எதிரும் புதிரும் -… இரா. அழகர் ..

2024 சிறுகதை ஜுலை1-15-2024

‘‘என்னங்க இன்னும் என்னதான் பண்றீங்க போட்டு வச்ச டீ ஆறிடிச்சி. படிச்சது போதும். டீயை குடிச்சிட்டு எழுந்து போய் குளிங்க’’.

சமையற்கட்டில் இருந்து வெளியே பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த தன் கணவனைப் பார்த்து சத்தமிட்டாள் விசாலாட்சி.

“காலையிலையே டென்சன் ஆகாத, நான் குளிக்க போறேன். பிள்ளைங்க கிளம்பறாங்களான்னு கேளு” மனைவிக்குப் பதில் சொல்லிக் கொண்டே டீயை ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு டவலைத் தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் சென்றார் சண்முகம்.

“உங்க பிள்ளைங்க உங்களப் போலதானே இருக்கும்? காலையில எழுந்திருச்சு ஒன்னாவது உருப்புடுற வேலையைப் பார்க்குதா காலையிலேயே கிரிக்கெட் மேட்ச் வச்சுக்கிட்டு டி.வி. முன்னால ஒன்னு உட்கார்ந்திடுச்சு பொண்ணா பொறுப்பா இருக்க வேண்டியது இன்னும் தூங்குது”.

விசாலாட்சியின் கத்தலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பாத்ரூம் கதவைத் தாழிட்டார் சண்முகம். சண்முகமும் விசாலாட்சியும் எப்போதும் எதிரும் புதிரும் தான். காரணம், சண்முகம் நாத்திகம்; விசாலாட்சி ஆத்திகம். இவர்களின் பிள்ளைகள் முகிலும் கீதாவும் சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு அப்பா பிள்ளையாகவும் அம்மா பிள்ளையாகவும் மாறிக் கொள்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே விசாலாட்சி இவ்வளவு படபடப்பதற்குக் காரணம் கோயிலுக்குச் சென்று வர வேண்டும் என்ற காரணம்தான். சண்முகம் எப்போதும் போல் தன் நாத்திகக் கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு கோயிலுக்குப் புறப்படத் தயாரானார்.ஆனால், இன்று பிள்ளைகள் அப்பா பக்கம். கோயிலுக்குச் செல்லும் எண்ணத்தில் இல்லை. அந்தக் கோபம்தான் விசாலாட்சியைக் காலையிலேயே படபடக்க வைக்கிறது.

‘முகில் இப்ப நீ என்னதான் சொல்லுற, கோயிலுக்கு வரப்போறியா இல்லையா”.

“சாரிம்மா என்னால வரமுடியாது. இன்னிக்கி முக்கியமான டோர்னமென்ட் மேட்ச் இருக்கு.”

“எப்படியோ போ. உன் தங்கச்சியாவது வருவாளாமா மாட்டாளாமா.”

“எனக்குத் தெரியாது. அவ கிட்டயே கேட்டுக்க.”

கோபமும் முணுமுணுப்புமாக கீதாவின் அறையினுள் நுழைந்தாள் விசாலாட்சி. கீதாவோ விடிவதே தான் உறங்கத்தான் என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தத் தொடங்கினாள்.

போர்வையை விலக்கிவிட்டு கீதாவை உசுப்பினாள் விசாலாட்சி. “என்னம்மா நீயாவது கோயிலுக்கு வர்றியா இல்ல… ஏதும் காரணம் இருக்கா?

“இல்லம்மா எக்ஸாம் இருக்கு, என்னால வர முடியாது.”

“ஏழு மணி வரையிலும் இழுத்துப் போர்த்தித் தூங்குற, கோயிலுக்கு வான்னு கூப்பிட்டா எக்ஸாம் இருக்குங்கிற, எப்படியோ போ.

ஒருத்தர் கூட என் பேச்ச கேக்குறதா இல்ல”.

மகள் கீதாவைத் திட்டிக் கொண்டே விசாலாட்சி அறையிலிருந்து வெளியே வரவும், சண்முகம் பாத்ரூமில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

“என்ன விசாலாட்சி கிளம்பலாமா. இல்ல டிபன் முடிச்சுட்டுப் போயிடுறதா”.

“டிபன் எடுத்து வச்சிருக்கேன் சாப்பிடுங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன்”.
இருவரும் எட்டு மணிக்கெல்லாம் கோயிலுக்குப் புறப்படத் தயாரானார்கள்.

“ஒரு நிமிஷம் இரு விசா, வண்டிய வெளிய கொண்டு வந்திடறேன். வண்டியில போயிடலாம்.”

‘‘வேணாங்க பஸ்லேயே போய்டலாம்.’’

“ஏன் என்னாச்சு விசா. எப்பயும் வண்டியில போலாம்னு சொல்லுவ. இன்னைக்கு அதிசயமா பஸ்ல போலாம்ங்கிற”.

”ஆமாங்க, வண்டியில போனா பஸ் செலவை விட ரெண்டு மடங்கு பெட்ரோல் செலவு ஆகுது. அது தேவையில்லாத செலவுதானே?”

“ஓ அந்த சிக்கனம்தான் காலையில எனக்கு டிபன் செஞ்சு தர்ற அளவுக்குப் போச்சோ”

“நக்கல் வேண்டாம், கிளம்பலாம்.”

“சரி வா கிளம்பலாம்.”

இருவரும் பேருந்தில் கோயில் வந்து சேர்ந்தனர்.

கோயில் வாசலில் கட்டிலை மேடையாக்கி அதில் அர்ச்சனைத் தட்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர் வியாபாரிகள். ஒரு தேங்காய், இரண்டு பழம், ஒரு சூடம், பத்தி பாக்கெட், சிறிது வெற்றிலை பாக்கு, ஒரு நெய் விளக்கு சேர்ந்த அர்ச்சனைத் தட்டு சர்வசாதாரணமா நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தனர்.

முதல் கடையில் அர்ச்சனைத் தட்டு விலையைக் கேட்டு விட்டு வேண்டாமென்று விலகி இரண்டாம் மூன்றாம் கடைகளை நோக்கிச் செல்லத் தொடங்கினாள் விசாலாட்சி.

சண்முகத்தால் நம்பவே முடியவே இல்லை. நம்ம விசாலாட்சியா இப்படி என்று மலைத்துப் போனார்.

“என்னைக்காவது ஒரு நாள் கோயிலுக்கு வர்றோம். எதற்கு இப்படி கஞ்சத்தனம் என்று காலையில் டிபன் உண்பது முதல் கணக்குப் பார்க்காதவள், இன்று எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்க்கிறாள் எனில், இது வெறும் சிக்கனம் மட்டும்தானா வேறு ஏதாவதா!…’’ குழம்பியபடி எதுவும் பேசாமல் விசாலாட்சியைப் பின் தொடர்ந்தார் சண்முகம்.

இறுதியாக அந்தக் கடையில் பேரம் படிவதாக இருந்தது.

‘‘இங்க பாருப்பா. இதே அர்ச்சனை தட்டு வெளியில முப்பது ரூபாய்க்கு வாங்கி வர முடியும். நீ என்னாடான்னா சாஸ்தி ரேட் சொல்ற.”

“எண்பது ரூபா கொடுத்து எடுத்துக்கம்மா”

“அறுபது ரூபா தாரேன்.”

“உனக்கு வேணாம் எனக்கும் வேணாம்,
எழுபது கொடுத் துரும்மா இந்தா
தட்டப் புடி.”

எழுபது ரூபாயை எண்ணித் தந்துவிட்டு அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர் சண்முகம் விசாலாட்சியும்.

உள்ளே நுழைந்ததுமே மூன்று வரிசைகள் கண்ணில் பட்டது. கட்டணமில்லா இலவச தரிசனம். கடவுளை அருகில் சென்று பார்க்க கூடிய இருநூற்றி அய்ம்பது ரூபாயில் வி.அய்.பி. தரிசனம் மற்றும் சாதாரண மக்களுக்காக ரூபாய் நூறு கட்டணத்துடன் சிறப்பு தரிசனம்.

“விசா நாம எந்த வரிசையில நிக்கிறது”.

”நூறு ரூபா ரசீது வாங்கிட்டு வாங்க. இந்த வரிசையில நின்றுக்கலாம்.”

விசாலாட்சி கை காட்டிய வரிசையில் நிற்பதற்காக ரசீது வாங்கி வந்து வரிசையில் நிற்கத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு பிறகு வரிசை கடவுளுக்கு ஒரு சில அடிகளுக்கு முன்னால் தடுப்பு மரங்கள் கொண்டு தடுக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகே கொண்டு வந்து சேர்த்தது.

ஒரு வழியாக கடவுளைப் பிரார்த்தித்து விட்டு அர்ச்சனைத் தட்டில் பணம் ஏதும் செலுத்தாமல் உண்டியலில் மட்டும் பத்து ரூபாயைச் செலுத்திவிட்டு வெளியே வந்தாயிற்று.

அர்ச்சனைத் தட்டில் பணமே செலுத்தாதது சண்முகத்திற்கு இன்னுமொரு ஆச்சரியம்! ‘‘நிச்சயம் இது சிக்கனம் இல்லை; வேறு ஏதோ! என்னவாக இருக்கும்?’’ கேள்விகள் மனதைக் குடையத் தொடங்கியது.

