Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: சோ ஆதரிக்கச் சொல்லும் ஜெயலலிதாவின் கூட்டணி, மதவெறி கொண்டோர் கூட்டணி என்று தெரிந்தபிறகும் பொதுவுடைமைக் கட்சியினர் அதில் இணைந்திருப்பது எதனைக் காட்டுகிறது?  – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அதைவிடக் கொடுமை பா.ஜ.கவுடன் நிரந்தரத் தொடர்புடன் உள்ளவர்களோடு கூட்டணி என்பதும் இவர்களைக் கேட்காமலேயே காங்கிரஸ் பக்கம் செல்ல எல்லா முயற்சிகளையும் செய்த அம்மையார் பற்றி சிறிதுகூடக் கவலைப்படாமல் சில சீட்டுகளுக்காக, இப்படி நடந்து கொள்ளலாமா முற்போக்கு பேசும் நம் நண்பர்கள்?

கேள்வி: தமிழ்நாட்டில் – தமிழக அரசால் சகட்டுமேனிக்கு வடநாட்டுத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதுபோல், தமிழர் தலைவர்களாம் தந்தை பெரியார், வ.உ.சி, திரு.வி.க, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்கள் டில்லியிலோ, வடமாநிலங்களிலோ மய்ய, மாநில அரசுகளால் சூட்டப்பட்டிருப்பதாக உதாரணம் காட்ட முடியுமா?   \ கு.நா. இராமண்ணா, சீர்காழி

பதில்: அத்தி பூத்தது போல டெல்லிப் பட்டணத்தில் ஏதோ ஒன்று இரண்டுண்டு!  நம்மைப்போல அவர்கள் இருப்பதில்லையே!  ஆங்கிலத்தில் (இந்தி தெரியாததால்) கேள்வி கேட்டால் கூட (ஆங்கிலம் தெரிந்த) வடவர் இந்தியில் தானே பதில் கூறுகிறார்கள்?  அவர்கள் அப்படி – நாம் இப்படி!

கேள்வி: அவர் சொன்னார் … இவர் சொன்னார் என்பதைவிட தந்தை பெரியாரின் பேச்சில், நான் என்ன சொல்கிறேன், என்பதுதானே எதிரொலித்தது. அது தான் என்பதன் விளைவா?  தன்னை அறிந்ததன் விளைவா?

அ. விசயபாண்டியன், விருதுநகர்

பதில்: என்னுடைய அறிவுக்குப்பட்டதைச் சொல்லுகிறேன், அதை அப்படியே ஏற்காதே, உன் அறிவு என்ன சொல்லுகிறது என்று நன்றாக யோசித்து அதன் பிறகு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது தள்ளிவிடுங்கள் என்றுதான் பேசினார். மேற்கோளில் அவர் யாரையும் காப்பியடித்த தில்லை.  அவர் சுய சிந்தனையாளர்.  தன்னை அறிந்த தகத்தகாய வெற்றி நாயகன் அவர்!  என்பதைப் புரிந்துகொள்வார்கள்; அவரின் அடக்கம் எல்லையற்ற ஒன்றாயிற்றே!

கேள்வி: தி.மு.க ஆட்சியை வீழ்த்தும்வரை எனக்கு உறக்கம் இல்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?     – பாவலர் அறிவரசன், திருலோக்கி

பதில்: எப்போதும் தூங்க மாட்டார் போலும்! ஆட்சிக் கனவு அவரைத் தூங்கவிடாது போலும்!  அந்தோ பரிதாபம்!

கேள்வி: சபரிமலைக்கு மகரஜோதியைத் தரிசிக்க லட்சக்கணக்கானோர் செல்கின்றனர்.  நெரிசலில் 106 பேர் பலி, இரவு 9.00 மணி போதிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம்.  அந்த நேரத்தில் அய்யப்பன் அருளால் சற்று கூடுதலான வெளிச்சம் (ஜோதி) தெரிந்திருந்தால் மீட்புப் பணி விரைவாக நடந்திருக்கும். சிலரைக் காப்பாற்றி இருக்கலாமே? –

சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில்: அய்யப்பன் – மகரஜோதி பொய்யர்கள் புளுகணித்தனத்தின் உச்சம் என்று புரிந்துவிட்டதே; ஆள்போய் எரியூட்டுகிறான் என்ற செய்தி வந்துவிட்டதே!

கேள்வி: பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளித்து, காங்கிரசிலிருந்து விலகிய ராஜகோபாலாச்சாரியார், 1942 இல் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் கேட்கும் திராவிடஸ்தானையும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான் எனப் பேசியதாக வரலாற்றில் படித்தேன்.  இந்தச் செய்தி உண்மையா?  –  ராசன், நெய்வேலி

பதில்: ஆம், உண்மைதான், ஆதாரம் உண்டு.

கேள்வி: பில்லி, சூனியம் வைத்துக் கொல்ல எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக எடியூரப்பா கூறியிருப்பது அவரது பதவிக்கு இழுக்குத்தானே?

– கே.ஆர். இரவீந்திரன், சென்னை

பதில்: அவரது பதவிக்கு இழுக்கு அப்புறம் இருக்கட்டும்; அதைப் போக்க அவர் நிர்வாணக் கோலம் கொண்டு படுத்துள்ளார். இப்பரிகாரம் தேடமுயன்றது மகா மகா வெட்கக்கேடு அல்லவா?

கேள்வி: இந்தியாவில் முஸ்லிம்களுக்குச் சிறு குறை நிகழ்ந் தாலும் விமர்சிக்கும் இந்தியக் கட்சிகள் இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்களுக்கு நிகழும்  வன்முறை நிகழ்வுகளுக்குக் குரல் கொடுப்பதில்லையே!?  ஓட்டு வங்கி காரணமா?   – இந்திரன், திண்டிவனம்

பதில்: தவறுகளை யார் நடத்தினாலும், அது எங்கே நடந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான் நியாயம், நடுநிலைக் கண்ணோட்டம்!  எல்லாக் கட்சிகளும் இப்படி இல்லையே!

கேள்வி: தமிழ் மக்களுக்கு மறதியும், நகைச்சுவை உணர்வும் அதிகமிருப்பதற்கு என்ன காரணம்? — பிருந்தா, அறந்தாங்கி

பதில்: மற்ற மக்களைவிட அறிவும் ஆற்றலும் தமிழர்களுக்கு அதிகம்; அது இருந்தால் இரண்டும் இருப்பது இயல்புதானே!

கேள்வி: எகிப்தின் கிளர்ச்சிக்குக் காரணம் என்ன?  இந்த அளவில் மக்கள் எதிர்ப்பிற்குப் பின்பும் அதிபர் பதவி விலக மறுப்பது ஏன்? – பிரியா, திருவள்ளூர்

பதில்: பதவியாசை என்பது எளிதில் எவரையும் விடாதே! சர்வாதிகாரிகள்  விடுவார்களா? ருசி கண்ட பூனைகள் அல்லவா அவர்கள்!