1983 -இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது.
காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் பல்பீங்சிங்பேடி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்று கூறுகிறார்.
திவாரி என்ற பார்ப்பனர் கோவிலில் ஒரு மகன்ட். மகன்ட் என்றால் தர்மகர்த்தா. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தவர். கோவிலின் கர்ப்பக்கிரக கதவின் பூட்டு உடைக்கப்படாமலே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் இரண்டு மிகப்பெரிய இரும்பு கதவுகள் உள்ளன. அவைகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய பார்ப்பன இரண்டு அர்ச்சகர்கள் இரவு தூங்கிவிட்டதாக கூறுகிறார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
அப்போதே நாராயணக் கடவுளின் வெள்ளி கிரீடமும் களவாடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும். இந்த மிகப்பெரிய திருட்டு கோவிலின் உள்ளேயே கருவறைக்குள்ளேயே எந்த சேதமும் இல்லாமல் நடந்திருக்கிறது. இது புதியதல்ல. இந்த மாதிரி திருட்டுகள் பலமுறை இந்த கோவிலில் நடந்து இருக்கிறது. இது ஆறாவது திருட்டு ஆகும். ஒவ்வொரு தடவையும் திருட்டு நடந்த பிறகு அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். பிறகு கோவில் நிர்வாகம் அவர்களை வேலை நீக்கம் செய்யும். ஆனால் அப்படி வேலை நீக்கம் செய்யப்பட்ட, திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சகர்கள் பிறகு திரும்பவும் அர்ச்சகராக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் யாரால்? அந்த தர்மகர்த்தா குழுவின் ஒரு அங்கத்தினரால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதில் எங்கே நியாயம் நீதி நேர்மை இருக்கிறது? திருட்டு பார்ப்பனர்களைத் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் தர்மகர்த்தாக் குழுவும் திருட்டுக்கு உடந்தைதானே!
கோவிலுக்கு மிக நெருங்கியவர்கள் சொல்லுகிறார்கள். பெரிய பெரிய கொள்ளைகள் திருட்டுக்கள் இந்தக் கோவிலின் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது. கோவிலின் கதவின் விளிம்பில் உள்ள வெள்ளியைச் சுரண்டி எடுத்து விட்டார்கள். கோவில் துவஜ ஸ்தம்பத்தில் உள்ள தங்கத்தை எடுத்து விட்டார்கள். வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்டிருந்ததைக் காணோம். நந்திக்கு உள்ள விலை உயர்ந்த வெள்ளி நகைகளைக் காணோம். இதை எல்லாம் யாரைப் போய்க் கேட்க? என்கிறார்கள்.
ஊழல்:
மாதம் 60,000 ரூபாய் வருமானம் உள்ள கோவில் அது. ஆனால் இதற்கு ஆதாரங்களோ தஸ்தாவேஜுகளோ எதுவும் இல்லை. வரவு செலவுக்கு ஆதாரபூர்வமான ரசீதுகள் இல்லை. அந்தக் கோவிலுக்கு என்ன நகைகள், சொத்துக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. எத்தனை பேர் அங்கே வேலையிலிருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் பார்ப்பன தர்மகர்த்தா குழுவினர் சொல்லுகிறார்கள் தின வருமானம் கோவிலுக்கு 70 ரூபாய் மட்டும்தானாம்.
அந்தக் கோவிலே தனிப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமாம். ராமசங்கர், கிருஷ்ணசங்கர், விஜயசங்கர், கைலாசபதி என்கிற நால்வர்தான் அந்தக் கோவிலின் சொத்துக்காரர்கள். யார் நிர்வாகத்தை நடத்துவது என்று இவர்களுக்குள்ளேயே தகராறு. உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நான்கு பார்ப்பனர்களுக்கும் வழக்கு முடியும் வரை கோவில் வருமானத்தில் சமபங்கு உண்டு. இப்படி நடக்கின்றது காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம்.
இவர்களுக்குள்ளே உள்ள தகராறினால் உத்தரப்பிரதேச அரசு தனி அதிகாரி ஒருவரை போட்டு நிர்வாகத்தை நடத்துகிறது.
திரிபாதிக்கு சொந்தம்
கைது செய்யப்பட்ட கைலாசபதி என்ற பார்ப்பனர் (தர்மகர்த்தா) உத்தரப் பிரதேச நல்வாழ்வுத்துறை அமைச்சர் (இவர் கமலாபதி திரிபாதியின் மகன்) லோக்பதி திரிபாதிக்கு உறவுக்காரராம். சிறையில் இருக்கும் தர்மகர்த்தா கைலாசபதியின் வீட்டுக் கொல்லையில் பாழடைந்த கிணற்றில்தான் தங்கத்தட்டு (திட்டுப்போனது கோவிலில்) கண்டெடுக்கப்பட்டது. இன்னும் போலீஸ் நிறைய ஆட்களை கிணற்றில் மூழ்கச் சொல்லி இன்னும் ஏதாவது திருட்டுப் போன தங்கம், வெள்ளி சாமான்கள் இருக்கிறதா என்று பார்க்க சொல்லி இருக்கிறது.
அரசு எடுத்தது ஒரு மாதத்திற்கு முன்னால் மாநில அரசு ஒரு சட்டத்தை போட்டு கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது. மாநில கவர்னர் சி.பி.என்.சிங் முன்னிலையிலேயே கைலாசபதியும் இன்னொரு தர்மகர்த்தாவும் அடித்துக் கொண்டார்கள்.
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக் கோவில்களில் கடவுளர் சிலைகளும் நகைகளும் திருட்டுப் போகிறது. இதற்கு என்ன காரணம்? அர்ச்சகர்களின் உதவியினால்தான் பெரும்பாலான இந்த திருட்டுகள் நடைபெறுகின்றன.
திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் ஒரு கொலையே நடந்திருக்கிறதே. முருகன் சந்நிதானத்தில் கடவுளின் சொத்துக்களை அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கிறார்களே. நடந்து முடிந்த தேர்தலில் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்த அந்த அறங்காவலர் குழுவினர் வெளியே தலைக்காட்டவே இல்லையே. உத்திரப் பிரதேசத்தில் கடவுளின் சொத்து திருடப்பட்டதற்காக அறங்காவலர் கைது செய்யப்படுகிறார். ஆனால் இங்கே திருச்செந்தூரில் கண்டும் காணாததுபோல் இருக்கிறது அரசு. குற்றம் என்று தெரிந்தால் யாராயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அரசியல் எந்தளவுக்கு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்தான் என்று தந்தை பெரியார் சொன்னது இப்பொழுது நமக்கு நினைவுக்கு வருவதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.
திருப்பதி தேவஸ்தானத்து நிதியை அரசு கஜானாவில்தான் செலுத்த வேண்டும் என்று தெலுங்கு நாடு முதல்வர் என்.டி.ராமாராவ் உத்தரவிட்டதை எதிர்த்து சங்கராச்சாரியார் முதல் சனாதன பார்ப்பனர் வரை ஓநாய் ஓலம் இடுகிறார்களே என்ன நியாயம் இது. 5 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நம்பவில்லை என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதில்?
சில முக்கிய கோயில்களில் நடைபெற்ற கொள்ளைகள் பற்றிய விவரங்கள் இதோ:
1. சிதம்பரம் நடராஜர் கோவில் கொள்ளை:-
1993 அக்டோபரில் ரூ.1,27,500._ மதிப்புள்ள வைரத்தொங்கல் நகை களவு போனது. களவுக்குக் காரணமானவர்கள், பூசை செய்கிற சுமார் 300 தீட்சிதர்களுக்கு (பார்ப்பனர்கள்) மத்தியில்தான் இருக்கவேண்டும் என்று கைலாச சங்கர தீட்சிதர் என்பவரே பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக இன்னும் தீட்சிதர்களின் மேல் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் தீட்சிதர்களைத் தண்டிப்பது ஆண்டவனையே தண்டிப்பது போல என்ற மத நம்பிக்கையே! (ஜுனியர் விகடன் _ 20.07.94, 5.10.94, 19.2.95) சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டதன்று.
2. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொள்ளை:
18.2.95 அன்று இக்கோயிலில் ரூ.ஒரு கோடி பெருமானமுள்ள நகைகள் களவு போனது. கொள்ளைக்கு காரணமானவரான கிருஷ்ணன் நம்பூதிரி (பார்ப்பனர்) என்ற அர்ச்சகர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்த அப்பகுதி இந்து முன்னணி தலைவர்களும் கொள்ளைச் சம்பவத்தைக் கடத்தல் கூட்டத்தோடு தொடர்புபடுத்துகிறார்களே அன்றி, அர்ச்சகர்களைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. இந்நிலையில் போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடக்க, இன்னொரு புறம் தேவ பிரசன்னம் போட்டு (சோதிடம் மூலம்) கொள்ளை பற்றிய விவரம் அறிய முயற்சி நடந்ததாம். இதன் முடிவாக கிடைத்த விவரப்படி கோயிலில் உள்ள தெய்வத்தின் சக்தி குறைக்கப்பட்டுள்ளதாகவும், சுவாமியின் தோள், கழுத்து ஆகிய பகுதிகளில் சுரண்டி, உடலில் உள்ள தங்கத்தை உரித்துள்ளதாகவும் தெரிய வந்ததாம். (தேவ பிரசன்னத்தின் முடிவுகளை பார்க்கும்போது தெய்வத்தின் உடலை சுரண்டி, தங்கத்தை உரிக்கும் வரை அது என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்பதைவிட, தேவ சிரசன்னம் நடத்திய பார்ப்பனக் கூட்டத்தின் அறிவிப்பு _ தெய்வத்தின் சக்தியையே குறைக்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று சூத்திரர்களைப் பார்த்து விடுகிற மறைமுக எச்சரிக்கையாகவே படுகிறது. (ஜுனியர் விகடன் _ 1.3.95, 19.3.95, மாலைமலர் 19.5.95)
3. மதுரை அழகர்மலை கள்ளழகர் கோயில் கொள்ளை:
3.8.94 ஜுனியர் விகடன் வார இதழ் அழகர்கோயில் கொள்ளை பற்றி விவரிக்கிறது. இக்கோயிலின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு இதற்குப் பதிலாகத் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்துவிட்டதாக அக்கோயிலின் ராமசாமி பட்டர் என்பவர் குற்றம் சாட்டப்படுகிறார். இதே குற்றச்சாட்டை மதுரையில் உள்ள இந்து பக்த ஜன சங்க தலைவர் தியாகராஜனும் கூறுகிறார்.
ஆனால், பட்டர் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் கைது செய்யப்படாமலும், பணி நீக்கம் செய்யப்படாமலும் தொடர்ந்து வேலை பார்ப்பதாகவும், பத்திரிகைச் செய்தி கூறுகிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால், இக்கோயிலின் கடவுளான கள்ளழகரே, விபச்சாரம் செய்யும் கடவுள் என்றே கருதப்படுகிறார். எனவேதான் வருடந்தோடும் சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகரை கைது செய் என்று பெரியார் தொண்டர்கள் சுவரொட்டி ஒட்டுகிறார்கள். கற்பிக்கப்படுகிற கடவுள் தன்மையானது சின்ன வீட்டுக்குச் செல்லும் ஒழுக்கக்கேட்டோடு கூடியது. எனவே அதுவும் ஒரு வகையான ஆபாசத்திருட்டுத்தான். இதைக் கண்டிக்கும் வகையில் தி.க.வின் பணி சமூக விழிப்பூட்டுவதாய் அமைகிறது. நாம் கேட்பது எந்த ஆதாரமும் இன்றி நாத்தகத் தத்துவத்தைக் கோயில் கொள்ளையோடு தொடர்படுத்தும் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர், கடவுள் தத்துவத்தை _ ஆத்திகர்களே _ ஆபாசத்தனமான திருட்டுத்தொழிலோடு தொடர்புபடுத்தியிருப்பதை கண்டிக்க முன்வராதது ஏன்? கண்டிக்கும் ஆற்றல் பெற்ற பெரியார் தொண்டர்களை வருடந்தோறும் இடைஞ்சலுக்கு உட்படுத்துவது ஏன்? என்ன செய்தாவது இந்த ஓட்டு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்ற சுயநலமேயன்றி வேறு என்ன இதற்கும் காரணமாக இருக்க முடியும்?
4. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் கொள்ளை:
பல லட்சம் மதிப்புள்ள நகைகள் 1.2.95 அன்று இக்கோயிலில் கொள்ளை போயினவாம். இதற்கு முன்னும் பல திருட்டுக்கள் நடந்திருந்தாலும், திருட்டுப்போன பொருளுக்குப் பதில் வேறு பொருள்களை வாங்கி வைத்து விடுவார்களாம் அர்ச்சகர்கள். திருடியதாகச் சந்தேகப்படும் நபரும், ஓர் அர்ச்சகரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்களாம். திருட்டைக் கண்டுபிடிக்க போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டும் நாய்களை சாமி சிலைக்கு அருகே அனுமதிக்க அர்ச்சகர்கள் மறுத்துவிட்டனராம். (சாமி சிலைகளை அசிங்கப்படுத்துகிறதோ, இல்லையோ, நாய்கள் தங்களை அசிங்கப்படுத்திவிடும் என்பதாலோ) இன்னும் விசாரணை நடந்து கொண்டுள்ளதாம். (ஜுனியர் விகடன் 8.2.95)
5. நெல்லையப்பர் கோயில் கொள்ளை:
780 கிராம் எடையுள்ள வெள்ளி நகை இக்கோயிலில் காணாமல் போனதாகவும், இது தொடர்பாக இரண்டு அர்ச்சகர்கள் கைதானதாகவும் 27.2.92 தினமணி பத்திரிகை தெரிவிக்கிறது.
6. பொன்னேரி கிருஷ்ணப் பெருமாள் கோவில் கொள்ளை:
இக்கோயில் கருட வாகனத்தில் தங்கத் தகடுகள் களவு போனதாம். திருடர்கள் கோயிலுக்குள்தான் இருக்க வேண்டும் என அறநிலையத்துறைத் துணை கமிஷனர் கூறினாராம். (ஜுனியர் விகடன், 14.10.1992)
அர்ச்சகப் பார்ப்பனர்களின் கர்ப்பகிரக மோசடி அம்பலம்
கோயில் கர்ப்பகிரகத்திற்குள் மற்றவர்கள் நுழையக்கூடாது என்று பித்தலாட்டம் செய்து கொண்டு வருவது, அர்ச்சகப் பார்ப்பனர்கள் எவ்வளவெல்லாம் மோசடி செய்வதற்கு உதவுகிறது என்பதற்கோர் எடுத்துக்காட்டாக மாயூரம் அருகில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாம் பூஜை செய்து வந்த சாமி சிலையையே ஒரு அர்ச்சகப் பார்ப்பனரும் மற்றும் சில பார்ப்பனர்களும் திருடிக் கொண்டு அதற்குப் பதிலாக மண்சிலை செய்து வைத்திருக்கின்றனர். ரூ. 20 ஆயிரம் பெறும் இச்சிலைத் திருட்டு பற்றி இப்போது போலீசார் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட இரண்டு பார்ப்பனர்களையும், ஒரு பார்ப்பனத்தியையும் கைது செய்துள்ளனர். மாயூரம் வட்ட திருக்கடையூரை அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன் கோவிலின் சத்திய வாசகர் சவுந்திர நாயகி, பிடாரியம்மன் ஆகிய சாமி சிலைகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக மண்சிலை செய்து வைத்து விட்டனராம் இராமு என்ற அந்தக் கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர். இத்திருட்டில் அவர் மனைவி மகாலட்சுமியும், இடவாசல் கோவிலின் குருக்களாக உள்ள கந்தன் (இராமு மைத்துனன்) என்ற பார்ப்பனரும் சம்பந்தப்பட்டிருப்பது பின்னர் தெரிய வந்தது. சிலையை மாற்றி எடுத்து வரும்பொழுது குடவாசலைச் சேர்ந்த பார்ப்பனக் குருக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இது சம்பந்தமாக விசேச புலனாய்வுத் துறையினரால் விசாரணை மேற்கெண்டதன் பேரில் மாத்தூர் கோவில் வந்து பார்க்கும்போது மண் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இது