ஒரு வழியாக கோயிலுக்கு வந்ததற்கான பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு, மதியம் ஒரு ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தொடங்கினார்.

சண்முகம் மனதில் சிக்கனம் மட்டும் தானா, வேறு ஏதாவது… என்ற கேள்வி குடையத் தொடங்கியது. பேருந்தில் கேட்டு விடலாமா என்று யோசித்து பின் அந்த யோசனையைக் கைவிட்டார். வீடு போய்ச் சேரும்வரை பொறுமை காப்போம் என முடிவெடுத்தார்.

சில மணி நேரப் பயணத்திற்குப் பின் வீடு வந்து சேர்ந்தனர். மெல்ல சண்முகமே பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.

“இன்னிக்கு அமாவாசை; அதனால கோயில்ல கூட்டம் அதிகம் இல்லையா விசா.”
“ஆமாங்க.”

“ஆனா பாரு விசா, எப்பயும் கோயிலுக்குப் போகிறப்ப பக்தியோட இருப்ப; இன்னைக்கு அது மிஸ்ஸிங்.”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க.”

“காலையில பஸ்ல போறதிலிருந்து கோயில்ல அர்ச்சனைத் தட்டுல காசு போடாத வரைக்கும் எல்லாமே உங்கிட்ட மாற்றம். இதை எல்லாம் சிக்கனங்கிற ஒரு வார்த்தையில சமாளிச்சிட முடியாது.”

“உண்மைதாங்க. கோயில்ல கூட முன்ன மாதிரி முழு மனசா என்னால சாமி கும்பிட முடியல. நீங்க சொல்லுவீங்களே கோயில்ல அய்யருங்க சொல்லுற பல மந்திரங்கள்ள ஒன்னா இதையும் சொல்வாங்கனு.”

”என்ன மந்திரம்.”

“அதாங்க. ஏக மாதா பகு பிதா சற் சூத்ராய நமஹ”

“அதுக்கென்ன.”

“அந்த மந்திரத்த அய்யர் சொல்லுறாரானு கவனிக்கத் தான் தோனுச்சு.”

“அதனாலயா பக்தி குறைஞ்சு சிக்கனம் அதிகமாச்சு?”

“இல்லைங்க, நீங்க சொன்ன மாதிரி உண்மையாலுமே கடவுள் இல்லேனா கடவுள நினைச்சுச் செய்யுற அத்தனை செலவுமே வீண்தானே?”

“உண்மைதான்!”

“கடவுள் பேரச் சொல்லி நாம் செய்யுற ஆடம்பரச் செலவும், கோயில்ல விக்கிற அர்ச்சனைத் தட்டும் அய்யரு நீட்டுற அர்ச்சனைத் தட்டும் அநியாயமா நம்மகிட்ட காச பிடுங்கும் போதும் கண்டிப்பா கடவுள் இருக்குங்கற நம்பிக்கை இல்லாமப் போயிடுது.”

“இது மட்டும் தானா”.

“கடவுள் இல்லேனு சொல்றவங்க தன்னோட பிரச்சனைய, தானே எதிர்கொள்ளுற தன்னம்பிக்கை
யோடு இருக்கும்போது, கடவுள் இருக்குனு சொல்லுறவங்க தன் பிரச்சனைய கடவுள் மேலே சுமத்திட்டுத் தப்பிக்க குறுக்கு வழியைத் தேடறதும் இல்லாம… பெரும்பாலும் சுயநலமாவே இருக்காங்க.”

”ஆமா… நீ மாறிட்டேன்னு சொல்லு.”
நீங்க சொன்ன உலகம் உருவானது எப்படி – உயிர்கள் உருவானது எப்படிங்கற பல அறிவியல் காரணங்கள் எனக்குப் பிடிபடாததால் கடவுள் நம்பிக்கை இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் கடவுள் பேரைச் சொல்லி நடக்கிற எல்லா விசயங்களையும் சந்தேகத்தோட பார்க்கத் தோணுது!”

”பாராட்டுகள். இந்தச் சிந்தனைதான் பகுத்தறிவின் முதல் படி. நிச்சயம் நீ மாறுவ. நீ மாறினா நம் தலைமுறையே மாறும்.”

சண்முகத்தின் மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்தது. ஒரு பெண் கற்றிருந்தால் அது அவளின் பிள்ளைகளுக்கு மட்டுமே உதவும். அதுவே பகுத்தறிவோடு சிந்திக்க தொடங்கினால் அது அவளது தலைமுறைக்கும் பயனளிக்கும் என்ற கூற்றுப்படி தம் தலைமுறையே பகுத்தறிவோடு செழிக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.