொருள் ஈட்டினார்கள். அவர்களுக்குக் கல்வி அறிவு இல்லை. ஆனால் இன்று அவர்களது வாரிசான நான் இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியோடு சமமாக அமர்ந்திருக்கிறேன். எனது மகள் இலண்டனில் மிகவும் புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கிறார்.

இது எப்படி வந்தது? யார் தந்தது? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் உழைப்பு – இவர்களின் திராவிடக் கொள்கை, ஆகவே தான் திராவிடக்கொள்கை இந்தப் பேரண்டம் எங்கும் பரவேண்டும் என்கிறேன். எனவே, திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்குத் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

அதானி மோசடி விவகாரத்தில் பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. எதிர்க்கட்சிகள் 15 நாட்கள் கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பைத் தெரிவித்தும், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. முறைகேடுகளுக்குப் பதில் அளிக்காமல் மவுனமாக இருக்கும் அரசை இதுவரை நான் பார்த்ததில்லை என்ற வரலாற்றுச் சிறப்புரையை மக்களவையில் பதிவு செய்தார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா.

நூறாண்டு காலமாக தமிழ்நாட்டில் மட்டுமே ஒலித்த திராவிடக் குரல் தற்போது இந்தியா எங்கும் ஒலிக்கத் தொடங்கியதன் அடையாளம்தான் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் திராவிடக் குரல்.

இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆரியச் சித்தாந்தம் தகர்க்கப்பட்டு, திராவிடத்தின் சமூக நீதிக்குரல் எழுவதன் எழுச்சி தான் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா என்ற பெண் எம்.பியும் சமூகநீதிக் குரலை பிரதமரே அதிரும் வண்ணம் ஒலித்து வருகிறார். இது மேலும் அதிகமாகும், வளரும்! 