சம்பந்தமாக கோயில் குருக்கள் இராமு, அவர் மனைவி மகாலட்சுமி, அவர் மைத்துனன் கந்தன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 20,000 ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிலை திருட்டுப் பற்றியும், அர்ச்சகப் பார்ப்பனர்களின் இதுபோன்ற மோசடிகளையும் அம்பலப்படுத்தி, திருக்கடையூர் பகுத்தறிவாளர் கழகம் பொதுமக்களுக்கு நல்ல அளவுக்கு உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
(விடுதலை 19.11.1973)
திருக்குணவாயிற் கோயிலில் ஒரு பெருந்திருட்டுப் போயிற்று. கோயில் அதிகாரிகள் பெருந் திருவிழாவிற்காக நகைகளை எடுக்க ஸ்ரீ பண்டாரத்தைத் திறந்தார்கள். விலையுயர்ந்த நகைகளைக் காணவில்லை. இவைகள் பத்து ஆண்டுகளுக்கு முந்தித்தான் பூண்டிச் ஜமீந்தாரராலும், ப.ழ.பெ.ந. இராமன் செட்டியாராலும் செய்துத் தரப்பட்டன. இக்களவு உடனே போலீசுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. போலீசார் இரண்டு மாதம் வரை துப்பு ஆராய்ந்தார்கள். இறுதியில் ஒரு பழைய திருடன் வீட்டைச் சோதனை போட்டதில் ஒரு சில கோயில் நகைகள் கிடைத்தன. அவனை அடித்து நொறுக்கியதில் அவை பொன்னப்பா பத்தர் மூலமாகத் தனக்குக் கிடைத்தன என்று சொல்லிவிட்டான். பொன்னப்பா பத்தரைச் சிறைசெய்து விசாரித்ததில், வைத்தியநாத கனபாடிகள் சில தங்க நகைகளைத் தந்து உருக்கச் சொல்லிக் கைவளையல்களாக்கிக் கொண்டு போனார் என்று சொன்னார். மறுபடி இதே துறையில் போலீசார் துப்பு விசாரிக்கையில் திருப்பனைத்துறை மடத்தார் வைத்து நடத்தும் அன்னதானக் கட்டளைக் கணக்குப் பிள்ளை சொக்கப்பா பிள்ளையும், வைத்திய நாத கனபாடிகளும், பொன்னப்பா பத்தரும் சேர்ந்து இக்களவைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தார்கள். போதுமான சான்றுகள் கிடைக்காததனால், பொன்னப்பா பத்தரை விட்டு விடுவதாக ஆசை காட்டினதில் அவன் சர்க்கார்ச் சாட்சியாக வருவதற்கு இசைந்தான். ஆகவே, சொக்கப்பா பிள்ளை யையும் வைத்தியநாத கனபாடி களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்ற வழக்குத் தொடங்கினார்கள்.
இதில் சொக்கப்பாவுக்கு ஓர் ஆயுளும், கனாபடிகளுக்கு (பார்ப்பனர்களுக்கு) 9 மாதச் சிறையும் அளிக்கப்பட்டது. (கோவூர் கிழார் எழுதிய கோயிற்பூனைகள்)
இல்லஸ்டிரேட்ட வீக்லி இதழில் (3.9.1972) இந்தர் மல்ஹோத்ரா கட்டுரை ஒன்றை ஆதாரப் பூர்வமாகத் தீட்டியிருந்தார். கோயில் கொள்ளைகளைப் பற்றிய கட்டுரை அது. அதனை மொழிபெயர்த்து விடுதலை தொடர்ச்சியாக 14 கட்டுரைகளை வெளியிட்டது. (செப்டம்பர் 1972)
சிலைகளைக் கடத்துவதில் கோயில் அர்ச்சகர்களின் பங்களிப்பு குறித்து அதில் ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டு இருந்தது.
1960இல் திருவாங்கூர் சமஸ்தான முன்னாள் திவான் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அரசு ஒரு விசாரணை ஆணையத்தை (கமிஷன்) நியமித்தது.
கோயில்களில் நடக்கும் அயோக்கியத்தனங்கள், அத்துமீறல்கள், ஒழுக்கக் கேடுகள், தற்குறிகளான பார்ப்பன அர்ச்சகர்களைப் பற்றி வண்டிவண்டியாகக் கூறப்பட்டு இருந்தது.
