நூல்: நல்லவன் வெல்வது எப்படி?
ஆசிரியர்: பவான் சவுத்ரி
வெளியீடு: Wisdom Village Publication (P) Ltd.
649,040 Udyog Vigar, Base V,
Gurgaon, Hariyana – 122 001
இணையதளம்: www.wvld.in
நூலிலிருந்து…
தீர்மானகரமாக நிரூபிக்கவோ, மறுக்கவோ இயலாத காரண, காரிய உறவுகளைப் பற்றிய யூகத்தையே மூடநம்பிக்கை என்கிறோம். பொதுவாக, மூடநம்பிக்கைகள் பயனற்றவை; எதிர்பாராத உடன் நிகழ்வுகளை காரணத்துடன் நிகழ்பவை எனத் தவறாகப் புரிந்து கொள்வதால், அவை தோன்றுகின்றன.
பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் ஆண்டு நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க ஆய்வின் மூலம் புறாக்களுக்கு மூடப்பழக்கங்கள் இருப்பதாகக் காட்டினார். பசியுடன் இருந்த எட்டுப் புறாக்களைக் கூண்டுகளில் அடைத்தார். குறிப்பிட்ட காலமுறைப்படி அவற்றிற்கு உணவுத் துணுக்குகளை வழங்கினார். அவற்றின் எவ்வித செயல்பாடுகளுக்கும் தொடர்பின்றி பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை உணவு வழங்கப்பட்டது. எட்டில் ஆறு புறாக்கள் வியக்கத்தக்க செய்கைகளைச் செய்தன; அவை அனைத்தும் வெவ்வேறானவை. எடுத்துக்காட்டாக, ஒரு புறா கூண்டின் ஒரு மூலையில் தலையை முட்டிக் கொண்டது; மற்றொன்று கூண்டுக்குள் சுற்றிச் சுற்றிப் பறந்தது; வேறொன்று மேலும் கீழும் குதித்தது; இன்னுமொன்று முன்னும் பின்னும் அசைந்தாடியது. அவ்வாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலைச் செய்தன. மனநல மருத்துவர் ஸ்கின்னர், உணவை முதன்முதலாகக் கண்டவுடன் புறாக்கள் மனம்போன போக்கில் ஏதோ செயல்களை நிகழ்த்துகின்றன; மறுபடியும் உணவுத் துணுக்குகளைப் பெறுவதற்கு முன்பு, முன்னர் செய்த அதே செயல்களை நிகழ்த்துகின்றன என யூகித்தார். அவ்வாறு செய்யா விட்டாலும்கூட அவற்றிற்கு உணவு கிடைக்கத்தான் போகிறது. ஆகவே, அவை ஒருவித மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தன.
மூடநம்பிக்கைகள் தோன்றுகின்ற நிகழ்வு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நடந்தால் உண்மையாகவே தொடர்பு எதுவும் இல்லை என்றபோதிலும் அத்தகைய நிகழ்வு எதனுடனாவது தொடர்புறுத்திப் பார்க்கப்படுகிறது. ஆகவே, எதிர்பாராத உடன் நிகழ்வுகள் மூடநம்பிக்கைக்கு ஓர் ஆதாரமாகிறது.
எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் மற்றொரு ஆதாரம் பண்பாடு. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம். நான் முதன் முறையாகப் பாரிஸுக்குச் சென்றதற்கு முன்னர் என்னுடைய பணியாளுடன் தவறாக நடந்து கொண்டேன். (அதற்காகப் பெரிதும் வருந்துவதுண்டு) பாரிஸ் சென்றடைந்த பின்னர் ஒருநாள், எனது கடவுச்சீட்டைக் காணோம். எனது பெட்டி, படுக்கைகளிலெல்லாம் தேடியும் காணாமற் போகவே, மடத்தனமாக அங்கிருந்த எனது சக பணியாளர்களிடம் தெரியப்படுத்தி விட்டேன். இடி விழுந்துவிட்டது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் புதிய கடவுச்சீட்டும் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான நுழைவு அனுமதியும் பெற்றாக வேண்டும். பெரும் பீதி பீடித்துக் கொண்டது. இறுதியில், நண்பர் ஒருவருடைய உதவியுடன், படாதபாடுபட்டு, வியர்வை சிந்தி, பலருடைய கேலி, கிண்டல்களுக்கு ஆட்பட்டு ஒருவழியாக புதிய கடவுச்சீட்டும், நான் செல்ல இருந்த நாடுகளின் நுழைவு அனுமதிகளும் பெற்றேன். சில மணி நேரத்திற்குப் பிறகு, எனது பையின் பக்கவாட்டு உறையில் காகிதம் ஒன்றை இழுத்தபோது எனது கைகளில் சிறு புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது.
அது என்னுடைய கடவுச்சீட்டு.
நான் அதைத் தொலைக்கவில்லை. அதுவரை பைக்குள் மாட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது என்ன நேர்ந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை; தற்பொழுது புரிகிறது. என்னுடைய பணியாளுடன் தவறாக நடந்து கொண்டது எனது மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. வினை-_விளைவுத் தத்துவத்தில் ஆழமாக மூழ்கிப் போனதால், எனக்குத் தண்டனையை எதிர்பார்த்திருந்தேன். அது தானாக வரவில்லை; நானாகவே தண்டித்துக் கொண்டேன். இது போன்ற கணக்குகளைக் கடவுள் பராமரிப்பதில்லை; நாமாகவே ஏதேனும் ஒரு விதத்தில் விளைவித்துக் கொள்வோம் என்பது தற்பொழுது தெரிகிறது.
கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதிலிருந்தும், அச்சத்திலிருந்தும், ஏதேனும் ஒரு சாதகமான விளைவுடன் நம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொள்வதிலிருந்தும் மூடநம்பிக்கை பிறப்பதுண்டு. இந்தித் திரைப்பட நடிகர் ஒருவர் நகரின் எப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் ஒரு குறிப்பிட்ட தடத்தின் வழியாகத்தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைவார். ஏனைய தடங்கள் நெரிசலின்றியும், சாலை நன்கு அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்தக் குறிப்பிட்ட தடத்தில் தான் செல்வார்.
அதுபோன்ற மூடநம்பிக்கைகள் பலவீனப்படுத்தி போதிய ஆற்றல் கிடைக்காமல் செய்துவிடுகிறது. தில்லியைச் சேர்ந்த மகிழ்வுந்து விற்பனையாளர் அடிக்கடி கூறுவதுண்டு. விற்பனை இலக்கினை எட்டவேண்டும் என்பதற்காகக் குறைவான விலையை மாதக் கடைசி நாளன்று அறிவிப்பனராம். அன்று சனிக்கிழமையாக அமைந்துவிட்டால் எதிர்பார்த்த விற்பனை இருக்காதாம். ஏனெனில், சனிக்கிழமை மகிழ்வுந்து போன்ற இருப்பாலான வற்றைப் புதிதாகப் பெற ஏற்ற கிழமை இல்லையாம். ஆகவே, அவர்கள் எப்பொழுது வாங்குவர்? சில நாட்கள் கழித்து, அனுமதிக்கப்பட்ட விலைக்குறைவை அனுபவிக்காமல், கூடுதல் விலை கொடுத்துப் பெறுவர்.
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்படி? அது எங்கிருந்து தோன்றுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அவை பெரும்பாலும் பேராசை, அச்சம் இவற்றிலிருந்து தான் தோன்றுகின்றன. தோற்றுவாயைப் புரிந்து கொண்டாலே அறியாமையை உணர்ந்து நீங்களாகவே நகைத்துக் கொள்வீர்கள். பிறகு, மூடநம்பிக்கைகள் தாமாகவே விழுந்து விடுகின்றன.
அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்கிற உமது விழிப்புணர்வு அவற்றை வேருடன் பிடுங்கி எறிந்து விடும்.