‘நீட்’ தேர்வில் மட்டுமா முறைகேடு ? ‘நீட்’ தேர்வே முறைகேடுதான் ! ‘நீட்’டை ஒழிப்பதே தீர்வு !

2024 முகப்பு கட்டுரை ஜுலை1-15-2024

“கேஸ்லைட்டிங்” (Gaslighting) எனும் உளவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் மீது, நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை, நாமே இழக்கும்படி செய்து, நம்மை யார் ஏமாற்ற நினைக்கிறாரோ, அவர்தான் நமக்கு நன்மை செய்கிறார் என்று நாம் நம்பும் அளவிற்கு, நம் மீது பாசமும் அக்கறையும் காட்டுவது போல் நடித்து, நமது அன்பையும் நம்பிக்கையையும் நமக்குத் துரோகம் இழைப்பவர் பெற்றுவிடுவார். நம்முடன் இருப்பவர்கள்- உண்மையில் நம்மீது அக்கறை உள்ளவர்கள்- சொல்வதை ஏற்க மறுக்கும் மனநிலைக்கு நாம் ஆளாக்கப்படுவோம். இந்த உளவியல் தாக்குதலைத்தான் “கேஸ்லைட்டிங்” என்பர்.

மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அதன் மதிப்பெண் அடிப்படையில் மகிழ்ச்சியுடன்

கல்லூரியில் சேர்ந்து, உயர்கல்வி பெற்று, தமக்கு ஆர்வம் இருக்கும் துறைகளில் சாதனை படைத்து வந்தனர் நம் மாணவர்கள்.

இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI), தனது ஊழல்களை மறைக்க, அறிமுகப்படுத்தியதுதான் “நீட்”.

2010இல் எம்.சி.அய். ஒழுங்குமுறையாக (MCI Regulation) நடைமுறைக்கு வர இருந்த “நீட்”, அன்றைய தேதியில் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்து சட்டம் இயற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று, உயர் நீதிமன்றம், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வு இரத்துச் சட்டம் செல்லும் என்று தீர்ப்புக் கூறியிருந்தது.

சட்டமா அல்லது ஒரு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறையா? (Legislation or subordinate legislation) எது நிலைக்கும்? என்ற கேள்வி எழுந்தது.

எம்.சி.அய். ஒழுங்குமுறை, எம்.சி.அய். சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு மாநிலத்தைப் பொறுத்தவரை மாநிலச் சட்டமன்றம் இயற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற சட்டமே செல்லும் என்று “நீட்” ஒழுங்குமுறையை இரத்து செய்து, 2013இல் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்கு விசாரணை முடிந்து 2016ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்க நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை ஏழின் கீழ் ஒத்திசைவுப் பட்டியல் எனப்படும் பட்டியல் மூன்றில் இடம்பெற்றுள்ள பொருள் மீது மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டா? என்ற‌ விசாரித்துத் தீர்ப்பு வழங்க இருந்தது.

இந்தத் தீர்ப்பு வரும் வரை கூட காத்திருக்காமல், 2013இல் மே மாதம் எம்.சி.அய். தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை, அவசர அவசரமாக 2016 ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்து, 2013ஆம் ஆண்டு “எம்சிஅய் ஒழுங்குமுறை இரத்து” என்று வழங்கப்பட்ட தீர்ப்பு “திரும்பப் பெறப்படுவதாக” உச்சநீதிமன்றம் அறிவித்தது. எந்தக் காரணமும் கூறாமல், வழக்கை முழுமையாக அரசமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

2016 ஏப்ரல் மாதத்தில் இந்த உத்தரவு வெளியான ஒரு சில வாரங்களில், மின்னல் வேகத்தில் “சங்கல்ப்” என்ற‌ அமைப்பு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து, ஏன் இன்னும் “நீட்” நடைமுறைக்கு வரவில்லை என்ற கேள்வியை எழுப்பியது.