கோயில் பணத்தை எடுத்து பங்கு சந்தையில் ஈடுபட்ட பார்ப்பன அர்ச்சகர்கள் பற்றி எல்லாம் கூட அந்த ஆணையம் அதிகாரபூர்வமாக விளக்கியுள்ளது.
ஆதாரக் குறிப்புகள்:
1. பேராசிரியர் மதுரை ஆ.நீலகண்டன், விடுதலை (ஜூலை 1995) எழுதிய தொடர்கட்டுரைகள்,.
2. கி.வீரமணி அவர்கள் எழுதிய கோயில்கள் தோன்றியது _ ஏன்?
3. விடுதலை நாளேடு.
கி.பி.எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பவுத்த விகாரை ஒன்றில் முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்து கொண்டுபோய், அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குரு பரம்பரைப் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகின்றது.
(பவுத்தமும் தமிழும் பக்கம் 47-_48, ஆசிரியர் மயிலை சீனி.வெங்கடசாமி)
கோயிற் கொள்ளை
பல கோயில்கள் தங்களுக்கு ஏராளமான செல்வம் படைத்தவையாக இருந்தாலும், பெருமளவில் காணிக்கை வந்து குவிந்தாலும்கூட அதன் கணக்குப் புத்தகங்களைப் பரிசீலித்துப் பார்த்தால் அவை ஏழைக் கோயில்களாகவே இருக்கின்றன. இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.
இத்தகைய கடுமையான முறைகளுக்குப் பொறுப்பாக உள்ள டிரஸ்டிகளும், மகந்துகளும், பூசாரிகளும், அர்ச்சகர்களும் ஒன்று தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை கல்வியறிவு படைத்தவர்களாக இருக்கின்றார்கள். அத்துடன் வழக்கமாகவே பணம் பறிக்கும் ஆசாமிகளாக இருக்கிறார்கள்.
கடவுளின் சொத்துகளையும், பணத்தையும் கையாடல் செய்தது, தப்பு வழியில் பயன்படுத்தியது பற்றிய புகார் அல்லது கண்டுபிடிப்பு பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பட்டியல் போட்டுக் காட்டினால் அது ஒரு தனிப் புத்தகமாகவே நிரம்பிவிடும். ஆனால், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒன்றை இங்கே மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
பழமையானதும், புகழ்பெற்றதுமான காசி விசுவநாதர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பிட்ட சில மகந்து, பண்டாக்களின் பரம்பரைச் சொத்தாக, உரிமை கொண்டாடப்படுகிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்க நிர்வாகக் கமிட்டி ஒன்றை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். காணிக்கைகள் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய வியாஜ்ஜியம் இவர்களுக்குகிடையே கடந்த 60 வருடங்களாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அறக்கட்டளைச் சொத்துகள் மூலமும், காணிக்கைகளின் மூலமும் கோயிலுக்கு வரும் வருமானம் முறைப்படி கணக்கெழுதப்படவில்லை என்று ஏராளமான சாட்சிகள் உறுதிப்படுத்தினார்கள்
எல்லாக் கோயில்களிலும் இதுவே கதை.
தேவைக்கான பூஜைக்குரிய செலவுகளைக் கழித்துக் கொண்ட பிறகு, காணிக்கைகள் 4 குடும்பங்களிடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. சம்பிரதாயத்தின் அடிப்படையிலும், சிறீ கிருஷ்ணதாஸ் என்பவரால் எழுதப்பட்டு , 1937ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசுவநாத தரிசனம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் வழக்கத்தின் அடிப்படையிலும் இவர்கள் இவ்வாறு பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
கோயில் விவகாரம் இங்கே மட்டும்தான் இப்படி என்பதில்லை. அரித்துவாரம், காசி, விந்தியாச்சல், கயா, தேவைகார், பூரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய புகழ்பெற்ற மத ஸ்தலங்களில் உள்ள கோயில்களில் பெரும்பான்மையாகக் காணிக்கைகளின்மீது கட்டுப்பாடு விதிக்கவும், பரம்பரை பாத்தியதை கோரவுமான உரிமை பண்டாக்களுக்கே இருக்கிறது.
(சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையிலிருந்து)
– கவிஞர் கலி.பூங்குன்றன்