மறக்கமுடியாத பார்ப்பனக் கொடுமைகள்!- மே 16-31 இதழ் தொடர்ச்சி…

குடியரசு ஜுன் 16-30 2024

காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத தலைவர்களைப் பார்ப்பனர்கள் எவ்வாறு வஞ்சத்தால் பழிவாங்கினர் என்பது குறித்து “அம்பலத்து அதிசயம்” என்னும் தலைப்பில் ‘குடிஅரசி’ல் ஒரு தலையங்கம் வெளியானது.

‘‘தேச விடுதலை விஷயத்தில், பிராமணரல்லாதார் பொது நன்மையை உத்தேசித்து அநேக பிராமணர்களுடைய கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கூட்டாக்காமல் கபடமற்று பிராமணர்களுடன் ஒத்துழைத்து வந்திருந்தாலும், அவர்களுடைய உழைப்பையெல்லாம் தாங்கள், தங்கள் வகுப்பு சுயநலத்திற்கென்று அனுபவித்துக் கொள்வதல்லாமல் உழைக்கின்ற பிராமணரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும் துரோகங்களையும் செய்து வந்திருக் கின்றார்களென்பதை – செய்து வருகின்றார்களென்பதைப் பொறுமையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.

முதலாவது, பழைய காலத்திய தேசியவாதிகளில் சிறந்தவர்களில் சர்.சி. சங்கரன் நாயர் என்கிற பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார். அவர் காங்கிரசிலும் தலைமை வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பிராமணர்
கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்குக் கிடைக்கவிருந்த அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவியைக் கிடைக்கவொட்டாத படிக்குச் செய்ய எவ்வித பொது நலத்திலும் தலையிட்டிராத, சர்.வி. பாஷ்யம் அய்யங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்ததோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளையெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, அய்ந்து வருஷங்களுக்கு முன்னதாகவே கிடைக்க வேண்டிய அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவி வெகு காலம் பொறுத்துத்தான் கிடைத்தது.

டாக்டர் டி.எம். நாயர் அக்காலத்திய தேசியவாதிகளில் மிகவும் முக்கியமான பிராமணரல்லாத தேசியவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர்.அவரையும், மைலாப்பூர் பிராமணர்கள் ஓர் முனிசிபாலிட்டியில் கூட அவர் உட்காருவதைப் பொறுக்காமல், அவருக்கு விரோதமாகச்சூழ்ச்சிகளைச் செய்து அவரையும் உபத்திரவப் படுத்தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்துவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையான தென்று. ஒரு காங்கிரஸ் பிராமண பிரசிடெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.

இவ்விதமான கஷ்டங்களிலிருந்து பிராமணரல்லாதாரைக் காப்பாற்றுவதற்காக வேண்டி முக்கிய காங்கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர் நாயர் போன்ற பிராமணரல்லாத தலைவர்களால் ஜஸ்டிஸ் கட்சியென்னும் ஓர் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

அதை ஒழிப்பதற்காக பிராமணர்கள் சூழ்ச்சி செய்து அதற்கு எதிரிடையாக பிராமணரல்லாதார் சிலரைப் பிடித்தே சென்னை மாகாணச் சங்கமென்று ஒன்றை ஆரம்பிக்கச் செய்து அதற்கு வேண்டிய பொருளத்தனையும் பெரும்பான்மையாகப் பிராமணரே உதவி, ‘தேசபக்தன்’ என்ற தமிழ் தினசரி பத்திரிகையையும். ‘இந்தியன் பேட்ரியட்’ என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிகையையும், ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்லுவதற்காகவே பிரச்சாரம் செய்யும் பொருட்டு, ஏற்பாடு செய்து கொடுத்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார்கள். ‘இந்தியன் பேட்ரியாட்’ பத்திரிகையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே ஒழித்துவிட்டார்கள்.

எஞ்சியிருந்த ‘தேசபக்தன்’ பத்திரிகையை, தேசத்தில் அதற்கு கொஞ்சம் செல்வாக்கு ஆரம்பித்தவுடனே அதில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டுமென்னும் முக்கியக் கருத்துடன் அவருக்கு விரோதமாகச் சில பிராமணரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பிராமணர்களும் ரகசியமாக அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்து ஸ்ரீமான் முதலியாரவர்களே ‘தேசபக்தனை’ விட்டு ஓடிப் போகும்படியாகச் செய்துவிட்டார்கள்.

அதற்குப்பிறகு அப்பத்திரிகைக்கு பிராமணர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாக மெதுவாக நழுவவிட்டுக் கொண்டார்கள். இதே மாதிரியே சென்னை மாகாணச் சங்கத்திலும், பிராமணர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.

இவையெல்லாம் பழைய காங்கிரசின் கொள்கைப்படி ஏற்பட்ட திருவிளையாடல் களென்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பிராமணரல்லாத தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே குறிக்கிறோம்.

ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பாக சென்னையில் தேசிய வாதிகளின் சங்கமொன்று (Nationalist Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள்.

அதற்கு ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் அவர்களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத்துக்கு ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரைப் பிரேரேபித்தவுடன் அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி அதை அவர் அடையவிடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்கள் பிராமணர்கள் செய்தார்கள்.

இதைப் பிராமணரல்லாதாரில் சிலர் தெரிந்து அப்போதே கூச்சல் போட்டதன் பலனாக அநேக உப அக்கிராசனாதிபதிகளை ஏற்பாடு செய்து அந்த ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப் பார்த்தார்கள். இதன் பலனாக அதன் நிருவாக சபைகளில் பிராமணரல்லாதாரை அதிகமாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாக தேசியவாதிகளின் சங்கமென்பதை குழந்தைப் பருவத்திலேயே கழுத்தைத் திருகிக் கொன்று போட்டார்கள்.

பிறகு, திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண கான்பரன்ஸுக்கு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் அக்கிராசனம் வகிக்க வேண்டுமென்று பிரேரேபித்தார்கள் அதற்கு விரோதமாக ஹிந்து, சுதேசமித்திரன், சுயராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும். அது சமயம் நாயுடு அவர்கள் கான்பரன்ஸில் தலைமை வகிக்கத் தகுதியற்றவரென்று எழுதி வந்ததோடு பிரேரேபித்தவருக்கும் இம்மாதிரி பிரேரேபித்தது தப்பிதமென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவைத் தெரிந்தெடுத்திருந்தும் ஸ்ரீமான் ஆதிநாராயணச் செட்டியாரவர்களைக் கொண்டு ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் திருப்பூருக்குச் சென்றதன் பலனாயும் உபசரணைக் கமிட்டியாரை வசப்படுத்தி இவருடைய இத்தேர்தலை ஒப்புக் கொள்ளாமல் நிராகரிக்கும்படி செய்துவிட்டார்கள்.

பிறகு, மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்பந்தப்படுத்தினதன் பேரில் சுயமரியாதையுள்ளவர் ஒப்புக்கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு, அவரையே ஒப்புக்கொண்ட மாதிரியாய் தெரியப்படுத்தினார்கள்.

இத்தீர்மானத்தின் போக்கு யோக்கியதையற்றதாயிருந்தபடியால் ஸ்ரீமான் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும்படியாயிற்று. பிறகு, திடீரென்று ஸ்ரீமான் எம்.ஜி. வாசுதேவ அய்யரவர்களைக் கொண்டு அம்மகாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.

அதற்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராசனாதிபதியாக பெரும்பான்மையோரால் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஸ்ரீமான் வ.வே.சு. அய்யரவர்கள் நம்பிக்கையில்லை என்னும் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

அந்தச் சமயத்தில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரிடமிருந்து இது ராஜீய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல வென்றும், அது ஓர் பிராமணரல்லாதார் இந்த ஸ்தானம் பெறுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென்கிற வகுப்புத் துவேஷத்தின் மேல் கொண்டு வந்ததென்றும் பொருள்பட உக்ரமாய் அப்பொழுதே பேசியிருக்கிறார்.

இத்தீர்மானம் ஸ்ரீமான் வ.வே.சு. அய்யர் கொண்டு வந்ததன் பலனாய் சில நாட்களுக்கு ஸ்ரீமான் என் ஸ்ரீனிவாசய்யங்காரால் மேற்படி அய்யரவர்களுக்கு குருகுலத்திற்கென்று ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது.

 

இவ்வருஷம் காஞ்சிபுரத்தில் நடக்கப்போகும் தமிழ் மாகாண மகாநாட்டிற்கு ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரைச் சில ஜில்லா கமிட்டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியாருக்குத் தெரிவிக்காமல் ரகசியமாய் வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்
களுக்கு ஆகும்படி ரகசியபிரச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இதற்கு முன் னெல்லாம் யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந்தெடுத்தனவென்பது பத்திரிகைகளில் வருவது வழக்கம்இப்பொழுது உபசரணைக் கமிட்டியாரும் தெரிவிக்காமல் பத்திரிகைக்காரர்களும் தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது‘. தவிர. கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று தீர்மானமொன்று செய்திருக்கிறது.

சென்னை காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும் சுரேந்திரநாத் ஆர்யாவையும் கண்டித்து ஒரு தீர்மானம் செய்திருக்கிறது. நன்னிலம் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், கலியாண சுந்தர முதலியார், ஆர்யா இவர்களைக் காங்கிரசினின்று வெளியாக்கவேண்டுமென ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பேசியிருக்கிறார்.

தொடரும்…