‘சங்கல்ப்’ வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஅய்) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இரண்டும் தாங்கள் “நீட்”டை நடைமுறைப்படுத்தத் தயார் என்று கூற,

“தயார் என்றால் நடத்துங்கள்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. “தயார் என்றால் நடத்துங்கள்” என்று உச்ச நீதிமன்றம் சொன்ன ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம்தான் “நீட்” நடைமுறையே அறிமுகப்படுத்தியதுபோல் சித்திரிக்கத் தொடங்கினார்கள். இன்று வரை “நீட்” என்கிற பெயரில் நடக்கும் அனைத்து அநியாயத்திற்கும் எந்த முகாந்திரமும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தின் மீது பழி சுமத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மே 2, 2016 வழங்கப்பட்ட மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்குத் தீர்ப்பில், இளநிலைப் பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்ற அய்ந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற நிலைக்குழுவால் ஆராயப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழு தனது 92ஆவது அறிக்கையை வழங்கியது. அறிக்கை மார்ச் 8, 2016 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு அதுவே , மார்டன் டென்டல் கல்லூரி வழக்குத் தீர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது.

மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்குத் தீர்ப்பின் நோக்கத்திற்கு நேரெதிராக, அத்தீர்ப்பு வெளிவந்த பின்னர், எம்சிஅய் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். அதன்படி பிரிவு 10(D) எம்சிஅய் சட்டத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்தியா முழுக்க “நீட்” கட்டாயமாக்கப்பட்டது.

2017 – 18 கல்வி ஆண்டு முதல் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட “நீட்” நடைமுறை இந்தியா முழுக்க ஏழ்மையை வென்று உயர் கல்வி பயில வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்தது.

“நீட்” என்பது சந்தையின் சூழ்ச்சி, வணிகத்தின் சூதாட்டம் என்பதை முதலில் உணர்ந்து வெளிப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் தமிழ்நாடு மாநிலத்திற்கானது மட்டுமல்ல. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது போல் பிற மாநிலங்களில் அரசியல் கட்சிகள் ஆதரவு நிகழவில்லை.

வல்லுநர் குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு இரண்டிலும் தகுதித் தேர்வு குறித்து எந்தப் பரிந்துரையும் இல்லை. மருத்துவக் கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எந்தெந்த மாநிலம் விரும்பவில்லையோ அந்தந்த மாநிலங்களை விலக்கி வைத்துவிட்டு நடத்தவே பரிந்துரைக்கபட்டது. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருந்தது. இந்த உண்மைகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டன.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வல்லுநர் குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரைகளை நிதிஆயோக் ஏற்கத் தயாராக இல்லை.

தனியாரைக் கட்டுப்படுத்தினால் யாரும் மருத்துவக் கல்லூரி நடத்தவே முன் வரமாட்டார்கள். எனவே, தனியார் கட்டணங்களைஅரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதே நிதி ஆயோக் நிலைப்பாடு. பல்வேறு எதிர்ப்புகளால் சில இடங்களுக்கு மட்டும் கட்டணத்தை அரசு தீர்மானிக்கலாம்; அதே வேளையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை “நீட்” அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும் என்று நிதிஆயோக் பரிந்துரைத்தது.

நிதிஆயோக் தயார் செய்த தேசிய மருத்துவ ஆணையச் சட்ட வரைவுக்கு நாடாளுமன்ற நிலைக் குழுவில், பல உண்மைகளை மறைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (NMC Act), 2019 பிரிவு 14இன் படி மருத்துவப் படிப்பில் நுழைய “நீட்” நடைமுறையும், பிரிவு 15இன் படி அய்ந்தாண்டுப் படிப்பை முடித்து வெளியே வர “நெக்ஸ்ட்” நடைமுறையும் கட்டாயமாக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு தொடங்கி “நீட்” நடைமுறையில் ஆண்டுக்காண்டு விதவிதமாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முறைகேடுகளின் உச்சமாக தேசியத் தேர்வு முகமையே (NTA) நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

“நீட்” எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல் மற்றும் மதிப்பெண் குறைத்தல் (Negative Marking) நடைமுறை அறிவிக்கப்பட்டு அதன்படி பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் “நீட்” எழுதினார்கள். அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கும் / விதிகளுக்கும் மாறாக இந்த ஆண்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

நேர இழப்பை ஈடுசெய்யவோ, கேள்வி தவறாக இருந்தால் அதற்கு உரிய முழு மதிப்பெண் வழங்கவோ வாய்ப்புள்ளதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவிக்கவில்லை.

மாறாக, எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கப்பட்டு இருக்கும். சரியான பதிலைத் தேர்வு செய்தால் விடைக்கான முழு மதிப்பெண் அதாவது நான்கு மதிப்பெண் தரப்படும், தவறான விடையைத் தேர்வு செய்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது.

