புத்தர் இப்படியா போதித்தார்? கடந்த 1-_ஜூலை 2012 உண்மை இதழில் வெளிவந்துள்ள, மணிமகன் அவர்களின் சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர் என்னும் கட்டுரையில் ஓர் அருமையான கருத்து இடம் பெற்றுள்ளது.
அன்பைப் போதிக்கும் புத்தரின் போதனைகளை சிங்களவர்கள் உள்ளபடியே ஏற்றிருந்தால் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பார்களா? என்பது அந்தக் கருத்து வினா.
கட்டுரையின் நிறைவில் பின்வரும் வேண்டுகோளை அவர் வைத்துள்ளார். சிங்கள இனவெறியில் புத்தரைச் சிக்கவைக்க வேண்டாம்! இது கட்டுரையாளரின் வேண்டுகோள் மட்டுமல்ல; தமிழ்கூறும் நல்லுலகத்தில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பெருங்குடி மக்களின் ஒருமனதான வேண்டுகோளும் ஆகும். இந்தப் பின்னணியில் அண்ணல் புத்தர் பற்றிய கருத்துகளை நினைவூட்ட விழைகிறேன்.
மூவருள் முதல்வர்:
உலகில் தோன்றிய அறிவியல் முனைவர்களுள் தலைசிறந்தவர்கள் மூவர் ஆவர். அவர்களுள், அண்ணல் புத்தர் ஒருவர்; திருவள்ளுவர் பெருந்தகை இன்னொருவர்; அறிவாசான் தந்தை பெரியார் மற்றொருவர்.
இவர்கள் மூவரும் நாடு, மொழி, இனம், மதம், காலம் முதலிய எல்லா எல்லைக் கோடுகளையும் கடந்து மாந்த இனத்திற்கு என அறிவுக் கருத்துகளை எடுத்துரைத்து, செயலாற்றிய மாந்தப் பற்றாளர்கள் ஆவர். இவர்களுள் புத்தர் பெருமான் காலத்தால் மூத்தவர்.
முன்னோடி முதல்வர்:
உலகில் புரட்சிச் சிந்தனையாளர்களுள் புத்தரே முதல்வர்; அறிவியக்க நெறியினை எடுத்துரைத்த ஆன்றோருள் இவரே முதல்வர்; மாந்த இனத்தைப் பிளவுபடுத்தும், மதம், சாதி முதலானவற்றை அறவே கண்டித்துக் குரல் எழுப்பியவர்களுள் முதல்வராய்த் திகழ்பவரும் இவரே! ஆண்_பெண் நிகர்நிலையை வலியுறுத்தியவர்களிலும் இவரே முதல்வர். சுருங்கக் கூறின், முழுமையான அற, அறிவு, ஒழுக்க நெறிகளை உலகுக்கு வகுத்தளித்த முதல் சான்றோரும் இவரேதான்! அதுமட்டுமன்றி, இன்றைய கிறித்துவ சமயப்பரப்பு அமைப்பு (Mission) போல ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கம் அமைத்து உள்நாடு, வெளிநாடுகளில் அறநெறி பரப்பிட, வழிகோலிய முதல் அறிவாளரும் புத்தர் பெருமான்தான்!
மக்களைச் சந்தித்த மாண்பாளர்
மக்களின் துயர்துடைப்புக்கான காரணங்களாக உள்ள உண்மைகளைத் தம்முடைய நீண்ட நெடிய ஆழ்ந்த நுண்ணறிவால், சீரிய சிந்தனையின் விளைவாய்க் கண்டறிந்து, அவற்றை மக்களிடம் நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, மக்கள் பேசிய மக்கள் மொழியான மகதி மொழியில் பரப்புரை செய்தவர் நம் புத்தர்பிரான்!
எல்லோரும் இவர் நெறியில்:
மாமன்னர்கள், மாபெரும் கலைவாணர்கள், தொழிலாளத் தோழர்கள், பல்துறை அறிஞர்கள், படைவீரர்கள்,உயர்ஜாதி எனப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் முதலான பலதரப்பட்டோர் முதலான பலதரப்பு மக்களும் புத்த நெறியில் ஒழுகினர். விலைமகளிர்கூட, புத்தநெறியால் ஈர்க்கப்பட்டு, மனம் வருந்தி, திருந்தி, புத்தநெறியில் பொருந்தி வாழ்ந்தனர்.
