நெருக்கடிகள் வந்தபோதும் கருப்புச் சட்டையைக் கழற்றாத பாரதிதாசன்!

2024 கட்டுரைகள் ஜுன் 1-15 2024

இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் வாழ்ந்த ஒருவர் தன் மகனுக்கு பாரதிதாசன் எனப் பெயர் வைக்கிறார், அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்னர்! திராவிடர் இயக்கம் உண்டாக்கிய இன உணர்வு, மொழி உணர்வு என்பது உலகம் முழுக்கப் பரந்து விரிந்தது! அப்படியான பாரதிதாசன் அவர்கள் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்!

அய்யா வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

என்னுடைய தாத்தா வேலை தேடி கொழும்பு சென்றார். அதேபோல் என் தந்தையாரும் கொழும்பு சென்று, சமையல் வேலை செய்தார். என் சகோதரி, தம்பி, நான் மூவருமே கொழும்பில்தான் பிறந்தோம்.

என் தந்தை பகுத்தறிவுக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர். புரட்சிக்கவிஞர் நினைவாக எனக்குப் பாரதிதாசன் எனப் பெயரிட்டார்! இலங்கையில் ஏற்பட்ட முதல் கலவரத்தின் போது, குடும்பத்துடன் அப்பா தமிழ்நாடு திரும்பிவிட்டார்! எங்களின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செவரக்கோட்டை எனும் ஊர்.

உங்களுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை எப்போது ஏற்பட்டது?

கொழும்பில் இருந்து திரும்பியதும் செவரக்கோட்டையில் 8ஆம் வகுப்பு வரையிலும், கல்லல் முருகப்பா உயர்நிலைப் பள்ளியில் 9, 10ஆம் வகுப்புகளும் முடித்தேன். எங்கள் கிராமத்தில் பெரியவர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் மாயகிருஷ்ணன், பழனிநாதன் என்கிற கடவுள் பெயர் கொண்ட இருவரும் முற்போக்குக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள். நமது இயக்கத்தில் இருந்த ஒருவரின் பெயரே பழனிநாதன் என்கிற கடவுள்.

இவர்கள் திராவிடர் கழகப் பின்னணி கொண்டவர்கள் என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சிறிய கையேடுகளைக் கொடுத்து,
படிக்கச் சொல்வார்கள். அது பெரியார் எழுதிய நூலாக இருக்கும்!

அதேபோல பொன்னம்பலம் என்கிற பெரியவர் ஒருவர் இருந்தார். எந்நேரமும் கருப்புச் சட்டைதான்! பெரியாரை அழைத்து, எங்கள் கிராமத்தில் கூட்டம் நடத்தியவர். அப்போதுதான் முதன்முதலில் பெரியாரைப் பார்த்தேன். அதேபோல உயர்நிலை வகுப்புப் படித்த போது, கனகசாமி என்கிற வரலாற்று ஆசிரியர் வகுப்பெடுத்தார். அவரும் பெரியார் கொள்கை மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளை அதிகம் பேசுவார்.

ஆக, சிறு வயதில் இருந்தே சுயமரியாதைக் கருத்துகளை நிறைய கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலரின் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்! பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதையே பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் அப்போதுதான் எனக்கு வந்தது!

கிராமத்தில் உங்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

பெரியவர்கள் எல்லாம் இணைந்து “திருவள்ளுவர் மாணாக்கர் மன்றம்” என்கிற அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள்! பின்னாளில் அதை நாங்கள் ஏற்று நடத்தினோம். தமிழர் திருநாளின் போது, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். அதில் கலைஞரின் தூக்கு மேடை என்கிற நூலை, நாடகமாகப் போட்டோம். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியையும் கற்றுக் கொண்டு, பொது மக்கள் மத்தியில் செய்து காட்டினோம்.
எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்தஆலம்பட்டு, குருந்தம்பட்டு, கல்லல், வேப்பங்குளம், வெற்றியூர், செம்பனூர் போன்ற கிராமங்களிலும் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அதிகம் இருந்தனர்!

உங்கள் பணி குறித்துக் கூறுங்கள்?

கல்லூரிப் படிப்பு முடித்ததும், 1984இல் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இளநிலை உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு அகதி முகாமில் முதல் பணியைத் தொடங்கினேன். பிறகு திருவாடானை பகுதிக்கு மாற்றம் கிடைத்தது. 2011 ஓய்வு பெறும் வரை ஒரே இடத்திலே பணியாற்றினேன். அந்த ஊரில் காவலராக இருந்த காமராஜ் என்பவரின் ஆதரவோடு கைகாட்டி, திருவாடானை, தொண்டி, நம்புதாளை, உப்பூர், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். இதில் துரை.சந்திரசேகரன், அதிரடி அன்பழகன் இராம.அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசியுள்ளார்கள்.

நீங்கள் எப்போதும் கருப்புச்சட்டைதான் அணிவீர்கள் எனக் கேள்விப்பட்டோம், அதுகுறித்துக் கூறுங்கள்?

திருவாடானையில் பணி செய்த போது, ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவர் இருந்தார். அவர் எங்களில் சிலரை அழைத்து ஜாதி குறித்து விசாரித்தார். உயரதிகாரி என்பதால் அச்சம் கொண்டு, எல்லோரும் தங்கள் ஜாதியைச் சொன்னார்கள். நான் மட்டும் மறுத்துவிட்டேன். இந்நிலையில் யதார்த்தமாக நான் அணிந்து சென்ற கருப்புச் சட்டையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

இதனால் கோபம் கொண்ட நான், தினமும் கருப்புச் சட்டை அணிந்து செல்ல முடிவெடுத்தேன். நான் பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவன் என்பது இதன்‌ மூலம் மேலும் உறுதியானது! பணியில் இருந்த 20 ஆண்டுகளும் நாள் தவறாமல் கருப்புச் சட்டை அணிந்து சென்றேன். ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகப் போகிறது. இப்போதும் கருப்புச் சட்டைதான்! வேறு நிறச் சட்டைகளே என்னிடம் கிடையாது.

குடும்பத்தில் கொள்கைச் செயல்பாடுகள் குறித்துக் கூறுங்கள்?

எனது மூத்த மகள் திராவிட கனி, சென்னை பெரியார் திடலில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது.

இரண்டாவது மகள் நளாயினி, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இணையர் பெயர் ராணி. திருமணத்தின்போது அணிந்த தாலியைக் கழற்றிவைத்து, சுயமரியாதையைச் சூடிக் கொண்டார்!

எனது அக்கா மகள் திருமணத்தின் போது நான் மரியாதை செய்ய வேண்டும் என்றும், கருப்புச் சட்டையுடன் வரக்கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. பெரும் பாசப் போராட்டம் நடந்தாலும், இறுதியில் வென்றது என் கொள்கையே! அந்த வகையில் 35 ஆண்டுகளாகக் கருப்புச் சட்டையுடனே பயணம் செய்து வருகிறேன்!

ஓய்வு பெற்றதற்குப் பிறகு இராமேஸ்வரம் புறவழிச்சாலை அருகில், தேவகோட்டையில் புதிய வீடு ஒன்று கட்டினோம். ஹிந்து மதத்தின் எந்தச் சாஸ்திர, சம்பிரதாயங்களையும் நாங்கள் கடைப்பிடிக்கவில்லை! எனது இணையர் ராணி அவர்கள் அனைத்திற்கும் துணையாய் இருந்து பலம் சேர்ப்பவர்!

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வென்னும் நிறைவோடு வாழ்ந்து வருகிறேன்!