தவறான விடை இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் தேசியத் தேர்வு முகமையின் நிலைப்பாடு. அவ்வாறு இருக்க எப்படி, யாருக்கு நன்மை பயக்கும் விதமாக “நேர இழப்பு மதிப்பெண்” மற்றும் “தவறான விடைக்கான மதிப்பெண்” தரப்பட்டது? என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.‌

நேர இழப்பிற்கு மதிப்பெண் தரப்படுவதற்கும், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில் இருந்தால் அந்தக் கேள்விக்குரிய முழு மதிப்பெண் தரப்படுவதற்கும் எங்கு, யாரால், எப்போது, எதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.

விமர்சனம் எழுந்த பிறகு, நேர இழப்பீடு மதிப்பெண் வழங்கியதற்குத் தொடர்பே இல்லாத சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டுகிறது தேசியத் தேர்வு முகமை.

“தேசியத் தேர்வுமுகமையின்
முறைகே டுகள் மக்களின்
கவனத்துக்குச் செல்லக் கூடாது என்ற
நோக்கத்தில், திட்டமிட்டு, நாடாளுமன்ற த்
தே ர்தல் முடிவுகள் வெ ளியான
ஜூன் 4 அன்று காலை எந்த வித
முன் அறிவிப்பும் இல்லா மல் “நீட்’
முடிவு வெளியிடப்பட்டது”.

நேரம் இழப்பீடு குறித்துப் புகார் தெரிவித்தவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்வு மய்யத்தில் தேர்வு நடத்துபவரின் தவறால், தனக்குரிய நேரத்தை, தான் இழந்து இருந்தாலும், புகார் தெரிவிக்கும் நடைமுறை குறித்துத் தெரியாதவர்கள் எவ்வாறு புகார் தரமுடியும்?

இழப்பு மதிப்பெண் பெற்றவர்களில் 50 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண் பெற்றவர்கள் என்ற தகவல் வெளிவந்தவுடன், யாரோ ஒரு “வல்லமை படைத்தவர்” அவர் விரும்பும் கல்லூரியில் சேர உதவுவதற்காக நேர இழப்பு மதிப்பெண் வழங்கப்பட்டதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

“நீட்” நடைமுறைக்கு வந்த 2017 முதல் விதவிதமான முறைகேடுகள் நடந்துள்ளன. பல்வேறு குற்றவியல் வழக்குகள் விசாரணையில் உள்ளன.

குற்றம் புரிந்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால், குறிப்பிட்ட ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில், இரண்டு இடங்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வீணாகப்போனது.

இதுவரை நடந்த முறைகேடுகளில், தேர்வு மய்யம், பயிற்சி மய்யம், தேர்வர்கள் ஆகியோர் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தேசியத் தேர்வு முகமையே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

தேசியத் தேர்வு முகமையின் முறைகேடுகள் மக்களின் கவனத்துக்குச் செல்லக் கூடாது என்ற நோக்கத்தில், திட்டமிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்று காலை எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் “நீட்” முடிவு வெளியிடப்பட்டது.

தேசியத் தேர்வு முகமை முறைகேடுகள் முடிவுகள் வெளியான இரண்டொரு நாட்களில் அம்பலமானவுடன், ‘நீட்’ புனிதத் தன்மையே பாதிக்கப்பட்டுவிட்டதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்த பின்னர், தான் வழங்கிய நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்களைத் திரும்பப் பெறுவதாக தேசியத் தேர்வு முகமை அறிவிக்கிறது.

நினைத்தபோது வழங்கவும், திரும்பப் பெறவும் இது என்ன தனி நபர் சார்ந்த சிக்கலா?

இந்த ஆண்டு 24 இலட்சம் பேர் “நீட்” எழுதியுள்ளனர். இதில் பல இலட்சம் பேர் இரண்டாவது முறை, மூன்றாவது முறை எழுதுபவர்கள். 24 இலட்சம் குடும்பங்கள் இதற்காகத் தனது சேமிப்புகளை இழந்துள்ளது. சுமார் 1500 பேருக்குத் தேசிய முகமை தனது இஷ்டத்திற்கு மதிப்பெண் வழங்குவதும், பின்னர் திரும்பப் பெறுவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாதது.

ஒன்றியக் கல்வி அமைச்சர், சிக்கல் பூதாகரமாக வெடித்தவுடன் “தேசியத் தேர்வு முகமை தவறு செய்ய வாய்ப்பே இல்லாத‌ அமைப்பு” என்று வர்ணித்தார். இரண்டொரு நாட்களில் இரு வகையான தவறு நடந்துள்ளது என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.

ஒன்று தேசியத் தேர்வு முகமையே மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு செய்துள்ளது‌.மற்றொன்று, கடந்த காலங்களில் நடந்ததுபோல், இந்த ஆண்டும், பல்வேறு இடங்களில், வெவ்வேறு விதமாக, தேர்வு நடந்த மய்யம் மற்றும் பயிற்சி மய்யம் ஆகியவை தொட ர்புடைய முறைகேடுகள் நடந்துள்ளன.

பீகாரில் தேர்வுத் தாள் கசிவு புகார். வழக்குப் பதிவுசெய்து, காசோலைகளைக் கைப்பற்றி, தேர்வு நடந்த மய்யம் மற்றும் பயிற்சி மய்யம் இரண்டும் கேள்வித்தாள் கசிவில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

விடைத்தாளில் தெரிந்த விடையை மட்டும் தேர்வர் எழுதுவது, தெரியாத விடைகளைப் பயிற்சி மய்யத்தைச் சார்ந்தவர்கள் எழுதிக் கொள்வது என்ற முறைகேட்டில் குஜராத்தில் தேர்வு மய்யமும் பயிற்சி மய்யமும் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டுள்ளன. தேர்வு எழுதிய பின்னர் தேர்வர்களிடமிருந்து விடைத்தாள் பெறப்பட்ட நேரத்திற்கும், தேர்வு மய்யத்திலிருந்து விடைத்தாள் எடுத்துச் செல்லப்படும் நேரத்திற்கும் இடையில் உள்ள நேரத்தை இந்த முறைகேடு நடக்கப் பயன்படுத்துவது என்பதே இவர்களின் திட்டம்.

“நீட்” எழுதும் போது இத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன என்றால், நடந்த பின்னர் தேர்ச்சி பெற்றவர்களை வரிசைப்படுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு “நீட்” நடைமுறையில் உள்ள பர்சன்டையில் (Percentile) முறை தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரும் மோசடி நடக்க வழி வகுத்துத் தந்துள்ளது.

இந்த ஆண்டு பொதுப் பிரிவில் 720 மதிப்பெண்ணுக்கு 164 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தொடங்கி 720 பெற்றவர்கள் வரை 50வது ஃபர்சன்டையில் (Percentile) இடம்பெற்றுள்ளனர்,

அதாவது “நீட்”டில் மொத்த மதிப்பெண்ணான 720இல், 164 மதிப்பெண் பெற்றிருந்தாலே மருத்துவப் பட்டப் படிப்பில் சேரத் தகுதி பெற்றுவிடுகிறார்கள். கடந்த ஆண்டு 137 பெற்றிருந்தாலே மருத்துவப் பட்டப் படிப்பில் சேரத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.‌

2018 ஆம் ஆண்டு +2 முடித்த மாணவி ஒருவர், இராஜஸ்தான் மாநிலம் கோட்டா (Kota) வில் உள்ள‌ பயிற்சி மய்யத்தில் சேர்ந்து இரண்டாண்டுகள் பயிற்சி எடுத்து, கடந்த(2023) ஆண்டு 720க்கு 610 மதிப்பெண் பெற்றும், அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல், மீண்டும் ஓராண்டு பயிற்சி மேற்கொண்டு, இந்த (2024) ஆண்டு 720க்கு 650 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தரவரிசையில், தான் பத்தாயிரத்திற்குள் வர வாய்ப்பு இல்லை, எனவே, இந்த ஆண்டும் தனக்கு அரசுக் கல்லூரியில் சேர வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் 50 விழுக்காடு (50%) இடங்களுக்கு நிருவாகமே தங்களுக்குத் தேவையான அளவு கட்டணத்தைத் தீர்மானித்துக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 உரிமை வழங்கி உள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டிற்கு ரூபாய் பதினைந்து இலட்சத்திலிருந்து இருபத்தைந்து இலட்சம்வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.‌

அதாவது கல்விக் கட்டணமாக அய்ந்தாண்டுப் படிப்புக்கு எழுபத்தைந்து இலட்சத்திலிருந்து ஒன்றேகால் கோடி வரை கட்டணம் செலுத்த வாய்ப்புள்ளவர் மட்டுமே சேர முடியும்.