கொடுமையான ஒரு கூட்டம்:
இந்தியச் சமுதாய வாழ்வில் உயர்ஜாதியாகவும் பயன் அடைந்து வந்த கூட்டமாகவும் இருப்பது பார்ப்பன இனம். இது, அறிவுக்கும், சீர்திருத்தத்திற்கும் மாந்த இன நிகர்நிலைக்கும் எதிரியாகவே இருந்தது _ இருக்கிறது.
பார்ப்பன இனத்தின் சுரண்டலுக்கும் சூழ்ச்சிக்கும், தன்னலத்திறகும், வல்லாண்மைக்கும், எதிராக புத்தநெறி எழுந்தது.
புத்தநெறியில் புரட்சிக் கூறுகள்:
புத்தநெறியின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, பார்ப்பனியத்தின் அட்டகாசத்தை ஒழிக்க வந்த ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.
வேதக் கருத்துகளைத் தகர்த்தெறிந்து புதிய கோட்பாடுகளைக் கண்டறிந்து பரப்பியது புத்த நெறி.
தகுதிமிகு தனித்தன்மைகள்
புத்தநெறி ஆத்மா, மனம் பற்றிய இந்து வேதாந்தக் கருத்துக்கு எதிரானது. கலப்பற்ற புத்தநெறிக் கோட்பாடு கடவுள் இல்லை (நீரிசுவரம்) என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. இந்தியச் சமயங்களில் புத்தநெறி (பவுத்தம்) ஒன்றுதான் ஆத்மாவை மதிக்காமல் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளுவது. ஆன்மிகம் பற்றி, நன்கு தெரிந்து கொள்ளாமலேயே ஏற்கெனவே மனதில் கொண்டுவிட்ட கருத்துகளில் மூழ்கிக் கிடக்கும் அய்ரோப்பிய நூலாசிரியர்கள் கூட, புத்தரின் ஆத்மா மறுப்புக் கருத்தைப் புரிந்து கொள்ளவோ ஏற்றிப் போற்றவோ தயங்குகிறார்கள்; தடுமாறுகிறார்கள்.
மாந்த இனச்சிந்தனை வரலாற்றில், மிகப் பழைமையான அந்தக்காலத்தில் தீர்மானமாகவும், தெளிவாகவும் பெரும்பயன் தருவதுமான வகையில் இதைச் சொன்னாரே புத்தர்!
அது எத்துணை கடினமானது? கடுமையானது?
இவ்வாறு டி.டபிள்யூ.ரை டேவிஸ் (T.W.Rhys Davids) என்னும் அறிஞர் தமது ‘Dialogues of the Buddha’ என்னும் தமது நூலில் கூறியுள்ளார். (பக்கம்: 242_243)
அறிவியல் அணுகுமுறை
மிகக் கொடுமையான சோதனைக் குத் தன்னை உள்ளாக்கிக் கொள்வதன் மூலமோ, கடுந்தவம், கடும் உண்ணா நோன்பு, ஆழ்நிலைத் தியானம் போன்ற உடல் ஒறுத்தல் (வருத்தல்) மூலமோ அறிவுபெற முடியாது. மாறாக, வலிவான உடலும், பொலிவான உள்ளமும் கொண்டிருந்தால்தான் அறிவும் உண்மையும் கண்டடைய முடியும் என்கிறது புத்த நெறி. உங்கள் பெற்றோர் கூறியது; மூத்தோர் கூறியது; முன்னோர் கூறியது; பெரியோர் பின்பற்றி வருவது; வழிவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பதற்காக நீங்கள் அதனை அப்படியே நம்பி விடக்கூடாது. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதே அறிவு! புத்தன் சொல்கிறானே என்பதற்காக எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.
உங்கள் அறிவே உங்களுக்கு உயர்ந்த வழிகாட்டி! என்று பகுத்தறிவின் பாங்கினை மக்கட்கு எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறுகிறார். சோதிடம் பார்ப்பது, குறி கேட்பது; எதிர்காலப் பலன்களை அறிய முனைவது; இராசி பலன் பார்ப்பது; அருள்வாக்கு கேட்பது; ஆரூடம் பார்ப்பது – முதலான மூடப்பழக்கங்களை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுங்கள்
புத்தரின் பகுத்தறிவுச் சிந்தனை அறிவியல் அணுகுமுறை (Scientific Approach), அறிவியல் மனப்பாங்கு (Scientific Attitude) இவற்றை மேற்காணப் பட்ட கருத்துகள் தெள்ளத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றதன்றோ?
