சிறுகதை ‍- இடிந்த கோபுரம்

ஆகஸ்ட் 16-31

எந்த விளக்கமும் இனித் தேவையில்லை. சாமி புறப்பாட்டுக்காக வீட்டிற்கு அய்நூறு ரூபாய் தரவேண்டுமென்று… பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. அதைத் தரமுடியுமா? முடியாதா? என்பதை மட்டும் இங்கு தெரிவித்தால் போதும்! ஊர் பஞ்சாயத்து தலைவர் சற்று கோபத்தோடு கேட்டார்…

அய்யா!… கோபப்படாமல் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஊரில் பெரும்பாலோர் விவசாயக் கூலிகள். இதில், எப்படியோ நல்ல உள்ளம் படைத்த கலைஞரின் கருணையால் சிலர் பட்டப்படிப்புவரை இலவசக் கல்வி உதவித் தொகை பெற்று படித்து வெற்றிபெற்று பணியிலும் இருக்கிறார்கள். ஆனால், நம் ஊரில் ஒரு நல்ல பள்ளி இல்லை. பொது நூலகம் இல்லை. இதற்கு முயற்சி செய்யாது…

சாமி புறப்பாடு என்று சொல்லி, மதுபானக் கடையில் விற்பனையை அதிகப்படுத்தி, காது கிழியும்படி வெடிவெடித்து, வானவேடிக்கை நடத்தி, சாமி தூக்குவதில சாதிக் கலவரத்தை வேறு உருவாக்கி, அதனால் அடிதடி, வெட்டுகுத்து, காவல்துறை, வழக்கு மன்றம் என நாயாய் அலைந்து நொந்து நூலாகும் நிலை… இதெல்லாம் இந்த ஊருக்குத் தேவையா? வெளியூர் பக்தகோடிகளின் நன்கொடைகளையும் சேர்த்தால்… பல லட்சம் தேறும். இவை அனைத்தையும் ஒரு நாள் கூத்துக்காக வாரி இறைக்க வேண்டுமா? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்!மானமும் அறிவும் பெற்ற அறிவுச் செல்வி என்ற பொறியியல் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்ற அந்தப் பெண் அமைதியாகக் கேட்டாள்!

அப்போ… எங்களை எல்லாம் முட்டாள்கள்னு நினைச்சுட்டியா? நீ படிச்சிட்டதினாலேயே பெரிய அறிவாளிங்கிற நினைப்பா? – அய்யா போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டினால் அரசு உயர்பதவியிலிருந்தும் புத்தியை மறந்த ஒரு பக்தரின் கேள்வி இது! பக்திப் போதையோடு, மதுபோதையும் தலைக்கேறிவிட்ட நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்!

அய்யா! மன்னிக்கணும்… எனக்கும், என் குடும்பத்தாருக்கும் இதில் உடன்பாடு இல்லை என்றால்… விட்டுவிடுங்களேன்!

அதெப்படி விடமுடியும்? ஊரே ஒற்றுமையா விழா கொண்டாடும்போது நீ மட்டும் இப்படி முரண்டு பிடிப்பது சரியா? ஊர் நாட்டாமைக்காரர் சற்று கோபமாகவே கேட்டார். கூட்டத்தைப் பார்த்து…

சரி! அவ ஒருத்தி கொடுக்கலேங்கிறதுக்காக சாமி புறப்பாடே நின்னு போயிருமா? விட்டுத் தள்ளுங்க கழுதையை! புறப்படுவதற்கான வேலையை கவனியுங்க ஊர் நாட்டாமை சொல்லிவிட்டு திடீரென புறப்பட்டுவிட்டார்! ஊர் முழுவதும் அறிவுச் செல்வியைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

இதற்காகவாவது மிகவும் தடபுடலாக, இலட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து மக்களைக் கூட்டி அறிவுச் செல்வியின் முகத்தில் கரியைப் பூச வேண்டுமென்று நினைத்தனர்!

கடவுளை நிந்திக்கும் கயவர்களுக்கு இந்த ஆன்மீக பூமியில் என்ன வேலை? ஊர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

விழாவிற்கு முதல்நாள் ஊர் முழுவதும் குழல் விளக்குகள்! வெளியூர்களிலிருந்தெல்லாம் வாத்திய கோஷ்டிகள் அலையலையாக மக்கள் கூட்டம்…

திருவிழா முடிந்ததும்… மூடநம்பிக்கை ஒழிப்பு விழா நடத்திக்காட்ட வேண்டும்… ஊர் மக்களை அறியாமையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என எண்ணியவாறே அறிவுச்செல்வி தன் பணிக்குப் புறப்பட்டு விட்டாள்.

விழாவிற்கு முதல்நாள் இரவு திடீரென சுற்றிச் சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றோடு பெருமழையும் கொட்டியது!

எவருமே எதிர்பாரா வண்ணம் இடிமுழக்கம் போன்ற பயங்கர ஒலியோடு கோயிலின் பெரிய கோபுரம் இடிந்து விழுந்தது! எங்கும் ஒரே கூக்குரல் அழுகை ஓலம், மழை நீரோடு கலந்த இரத்த வெள்ளம்.

கலைஞர் அறிமுகப்படுத்திய 108 அவசரகால ஊர்தி வரவழைக்கப்பட்டு, குற்றுயிரும், குலையுயிருமாக இருந்தோர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்!

விடிய விடிய பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு கற்குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு சடலங்கள் தேடி எடுக்கப்பட்டன! அதில் பத்துக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்!

இதில் பெரிய சோகம் நாட்டாமைக்காரர் குடும்பத்திலேயே நான்கு பேர் பலியாகிவிட்டனர். நாட்டாமை மட்டுமே தப்பிப் பிழைத்தார்!

அறிவுச் செல்வியும், அவளது குடும்பத்தாருமே அனைத்து உதவிகளையும் மனிதாபிமானத்தோடு முன்னின்று செய்தனர். அவர்களது அயரா உழைப்பு அனைவரையும் வியக்கவைத்தது.

விழா நின்று போயிற்று… நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நாட்டாமை கண்ணீரோடு அறிவுச் செல்வியின் கரங்களைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

அம்மா! இனி உன் எண்ணப்படியே… பள்ளியோ… நூலகமோ.. இந்த ஊரில் கட்டுவதுதானம்மா என் முதல் வேலை. நாட்டாமையின் உறுதியான பேச்சு…

அவரது மனக்காயம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தியது!

அந்த ஆண்டே பள்ளி கட்டும் பணி துவங்கியது. இடிந்தது கோபுரம் மட்டுமல்ல அந்த ஊரில் அதுவரை அரசோச்சிக் கொண்டிருந்த அறியாமையும் கூடத்தான்.

– நெய்வேலி க.தியாகராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *