எதிர்க்கதை

ஆகஸ்ட் 16-31

கோலம்

குமுதம் 11-7-2012 இதழில் வெளியான முதல் மாணவிஎன்ற பிற்போக்குச் சிந்தனைக் கதைக்கு எதிர்வினையாய் எழுந்த சிந்தனை

பள்ளி வளாகம் களைகட்டியிருந்தது. நடந்து முடிந்த +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றாள் கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி மாணவி அர்ச்சனா. பாராட்டு விழா! மாவட்ட கல்வி அதிகாரி மணிமேகலை காரில் வந்து இறங்கினார். மாணவ மாணவிகள் இருபுறமும் வரிசையில் நின்று கைதட்டி வரவேற்றனர். காரை விட்டு இறங்கிய மணிமேகலையை வாசலில் போடப்பட்டிருந்த கோலம் ஈர்த்தது. ஒருசில நிமிடங்கள் நின்று ரசித்தார். அருகில் நின்ற தலைமை ஆசிரியர் பெருமையுடன் அந்தக் கோலத்தை வரைந்தது இன்றைய விழா நாயகி அர்ச்சனாதான் என்றார். நிகழ்ச்சி துவங்கியது. வாழ்த்துப் பா, வரவேற்புரை என முறையாக நடந்தது. அர்ச்சனாவையும் பள்ளி ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிய அதிகாரி மணிமேகலை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தைப் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. அர்ச்சனாவின் ஓவியத் திறமையை மிகவும் லயித்துப் பாராட்டினார்.

அடுத்து அர்ச்சனாவின் ஏற்புரை என்று அறிவித்ததும் பள்ளி மாணவர்களின் கைதட்டல் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. ஒன்றிரண்டு விசில் சத்தமும் காற்றைக் கிழித்தது. அர்ச்சனா அனைவருக்கும் வணக்கம் சொல்லி உரையைத் துவங்கினாள். நான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதை கல்வித்துறை அதிகாரி மிகவும் பாராட்டினார்கள். அதற்குக் காரணம் எனது பள்ளி ஆசிரியர்களும் எனது பெற்றோரும்தான் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் வாசலில் போடப்பட்டிருந்த கோலம் நான் வரைந்ததாக நினைத்து என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். மன்னிக்க வேண்டும். அந்தக் கோலத்தை நான் போடவில்லை. நேற்று தலைமை ஆசிரியர் என்னை அழைத்து உன் வீடு அருகில்தானே இருக்கிறது நீ காலையில் வந்து கோலம் போட்டுச் சென்றுவிடு என்று சொன்னார்கள். எனக்கு கோலம் போடத் தெரியாது. அவரிடம் சொல்ல பயந்து வகுப்பாசிரியையிடம் தெரிவித்தேன்.

அவர் ஒரு பெண் கோலம் போடத் தெரியவில்லை என்று சொல்கிறாயே! வெட்கமாக இல்லை? நீயெல்லாம் ஒரு பெண்ணா? என்று கடுமையான வார்த்தைகளை வீசினார். வீட்டிற்குச் சென்ற பிறகும் வகுப்பாசிரியை நீயெல்லாம் ஒரு பெண்ணா என்று கேட்ட அந்தக் கேள்வி என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

வேலை முடித்து வீடு திரும்பிய என் தந்தை என் முகத்தின் வாட்டம் அறிந்து காரணம் கேட்க நடந்ததைச் சொன்னேன். அட என்னம்மா நீ! இதற்குப் போய் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குற! பெண்ணாகப் பிறந்தால் கோலம் போடத் தெரியனும், சமைக்கத் தெரியனுங்கிறது என்ன எழுதப்படாத சட்டமா? எந்த வேலையா இருந்தாலும் தேவைப்பட்டா யாரும் கத்துக்கனும்! செய்யனும்! இதில் ஆண் என்ன? பெண் என்ன? உனக்கு கோலம் தானே போடனும். நானே போடுறேன் கவலையை விடு என்றார். எனது தந்தை ஒரு சிறந்த ஓவியர் அவர்தான் இன்று விடியற்காலை அந்தக் கோலத்தைப் போட்டவர். அவர் இந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார். கல்வி அதிகாரியின் பாராட்டும் புகழும் என் தந்தைக்கு உரியது என்று தன் உரையை முடித்தாள்! மேடை அருகில் நின்று அர்ச்சனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வகுப்பாசிரியர் தேன்மொழிக்கு கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது!

– கி.தளபதிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *