கலைஞரின் ‘குடிஅரசு’ குருகுலம் – கோவி.லெனின், இதழாளர்

2024 கட்டுரைகள் ஜுன் 1-15 2024

‘வாழ்வின் வசந்தம்‘ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது, தந்தை பெரியாருடன் அவர் இருந்த காலத்தைத்தான். முத்தமிழறிஞர் கலைஞர் ‘பசுமையான காலம்’ என்று குறிப்பிடுவது ஈரோட்டில் பெரியாரின் ‘குடிஅரசு’ ஏட்டில் பணியாற்றிய காலத்தைத்தான். கலைஞரின் நூற்றாண்டு நிறைவடையும் நேரத்தில், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தனது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை நடத்தியது. அதனால் அந்த அரசியல் அமைப்பை ஜஸ்டிஸ் கட்சி என்று மக்கள் அழைத்தனர். அது அப்படியே தமிழில் நீதிக் கட்சி என்றாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தை நடத்தினார். அதன் தொடக்கம் எதுவென்று வரலாற்று வழியில் நோக்கும்போது, காங்கிரசிலிருந்து விலகுவதற்கு சற்று முன்பாகவே, ‘குடிஅரசு’ ஏட்டை அவர் தொடங்கிய நாள்தான் (மே 2) சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கமாகவும் அமைந்துவிட்டது. திராவிட இயக்கத்திற்கும் பத்திரிகைகளுக்குமான தொடர்பு அப்படிப்பட்ட வலிமை கொண்டது. முத்தமிழறிஞர் கலைஞர் தன் மூத்த பிள்ளை என்று சொல்வது ‘முரசொலி’ ஏட்டைத்தான். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும், பலருக்கும் பட்டமளிக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் அவருக்குரிய சிறப்புப் பட்டம் ‘ஆசிரியர்’ என்பதுதான். காரணம், உலகத்தில் வேறெந்தப் பத்திரிகையிலும், வேறெவரும் மேற்கொள்ளாத அரும்பணியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராக அவர் இருந்து வருகிறார்.

திருவாரூரில் பள்ளி மாணவனாக இருந்த கலைஞர் 1938ஆம் ஆண்டில் தன் 14 வயதில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற போது, ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்.. நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே’ என்று தன் வயதையுடைய சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு தேரோடும் வீதிகளில் முழங்கியபடி, ரயிலடி வரை ஊர்வலமாகச் சென்றவர். அப்போதே அவரிடம் எழுத்தாற்றல் இருந்தது. அதன்பின்னர், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் கலைஞர் எழுதிய ‘இளமைப் பலி’ என்ற படைப்பு வெளியானது. ‘சாந்தா (அ) பழனியப்பன்’ என்ற நாடகத்தையும் எழுதி அரங்கேற்றித் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார் கலைஞர். 1942இல் ‘முரசொலி’ என்னும் அச்சிடப்பட்ட துண்டு இதழையும் வெளியிடத் தொடங்கினார். எனினும், கலைஞரின் எழுத்துத் திறனையும் படைப்புத் திறனையும் பட்டை தீட்டியது ஈரோடு ‘குடிஅரசு’ அலுவலகம்தான்.

95 வயது வரை வாழ்ந்த கலைஞர் தனக்கு நினைவாற்றல் இருந்தவரை எழுத்தாற்றலுடன் திகழ்ந்தார். அந்த எழுத்தாற்றலைக் கொள்கை நிலை மாறாமல் வெளிப்படுத்தினார். பத்திரிகை, நாடகம், திரைப்படம், இலக்கியம், தொலைக்காட்சித் தொடர், சமூக வலைத்தளம் எனக் காலத்தின் வளர்ச்சிக்கேற்ற ஊடகங்களில் எல்லாம் அவரால் வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது என்றால் அதற்கான அடித்தளத்தை ‘குடிஅரசு’ அலுவலகம் அவருக்கு அமைத்துக் கொடுத்தது.

1944இல் புதுச்சேரியில் பெரியார் நடத்திய
மாநாட்டில் கலைஞரின் நாடகம் அரங்கேற்றப் பட்ட நிலையில், அதன் அரசியல் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் கலைஞரைத் தாக்கி குற்றுயிராக வீழ்த்திவிட்டுச் செல்ல, அங்கிருந்து அவர் மாநாட்டு அரங்கிற்குத் தப்பி வந்து, தந்தை பெரியாரின் கரங்களால் மருந்திடப்பட்டு, பெரியாரின் அழைப்பின் பேரில் ‘குடிஅரசு’ அலுவலகத்திற்குச் சென்று துணை ஆசிரியர் ஆனார்.

‘குடிஅரசு’ ஏட்டில் கட்டுரைகளையும் துணைத் தலையங்கங்களையும் கலைஞர் எழுதினார். அதனைப் பெரியார் படித்து மகிழ்ந்தார்.பாராட்டி ஊக்குவித்தார். மாத ஊதியமும் கொடுத்தார். இது பற்றிக் குறிப்பிடும் கலைஞர், “எனக்கு மாதம் நாற்பது ரூபாய் ஊதியம். அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகிவிடும். இதரச் செலவுகள் அய்ந்து ரூபாய். மீதம் அய்ந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவிக்கு மாதந்தோறும் திருவாரூருக்கு மணியார்டர் செய்து வந்தேன்” என்கிறார்.

அதிகாலையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி ஆயத்தமாகிவிடும் வழக்கம்
கொண்டவர் கலைஞர். ‘குடிஅரசு’ அலுவலகத்தில்அவருடன் பணியாற்றிய நண்பர்கள் இந்தப் பழக்கத்தை, ‘பெரியாருக்கு விரோதமாகச் செய்கிறகாரியங்கள்’ என்று கலைஞரிடம் அச்சுறுத்தலோடு சொன்னதுடன், கலைஞர் தினமும் குளிப்பதைப் பெரியாரிடமும் சொல்லிவிட்டார்கள்.

பெரியார் ஒருநாள் கலைஞரை அழைத்து, “என்ன தினமும் குளிக்கிறாயா? பிறகு எப்படி தினமும் வேலை செய்வது?” என்று கேட்டிருக்கிறார். “குளிப்பதும் ஒரு வேலைதான். அதைக் காலையில் முதல் வேலையாகச் செய்துவிட்டு, மற்ற பிற வேலைகளையும் கவனிக்கிறேன் அய்யா” என்று பெரியாரிடம் கலைஞர் சொல்ல, கலைஞரின் உழைப்பின் மீது பெரியாருக்கு இருந்த நம்பிக்கையால் அந்தப் பதிலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

‘குடிஅரசு’ 23.12.1944 இதழில், திராவிட மாணவர்
கழகத்தின் போராட்ட உணர்வை மாணவர்க
ளுக்குத் தெரிவிக்கின்ற வகையில் கலைஞர் ஒரு கட்டுரை எழுதினார், தமிழ்நாடு தமிழ் மாணவர்
மன்றம் கண்டவரான கலைஞர். அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘மானங் காக்க’. அதில், ‘இந்நாட்டு இளந்தோழா’ என்று தொடங்குகிறார்.

அந்தக் கட்டுரையில், “ஆரம்பக் கல்வியிலே-
அரிச்சுவடியிலே புகுந்த ஜாதி பேதம் ஆங்கில எம்.ஏ. பட்டம் வரையில் பல வேடங்களில் புகுந்து
திராவிடக் கலையை, திராவிட நாகரிகத்தை, திராவிட நாட்டைப் பறித்துக் கொண்ட முறை உனது எண்ணத்திற்கு எட்டவில்லையா?

தச்சன் மேசையை மரத்தால் செய்தான். குயவன் பானையை மண்ணால் செய்தான். உழவன் வயலை உழுது பயிரிடுகிறான் என்ற பாடத்தைப் படித்து, அடுத்தப் பக்கம் புரட்டினால் அய்யர் பூஜை செய்கிறார் என்ற தொடரைக் காணுகிறாயே தோழனே, சிந்தித்தாயா?

நிறை தொழிலாளத் தமிழரை ‘அவன்’ என்று அழைக்கிற அகம்பாவம், அய்யருக்கு மட்டும் அவர் என்று மகுடம் சூட்டி மகிழ்வானேன்?” என்று இந்நாட்டு இளந்தோழனாம் திராவிட மாணவனைச் சிந்திக்க வைக்கிறார் கலைஞர்.
தமிழ் இலக்கியப் பாடத்தில், வரலாற்றில், பூகோளத்தில், அறிவியலில் என அனைத்துப் பாடங்களிலும் மேலாதிக்க ஜாதி மனோபாவமும், புராண-இதிகாசப் பெருமைகளுமே நிறைந்திருப்பதைப் பற்றி அந்தக் கட்டுரையில் கலைஞர் எழுதியதைப் படிக்கும்போது, முக்கால் நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலையைத் திராவிட இயக்கம் எந்தளவுக்குப் பண்படுத்தி, எளிய மக்களின் வாழ்வை வளம் பெறச் செய்திருக்கிறது என்பதையும், அதைத் தற்போதைய அரசியல் சூழல் எந்தளவில் சிதைக்க நினைக்கிறது என்பதையும், இப்போதும் எளிய மக்களின் நலன்
காக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் தன் பணியை மேற்கொள்வதையும் உணர முடிகிறது.

‘குடிஅரசு’ ஏட்டில் கலைஞர் எழுதிய ‘அண்ணாமலைக்கு அரோகரா’, ‘ஏகாதசி’ ஆகிய கட்டுரைகளும் பகுத்தறிவுப் பார்வையில் அமைந்த படைப்புகள். திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர், ‘சித்தி விநாயகனே’ என்ற தமிழ்ப் பாடலை மேடையேறிப் பாடிவிட்டதால், அந்த நிகழ்வே தீட்டாகிவிட்டதாகவும், அவருக்குப் பின் பாடவந்த அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையேற மறுக்க, தீட்டுக் கழிக்கும் வகையில் மேடையைக் கழுவிய பிறகே இசைக் கச்சேரி தொடர்ந்திருக்கிறது. இந்த நிகழ்வை, ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் 9-9-1946 ‘குடிஅரசு’ இதழில் துணைத் தலையங்கமாக எழுதியிருக்கிறார் கலைஞர். அதற்காகப் பெரியாரிடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் பெரியார் வீட்டில் கலைஞரும் அவருடன் பணியாற்றிய நண்பர்கள் கவிஞர் கருணானந்தம், ஜனார்த்தனம், தவமணிராசன் ஆகியோரும் சாப்பிட்டு முடித்தபிறகு, அவர்களைப் பெரியார் அழைப்பது வழக்கம். பெரியார் வீட்டின் மாடியில் காற்றோட்டமான பகுதியில் கலைஞர் உள்ளிட்டவர்களை உட்கார வைத்து சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவை பற்றியெல்லாம் விளக்கங்கள் அளிப்பது பெரியாரின் வழக்கமாக இருந்திருக்கிறது. வேதகால குருகுலத்தில் ஆசிரியருக்கும் அவரது குடும்பத்திற்கும் பணிவிடை செய்வதே மாணவர்களின் கடமை என்றிருந்த நிலையில், பகுத்தறிவு ஏடான ‘குடிஅரசு’ அலுவலகம் எனும் குருகுலத்தில் ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பரந்துபட்ட அறிவு விருந்து படைத்திருக்கிறார்.

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரான கலைஞருக்கு, பெரியாரின் இந்த இரவு நேர வகுப்பு சிந்தனைக்கு விருந்தாக அமைந்ததுடன், புதிய கருத்துகளைப் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலையும் வளர்த்தெடுத்துள்ளது. வழக்கமான கவிதை மரபிலிருந்து விலகி, தமிழில் புதுக்கவிதைகள் முளைவிடத் தொடங்கிய சூழலில், கலைஞர் தனக்கே உரிய மொழிநடையில் பல கவிதைகளை எழுதி வந்தார். ‘குடிஅரசு’ அலுவலகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் எழுதிய கவிதைகள், ‘கவிதையல்ல’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. தமிழின் புதுக்கவிதைத் தொகுப்பில் இது முன்னோடி நூலாகும்.

கலைஞரின் பன்முக எழுத்துத்திறன் ‘குடிஅரசு’ குருகுலத்தில் பட்டை தீட்டப்பட்ட பிறகே திரைத்துறையில் அவர் நுழைந்தார். அங்கே அவரது வசனங்களே கவிதை போல மிளிர்ந்தன. கருத்துகள் மின்னலெனத் தெறித்தன. சினிமா எனும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிஅற்புத ஊடகத்தை, கொள்கை முழங்கும் களமாக மாற்றிய ரசவாதியானார் கலைஞர்.

இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர்
இடிமுழக்கம் கேட்டது போல்-திணறிப் போனார்
பின்னிவைத்த மதங்கடவுள் மடத்தன்மை யெல்லாம்
மின்னலது வேகத்தில் ஓடியது காண்!
பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர்
வெண்தாடி அசைந்தால் போதும்
கண்ஜாடை தெரிந்தால் போதும்
கறுப்புடை தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள்!

-என்று முழங்கியது கலைஞரின் ‘கவிதையல்ல’ தொகுப்பு.

விருப்பமுள்ளவராம் வெறும் பதவியில் பல பேர்
அவர் வேண்டாம்!
நெருப்பின் பொறிகளே.. நீங்கள்தாம் தேவை!

– என இளைஞர்களை, மாணவர்களை எழுச்சியுகம் காண அழைத்தது கலைஞரின் கவிதை.
பெரியாரின் ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயிற்சி்

பெற்ற கலைஞர், இந்தியா எனும் குடியரசு நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அறப்போர்க்
களங்களில் முன்னின்றார். இன்றும் ‘இந்தியா’வைக்
காக்கும் வலிமையுடன் திராவிட இயக்கம்
திகழ்வதற்கு ‘குடிஅரசு’ இதழின் பங்களிப்பும்,
கலைஞரின் கடும் உழைப்பும் முக்கியமானவை
யாகத் திகழ்கின்றன. கலைஞரின் நூற்றாண்டும் ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டும் அடுத்தடுத்து அமைந்தது திராவிட இயக்க வரலாற்றின் பெருமிதங்கள்.