திருடன் என்று திட்டுவதா?
போற்றுதற்குரிய புத்தர் நெறியையும், புத்தரையும் இந்து மத நூல்கள் இழித்தும் பழித்தும் வந்துள்ளன.
அந்தப் புத்தன், திருடன் எப்படியோ அப்படியேதான்! இந்த உலகில் புத்தநெறியும், வேதத்திற்குப் புறம்பானதென அறிக. ஆகையால் தான், மக்களுள் நாத்திகவாதத்தால் அய்யுறத்தக்கவன் எவனோ அவனுக்கு) புத்திமான் முகம் கொடான்! என்கிறது வால்மீகி இராமாயணம். (அயோத்தியா காண்டம்: சுலோகம்: 1502)
ஈடேது? இணையேது?
ஆனால், முழுமையான ஒழுக்க நெறிகளை உலகுக்கு வகுத்துக் கொடுத்த முதல் மனிதர் புத்தரே! புத்தரின் நெறிகளுக்கு, உட்படாத நாகரிகம் உலகில் எதுவுமே இல்லை! ஏழை எளிய மக்களுக்கு அவரவர் மொழியிலே, தமது நெறியினைச் சொன்னவர் புத்தர். நன்னடத்தை பற்றி மிகுதியாக வலியுறுத்திச் சொன்னவர் புத்தர் பெருமானே! இவருக்கு இணையான ஒருவரை, இதுவரை உலகம் கண்டதில்லை… இப்போது இந்தியாவில் இருக்கும் மடங்களில் பெரும்பாலானவை புத்தநெறியினரின் மடங்களாகவே இருந்தவை. பார்ப்பனர், இவற்றைத் தம்வயப்படுத்தி, தங்களின் நெறிகளுக்கு ஏற்ப மாற்றிவிட்டனர் என்கிறார் விவேகானந்த அடிகள். இக்கருத்தை எவரே மறுக்கவல்லார்?
மதமா? நெறியா?
புத்தர் வகுத்த நெறி புத்த நெறியாகும். பின்னாளில், இதனைப் புத்த மதம் எனத் திரித்து வழங்கலாயினர். புத்தம் மதமன்று; மார்க்கம்! அறிவுநெறி என்றே வழங்கப்படவேண்டும். மதம் என்றால், அதில், கடவுள், வேதம், ஆத்மா, சொர்க்கம் – நரகம்; முதலானவை இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், புத்தரின் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகள், நடைமுறைகள் இவற்றில் அவற்றிற்கு இடமே இல்லை!
பின்னால் வந்த பிரிவுகள்
புத்தர் பிரானுக்குப் பிறகு அவர் நெறியில் பல பிரிவுகள் கிளைத்தன. அவற்றுள் மகாயானம், ஈனயானம் குறிப்பிடத்தக்கவை. யானம் என்பது ஊர்தி அல்லது ஊர்தி செல்லும் பாதை என்று பொருள். மகாயானம் – பேரூர்தி அல்லது நெடுஞ்சாலை எனப்படும்.
பல்வேறு மூடநம்பிக்கைகள், கண்மூடிப்பழக்கங்கள், எல்லாம் இந்த நெடுஞ்சாலை அல்லது பேரூர்தியில் இடம் பெறுவதால் இப்பிரிவு மகாயானம் எனப்பட்டது.
மகாயானப் பிரிவில் பார்ப்பனக் கோட்பாடுகள் பலவற்றை ஏற்றனர்; சிலை வணக்கம் இடம் பெற்றது. ஈனயானம் என்பது சிறுவழி அல்லது சிற்றூர்தி எனப்படும். இதற்கேற்ற, புத்தர் சொன்ன உண்மையான கொள்கைகள், நெறிகள் மட்டும் இதில் இடம்பெற்றன.
பாழ்படுத்திய பார்ப்பனியம்
புத்தருக்குப் பிறகு, அவர்தம் கொள்கைகளை வேதமொழியில் எழுதும்போது அவற்றை திருத்தியும், திரித்தும் எழுதிவைத்து விட்டனர் பார்ப்பனர்.
புத்தநெறியின் உண்மைகளைத் தாங்கியுள்ள நூல்கள், சீனத்திலும், இலங்கையிலும் உள்ளன. ஆனால், இன்றோ, இலங்கைமண்ணில் தமிழர்களின் இரத்தத்தால் புத்தர் களங்கப்படுத்தப்பட்டார்… என்று மணிமகன் எழுதுவது முழு உண்மையல்லவா? இலங்கையில் உள்ளவர்கள் புத்தத் துறவிகள் அல்லர்; ரத்தத் துறவிகள்! புத்தம் சரணம் கச்சாமி! – என்று அவர்கள் முழங்கத் தகுதியற்றவர்கள்.
ரத்தம் சரணம் கச்சாமி! என்று முழங்குவதற்குத்தான் அவர்கள் தகுதியானவர்கள். ஆரிய – பார்ப்பன இனவெறி இன்று ஈழத்தில் தமிழினத்தைப் பாழ்படுத்தி வருகிறது. பார்ப்பன – ஆரிய வல்லாண்மை இன்று தமிழீழத்தில் புத்தர் நெறியினைப பாழ்படுத்தி, சிதைத்து, சீரழித்து விட்டதே?
புத்தருக்கும் புத்தநெறிக்கும் இத்தகு அவலநிலையா ஏற்படவேண்டும்?
புத்தநெறிக்குப் புத்துயிர்
அண்ணல் புத்தருக்குப் பிறகு அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின் தமிழ் மண்ணில் தோன்றிய வள்ளுவம் அதாவது திருவள்ளுவநெறி, புத்தநெறியின் முதன்மையான கூறுகள் சிலவற்றை உள்ளடக்கி இருந்தாலும், பார்ப்பனியத்துக்கு அறைகூவலாக விளங்கினாலும், மக்களின் விழிப்பின்மையாலும் நடைமுறையில் பல்வேறு சமய நெறிகளுக்கிடையே போதிய ஆதரவின்மையாலும் பெரும்பயன் விளைவிக்கும் இயக்கமாக இல்லாமல் போய்விட்டது. திருவள்ளுவர், பெரும் புலவராகவும், அவர்தம் நெறிகூறும் திருக்குறள் தலைசிறந்த மாந்த அறம் கூறும் இலக்கிய நூலாகவும் மட்டுமே திகழலானார்; திகழ்கிறது.
அய்யாவின் அறிவியக்கம்
புத்தருக்குப் பிறகு, அவர்தம் மானிடப் பற்றுக் கோட்பாட்டினை, ஏச்சுக்கும், தாக்குதல்களுக்கும், பின்னடையாது, தன்மான _ இனமானக் கொள்கைகளை, பகுத்தறிவுக் கருத்துகளை பரப்புரை செய்ததோடு மட்டுமின்றி, அன்றைய புத்த சங்கம் போன்று, சுயமரியாதை இயக்கம் என்ற வலிமையான அமைப்பு மூலம் பார்ப்பன வல்லாண்மையையும், மூடநம்பிக்கைத் தடைகளையும், பேச்சு, எழுத்து போராட்டங்கள் வாயிலாக அவற்றை மேலே எழாத வண்ணம் ஆற்றல்மிக்க அறிவியக்கவாதியாய்த் திகழ்ந்தவர் அறிவாசான் அய்யா தந்தை பெரியார் மட்டுமே ஆவார்.
புத்தர், திருவள்ளுவர்க்குப் பிறகு, நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிச்சுடராய் ஒளிர்வது அய்யாவின் வாழ்வியல் நெறிதான்!
இனி, நிறைவாக, அறிவியக்க முதல்வர்பற்றி அதன் மூன்றாமவர் அய்யா பெரியார் கூறியிருப்பதை நினைவு கூர்வோம்! உள்ளத்தில் பதிப்போம்.
அனைவரும் புத்தர் ஆகலாமே?
புத்தன் என்றால், அறிவினைப் பயன்படுத்தி, அதன்படி ஒழுகுபவன்; எவர், எவர் அறிவைக் கொண்டு, சிந்தித்து, காரியம் ஆற்றுகின்றார்களோ, அவர்கள் எல்லாம் புத்தர்கள்! புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை!! (தந்தை பெரியார் – விடுதலை 16.5.1991).
– பேரா.ந.வெற்றியழகன்