அரசுக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிய பின்னர் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தால் “நீட்” மதிப்பெண் 650 என்றாலும் பணம் செலுத்த முடியாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. அந்த இடங்கள், பணம் செலுத்த வாய்ப்பு இருந்தால், இந்த ஆண்டு 164 மதிப்பெண் எடுத்தவருக்குக் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதனால்தான், கடந்தாண்டு 610 எடுத்தும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மாணவி, இந்த ஆண்டு 650 எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்ற தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

மொத்தத்தில் “நீட்” மருத்துவ மாணவர் சேர்க்கையால் தகுதியையும் உறுதிப்படுத்த முடியவில்லை, வணிக மயத்தையும் ஒழிக்க முடியவில்லை.

மாறாக, பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வி வரை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சந்தைதான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கிறது. வணிகத்தின் இலாப வெறிக்கு மாணவர்கள் இரையாக்கப்படுகிறார்கள்.

பள்ளியில் வகுப்பறை கற்பித்தல்- கற்றல் செயல்பாடு நடக்காமல், பயிற்சிக் கூடங்களில் பயிற்சியாளர் “நீட்” நடைமுறைப்படி தங்களைத் தயார் படுத்திக் கொள்ள, பள்ளி வேலை நேரத்திலேயே மாணவர்களுக்குப் பயிற்சி தருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பகிரங்கமாக வைக்கப்படுகிறது.

பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தி மாணவர்கள் சேர்வார்கள், அதே மாணவர்கள் “நீட்” பயிற்சி நிறுவனங்களுக்கும் பதினெட்டு சதவிகித ஜிஎஸ்டி வரியுடன் கட்டணம் செலுத்துவார்கள்.

ஆக, இரண்டு கட்டணங்களை பெற்றோர் செலுத்துகின்றனர். மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர் கற்பிப்பதற்குப் பதிலாக பயிற்சி நிறுவனப் பயிற்சியாளர்கள் நேரடியாக “நீட்” நடைமுறையை எதிர்கொள்ளப் பயிற்சி அளிப்பார்கள். இதைத் தான் டம்மி பள்ளி கோட்பாடு (Dummy School Concept) என்கின்றனர்.‌

கடந்த ஆண்டு அன்றைய இராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திரு. அசோக் கெலாட் அவர்கள் “டம்மி பள்ளிகள்” என்ற நடைமுறை இருப்பதைக் குறிப்பிட்டு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார்.

“நீட்” விளைவாகப் பலரும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுக்கத் தயங்குகின்றனர்.‌

“நீட்”டில் முறைகேடு என்பதை விட “நீட்” டே முறைகேடுதான் என்பதை நாம் உணர வேண்டும். வணிகத்தின் சூதாட்டமாக இன்று நடைமுறையில் “நீட்” உள்ளதை இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். “நீட்” முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

நீட்டை எதிர்க்கும் போராட்டம்
அரசமைப்பைக் காக்கவுந்தான் !

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246இன் கீழ் மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுக்குக் கூறு 254(2)இன் படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத் தருவது‌ ஒன்றிய‌ அரசின் கடமை.

பல்வேறு மாநிலங்கள் உள்ள இந்தியாவில் நாடு முழுக்க ஒரு சட்டம் இருக்கும் போது, ஒரே ஒரு மாநிலம் தனக்கென ஒரு சட்டம் இயற்றிக் கொண்டால், அந்தச் சட்டத்தை அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் செல்லத்தக்கதாக்க உருவாக்கப்பட்டதே அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறு 254(2). எனவே, ஒரு மாநிலம் மட்டும் கேட்டால் எப்படி? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒரு மாநிலம் கோரினால், அதன் உரிமையை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்திய அரசமைப்புச் சட்டம்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் அவர்கள் “ஒரே நாடு; ஒரே முழக்கம்; “நீட்”அய் இரத்து செய்” என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

*ஒன்றிய அரசு “நீட்” நடைமுறையைத் திரும்பப் பெறவேண்டும்.

*தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள இளம்நிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கி, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வழிவகுக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோரும் போராட்டம், “நீட்” நடைமுறையில் இருந்து விலக்கு கேட்கும் போராட்டம் என்றோ, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான போராட்டம் என்றோ குறுகிப் பார்க்க இயலாது. மக்களாட்சியின் மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற போராட்டம் என்பதை உணர வேண்டும்.