திிருக்குவளையில் அரும்பி
திருவாரூரில் மலர்ந்து
குவலயம் முழுதும் மணக்கும்
முத்தமிழறிஞரே!
திக்கற்றவர்களுக்கு
திக்கெல்லாம் கிழக்காக்கிய
திராவிடச் சூரியரே!
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
மனிதனின் மானம் காக்க
கைரிக் ஷா ஒழித்து
தந்தையின் (பெரியார் ) சொல் காத்த தனையரே!
தொழு நோயாளர் மாற்றுத் திறனாளர் பிச்சைக்காரர்
இவர்தம் துயர்நீங்க
மறுவாழ்வுத் திட்டம் தந்த
மானுட மீட்பரே!
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என
உலக நாடுகள் திரும்பிப் பார்க்க
சிப்காட், சிட்கோ, டைடல் பூங்காக்களால்
‘தெற்காசியாவின் டெட்ராய்ட்’
தொழில் புரட்சி செய்த தொலைநோக்காளரே!
தாய்த் தமிழுக்கு இழுக்கு எனில்
தாய் தடுத்தாலும் விடேன் என
குன்றாக் கொள்கைச் செறுக்குக் கொண்ட தவப்புதல்வரே!
மகளிர் சுயமாக நிற்க
தான் சுயம்பு எனும்
(மகளிர் சுய உதவிக் குழுக்கள்)
திட்டத்தைக் கற்றுத் தந்த தன்மானத் தலைவரே!
பெண்ணினத்திற்குச் சொத்தில் மட்டுமா சம உரிமை
உள்ளாட்சித் தேர்தல், அரசுப் பணி இடஒதுக்கீடு
மீட்டுத் தந்து ஏற்றம் காண வைத்த
பெண்ணினப் பங்காளரே!
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி
ஆதிக்கமற்ற சமுதாயம் கண்ட சமத்துவரே!
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
கூட்டணிக்கு வித்திட்ட தன்மானமே!
விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்குவதில்லை…
கலைஞர் உறங்கிவிட்டார் எனும்
வாய்ச்சொல் வீரர்களுக்கு
நீர் விதைத்த எழுத்துகள்
ஒவ்வொன்றும் உறங்கா வித்துகள்…
முகம்மதியர் கல்லூரி – அரசுக் கல்லூரி
காயிதே மில்லத் கல்லூரி என
கண்ணியமிக்க காயிதே மில்லத்துக்கு
பெருமை சேர்த்த பேரன்பரே!
ஒன்றா இரண்டா திட்டங்கள்
ஒவ்வொன்றும் உன் வாழ்வின்
எழுதாப் பக்கங்கள்
நீர் வாழ்ந்த நாட்களைவிட- அதிகம்
நீர் எழுதிய பக்கங்கள்
மூன்று லட்சம் பக்கங்களைப் பேசுமே
மூச்சு உள்ளமட்டும் தமிழ்ச் சமூகமே !
வங்கக் கடலோரம் சங்கமிக்கும்
கடலலையால் கடலன்னை தாலாட்ட
ஆழ்கடலுள் மவுனமாய்
ஓய்வெடுக்கும் பேனா ! – மீண்டும்
ஒய்யாரமாய் எழுந்து நிற்கும்
காலம் வரை கலங்காதிரு மனமே!
கடலுக்குக் கலங்கரை விளக்கம்
காலத்தில் கரைபவர்களுக்கு
விளக்கும் உம் பேனா
ஒரு சிம்ம சொப்பனம் !